நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 30 மார்ச், 2012

ஸ்ரீராம பக்தா நமோ... நமோ.


ஸ்ரீராம நவமி (1.04.2012)

 ஸ்ரீராகவம் தசராத்மஜமப்ரமேயம் -
ஸீதாபதிம் ரகுகுலாந்வய ரத்னதீபம் | 
ஆஜானு பாஹுமரவிந்த தளாயதாக்ஷம் -
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி ||

'ராம' என்ற இரண்டெழுத்து மந்திரம், நம் எல்லாவிதமான துன்பங்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இந்த இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து, பிறவாப் பெருநிலை அடைந்தோரின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, ஸ்ரீதியாகய்யர், மகாத்மா காந்தியடிகள், என நம் கண்முன்னே வாழ்ந்திருந்த உதாரண புருஷர்கள் எத்தனையோ.

ராம நாம மகிமையை விளக்க‌ ஸ்ரீ மஹாபெரியவர் கூறிய ஒரு சம்பவம் இதோ

ஸ்ரீ ராமநவமியன்று, ஸ்ரீராமரின் படத்தை வைத்து, பூஜித்து, நிவேதனங்கள் செய்து, வழிபட்டால் வேண்டிய அனைத்தும் பெறலாம். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்தை வைத்துப் பூஜிக்க, விருப்பங்கள் கைகூடும்.


ஸ்ரீ ராமநவமியன்று செய்ய வேண்டிய நிவேதனங்கள்:
  • வெல்லப் பாயசம்.
  • உளுந்து வடை
  • பாசிப்பருப்பு கோசுமல்லி
  • உப்பு, மிளகுப்பொடி சேர்த்த வெள்ளரிக்காய்,
  • பானகம்
  • நீர்மோர்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு விதவிதமான நிவேதனங்கள் படைத்து வழிபடும் நாம், ஸ்ரீராஜாராமனுக்கு மட்டும் பானகம்,நீர்மோர் எனப் படைத்து வழிபடக்காரணம், ராமநவமி, பங்குனி, சித்திரை மாதங்களில் வருகிறது. கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சி தரும் என்பதற்காகவே, வெள்ளரிக்காய், பானகம்,நீர்மோர் என நிவேதனம் செய்கிறோம்.
     
     
குழந்தை பிறந்த வைபவத்தைக் கொண்டாடவே, பாயசம் படைத்து நிவேதனம் செய்கிறோம். திருமணம் கைகூட, பருப்புத்தேங்காய் நிவேதனம் செய்து, இராமாயணத்தில், அயோத்யா காண்டத்தில், 'சீதாஸ்வயம்வரம்' பாராயணம் செய்ய வேண்டும்.


ஸ்ரீராம தூதனான ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, இராமாயணத்தில் இருக்கும் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. ஸ்ரீ இராமாயணம் பாராயணம் செய்யும் இடத்தில், அனுமனுக்கென்று, ஒரு பலகை போட்டு, அதில் வஸ்திரம் சார்த்தி வைப்பது வழக்கம். அதில் அனுமன் அமர்ந்து, கேட்பதாக ஐதீகம்.


கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்த நாம, பலவித கஷ்டங்களை அனுபவிக்கிறோம். புராணங்களின் உட்கருத்துக்களை உணர்ந்து படித்தால், நம் கஷ்டங்கள் விலக வழி தென்படும். ஸ்ரீ அனுமனின் கதை, நமக்குப் பல விஷயங்களை உணர்த்தும்.

ஸ்ரீ அனுமன், ருத்ராம்சம். ஸ்ரீராமருக்கு உதவி செய்வதற்காக, அவதாரம் எடுத்த சிவனின் அம்சமே அனுமன். சிறு வயதில் வானத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சூரியனை, 'பழம்' என்று நினைத்து, பிடிப்பதற்காக, வானத்தில் பறந்தான் வாயு மைந்தனான அனுமன். அப்போது, சூரிய‌ கிரகணம் ஆரம்பிக்க வேண்டிய நேரம். இராகு பகவான் , சூரியனை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது, தன்னைத் தாண்டி ஒரு சிறுவன் சூரியனை நோக்கிச் செல்வதைப் பார்த்து, அதிசயித்து, அந்தச் சிறுவனை நிறுத்தி, வினவினார்.

'நான் அந்தப் பழத்தைப் பிடிக்கப் போகிறேன்' என்று அனுமன் பதிலுரைக்க ( தன் எதிரியாகிய சூரியனைப் பிடிக்கச்செல்வதால்), மகிழ்ந்து, பிற்காலத்தில் நீ வணங்கத்தக்க நிலை அடைவாய்(இராகுவைப் போல் கொடுப்பாரில்லை), அப்போது, எனக்குரிய தானியமாகிய உளுந்தில் நிவேதனம் செய்து உனக்குப் படைக்கும் பக்தர்களுக்கு நான் அருளுவேன்' என்று, வரமளித்தார். அதனால் தான், உளுந்து வடை நிவேதனம் செய்கிறோம். வடநாட்டில் அனுமனுக்கு 'ஜிலேபி' மாலை சார்த்துகிறார்கள். வடை செய்யும் போது, மிளகு சேர்த்துச் செய்வதே சிறப்பு. நடுவில் உள்ள ஓட்டை, பாம்பின் கண்ணைக் குறிக்கும். (இராகு பகவான் பாம்பு வடிவம் கொண்டவர் என்பதால்) ஆகவே, அது வட்டமாக இல்லாமல், நீள்வட்டமாக இருக்க வேண்டும்.






அதன்பின், சூரியனைப் பிடிக்கப் போனதற்காக, இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாடையில் அடிபட்டு, அழகிய முகத்துக்குப் பங்கம் வந்த போதும் சோர்ந்து போகவில்லை. 'நவவியாகரணங்களி'ல் சிறந்த பண்டிதர் சூரிய பகவானே என்று தெரிந்து அவரிடமே, எந்நேரமும் அவருக்கு எதிர்முகமாக சஞ்சாரம் பண்ணிக்கொண்டே (எவ்வளவு வெப்பத்தைத் தாங்கியிருப்பார்!) கற்றுக்கொண்டார்.

ரிஷிகளின் சாபம் காரணமாக, அவ்வளவு வித்தையும் மறந்து போனபோதும் (இராமகாரியத்தின் போதுதான் நினைவு வரும் என்பது சாபம்) இடிந்து போகாமல், சுக்ரீவனுக்கு மந்திரியாகத் தொண்டு செய்து வந்தார். சீதையைத் தேடுவதற்காக, கடலைத் தாண்டவேண்டும் என்ற போது, ஜாம்பவான், இவரது பலத்தைப் பற்றி நினைவு படுத்த, அநாயாசமாகக் கடலைத் தாண்டினார். எது நடந்தாலும் சோர்ந்து போகாமல், 'அடுத்தது என்ன?' என்று யோசிக்கும் மதியூகம் அனுமனுக்கு உள்ள சிறந்த குணம். அதுதான், இராம இராவண யுத்தத்தில், லக்ஷ்மணனின் மயக்கத்தால், அனைவரும் ஸ்தம்பித்து நின்ற போது, சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு வந்து லக்ஷ்மணனைப் பிழைக்க வைத்து, இந்திரஜித்தின் வதத்துக்கு வழிவகுத்தது.



உயர்ந்த தெய்வ நிலையை அடைந்தாலும் பணிவை விடாத பெருங்குணம் அவருக்கு. கோவிலுக்குள் நுழைந்ததும், கைகூப்பி நம்மை வரவேற்கிற அளப்பரிய கருணைத் தெய்வம் அவர் ஒருவரே.


ஸ்ரீஇராமரின் அருள்பெற, அனுமனின் கிருபை மிக முக்கியம். முதலில் அனுமனின் கடாட்சம் பெற்ற பிறகே, இராம தரிசனம் சாத்தியம். ஸ்ரீ துளசி தாசர், மந்திராலய மஹான் ஸ்ரீராகவேந்திரர் இவ்விருவரும் அனுமனின் அருள் பெற்றே, ஸ்ரீராமரின் திவ்ய தரிசனம் பெற்றனர். மந்திராலயத்தில், ஸ்ரீராகவேந்திரரது பிருந்தாவனத்தின் முன்பாக, ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். இவருக்கு, தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை, தினமும் சாப்பிட்டு வந்தால், தீராத நோய்கள் தீரும்.


'கண்கட்டு வித்தை'கள் செய்வோரிடமிருந்து தப்பிக்க, ஸ்ரீஅனுமன் அல்லது ஸ்ரீபத்திரகாளியை நினைத்தால், அவர்களது வித்தை நம்மிடம் செயல்படாது என்று கூறப்படுகிறது.


ஆகவே, ஸ்ரீஇராமாயணப்பாராயணம், குறிப்பாக, சுந்தரகாண்டப் பாராயணம், ஸ்ரீராமநவமியன்று செய்வது சிறந்தது.


புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸ்ரீராம நவமியன்று பாராயணம் செய்ய வேண்டிய மற்றொரு ஸ்லோகம், ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம். நவகிரகங்கள் ஒவ்வொன்றின் அம்சமாகவே, ஸ்ரீமஹாவிஷ்ணு தன் அவதாரங்களைச் செய்தார். சூரியபகவானின் அம்சமாகத் தோன்றியவரே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. அவரே ஸ்ரீராமரின் குல முதல்வனும் ஆவார். இராம இராவண யுத்தத்திற்கு முன் அகஸ்திய மஹரிஷி, இராமருக்கு உபதேசம் செய்ததே ஆதித்ய ஹ்ருதயம்.



சூரியனின் பெருமைகளைப் போற்றிப் புகழும் இந்தத் துதியைப் படிக்கும் போதே, நமக்குள் எழும் எழுச்சிமிக்க உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தீர்க்கமுடியாத வருத்தமோ துன்பமோ வந்தால், இந்தத் துதியை ஒன்பது முறை தொடர்ந்து பாராயணம் செய்தால், வருத்தம் நீங்குவதைக் காணலாம்.

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயத்திற்கு, இங்குசொடுக்கவும்.

ஸ்ரீராமஜெயம் என்று தினமும் எழுதுபவர்கள் எத்தகைய வருத்தத்திலிருந்தும் உடனே விடுபடுவர். இராமநவமியன்று, அன்னதானம், வஸ்திர தானம், விசிறி வழங்குதல் போன்றவை சிறப்பு.



ஸ்ரீராமநவமியன்று, ஸீதா,லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வழிபட்டு,

வெற்றி பெறுவோம்!

வெள்ளி, 23 மார்ச், 2012

THAMBOOLAM THARUM MURAI...தாம்பூலம் தரும் முறை.


                                                                                               

                                   
சென்ற பதிவில் சுருக்கமாகப் பூஜை செய்யும் முறையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் தாம்பூலம் தரும் முறைகள் பற்றிக் காணலாம்.

தாம்யத தந்த தயத்வம் ஜனதா:
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.

இந்த வரிகள் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக,நம்முன் வாழ்ந்திருந்த ஸ்ரீஸ்ரீமஹாபெரியவர், இயற்றிய 'மைத்ரீம் பஜத' எனத் தொடங்கும் கீர்த்தனையின் வரிகள் என்பதைப் பலரும் அறிவர். திருமதி. எம்.எஸ்.அவர்கள், ஐ.நா.சபையில் பாடுவதற்காக இந்தப் பாடலை இயற்றித் தந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதன் பொருள்............ 

‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்;  பூமியில் உள்ள சகல ஜனங்களும் சுபிட்சமுடன் விளங்கட்டும்’ 
என்பதாகும்.

தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்
  1. உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.'அதிதி' என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, 'பசி ' என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். அவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும். 
  2. வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும்.  
  3. வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். சாக்தர்கள் தங்கள் பூஜையில், தேவிக்கு, முக்கோணவடிவிலான தாம்பூலம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். 
  4. தாம்பூல பூரித முகீ..............என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.இதன் பொருள்'தாம்பூலம் தரித்ததால்,பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்'என்பதாகும். 
  5. விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, 'நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர். 
6. தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.

திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.

விசேஷங்களுக்கு அழைக்கச் செல்லும்போதும் தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப் படுகிறது.விருந்து உபசாரங்கள் தாம்பூலத்துடனேயே நிறைவு பெறுகின்றன.

7. வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றாலும் இது சத்வ குணம் கொண்டதல்ல. ஆகவேதான் பிதுர் தினங்களில் வெற்றிலை போடலாகாது.

பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.


இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை. 

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம். 

மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. 

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, 

கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க, 

வளையல், மன அமைதி பெற‌ 

தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)

பழம்,அன்னதானப் பலன் கிடைக்க, 

பூ, மகிழ்ச்சி பெருக, 

மருதாணி, நோய் வராதிருக்க, 

கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,  

தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ 
வழங்குகிறோம்.

மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில், ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே. 


தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 

அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.  வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. 

மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.  

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும் 
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா " 

என்கிறார் அபிராமி பட்டர்.


எனக்குத் தெரிந்த ஒரு மூதாட்டி, வெற்றிலை, பாக்கு, ஒரு சிறு வெல்லத்துண்டு, பூ முதலியவையே வைத்து, வெள்ளி தோறும் வெற்றிலை பாக்குத் தருவார். இன்று அவர் பேரன், பேத்திகள் மிக நல்ல நிலையில் இருக்கின்றனர். வீட்டுக்கு வருபவருக்கு ஏதேனும் உண்ணத் தர வேண்டும் என்பதால் வெற்றிலை,பாக்குடன் பழம் தருகிறோம். மற்றப் பொருட்கள் தர வசதிப்படாவிட்டாலும், அதற்குரிய பலன்கள் குறைந்து விடாது.

குறிப்பாக, இங்கே நான் ரவிக்கைத்துணி பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
அந்நாளில், சுமங்கலிப் பெண்களே ரவிக்கை அணிவது வழக்கம். இப்போது போல, அதிக அளவு உடைகள் வாங்குவதும் வழக்கத்தில் இல்லாத காலம். ஆகவே, ரவிக்கைத்துணி வைத்துக் கொடுப்பது,நிறைய பேருக்கு, உபயோகமாக இருந்தது. 

இப்போது எல்லாப் புடவைகளுடனும், அதற்குரிய 'ப்ளவுஸ்' வந்து விடுகிறது. நாம் கொடுக்கும் ரவிக்கைத்துணி, பல சமயம் நமக்கே 'ரொட்டேஷனில்' வந்து விடுகிறது. சில கடைகளில் வைத்துக் கொடுப்பதற்கென்றே, மலிவு விலையில் ரவிக்கைத்துணி விற்கிறார்கள். அவற்றைத் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுக்கலாமே என்று தைத்தால், தைக்கும் போதே கிழிகிறது. அவற்றை வைத்துக் கொடுப்பதால் என்ன லாபம்?

வஸ்திர தானம் என்பது எளியோருக்கு வழங்கினால் தான் பூரண பலன். ஆகவே அம்மாதிரி உள்ளோருக்கு, புடவை, வேஷ்டி வழங்குதல் சிறப்பு.ஆகவே, உபயோகிப்பவர்களுக்கு ரவிக்கைத்துணி கொடுங்கள். மற்றவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் உகந்தது.

அதேபோல், கண்ணாடி,சீப்பு தருமுன், நல்ல தரமான, உபயோகிக்கும் நிலையில் உள்ளதையே வாங்கவும். மிகச்சிறிய சீப்பு, கண்ணாடி போன்ற  வற்றைத் தந்தால் அவை, உபயோகிக்கப்படாமல் 'சுற்றுக்களில்' செல்லும். சீப்போ,கண்ணாடியோ, தரவேண்டும் என்பதற்காக, உபயோகித்ததைத் தர வேண்டாம். தாம்பூலம் வாங்கிக் கொள்பவர் அம்பாளின் சொரூபம். அம்பிகைக்குச் செய்யும் பூஜையாக நினைத்துத் தான தாம்பூலம் தர வேண்டும். அவர் நமக்குப் பிடிக்காதவர் என்பதற்காக, உபயோகித்ததைத் தந்தால், பின் விளைவுகள் நமக்குத் தான்.

மஞ்சள்,குங்குமப் பாக்கெட்டுகளும் தரமானதாக இருக்கட்டும். இயலாவிட்டால், தாம்பூலம் வாங்க வருபவரிடம் மஞ்சள் குங்குமத்தை இட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, மற்றப் பொருட்களைத் தரலாம்.

நவராத்திரிகளில் 'கன்யாபூஜை' செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, 'சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும் பெறுவதாலும் சுபிட்சம் விளையும். சிலர், சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும். 

எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.

தாம்பூலம் தரும் முறைகள்:

1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.

2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும். 
பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும். 

3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.                        
4. தேங்காய் அளிப்பதானால், அதில் லேசாக மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு சேர்த்து, அம்மன் முன் காட்டவும். தேங்காயின் குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்க வேண்டும். அம்பாளின் அருள் அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் நலம் பெற வேண்டிக்கொள்ளவும்.

5. பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்துத் தரவும்.

6.பெற்றுக் கொள்பவர் வயதில் இளையவர் என்றால்,  அவர், கொடுப்பவருக்கு நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்ளவும்.

7.வயதில் பெரியவருக்குத் தாம்பூலம் கொடுப்பதானால், தாம்பூலம் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும்.

8. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தை முறத்தில் வைத்து, மற்றொரு முறத்தால் மூடிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. முறம் மஹாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கருகமணியும் தாம்பூலத்தில் வைத்து வழங்குகின்றனர். 

புடவைத்தலைப்பால் முறத்தை மூடி, தாம்பூலம் வழங்குகின்றனர்.  பெற்றுக் கொள்பவரும் அவ்வாறே பெறுகிறார்.

                                            

தர்மம், ஈகை, தயை, சாந்தி போன்ற குணங்கள் உலகில் பரவ வேண்டி, அம்பிகையைத் தொழுது வணங்கி, தாம்பூலமளித்து,

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள்  படங்கள்.

புதன், 21 மார்ச், 2012

தேவியின் திருவடி.....பாகம் 3, எளிய முறை பூஜை

                        
 

"யாதேவி ஸர்வ பூதேஷீ சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:"

'எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சக்தி ரூபமாக ஒளிர்கிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.'

வசந்த நவராத்திரி நாளை மறுநாள் துவங்குகிறது.

இந்த ஒன்பது நாளிலும் முறையாக அம்பிகையை வழிபட்டு வணங்குவோர், கல்வி, கலைகள், முதலியவற்றோடு ஞானமும் பெற்று, பிறவாநிலை எய்துவர்.


எளிய முறை பூஜை:

1. ஒரு செம்பில், (வெள்ளி, தாமிரம், செம்பு என எது வேண்டுமானாலும் இருக்கலாம். எவர்சில்வர் தவிர்க்கவும்), அரிசி ஒரு ஆழாக்கு, சிறிது பயத்தம் பருப்பு, நான்கு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, இரண்டு மஞ்சள்கிழங்கு, உலர் பழங்கள் (சிறு பொட்டலமாக வைக்கலாம்) இவற்றைப் போடவும். மாவிலை வைத்து அதன் மேல் மஞ்சள்பூசி பொட்டுவைத்த தேங்காய் வைக்கவும்.கலசத்தில் ஒரு ரவிக்கைத் துணியைச் சுற்றி வைக்கவும். சிறு பாவாடை இருந்தால் கட்டலாம். இயன்ற ஆபரணங்கள், மஞ்சள் கயிறு சாற்றி, சிறு பூமாலை அல்லது பூச்சரம் சாற்றவும்.

2. செம்பில், மஞ்சள் தூள் ,வாசனைப்பொருட்கள் கலந்த நீர் ஊற்றியும் கலசம் வைக்கலாம். ஆனால் நீர்க் கலசம் அதிக ஆகர்ஷண சக்தி கொண்டது.  நியம நிஷ்டைகளுடன் கூடிய பூஜைகள் அவசியம்.

3. ஒரு வாழை இலை அல்லது சிறு தட்டில் அரிசியைப்பரப்பி, அதன் மேல் கலசத்தை வைக்கவும். இதைப் பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போட்டு அதன் மேல் வைக்கவும். வாழையடி வாழையாக வம்சம் தழைக்கவே, வாழை இலையில் வைக்கிறோம். 

4. இரண்டு பக்கமும் சிறு விளக்குகள் ஏற்றி வைக்கலாம். நெய் தீபம் காற்றைச் சுத்திகரித்து, அதிக அளவு பிராணவாயு(ஆக்சிஜன்) அளிக்கும் தன்மை கொண்டது. எனவே, முக்கியப் பூஜைகளின் போது நெய் விளக்கு ஏற்றுகிறோம். பலர் கூடி நடத்தும் விளக்குப் பூஜைகளின் போது, நெய் விளக்கு ஏற்றுவது, கூடியுள்ள பலரும் எளிதாக மூச்சுவிட உதவும்.


பொதுவாக, தீபம் ஏற்றுவது, தேவர்களுக்கும், பித்ரு தேவதைகளுக்கும் ஒருசேர திருப்தி அளிக்கக்கூடிய செயலாகும். தீப ஒளியைச் சுற்றி, முப்பத்து முக்கோடி தேவர்களும், பித்ருக்களும் கூடி இருந்து,ஒளி வடிவாகிய தேவியை வணங்குகின்றனர். மனையைக் காப்பதால் 'மனைவி' என்று பெயர் பெற்ற பெண்களே தீபம் ஏற்றவும், அதை வளர்த்து விடவும் உரிமை உள்ளவர்கள்.விளக்கை அணை என்று சொல்வதே அமங்கலம். தீபம் ஏற்றிய பின் நல்ல,அமைதியான வார்த்தைகளையே பயன் படுத்த வேண்டும்.

5. காலையில் நீராடி, தூய்மையான உடை அணிந்து பூஜைக்கு அமரவும்.

6. கலசத்தில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து பூஜைகளைச் செய்ய வேண்டும்.

7. மஞ்சள்பொடியில் சிறிது நீர் கலந்து, பிசைந்து, கூம்பாகச் செய்து கொள்ளவும். இதுவே பிள்ளையார். மங்களகரமாகப் பூஜை நடந்தேறுவதற்காக, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கிறோம். பிறகு குருப்யோ நம: என்று குருவை வணங்கிப் பின் பூஜையைத் தொடங்கவும். விளக்கு ஏற்றினாலே, பூஜையைத் தொடங்கி விட்டதாக ஐதீகம். அதன் பின் இடையில் எழுந்து செல்வதோ, கைபேசியில் பேசுவதோ கூடாது.பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்த பின்பே பூஜையைச் செய்ய வேண்டும்.

8. விநாயகரை எழுந்தருளச் சொல்லிப் பிரார்த்திக்கவும்.

9. விநாயகர் துதியைச் சொல்லி, பூஜையில் எந்தத் தடங்கலும் வராதிருக்கப் பிரார்த்திக்கவும். நேரமிருந்தால் அருகம்புல்லால் அர்ச்சனை செய்யலாம்.

10. வாழைப்பழம்,வெற்றிலைபாக்கு நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டவும்.

11. ஆத்மபிரதக்ஷிணம் (தன்னைத் தானே சுற்றி வருதல்) செய்து நமஸ்கரிக்கவும்.

12. கலசத்தில் அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். அம்பிகை கால்களைக் கழுவுவதாகப் பாவனை செய்து,'பாத்யம் ஸமர்ப்பயாமி',  என்று ஒரு கிண்ணத்தில் உத்தரிணியால் மூன்று முறை நீர் விடவும். கைகளை அலம்புவதாகப் பாவனை செய்து 'அர்க்யம் ஸமர்ப்பயாமி' என்று கிண்ணத்தில் உத்தரிணியால் மூன்று முறை நீர் விடவும். 

13. அம்பிகை நீர் அருந்துவதாகப் பாவனை செய்து 'ஆசமனீயம் ஸமர்ப்பயாமி' என்று நீர் சேர்க்கவும். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் என்னென்ன உபசாரங்கள் செய்வோமோ அதே பாவனையில் தேவிக்கும் செய்தல் வேண்டும். பிறகு, 'ஸ்நானம் ஸமர்ப்பயாமி' என்று, தேவி ஸ்நானம் செய்வதாகப் பாவித்து நீர் சேர்க்கவும்.

14. 'வஸ்திரம் ஸமர்ப்பயாமி' என்று, தேவிக்கு ரவிக்கைத் துணி சாற்றவும். 

15. 'ஆபரணானி ஸமர்ப்பயாமி' என்று, தேவிக்கு அணிவித்திருக்கும் ஆபரணங்களைக் காட்டி,  கலசத்தில் அக்ஷதை சேர்க்கவும்.

16. 'அலங்கரனார்த்தம் அக்ஷதாம் ஸமர்ப்பயாமி' என்று கலசத்தில் அக்ஷதை சேர்க்கவும்.

17. 'கந்தாந் தாரயாமி' என்று, தேவிக்கு சந்தனப்பொட்டு வைக்கவும்.
'ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி என்று குங்குமப் பொட்டு வைக்கவும்.

18. 'ஸர்வ உபசாரார்த்தம் புஷ்ப அக்ஷதான் ஸமர்ப்பயாமி' என்று புஷ்ப அக்ஷதைகளைச் சேர்க்கவும். துர்கா தேவி, மஹாகாளி,மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி வடிவானவள். எனவே துர்கா அஷ்டோத்திரம் சொல்லி, மலர்களாலோ, குங்குமத்தாலோ அர்ச்சிக்கவும்.

துர்கா அஷ்டோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

19. 'தூபம் ஆக்ராபயாமி' என்று ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும்.

20. 'தீபம் தரிசயாமி' என்று, ஒற்றை ஆரத்தி, (சிறிய அகலில் ஒரு முகம் ஏற்றி) காட்டவும்.
21. நிவேதனம் செய்ய வைத்துள்ள பொருள்களை, 'நைவேத்தியம் நிவேதயாமி' என்று காட்டவும்.  உள்ளத் தூய்மையே அன்னை விரும்புவது. எளிய நிவேதனங்களிலேயே அவள் மன மகிழ்கிறாள். காய்ச்சிய பாலில், வெல்லம், ஏலம் சேர்த்து, அல்லது, உலர் பழங்கள், அல்லது 'திரிமதுரம்' (மூன்று வகை இனிப்பு என்று பொருள்படும்) எனப்படும் பழம், தேன், சர்க்கரை இம்மாதிரி எளிய நிவேதனங்கள் போதும்.தினமும் பானகமும் நிவேதனம் செய்ய வேண்டும்.

22. 'தாம்பூலம் ஸமர்ப்பயாமி' என்று வெற்றிலைப் பாக்கு, பழம் நிவேதனம் செய்யவும். 

23. 'நீராஜனம் ஸமர்ப்பயாமி' என்று கற்பூரம் காட்டவும்.

24. 'பிரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி' என்று ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும்.

25. மனமுருகிப் பிரார்த்திக்கவும். 'பூஜையில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்' என்று வேண்டவும்.

26. ஒரு தட்டில், மஞ்சள், குங்குமம், நீர் சேர்த்து, நடுவில் இரு சிறு அகல்களில் நெய்தீபம் ஏற்றி, ஆரத்தி காட்டவும். இதனால்,பூஜையில் ஏற்பட்ட தோஷங்கள் மறையும். தெய்வங்களுக்கு ஆரத்தி காட்டும் போது, சுண்ணாம்பு பயன்படுத்தக் கூடாது. ஆரத்தி காட்டிவிட்டு, கீழே வைக்கவும். சிறிது நேரம் கழித்து, துளசிச் செடியிலோ, கிணற்றிலோ, கால் மிதி படாத இடத்தில் கொட்டவும். வாசலில் கொட்டக் கூடாது.

ஒன்பது நாட்களும் பூஜை செய்து, கடைசி நாளில், பூஜை முடிந்ததும், தேவியை கலசத்தில் இருந்து, இருப்பிடம் அடையப் பிரார்த்திக்கவும். சிறிது வடக்குத் திசையில் கலசத்தை நகர்த்தி வைக்கவும். 
ஒன்பது நாளும் தேவி நம்முடன் இருக்கிறாள். ஆகவே சண்டை சச்சரவுகள், அழுகை சீரியல்களைத் தவிர்க்கவும்.

கலசத்தில் உள்ள அரிசி,பருப்பு, தேங்காயைப் பயன்படுத்தி, சர்க்கரைப்பொங்கல் செய்து, நிவேதனம் செய்யவும். பூஜை செய்த மலர்களை(நிர்மால்யம்),செடியில் போடலாம் அல்லது ஏதாவது நீர்நிலையில் சேர்க்கலாம். குப்பையில் போடுவதைத் தவிர்த்தல் நலம்.
திங்கட்கிழமைகளில், 'துர்கா சப்த ஸ்லோகி' என்னும் துதியைச் சொல்லி, திரிமதுரம் நிவேதனம் செய்தால், உத்தியோகத்தில் உள்ள சிக்கல்கள் அகன்று,கிடைக்க வேண்டிய உத்தியோக உயர்வு கிட்டும்.

துர்கா சப்த ஸ்லோகி, தேவி மகாத்மியத்தின் சுருக்கமே ஆகும். ஏழு ஸ்லோகங்கள் உள்ள இந்தத் துதியின் வலிமை சொல்லி முடியாது. இதைப் பாராயணம் செய்வோரிடம் இருந்து,  உச்சரிக்கும் முறைகளைக் கற்று, பிறகு சொல்லவும். 

'துர்கா சப்த ஸ்லோகி'க்கு இங்கு சொடுக்கவும்.

ஒன்பது நாள் மாலையிலும் ஏதாவது பால்,பழம் என்று நிவேதனம் செய்யலாம்.

கலசம் வைத்து பூஜை செய்ய இயலாதவர்கள், பிரதமையன்று தொடங்கி, ஸ்ரீராம பட்டாபிஷேகப் படத்திற்கு முன்னால் விளக்கேற்றி, முதல் நாள் ஒன்று, இரண்டாம் நாள் இரண்டு என்ற எண்ணிக்கையில் ரவா லட்டுக்களை நிவேதனம் செய்யவும். பானகமும் நிவேதனம் செய்ய வேண்டும்.

பிரதமை தொடங்கி ஸ்ரீராம நவமி வரை செய்யும் பூஜை 'கர்ப்போத்ஸவம்' ஆகும். ஒன்பதாம் நாள், ஸ்ரீஇராம நவமி பூஜையைச் செய்து, ஒன்பது லட்டுக்களை நிவேதனம் செய்து, விநியோகிக்கவும். நினைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

ரவா லட்டு செய்முறைக்கு இங்கு சொடுக்கவும்

குழந்தைகளை தினமும் மாலை கலசத்தின் முன் அமர்ந்து, தெரிந்த துதிகள் பாடல்களைப் பாடச் சொல்லவும். குறிப்பாக, சரஸ்வதி துதிகள்,  அறிவாற்றலை அதிகரிக்கும்.

சரஸ்வதி பாடல்கள் இங்கு பார்க்கலாம்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகள், குழந்தைகளுக்குத் தாம்பூலம் தருவது நல்லது.

  
                                 

தாம்பூலம் தரும் முறையைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்

வெற்றி பெறுவோம்!