நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 10 ஜூன், 2012

BAKTHIYIN MENMAI...பக்தியின் மேன்மை.





நான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,என் நெஞ்சார்ந்த நன்றி.

இறைவன்பால் மனித உயிர்கள் கொண்டுள்ள அன்பே பக்தி. பக்திஏற்படவும், அந்த பக்தி உறுதியாக, நம்பிக்கையோடு இருக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஸ்ரீ நாராயண பட்டத்திரி 'ஸ்ரீமந் நாராயணீயத்தில்', " பக்தி என்பது முழுமையாக இருக்க வேண்டும், அதனை விடுத்து, அந்த பக்தியானது, துயரங்களை நீக்குமா என்று ஆராய்ந்தால், உனது வாக்கான, கீதையும், வேதங்களும், தெருவில் போகும் வழிப்போக்கன் ஒருவன் கூறியது போல் அல்லவா ஆகிவிடும்? என்று குருவாயூரப்பனிடம், முழுமையான பக்தியை வேண்டுகிறார்.

பக்தியைப் பொறுத்தவரை மர்க்கட நியாயம், மார்ஜால நியாயம் என்ற இருவகையைக் கூறுவதுண்டு. மர்க்கடம் என்றால் குரங்கு. குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குரங்குக்குட்டி தாயை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும். குட்டி பிடியை விட்டால் தாய் எதுவும் செய்ய இயலாது. பக்தியில் அகங்கார, மமகாரங்கள் இருந்தால், நான், எனது என்ற எண்ணம் கலந்து பக்தி செய்தால் இந்த நிலை. இதில் இறைவன் அருள் கிடைப்பது கடினம்.

மார்ஜாலம் என்றால் பூனை. பூனை,தன் குட்டியைத் தன் வாயால் கவ்வி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வைக்கும். அதே போல், பக்தன் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பிறஉயிரையும் தன் உயிர்போல் பாவிக்கும் உயர் நிலை அடையும் போது, பக்தனின் முழுப் பாதுகாப்பையும். இறைவனே எடுத்துக் கொள்கிறான். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்பது கீதாசார்யனின் திருவாக்கு. பக்தியின் இவ்விரு வகைகளுக்கும் உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஆதிசங்கரர் காலத்தில், நமது வைதிக சமயத்தில் இருபெரும் பிரிவுகள் இருந்தன. அவை
1. பூர்வமீமாம்சை,
2. உத்தர மீமாம்சை என்பன.

பூர்வ மீமாம்சை,மனிதர்களுக்கு, யோகம் ஞானம் போன்றவை தேவையில்லை. பூஜை, ஹோமம், சடங்குகள் மூலம் தேவர்களைத் திருப்தி செய்தால், கோரிய பலன்களைப் பெறலாம் அதுவே போதும் என்ற கருத்துடையது. இதுவே பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கியது.

'உத்தர மீமாம்சை,' இறைவனொருவன் இருக்கிறான். சடங்குகளோடு, யோகம், ஞானம் இவற்றின் மூலமாக, அவனை அடைவதே மனிதப் பிறவியின் பயன் என்ற கருத்துடையது. பூர்வ மீமாம்சை வேதத்தின் 'கர்மகாண்டம்' எனவும் உத்தர மீமாம்சை 'ஞான காண்டம்' எனவும் அறியப்பட்டன.

பூர்வ மீமாம்சையின் முக்கிய குரு, குமாரில பட்டர்.  இவர் அதன் கொள்கைகளை ஒழுங்குபடுத்தி பிரசாரம் செய்ததால் அது 'பாட்டமதம்' எனவும் பெயர் பெற்றது. அக்காலத்தில் பௌத்தம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. தர்க்கநூல் முறைகளில் அவர்கள் திறமையானவர்களாக விளங்கினர்.அதன் கொள்கைகளை அறிந்து கொண்டுஅவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து பட்டர் அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது, அவர்கள் தன் மதத்தைக் குறைகூறும் போதெல்லாம், பட்டரின் கண்ணிலிருந்து நீர் பெருகும். அதைப் பார்த்து அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்கும் போதெல்லாம், 'ஆனந்தக் கண்ணீர்' என்று பட்டர் சமாளித்தாலும் அவர்கள் சந்தேகம் தீரவில்லை.

துஷாக்னி (உமிக் காந்தல்அக்னி) பிரவேசத்தின் போது குமாரில பட்டரைச் சந்திக்கும் ஸ்ரீ ஆதிசங்கரர்
ஒருநாள் பட்டரை ,மற்ற பௌத்தர்கள் ஏழாவது மாடிக்குக் கூட்டிபோய் அங்கிருந்து அவரைத் தள்ளி விட்டார்கள். அப்போது அவர், 'வேதங்கள் பிரமாணம் என்பது உண்மையானால் எனக்கு ஒன்றும் நேரக்கூடாது' என்று சூளுரைத்தார். அதன்படி அவருக்கு ஒன்றும் நேரவில்லை. ஆனால், ஒரு சிறு கல் குத்தி அவரின் ஒரு கண் பார்வையிழந்தது. 'எனக்கு ஏன் இந்தக் கதி?' என்று அவர் அரற்றியபோது, ஒரு அசரீரி எழுந்தது. ''குமாரில பட்டா, வேதங்கள் பிரமாணமே என்று நீ கூறியிருந்தால் உனக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. மாறாக பிரமாணம் என்பது உண்மையானால் என்று சற்று சந்தேகம் தொனிக்கக் கூறியதால் இவ்வாறு நேர்ந்தது" என்று கூறியது. பக்தியில் சிறு சந்தேகமும் பெரிய இடரைத் தரும்.

இவரைப் பிற்காலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் வாதில் வென்றார்.

ஸ்ரீஆதிசங்கரரின் சீடரான,ஸ்ரீ பத்மபாதருக்கு, ஸ்ரீ நரசிம்ம மந்திரம் உபதேசமாகியிருந்தது. அதில் சித்தி அடைய வேண்டி, ஒரு கானகத்தில் தனிமையில் அமர்ந்து அவர் அதை ஜபம் செய்யலானார்.

அப்போது அங்கு வந்த ஒரு வேடன் தனிமையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, "ஸ்வாமி, கொடும் மிருகங்கள் உலவும் இந்தக் கானகத்தில் இவ்வாறு அமர்ந்திருக்கக் கூடாது, எதற்காக இவ்வாறு அமர்ந்திருக்கிறீர்கள். போய்விடுங்கள்", என்று கூறினான். பத்மபாதரோ, ஒரு வேடனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என்று நினைத்து, ' நான் ஒரு அதிசய மிருகத்தைத் தேடி வந்திருக்கிறேன். அது இங்கே தான் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன் என்றார். வேடன் அதிசயித்து, 'இந்தக் கானகத்தில் எனக்குத் தெரியாத மிருகமா? நீங்கள் அடையாளம் சொல்லுங்கள், நான் பிடித்துத் தருகிறேன்' என்றான். அவன் போனால் போதும் என்று பத்மபாதரும், 'சிங்கத் தலையும் மனித உடலும் உள்ள விசித்திர மிருகம் அது ' என்றார்.

வேடன் 'நான் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அதைப் பிடித்து வருகிறேன்' என்று கூறிவிட்டுத் தேடப் புறப்பட்டான். கானகமெங்கும் தேடியும் கிடைக்கவில்லை. 'அந்தப் பெரியவர் உண்மையைத் தான் கூறுவார்' என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆதலால் உணவின்றி, நீரும் அருந்தாமல் தேடினான். மாலையும் வந்தது. 'கிடைக்கவில்லை' என்று அந்தப் பெரியவரிடம் எப்படிப் போய்ச் சொல்வேன், அவர் என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரே!!' என்று வருந்திய அவன், 'அப்படிச் சொல்வதைவிட மரணமே மேல்' என்று காட்டுக்கொடிகளால் கழுத்தை இறுக்கிக் கொள்ள முற்படும் போது, இடி இடிப்பதுபோல் பெருமுழக்கம் கேட்டது. ஆதிமூலமான இறைவன், ஸ்ரீ நரசிம்மர்,அவன் முன் தோன்றினார்.

உடனே அவன், " வந்து விட்டாயா, உன்னை எங்கெல்லாம் தேடுவது, உன்னை என்ன செய்கிறேன் பார்!!!, என்று கூறி, கொடிகளால் அவரைக் கட்டினான். 'அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை' யான ஹிரண்ய சம்ஹார மூர்த்தி ,சாதுவாக அவனுக்குக் கட்டுப்பட்டார். அவரை பத்மபாதரிடம் அழைத்துச் சென்று, 'பாருங்கள், பிடித்து விட்டேன். இப்படி மூக்கைப் பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தால் எப்படிக் கிடைக்கும்? நான் பிடித்துவிட்டேன். நீங்கள் சொன்ன மிருகம் இதுதானா என்று பாருங்கள்' என்றான். பத்மபாதருக்கு கொடிகளால் கட்டப்பட்டிருக்கும் பகவானைத் தெரியவில்லை. அவர் பிரமித்து நின்றிருந்த போது, நரசிம்மரின் கர்ஜனை கேட்டது. 'முழு நம்பிக்கையுடன் தேடியதால், இவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். பக்தியில் சந்தேகம் கூடாது. இவனின் சம்பந்தம் இருந்ததால்தான் என் குரலையாவது கேட்கிறாய், காலம் வரும்போது நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்று கூறி மறைந்தார். சரணாகத வத்சலனான இறைவன், தன்னையே கதி என்றிருப்போருக்குக் கட்டாயம் அருளுவான்.

ஸ்ரீ நரசிம்மரின் அவதாரத்துக்குக் காரணமே, ஒரு சிறுவனின் பரிபூரண சரணாகதி அல்லவா?.'மார்ஜால நியாயத்'துக்கு மிகச் சிறந்த உதாரணம் பக்தர்களில் சிறந்தவன் என்று போற்றப்படும்பிரகலாதனே.பிரகலாதனின் பெருமையைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்ப இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறார்.
'ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்'


பிரகலாதனின் பரிபூரண சரணாகதி பகவானின் அவதாரத்துக்கே வழிவகுத்தது. அசுர குல வேந்தன் ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் கருவிலேயே எட்டெழுத்து மந்திரத்தை முற்றும் உணர்ந்தவன். தன் தந்தையின் நாமத்தையே அனைவரும் உச்சரித்திருந்தபோது, உலகத் தந்தையாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தின் பால் அளவிலாத பற்றுக் கொண்டிருந்த பிரகலாதன், தன் குருகுலத்தில் நாராயணனின் நாமத்தின் பெருமையைக் கூறுவதை, கம்பர், 

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால் 
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த 
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்  
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!.

என்று அழகுறக் கூறுகிறார். தன் தந்தை தன்னைப் பல துன்பங்களுக்கு ஆட்படுத்திய போதும் இம்மியும் குறையாத இறைபக்திச் செல்வம் அவனுக்கு . இறுதியில், 'எங்கிருக்கிறான் உன் ஹரி?' என்று தந்தை வினவ, சிறிதும் சந்தேகம் இன்றி,

சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்;

ஸ்ரீ எம்பெருமான், தன் உத்தரீயம்(அங்க வஸ்திரம்) நழுவிக் கீழே விழுவது அறியாமல் பூலோகத்துக்கு விரைந்து வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று, கஜேந்திரன் என்ற யானையின் குரல் கேட்டு. இரண்டாவது, பிரகலாதனுக்காக.

ஹிரண்யகசிபு விசித்திர வரங்கள் பல பெற்றிருந்தான். தனக்கு, மனிதனாலோ, மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது. அது போல், வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, பகலிலோ, இரவிலோ, எந்த வித ஆயுதத்தாலோ மரணம் கூடாது என்பது அவன் வரம்.

இறைவன் வெகுவேகமாக பூலோகம் வந்தார். எந்தத் தூணை அவன் பிளப்பான் என்று அறிந்திருந்தாலும், எல்லாத் தூணிலும் ஆவிர்பவித்தார். கடும் கோபம்,சீற்றம் எல்லாம் சேர்ந்து, ஹிரண்யன் தூணைப் பிளந்த போது, அதைவிட,ஆயிரமாயிரம் மடங்கு ஆற்றலுடன், பெரும் சினமே உருவெடுத்தாற்போல்,

திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

ஹிரண்யனோடு போர்புரிந்து வென்றார். அவன் வரத்தின்படி, மனிதனுமல்லாத, மிருகமுமல்லாத நரசிம்ம உருவில், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அல்லாத, வாசற்படியில் அமர்ந்து, பூமியிலோ ஆகாயத்திலோ அல்லாமல் தன் மடியில் அவனை வைத்து, பகலும் இரவும் அல்லாத சந்தியாவேளையில் தன்,நகங்களையே ஆயுதமாகக் கொண்டு அவனுக்கு முக்தி கொடுத்தருளினார்.பின் கோபம் தணிந்து, பிரகலாதனின் குலத்தினரைக் இனிக் கொல்லுவதில்லை என வரமளித்தார்.

கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்; (கம்ப இராமாயணம்)

அதனாலேயே, பிரகலாதனின் பேரனான, மஹாபலியை, தன் திருவடியைத் தலையில் வைத்து பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.

(ஸ்ரீ ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும். இதைப் பாராயணம் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் அருளால் கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்கும்). மார்ஜால நியாயத்துக்கு இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

அங்கயற்கண்ணியும் ஐயனும் ஆறாறு மாதம் அரசாட்சி செய்யும் அழகுமிகு மதுரை. வரகுண பாண்டியன் அரசாட்சியில் மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்திருந்த காலத்தில், பொல்லாத வேளை, ஹேமநாத பாகவதர் உருவத்தில் மதுரையில் நுழைந்தது. அரசவையில் தன் இசைமழையைப் பொழிந்து, அதன் காரணமாக‌, மன்னனும் மற்றவரும் இன்புற்றிருந்த போது, ஹேமநாதன், பாண்டிய நாட்டுப் புலவர்களை இசைவாதுக்கு அழைத்தான். தான் தோற்றால், தானும் தன் இசைத் திறமையும் பாண்டியநாட்டுக்கு அடிமை எனவும், வென்றால், பாண்டிய நாடே தனக்கு அடிமை எனவும் பந்தயம் வைத்தான்.

அரசன் திகைத்தான். எனினும் ஒப்புக்கொண்டான். அரசவைப்புலவர்கள் போட்டியிடத் தயங்கியதால், இறையருள் வெல்லட்டும் என்று, புலவர்கள் ஆலோசனைப்படி, இறையருட் செல்வரான, பாணபத்தரை அழைத்து, பாடப் பணித்தான்.

பத்தர், அதிர்ந்தார். அரசவைப்புலவர்கள் இருக்க, இறைவன் முன் பாடும் தன்னை அழைத்ததற்குக் காரணம், புலவர்களின் யோசனையே என அறிந்து வெகுண்டார்.

மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது. (கவிஞர் திரு.தனுசு.)

என்று கலங்கினார். முடிவில் அரசன் வேண்டுகோள் ஆணையாக மாறவே, ஒப்புக்கொண்டு இருப்பிடம் ஏகினார். இறையருள் ஒன்றே இதிலிருந்து தன்னைக்காக்கும்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே
என்று,தெளிந்து, திருக்கோவில் சென்று, ஆலவாய் அண்ணலின் சன்னதியின் முன் நின்று, மனங்குமுறி,

சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த
ஆதி அந்தமில்லா அமுதே!
என் துயர் தீர்த்து வைப்பாய்!! என்று கதறினார்!!!.

அமுதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்டே
குமுதவல்லி தொழும் தேவனே! (கவிஞர் திரு. ஆலாசியம்).

என் குறை தீர்க்க ஓடோடி வாராயோ என்று பொற்றாமரைக் குளத்துப் படிகளில் அமர்ந்து உருகினார்.

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர்
'நின்னருளாங்கதியின்றி மற்றொன்றில்லேன்' என்று பரிபூரண சரணாகதி அடைந்த பக்தனின் குரல் கேட்டு, பனிமலைமேல் வாழும் பரமன், பழந்தமிழ்ச்சங்கம் வைத்து வளர்த்த மதுரை வந்தான். (ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னத்திற்கு இங்கு சொடுக்கவும்.)

சொக்க வைக்கும் அழகுடைய சோமசுந்தரர், பக்தனுக்காக, பழைய ஆடை அணிந்து பிறைச்சந்திரனை அரிவாளாக்கி, தன் இடுப்பில் வைத்து, தேய்ந்த செருப்பணிந்து, பழைய யாழ் ஒன்றை மீட்டியவாறு விறகு சுமந்து வந்ததை, பரஞ்சோதி முனிவர், ' திருவிளையாடற் புராணத்தில்'.


அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து அவிர் சடை அமுதம்
ஒழுக்கு வான்மதி வாங்கியே செருகியது ஒப்ப
மழுக்கு கனல் வெள் வாய்க் குயம் வலம் படச் செருகி
இழுக்கு தேய் செருப்பு அருமறை கடந்தான் ஏற்றி.

என்று விவரிக்கிறார். இரவு வரை வீதிகளில் அலைந்து பொழுதைக் கழித்துவிட்டு, இரவானதும் ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இறைவன் பாட, அதைக் கேட்ட ஹேமநாதன் அயர்ந்து போய் விசாரிக்க, தான் 'பாணபத்தரி'டம் இசை பயின்றதாகவும், தனக்கு இசை சரிவர வராததால் அவர் சொல்லிக்கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறக் கேட்ட ஹேமநாதன், அவரே மறுநாள் தன்னுடன் போட்டியிட்டுப் பாடப் போகிறார் என அறிந்து, தன் இசைத் திறமை முழுவதும் பாண்டிய நாட்டுக்கே அடிமை என்று சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இரவுக்கிரவாக ஓடி விடுகிறான்.

நடந்தவை யாவும் தன் கனவில் இறைவன் வந்து சொல்லக் கேட்டு, அரசனிடம் அறிவிக்கிறார் பாண பத்தர். 'நீயே கதி' என்று சரணடைந்த பக்தனுக்காக விறகு சுமந்த இறைவனின் திறம் எண்ணி

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!(கவிஞர் திரு. ஆலாசியம்)

உன் திருவருளுக்கு எவ்விதம் நன்றி சொல்வேன்!!! என்று உடலும் உள்ளமும் ஆனந்தமீதுற இறைவனை வணங்கினார்.

முழுமையான பக்தி என்பது இறைவனிடம் நம்மை மனமார ஒப்படைத்தலே. இறைவன் அத்தகைய பக்தியை நமக்கு அருள அவனையே பிரார்த்திப்போம்.

யின்மதி நீயே பயின்மதிதருதலின்
வெளியும் நீயே வெளியுறநிற்றலின்
தாயும் நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையும் நீயே முந்திநின்றளித்தலின்

(- ஸ்ரீ தேசிகரின் மும்மணிக்கோவை)

என்று அந்த முழுமுதற் பரப்பிரம்மத்திடம் சரணடைவோம்.






வெற்றி பெறுவோம்!!!!

2 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதமானப் பதிவை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றேன்.
    இந்த அழகிய மதுரமான மகத்துவ பொருள்களை கருவாக கொண்டு வரைந்த ஆக்கத்திலே அவனருளால் அடியேன் எழுதிய பாடல்களையும் சேர்த்து கோர்த்த அற்புத பக்தி மாலை மனமெல்லாம் மணம் பரப்பி பரவசப் படுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் சகோதரியாரே!

    தூயனை மாயனை மகேசனின் மைத்துனனை
    ஆயர்குலக் கொழுந்தை அருந்தவ அமுதை
    தாயினும் சிறந்தநேயனின் நினைவினை - என்னிலை
    ஆயினும் நீங்கா திருமனமே.

    மீண்டும் ஆலிலைத் தவழும் அந்தக் கண்ணனுக்கு இப்பாடலை காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //ஜி ஆலாசியம் said...
    மிகவும் அற்புதமானப் பதிவை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றேன்//

    தங்களின் அற்புதப் பாடலுக்கும், அழகான கருத்துரைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..