வணக்கம்!..
'கண்ணனை நினை மனமே'...முதல் பாகம், நரசிம்மாவதாரத்தோடு நிறைவடைந்தது.. இரண்டாம் பாகம், 'கஜேந்திர மோட்ச'த்திலிருந்து, துவங்குகிறது.. கண்ணனின் கனிவான கருணையை வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டு, தங்கள் அனைவரின் நல்லாதரவும் இந்தத் தொடருக்கு இருக்குமென்ற நம்பிக்கையில், தொடர்கிறேன்..பிழைகள் இருக்குமாயின், தவறாது சுட்டிக் காட்டி, என்னை வழி நடத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...
. கஜேந்திர மோட்சம்..பகுதி..1.
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
கோள்முதலை துஞ்சக் குறியெறிந்த சக்கரத்தான்
தான் முதலே நங்கட்குச் சார்வு’
பேயாழ்வார் பெருமான், மூன்றாந்திருவந்தாதி
இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப்பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது மிக உண்மையான வாக்கியம். துன்பம் வரும் போது, மனங்கலங்காது, இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு, நம் வாழ்வைத் தொடர்ந்தால், கட்டாயம் இறைவன் நம்மைக் காத்து, வெயிலின் வெம்மை தணிக்கும் குடைபோல் உடன் வந்து, துன்பத்தைப் பொறுக்கும் சக்தியையும், துன்பத்திலிருந்து மீளும் வழியையும் அருளுகிறான்.
இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் விளைவே 'பக்தி'. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால் இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப்பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம பரிபக்குவ நிலையைக் கொடுக்கும். அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும்.
'அவனருளால் அவன் தாள் வணங்கி' எனபதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது.மேற்கூறியவற்றின் ஓர் அருமையான உதாரணமாக, 'கஜேந்திர மோக்ஷ'த்தைக் கொள்ளலாம். இந்த திவ்ய சரிதம், நம்மில் பெரும்பாலோர் அறிந்ததே என்றாலும், ஸ்ரீமந் நாராயணீயத்தில், பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாக அருளப் பெற்றதை நாம் இப்போது பார்க்கலாம்.
கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு அரசனாக, இந்திரத்யும்னன் என்ற பெயருடன் அரசாண்டு வந்தான். ஸ்ரீமந் நாராயணனிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக, எப்போதும், ஸ்ரீ விஷ்ணுவின் திருவுருவையே தியானிப்பவனாக இருந்து வந்தான் இந்திரத்யும்னன்.
ஒரு முறை இந்திரத்யும்னன், மலய பர்வதம் என்னும் இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, தவக்கோலத்தில், ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்தான். அவ்வாறு ஆராதிக்கும் காலத்தில் மௌனவிரதமும் பூண்டிருந்தான்.
அச்சமயத்தில், அங்கு வந்த அகத்திய மாமுனிவர், அரசன் தன்னை வரவேற்காது நிஷ்டையில் இருப்பதைப் பார்த்து கோபமுற்றார்.எத்தனை நியமங்களை ஒருவர் கைக்கொண்டாலும், மகான்களை வரவேற்று உபசரிப்பதற்காக அவற்றைக் கைவிடலாம். மகான்களை வரவற்பதும் உபசரிப்பதும் 'விசேஷ தர்மத்தில்' வருவதால் அதற்காக 'சாமான்ய தர்மமான' மௌன விரதத்தை கை விடுவது பாவமாகாது. இதனை அறியாத இந்திரத்யும்னன், மௌன விரதத்தையே அனுஷ்டித்ததால், அகத்தியர், மன்னன் தம்மை அவமதித்ததாக எண்ணி, 'யானை போல் ஜடமான புத்தியை உடைய நீ, யானையாகவே பிறவி எடுக்கக் கடவது' என்று சபித்து விட்டார்.
எம்பெருமானையை நினைத்துக் கொண்டிருந்த இந்திரத்யும்னன், அந்நினைவின் கூட்டுறவுடனேயே, யானையரசனாகப் பிறவி எடுத்தான்!!!..
கும்போத்பூதிஸ்ஸம்ப்ருʼத க்ரோதபார:
ஸ்தப்தாத்மா த்வம்ʼ ஹஸ்திபூயம்ʼ பஜேதி |
ஸ²ப்த்வாதை²னம்ʼ ப்ரத்யகா³த்ஸோ(அ)பி லேபே
ஹஸ்தீந்த்ரத்வம் த்வத் ஸ்ம்ருʼதி வ்யக்தி தன்யம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்).
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..