பாரத வர்ஷத்தில், குறிப்பிடத்தகுந்த பக்தர்களுடன் கூடிய நாரதரால் உபாசிக்கப்படுகிறார் பகவான். நர நாராயண ஸ்வரூபத்தில் அருள் புரியும் எம்பெருமானை, நாரத முனி, யோகத்தாலும் ஞானத்தாலும் பல்வேறு துதிகளாலும் போற்றிப் பணிகிறார். இத்தகைய மகிமையுள்ளவராகவும், சாது ஜனங்களை, பிரளய காலம் வரை காப்பாற்றுபவராகவும் விளங்கும் பகவானை துதிக்கிறார் பட்டத்திரி.
மேலும் பிலக்ஷத்வீபத்தில் ஆதித்யராகவும், சால்மலத்வீபத்தில் சந்திரனாகவும், குசத்வீபத்தில் அக்னியாகவும், க்ரௌஞ்சத்வீபத்தில் நீராகவும், சாகத்தில் வாயுவாகவும், புஷ்கரத்வீபத்தில் பிரம்ம ஸ்வரூபத்திலும் பகவான் உபாசிக்கப்படுகிறார்.
"உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே'.
என்ற நம்மாழ்வார் திருவாக்கினை இங்கு நாம் பொருத்தி, தியானிக்கலாம்.
சந்தியாகாலங்களில், சிம்சுமார ஸ்வரூபியாக, மகான்களால் உபாசிக்கப்படுகிறார் எம்பெருமா ன், வால் முதலான (உடல்) உறுப்புகளில், துருவ நட்சத்திரம் உள்பட, பல நட்சத்திரங்களும் கிரகங்களும் உடைய முதலை வடிவில், பகவானை சந்தியா காலத்தில் தியானித்தால் நரக வேதனை அண்டாது. தம் நோயையும் நரக வேதனைக்கு ஈடாகக் கருதி, அதிலிருந்து தம்மைக் காக்க வேண்டுகிறார் பட்டத்திரி.
ஸர்வைர்த்⁴ருவீதி³பி⁴ருடு³ப் ரகரைர்க்³ரஹைஸ்²ச
புச்சா²தி³கேஷ்வவயவேஷ்வபி⁴கல்ப் யமானை: |
த்வம்ʼ ஸி²ம்ʼஸு²மாரவபுஷா மஹதாமுபாஸ்ய:
ஸந்த்⁴யாஸு ருந்தி⁴ நரகம்ʼ மம ஸிந்து⁴ஸா²யின் || (ஸ்ரீமந் நாராயணீயம், பலன்: நரக வேதனையிலிருந்து விடுதலை).
பாதாளத்திற்கு கீழ், அசைகின்ற ஒற்றைக் குண்டலத்துடன் கூடிய, ஆயிரம் தலைகளை உடையவராகவும், நீல நிற ஆடையுடன், கலப்பை ஏந்தியவராகவும், நாக கன்னிகைகளால் சேவிக்கப்படும் ஆதிசேஷ வடிவம் பூண்டவராகவும் அருள் புரிகிறார். தம் நோய்களை போக்கியருளும் பொருட்டு, இந்த வடிவத்தில் எம்பெருமானை தியானிக்கிறார் பட்டத்திரி.
இவ்விதமாக, வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு ஸ்வரூபங்களில் வழிபடப்படுபவராக பகவானை தியானித்து, தசகத்தை நிறைவு செய்கிறார் பட்டத்திரி.
அடுத்த தசகத்தில், அஜாமிளன் சரிதம்..
(தொடர்ந்து தியானிக்கலாம்).
வெற்றி பெறுவோம்!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..