நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 15 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME..PART 9....கண்ணனை நினை மனமே!.. பகுதி 9..​

நாம் முன்பே பார்த்தது போல்,  பட்டத்திரிக்கு ஏற்பட்ட நோய், அவரது விருப்பத்தாலேயே ஏற்பட்டது...எனினும் அதைத் தீர்க்கும் வழி அறியாதவராக, குருவாயூரப்பனிடம் சரண் புகுந்தார்.. தமது நோயின் காரணமாக, பரம பக்தனின் இலக்கணங்களாகச் சொல்லப்படும் குணங்கள் எதையும் தம்மால் கடைபிடிக்க இயலவில்லை என்று மனவருத்தம் மிகக் கொண்ட அவர், தம்மை பக்தி வழியில் செலுத்துமாறும், அதற்காக, தமக்கு உடல் நலத்தை அருளுமாறும் வேண்டுகிறார் ஸ்ரீஅப்பனிடம்!..
பட்டத்திரி, தன் நோயின் கடுமையிலும், கண்ணனின் கழலிணைகளை நினைந்துருகுகிறார்.

நோயின் கடுமையையும் மீறி, கண்ணன் திருவுருவை, தியானத்தில் தரிசிக்க இறைஞ்சுகின்றார்.

"நோயினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்ட என் உள்ளத்தில், உம்முடைய ஞான ஸ்வரூபம் உதிக்க வேண்டும்.. அப்போது ஆனந்தத்தால், புளகாங்கிதம் அடைந்து, கண்ணீர் பெருகி, என் துன்பங்களை மறந்து விடுவேன். இதனை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும்..".

"ஸ்ரீஅப்பனே!...உம்மிடம் பக்தி இல்லாதவர்கள் கூட கவலையற்றிருக்க,  உம்மிடம் பக்தியுள்ள நான் மிகவும் தவிக்கிறேனே!..இது ஏன்?.. இதனால் உம்மை அடைந்தவர்களை நீர் காப்பதில்லை என்ற அவப்பெயர் உமக்கு வரக் கூடாது!.. கம்சனை ஒழித்தவரே!.. என் வியாதிகளைப் போக்கி அருளி, என்னை பக்தர்களில் சிறந்தவனாக ஆக்கியருளல் வேண்டும்..".

(அருளாதொழிவாயருள்செய்து அடியேனைப்
பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய்
மருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும்
தேருளேதரு தென்திருநாவாயென்தேவே. (நம்மாழ்வார் )).

இவ்வாறு பிரார்த்தித்து வரும் பட்டத்திரி, தசகத்தின் நிறைவு ஸ்லோகத்தில், கீழ்க்கண்ட வண்ணம் பிரார்த்திக்கிறார்!..

கிமுக்தைர்பூ⁴யோபி⁴ஸ்தவ ஹி கருணா யாவது³தி³யா
த³ஹம்ʼ தாவத்³தே³வ ப்ரஹிதவிவிதா⁴ர்தப்ரலபித: | 
புர: க்ல்ருʼப்தே பாதே³ வரத³ தவ நேஷ்யாமி தி³வஸான்
யதா²ஸ²க்தி வ்யக்தம்ʼ நதினுதினிஷேவா விரசயன் ||

("ஸ்ரீஅப்பனே!.. மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போவதால் உண்டாகும் பயன் என்ன?(ஏதுமில்லை)..நான் இவ்வாறு புலம்பிக் கொண்டே இருப்பதை விட்டு விட்டு, என் மீது உமக்கு கருணை ஏற்படும் வரையில், உம் திருவடிகளில் என்னால் இயன்ற வரை, நமஸ்காரம் பூஜை, துதி ஆகியவைகளைச் செய்து நாட்களைக் கழிக்கப் போகிறேன்!..”).

ஒரு தாய்க்கு, தன் குழந்தைக்கு வேண்டியது என்ன என்று குழந்தை முறையிடத் தேவையில்லை.. அவளே அறிவாள் அதை!.. அது போல், ஒரு பொருளின் தன்மையறியாது, அதை வேண்டுமென, குழந்தை கேட்குமாயின், அதைத் தர மறுப்பாள்... குழந்தையின் அழுகையைக் கண்டு கொள்ள மாட்டாள். குழந்தையின் நலன் ஒன்றே அவள் நாடுவது.

ஒரு மானிடத் தாயே இவ்வாறிருக்கையில்,  தாய்க்கும் தாயாக விளங்கும் தயாபரனான இறைவனுக்கு, நமக்கு வேண்டுவது தெரியுமல்லவா?!..  தன் நோயை நீக்க வேண்டும், தன்னை பக்தர்களுள் உயர்ந்தவனாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டு வந்த பட்டத்திரி,  இதை உணர்ந்து, நிறைவாக, உண்மையிலேயே பக்தனின் உளப்பாங்கைக் கைக்கொள்கிறார்.. செயலெல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்யும் ஒருவர், அதன் பலனாக, பகவானை முழுமையாகச் சரணடைந்து, தன்னை  பகவானின் விருப்பத்திற்கென முழுமையாக ஒப்படைத்து விடுகின்றார். பக்தனின் இலக்கணங்களைச் சொல்லி வரும் பட்டத்திரியும், நிறைவாக, தம்மை  பகவானின்  விருப்பத்திற்கென ஒப்புவிக்கிறார்.. தம் மீது எப்போது  பகவானுக்குக் கருணை பிறக்கிறதோ பிறக்கட்டும்!.. அது வரை,பகவானைத் துதிப்பதொன்றே தம்மால் ஆனது என்றுரைக்கின்றார்.  

(உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. (பூதத்தாழ்வார்))..

அடுத்த பகுதியில் 'அஷ்டாங்க யோகம்'.

வெற்றி பெறுவோம்!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

  1. என்ன அருமையான வர்ணனைகள். பகவானைத் துதிப்பதென்பது ஒன்றே போதும். மனதைவிட்டு நீங்காத வாக்கியம். அருமை,. அன்புடன்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..