யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்ஸலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?.
தம் பக்தனைக் காக்க, கருட வாகனமேறி, ககனமார்க்கமாக விரைந்து வந்து, கஜேந்திரன் இருந்த தடாகத்தை அடைந்தார் பகவான்.
ஸ்ரீ நாராயண பட்டத்திரி, கஜேந்திரனின் குரல் கேட்டு, பகவான் ஓடோடி வந்ததைச் சொல்கையில், 'கஜேந்திரனின் நிர்க்குண பரப்ரஹ்ம ஸ்துதியைக் கேட்டு, அது தங்களைக் குறித்ததல்ல என்று மற்ற தெய்வங்கள் வராமலிருக்கையில், ஸர்வாத்மாவாகிய பகவான், தன் அளவற்ற கருணையின் வேகத்தால், கருடன் மேலேறி விரைந்து வந்தருளினார்!!' என்று போற்றுகிறார்.
எம்பெருமான், தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) கீழே விழுவதையும் பொருட்படுத்தாது, தம் பக்தரைக் காக்க விரைந்து பூலோகம் வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று கஜேந்திரனின் அபயக்குரல் கேட்டு. மற்றொன்று பிரகலாதனுக்காக என்று கூறுவதுண்டு...
கஜேந்திரன் குரலுக்கு, பகவான் ஓடோடி வந்த நிகழ்வை, பகவான் நம் மீது கொண்டுள்ள அளவற்ற பெருங்கருணையைக் குறித்து விவரிப்பதற்காக, வேறொரு விதமாகவும் கூறக் கேட்டிருக்கிறேன்..
கஜேந்திரன், முதலை தன் காலைக் கவ்வியதும், 'முதலே, முதலே' என்று தான் கூவியதாம்!!!!!!... ஆனால் ஆதி முதலான எம்பெருமான், தன்னைக் குறித்தல்லவோ அது இவ்விதம் கூவி அபயம் வேண்டியது என்று விரைந்தோடி வந்தானாம்!!!!!!...
எம்பெருமான், கஜேந்திரனை, தன் தாமரைக் கரத்தால் பிடித்துக் கொண்டு, தன் சக்ராயுதத்தால் முதலையைப் பிளந்தார்...ஆம்!!.. முதலில், கந்தர்வனுக்கு சாப விமோசனம் கொடுத்தார். பரமபாகவதர்களான இறையன்பர்களின் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கல்லவோ பகவான் முன்னுரிமை அளிக்கிறார்?. ஹூஹூவும் பகவானை வலம் வந்து நமஸ்கரித்து, அவரை பலவாறாகத் துதித்து வணங்கி, தன் இருப்பிடம் சேர்ந்தான். கஜேந்திரனும் சாரூப்ய முக்தியை அடைந்து பிரகாசித்தது...
( ஹஸ்தீந்த்ரம்ʼ தம்ʼ ஹஸ்தபத்மேன த்ருʼத்வா
சக்ரேண த்வம்ʼ நக்ரவர்யம்ʼ வ்யதா³ரீ: |
க³ந்தர்வே(அ)ஸ்மின்முக்தஸா²பே ஸ ஹஸ்தீ
த்வத்ஸாரூப்யம்ʼ ப்ராப்ய தே³தீ³ப்யதே ஸ்ம || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.
என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை, இங்கு பொருத்தித் தியானிக்கலாம்!!!..
(தொடர்ந்து தியானிப்போம்)..
நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!.. 2017ம் ஆண்டில், எல்லோரும், எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவும், இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி நிலவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
பதிலளிநீக்குமிக்க நன்றி!!!!.
பதிலளிநீக்குஆதிமூலமே அதிமூலமே
பதிலளிநீக்கு