நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 5 ஏப்ரல், 2012

அலையும் அந்தாதியும்

நான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.திரு.SP.VR.சுப்பையா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

அலையும் அந்தாதியும்
ஆக்கம்:பார்வதி இராமச்சந்திரன்பெங்களூரு
  
சௌந்தர்ய லஹரிக்கும் அபிராமி அந்தாதிக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்துமுன்பே பல முறை நான் யோசித்ததுண்டு. காலத்தால் ஆதி சங்கர பகவத் பாதரும்அபிராமி பட்டரும் வேறுபட்டவராயினும் அபிராமி அந்தாதி நிச்சயமாக ஒரு வழிநூல் அல்ல என்பதை அறிவேன். ஏனென்றால்அந்தாதி இயற்றப்பட்ட சூழலே வேறு. காலுக்குக்கீழே ஒரு அக்னிகுண்டம் எரியும் போது ஒருவர் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் உணர்ச்சிப் பிரவாகமேயன்றி வேறில்லை.

சௌந்தர்ய லஹரியைப் பொறுத்தவரைஆதிசங்கரர் அதை சிவபெருமானிடமிருந்து பெற்றுவரும் வேளையில்நந்தி தேவர் அதன் முதல் பகுதியைப் பறித்துக் கொள்ளபின் சிவபெருமானின் கட்டளைப்படி,ஆதிசங்கரரால் அது பூர்த்தி செய்யப்பட்டது என்றும்ஆதி சங்கரர் இயற்றிய பகுதி'சௌந்தர்ய லஹரி'' எனவும் சிவபெருமானால் வழங்கப்பட்டது 'ஆனந்த லஹரிஎனவும் பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் இவ்விரண்டு நூல்களின் பல பாடல்களுக்கு ஒரு பொருளே காணக் கிடைக்கின்றன. இது அவை கூறும் ஸ்ரீவித்யா உபாசனாமுறையின் ஒற்றுமையை விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.

இவற்றை எடுத்துக்கூறும் அளவுக்குஎனக்கு ஞானம் இல்லையாயினும்சில பாடல்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். திரு ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் 'வேலும் வில்லும்என்ற நூல்இராமாயணம்,கந்தபுராணம் இவற்றுக்குள்ள ஒற்றுமையைச் சொல்வது. இந்த நூலும்திரு. ஆலாசியம் அவர்களின் பின்னூட்டத்தில் காணப்பட்ட என் கருத்தையொத்த வரிகளுமே என்னுடைய இந்த சிறிய முயற்சிக்குக் காரணம். 'லஹரி' என்றால் 'அலை'எனப் பொருள்படும். எனவே இந்தக் கட்டுரைக்கு'அலையும் அந்தாதியும்எனப் பெயர் சூட்டினேன். 


அலையும் அந்தாதியும்

ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் மிகச் சிறந்த தேவி உபாசகர்கள். நம்மை வாழ்விக்க வந்த மகான்கள்.
வாழ்ந்த காலம் வெவ்வேறாயினும்உணர்வால் ஒன்றுபட்ட இவ்விரு மகான்களும் தாங்கள் மனக் கண்ணால் கண்ட‌ அம்பிகையின் திவ்ய ரூபக் காட்சியை ஒரேமாதிரியாக வர்ணித்திருப்பதைப் பார்க்கலாம்.

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா (சௌ.ல.7)

'தேவி,சிறிய மணிகளை உடைய ஒட்டியாணம் தரித்தவள். யானையின் மத்தகம் போன்ற ஸ்தன பாரத்தால்சற்றே வணங்கினதோற்றமுடையவள்.சிறிய இடையுள்ளவள். அவள் முகமே பூர்ண சந்திரன். கைகளில்,கரும்பு வில்பாணம்பாசக்கயிறுஅங்குசம் முதலியவற்றைத்தரித்தவள். இத்தகைய பரதேவதைஎங்கள் எதிரில் எப்போதும் நின்றுகாட்சியளிக்கட்டும்என்பது இதன் பொருள். இதே பொருளைஅந்தாதியின், 100வது பாடலிலும் காணலாம்.

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும்கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும்நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

சிவனும் சக்தியும் இணைந்த நிலையே இவ்வுலகினைச் செயல்பட வைக்கிறது.ஆயினும் 'சக்தியில்லையேல் சிவமில்லை'  என்பது சாக்தர்களின் துணிபு. (குண்டலினி) சக்தியை இழந்த சிவம் செயல்பட இயலாதவராகிறார்.

ஆலகாலவிஷத்தை உண்ட நீலகண்டன் பிரளய காலத்திலும் அழியாததற்குக் காரணம்அம்பிகையின் தாடங்க (காதணி)மகிமையே என்கிறார் ஆதிசங்கரர்.

அக்காலத்தில்,  தால(பனை) ஓலையால் ஆன காதணியே சுமங்கலிப் பெண்கள் அணிவது. பின் அதைச் சுருட்டிக் கயிற்றால் கட்டிகழுத்தில் அணியும் வழக்கம் வந்திருக்கலாம். தால ஒலையை அணிவதால் அதற்கு தாலி என்ற பெயர் வழங்கலாயிற்று. நாம்இப்போது 'மாங்கல்ய பாக்கியம்என்று கூறுவதையே ஆதிசங்கரர்'தாடங்க  -மஹிமா ' என்கிறார்.

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா (சௌ.ல:28ஸ்லோகம்)

அபிராமி பட்டரும் சிவபெருமான் உண்ட ஆலகால விஷத்தை அமுதமாக்கியது அம்பிகையே என்கிறார். 

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் (அந்தாதி :5ம் பாடல்)

இருவரும் ஒரே நிகழ்ச்சியைஅதாவதுவிடம் உண்ட பின்னும் சிவனாரின் வாழ்வுக்குக் காரணம் அம்பிகையின் மகிமையே என்பதைச் சொல்வது,சக்தியில்லையேல் சிவமில்லை என்பதையே காட்டுகிறது. 

தலை சிறந்த இவ்விரு மகான்களும் மறை பொருளாக அவர்கள் துதிகளில் விட்டுச் சென்றிருப்பவை ஏராளம். அவை யாவற்றையும் விவரித்துக் கூறுவது மிகக் கடினம். உதாரணமாக ஒரு ஸ்லோகத்தைப் பார்க்கலாம்.

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம். (சௌ.ல.32)

இதில்'ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷரீஎனும் மந்திரத்திலமைந்தசிவன்சக்திகாமன்ப்ருத்விசூரியன்சந்திரன்ஆகாசம்இந்திரன்ஹரி போன்ற தெய்வங்களின் பீஜங்களும்மூன்று ஹ்ரீம்காரங்களின் பீஜங்களும்ரகசியமாக விளக்கப்படுகின்றன. குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். மேலோட்டமாகப் பார்க்கும் போதுமேற்குறிப்பிட்ட தேவதைகள் யாவரும்அம்பிகையின் திருநாமத்தின் உறுப்புகளே என்ற பொருள்தான்தோன்றுகிறது. இதைப் போல்அபிராமி அந்தாதியில்

ஆதித்தன்அம்புலிஅங்கிகுபேரன்அமரர்தங்கோன்
போதிற் பிரமன்புராரிமுராரிபொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன்கணபதிகாமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

என்ற பாடல்மேலோட்டமாகப் பார்க்கும் போதுஎல்லா தேவதைகளும் அபிராமியைத் துதிக்கின்றார்கள் என்ற பொருள் தோன்றினாலும்,உட்பொருள் இரண்டிலும் ஒன்றே என்பது புலப்படும். இரண்டிலும் குறிப்பிடும் தேவதைகளின் பெயர் ஒற்றுமை 
அவற்றின் பீஜங்களையே மறைபொருளாக உணர்த்துகின்றன.

பக்தியின் உச்சநிலையில்பக்தர்கள்தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால்தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும்,நடப்பது,உண்பதுபடுப்பது உட்படஅவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமெனஆதிசங்கரர்,

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம் (சௌ.ல.27)

என்ற ஸ்லோகத்தில் பிரார்த்திக்கிறார். அபிராமி பட்டரும்இதையே,

நின்றும்இருந்தும்கிடந்தும்நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! (பாடல்:10)

என்ற பாடலில் வெளிப்படுத்துகிறார். இறைவியின் ஸ்தனங்களும் அதில் தவழ்ந்தாடும் முத்து மாலையும் இருவருடைய துதிகளிலும் காணக் கிடைக்கின்றன.

வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம் (சௌ.ல.74)

என்ற ஸ்லோகத்தில் ஆதிசங்கரர்தேவியின் ஸ்தனங்களில் விளங்கும் முத்து மாலைபரமசிவனின் புகழ் போல பொலிவுடன் உள்ளதாகக் கூறுகிறார்.

அபிராமி அந்தாதியிலும்இதன் குறிப்பைக் காணலாம்.

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும்முலைமேல் முத்துமாலையுமே (பாடல்:85)

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும்முத்தாரமும் பிச்சிமொய்த்து (பாடல்:53)


நவமணிகளில் எத்தனை எத்தனையோ வகையான அணிமணிகளை தேவி அணிந்திருக்கமுத்து மாலை மட்டும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம்என்னவாக இருக்க முடியும்?

கீர்த்திக்கும் புகழுக்கும் வெண்மை நிறம் ஒரு குறியீடு என்பது ஒரு புறம் இருக்கமனோகாரகனானசந்திரபகவானுக்கு உரிய ரத்தினம்முத்து என்பது இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. நெஞ்சுப் பகுதியில் உள்ள அனாஹதச் சக்ரம்மனமடங்கியவர்களுக்கு மட்டுமே கடக்க எளிதாகும். அதைக்கடந்தால்,சஹஸ்ராரக் கமலத்தை அடையும் வழி (விசுத்திஆஜ்ஞா சக்ரத்தைக் கடந்து) எளிதில் கைகூடும். இதன் குறியீடே முத்து மாலை.

இருவருமே,தேவியின் திருவடிதங்கள் சிரசின் மேல் இருக்க வேண்டுகிறார்கள்



ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா 
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி: (சௌ.ல. 84),

என்ற ஸ்லோகத்தில்ஆதி சங்கரர்எந்தத் திருவடிகளை வேதங்களின் சிரசுகளான உபநிஷதங்கள் தங்களின் தலைகளில் அணிந்து கொள்கின்றனவோ,சிவனின் திருமுடியில் உள்ள கங்கையால் நீராட்டப் படுகின்றனவோஅவற்றை ஏழையானஎன் தலையிலும் அமர்த்துவாயாக என்று வேண்டுகிறார்.
அபிராமி பட்டரும் இதை,

சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற (பாடல்:89)

மற்றும்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. (பாடல்:41)

ஆகிய பாடல்கள் மூலம் வேண்டுகிறார்.

இதைப்போல பல பாடல்கள் ஒத்த பொருளில் இவ்விரு துதிகளிலும் காணக் கிடைக்கின்றன. இந்த மாபெரும் சமுத்திரங்களின் மிகச் சிறு துளியையே உங்கள் பாதத்தில் வைத்தேன்.

பிழைகளை தயவு செய்து சுட்டிக் காட்டுவதுஎன் நண்பர்கள் எனக்குச் செய்யும் மாபெரும் உதவியாகும். நன்றி

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
பெங்களூரு

1 கருத்து:

  1. சிறப்பான ஒப்பீடு.ஆழ்ந்த நூலாரய்ச்சி இன்றேல் இது சாத்தியமன்று.பாராட்டுகள் பாலாஜி மாமா

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..