அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்..
தை மாத சுக்ல பக்ஷ ஏகாதசி திதி, பீஷ்ம ஏகாதசி என்று சிறப்பிக்கப்படுகின்றது.
மஹாபாரதப் போரில், அர்ஜூனன் தொடுத்த கணைகளால் , அம்புப் படுக்கையில் வீழ்த்தப்பட்ட பீஷ்மப் பிதாமஹர், பாண்டவர்கள் போரில் வென்றதையும், ஹஸ்தினாபுர அரியணை, பாதுகாப்பாக இருப்பதையும் அறிந்த பின், பீஷ்மாஷ்டமியன்று, தியானத்தில் மூழ்கி, ஏகாதசியன்று முக்தியடைந்தார்.. அவ்வாறு முக்தியடைவதற்கு முன்பாக, பாண்டவர்களுக்கு, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதாரவிந்தங்களைப் போற்றும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளினார்....
வேத, வேதந்த, உபநிஷதங்களின் சாரமாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், வைராக்கிய சீலரான பீஷ்மாச்சாரியாரால் அருளப்பட்ட தினம், 'பீஷ்ம ஏகாதசி'. அதனால், அன்று ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகின்றது.
அன்றைய தினம் முறையாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதோடு, 'ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்' பாராயணம் செய்தலும் மிகச் சிறந்தது.. அகண்ட தீப பூஜை முறையிலும்(பெரிய அகலில், நிறைய எண்ணை அல்லது நெய் ஊற்றி, இருபத்தோரு திரிகள் இட்டு ஏற்றி வைக்க வேண்டும்..தீபத்தில் ஸ்ரீவிஷ்ணுவை ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து கொண்டு, தீபத்தின் முன் தொடர்ச்சியாக, ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்..)பாராயணம் செய்தல் சிறப்பு.
பீஷ்மர் முக்தியடைந்த தினமான 'பீஷ்ம ஏகாதசி, 'ஜெய ஏகாதசி, பைமி ஏகாதசி' என்றும் சிறப்பிக்கப்படுகின்றது..
('ஜெய ஏகாதசி' விரதம் குறித்த புராணக் கதையினை அறிய இங்கு சொடுக்கவும்...)
பீஷ்ம ஏகாதசி தினத்தன்று மட்டும் விரதமிருக்க விரும்புபவர்கள், அன்றைய தினம் மட்டும் உபவாசம் இருக்கலாம்..
பீஷ்ம ஏகாதசியன்று துவங்கி பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது..இது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்திலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள், ஏகாதசியன்று துவங்கி, பௌர்ணமி வரை உபவாசமிருக்க வேண்டும்.
பீஷ்ம பஞ்சக விரதம், விஷ்ணு பஞ்சக விரதம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், ஆன்மீகத்தில், உயர் உணர்வு நிலைகளை எளிதாக அடையலாம் என்பது நம்பிக்கை.
மிகக் கடுமையாக விரதம் அனுஷ்டிப்பவர்கள், ஏகாதசியன்று துவங்கி, பௌர்ணமி வரை, பாலும் நீரும் மட்டுமே அருந்துவர்.. இயலாதவர்கள், ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வார்கள். அதுவும் மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பின்னரே உணவு உட்கொள்வார்கள்.
ஏகாதசியன்று துவங்கி, பஞ்சகவ்யம் மட்டுமே உட்கொண்டு, பௌர்ணமி வரை உபவாசமிருப்பதே, இந்த விரதம் அனுஷ்டிப்பதில் மிகச் சிறந்த முறையாகக் கருதப்படுகின்றது..இதை, பெரும்பாலும் யோகிகளே செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக, பால், நீர், அல்லது காய் கனிகள் உட்கொண்டு உபவாசமிருக்கலாம். தானியங்கள், பயறு வகைகள் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஏகாதசியன்று முழு உபவாசம் இருந்து, மற்ற நாட்களில் மேற்கூறியவாறு உபவாசம் இருப்பது சிறப்பு..
விரத தினங்களில், பகவந் நாம ஸ்மரணையிலேயே, மனமும் உணர்வும் ஒன்றியிருத்தல் அவசியம்.. அதிகம் பேசாமல், விரதத்திற்குண்டான நியமங்களை வழுவாது கடைபிடிப்பது சிறந்தது..
விரதத்தை, பௌர்ணமியன்று சந்திரோதயம் ஆனதும் பூர்த்தி செய்யலாம்..பௌர்ணமியன்று மாலையில், ஸ்ரீவிஷ்ணுவிற்கு இயன்ற அளவில் பூஜை செய்து, நிவேதனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். சந்திரனைத் தரிசித்து வணங்கி, பிரசாதத்தை உட்கொண்டு, விரதம் பூர்த்தி செய்யலாம்.
பீஷ்ம பஞ்சக விரதம் இருப்பதால் ஏற்படும் நற்பலன், புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்தனை விரதங்கள் சொல்லப்பட்டுள்ளனவோ, அத்தனை விரதங்களையும் அனுஷ்டிப்பதால் பெறப்படும் நற்பலனுக்கு இணையானதாகும்.
பீஷ்ம பஞ்சக விரதத்தை, விஷ்ணு பக்தர்கள் மட்டுமின்றி, சிவபிரானை வழிபடுவோரும், ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய வேண்டி அனுஷ்டிக்கிறார்கள்.
பீஷ்ம ஏகாதசிக்கு அடுத்த தினம் 'பீஷ்ம துவாதசி' என்று சிறப்பிக்கப்படுகின்றது..பீஷ்ம ஏகாதசியன்று மட்டும் விரதமிருப்போர், தங்களது விரதத்தை, பீஷ்ம துவாதசியன்று பூர்த்தி செய்கின்றனர். அன்றைய தினம் தான், பீஷ்மருக்கான இறுதிக்கடன்களை, பாண்டவர்கள் நிறைவேற்றினர்.
பீஷ்ம துவாதசி, பூரி ஜெகந்நாதர் திருக்கோயில், பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரது ஆலயம், மற்றும் அனைத்து இஸ்கான் திருக்கோயில்களிலும் மிக விமரிசையான விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
பீஷ்மர் ஒரு காரணப் பிறவியே. ஆயினும், தேவர்களின் பகல் பொழுது துவங்கும் உத்தராயணப் புண்ய காலத்தில், பூமியில் பெரும் சிறப்போடு வாழ்ந்து மறைந்த ஒரு மானிடனைச் சிறப்பிக்கும் வகையில் இத்தனை தினங்கள் (பீஷ்மாஷ்டமி, பீஷ்ம ஏகாதசி, பீஷ்ம துவாதசி, பீஷ்ம பஞ்சக விரதம்)அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவர் பெயரால் விரதங்கள் அனுஷ்டிப்பதும், பூஜைகள் செய்வதும் ஒரு ஈடில்லா உண்மையையே சுட்டுகிறது..
வையகத்தில் முறையாக, உயர் குணங்களோடு ஒருவர் வாழ்ந்தாரெனில், அத்தகைய மனிதனை, தேவர்களும் வணங்கி, தம் நிலைக்கு உயர்த்துவர் என்பதே அது. ஸ்ரீமத் பகவத் கீதையை, ஸ்ரீகிருஷ்ணர், யாருக்கு அருளினாரோ அந்த அர்ஜூனன், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை உரைக்கவில்லை.. மஹாத்மாவான பீஷ்மருக்கே, மோக்ஷத் திறவுகோலான, போற்றத்தகுந்த ஆயிரம் திருநாமங்களை நமக்கருளும் நற்பேறு கிட்டியது.. அதன் பலனாக, பரமபதமும் அடைந்தார் அவர்.
இறைவனின் திருநாம மகிமையைப் போற்றுவோம்.!!!!!!!!
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..