நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 3....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 3.



பதிகம் # 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:
"தாயும் தந்தையும் ஆனவனே!.. நிகரில்லாத மாணிக்கமே!..அன்பாகிய கடலில் விளைந்த ஆரமுதே!..பொய்யான, வீணான செயல்களையே செய்து, வாழ்நாளை பாழாகக் கழிக்கின்ற, புழுக்களை இடமாக உடைய உடலைக் கொண்ட கீழ்மையேனுக்கு, மிக உயர்ந்த சிவபதத்தை அளித்தருளிய, பக்தர்களின் உண்மையான செல்வமாகிய சிவபெருமானே, இப்பிறவியிலேயே, நான் உய்யும் பொருட்டு, உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறேது?."

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இறைவனே நமக்கு அன்னையும் தந்தையும்.. நம் பால் வரம்பில்லாத அன்போடு  இருப்பவன் ஆதலினால் இறைவனே அன்னை, தீமையான நெறியிலிருந்து நம்மை விலக்கி, நன்னெறி காட்டுதலால் இறைவனே நமது தந்தை என்கிறார் வள்ளலார் பெருமான்..

     திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற் 
     குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும் 
     பொருவில் அன்னையும் போக்கது தந்தையும் 
     தரும வெள்விடைச் சாமிநின் நாமமே. (திருவருட்பா)

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்று,  திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் அருளியிருப்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'ஒப்பிலா மணியே' என்பது, 'நிகரில்லா மாணிக்கமே' என்பதாக, இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது.... 

'மாணிக்கம்' என்கின்ற சொல், எம்பிரானைப் போற்றும் பல பதிகங்களில் பயன்படுத்தப்படுவதால், இது சிறப்பு வாய்ந்ததெனப் புலனாகிறது..

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே என்று சுந்தரர் பெருமானும்,

தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.என்று அப்பர் பெருமானும்,

வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா 
     மாணிக்க மேகருணை மாகடலே ‍ என்று வள்ளலார் பெருமானும் பாடிப்பரவுகின்றார்கள்.

இதற்கு ஒரு அருமையான விளக்கம் கேட்கப் பெற்றேன்..முத்தி நிலையாவது, சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலை...மாணிக்கத்தோடு பளிங்கை இணைத்து வைத்தால், வெண்ணிறப் பளிங்கு, மாணிக்கத்தின் சிவந்த நிறத்தைப் பெற்று, அதுவும் மாணிக்கமே என்று சொல்லத் தகுமாறு தோன்றும்... அதைப் போல், சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலையை உயிர்கட்கு அருளுதலால், எம்பிரானை 'மாணிக்கம்' என்கிறார்கள்.

அன்பினில் விளைந்தஆ ரமுதே===பாற்கடலைக் கடையும் போது வந்த ஆலகால விஷத்தை உண்டு, உயிர்கட்கு நலமருளியவன் எம்பிரான்..  ஐயனின் அருளால் அன்றோ அமுதம் கிடைத்தது!... பக்தர்கள், எம்பெருமான் மீது கொண்ட கடல் போன்ற பேரன்பில் தோன்றும் அமுதமே சிவம்!..'அமுதம்' இங்கும் முத்தி நிலையைக் குறிக்கும் குறியீடாகவே கொள்ளப்படுகின்றது.

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்====உயிருக்கு நன்மை தருவது, எம்பிரானின் கழலிணைகளை இடையறாது சிந்தித்தலாம்.. அதை விடுத்து, உலகியல் விஷயங்களில் சிந்தனையை உழல விடுவது வீண் காலம் கழித்தலேயாகும்..பிறவியின் நோக்கமே பெருமானை அடைதல் என்றிருக்க, அதற்கு உதவாத செயல்களைச் செய்தல் பொய்ம்மையைப் பெருக்கி, பொழுதைச் சுருக்குதலேயாம்.. இங்கு 'பொழுது' என்பது வாழ்நாளைக் குறிக்கும்.. வீணே காலம் கழித்தலால், நம் வாழ்நாள் சுருங்கி, பெருமானை நினைத்து உய்வு பெறும் கால அவகாசம் குறைகிறது..

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. (அப்பர் பெருமான்)

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த====இவ்வரிகளின் மூலம், இவ்வுடலின் நிலையாமை புலப்படுத்தப்படுகின்றது... நிலையாத இவ்வுடல் எடுக்கும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, எம்பிரான், மிக உயர்ந்த சிவபதம் அருளியமை பகன்றார் வாதவூரார்.

'செல்வமே சிவபெரு மானே'===அடியார்களின் பெருநிதியம் சிவபிரான். ஆகவே 'செல்வமே' என்றார்.

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.== இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் என்றருளுகிறார் வாதவூரார்.. இறைவனை அடைய, வேறொரு பிறவி அவசியமில்லை.. இப்பிறவியில், வினைகளால் சூழப்பட்ட இவ்வுடலில் இருப்பதால், இறைவன் அருள மாட்டான் என்பதில்லை..உள்ளன்போடு, உறுதியோடு சிவனை நினைந்தால், கட்டாயம் அவன் கழலிணைகள் அடையலாம். அடியார்கள், தமது பக்தியால் பரமனடி தொழுது வேண்ட, இம்மையிலேயே அவன் கட்டாயம் அருள் செய்வான் என்று திண்ணமாகக் கூறுகிறார்..

இவ்வாறு இறைவன் கழலிணைகளை உறுதியாகப் பற்றிப் பிடிக்க, இறைவன், தன் திருவடிகளைத் தந்து, முத்திநிலை அருளுவான்..சிவத்தோடு கலந்த பின்பு, எம்பிரான் தனியாக எழுந்தருளுவதெங்கே!.. ஆதலினால், 'எங்கெழுந்தருளுவது இனியே?!' என்றார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU..SONG # 2....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'..பதிகம் # 2


பதிகம் # 2
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
இடப வாகனத்தை விடாது மிக விரும்பிய விண்ணவர் அரசே!, வினைகளினால் சூழப்பட்டவனாகிய நான் உணர்ந்த உண்மைப் பொருளே!, அடியேன்,  நாற்றம்  நீங்காத‌,   முழுவதும் புழு நிரம்பிய இவ்வுடற் கூட்டினிலே கிடந்து, முதுமையின் காரணத்தால், மண்ணிலே மறைந்து கீழ்மையடையும் நிலையைத் தாராது, எம்மைக் காத்து ஆண்டருளிய கடவுளே!.. கருணைப் பெருங்கடலே!..இடைவெளி இல்லாது, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்..நீ இனிமேல் எங்கு எழுந்தருளுவது?!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இங்கு 'விடை என்பது இடபவாகனத்தைக் குறித்தாலும், தர்ம தேவதையே சிவபிரானின் இடபவாகனமாகக் கருதப்படுவதால், இறைவன் விடாது தர்மத்தையே விரும்புவது உணர்த்தப்படுகின்றது.... இப்பதிகத்திலும் இறைவன், 'விண்ணோர்களுக்கு அரசன்' என்றே போற்றப்படுகின்றார்...மனித நிலையிலும் மேம்பட்டது தேவர்களின் நிலை.. இறைவன் தேவாதி தேவன்.. பதிகங்கள் முத்திக்கலப்புரைக்கும் அனுபவத்தைக் கூறுதலாலும், முத்தி, மிக மேலான உயரிய நிலை என்பதாலுமே இறைவன் இவ்வாறு போற்றப்படுகின்றார் என்று கொள்ளலாம்..

இடபத்தை, சித்தாந்த நோக்கில் 'பசு' எனக் கருதினாலும், பசுவாகிய உயிர்களை விடாது விரும்பி, அவை உய்வு பெற்று, தம்மை வந்தடைதலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் எம்பிரான் எனவும் பொருள் கொள்ளலாம்.

விடை வாகனனான எம்பெருமானை, உருவ நிலையின் குறியீடாகக் கருதுவது மரபு,

'தோடுடைய செவியன் விடையேறி' என்ற சம்பந்தப் பெருமானின் பதிகப் பொருளின்படி, 'விடையேறி' என்பது உருவ நிலையையும், 'பொடி பூசி' என்பது அருவ நிலையையும், 'உள்ளங்கவர் கள்வன்' என்பது அருவுருவநிலையையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகின்றது..

'வினையனே னுடையமெய்ப் பொருளே' என்பதில், உடைய என்னும் சொல்லின் பொருள் வெகு அருமையானது.. இறைவன், முத்தர்களுக்கும் பக்தர்களுக்கும் மட்டுமே உடையவனல்ல.. கர்மவினைகளால் சூழப்பட்டு, துன்புறும் ஒவ்வொரு உயிருக்கும் சொந்தமானவன்.. அவ்வுயிர்களைத் தம் கருணையால் ஆள்பவன்.. ஆகவே, நமது வினையின் காரணமாக, இறைவன் நம்மை விரும்பார் என்பது இல்லை.. அவனே நமது அன்னையும் தந்தையும் ஆதலினால் உண்மைப் பரம்பொருளாகிய அவன் கருணை நமக்குக் கட்டாயம் கிட்டும் என்பது குறிப்பால் இவ்விடத்தில்  உணர்த்தப்படுகின்றது.

'முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து'

முடை என்பதை இவ்விடத்தில் நாற்றம் என்பதாய் பொருள் கொண்டால், நாற்றம் நீங்காது இருக்கும் இவ்வுடலைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம். குரம்பை என்பது, உடலையே குறிக்கும். 'மூத்தற' என்பதை, 'அற மூத்து' என மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்..

வயதின் காரணமாக, முதுமை எய்தி, நாற்றம் நீங்காத இவ்வுடல் மரணித்து, மண்ணில் வீழ்ந்து, புழுக்களால் உண்ணப்படும் நிலையைத் தாராது , எம்மை ஆட்கொண்டாய் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
        எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
        குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல   சுகமாலக் (திருப்புகழ்)

முதுமை எய்தாத நிலை, அதாவது என்றும் இளமையோடு இருக்கும் நிலையாவது இறைவனோடு கூடியிருக்கும் நிலை.. பிறப்பிறப்பிலா முத்தி நிலை..

இங்கு 'நாற்றம்' என்பதை, 'வாசனா மலமாகவும் பொருள் கொள்ளலாம்.

'அடியேன் முடை நாய்த் தலையே' என்ற அபிராமி பட்டரின் வாக்கும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

இப்போது முடை என்பதைத் 'தடை' என்னும் பொருளில் பார்க்கலாம். வினைகள், இறையருளைப் பெற  முடியாதபடி தடை செய்கின்றன.. அத்தகைய குறைபாடுகள், தடைகள் விடாத அடியேனாகிய தம்மையும் ஆட்கொண்டார் எம்பிரான் என்கிறார் வாதவூரார்.

இவ்வாறு, தம்மை கீழ்மையிலாழ்த்தாது, அதாவது பிறவிச் சுழலில் சிக்க வைக்காது, தமது கடல் போன்ற கருணையினால் ஆட்கொண்ட இறைவனை, இடைவிடாது எந்நேரமும் தாம் உறுதியாகப் பற்றிப் பிடித்திருப்பதால், அவர் தமது இதயத் தாமரையிலேயே எப்போதும் எழுந்தருளியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

இங்கு 'கடவுளே' என்ற பதம் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.. உள் கடந்து ஒளி உருவாய் நிற்பவன் இறைவன் என்பதாலும், தொடர்ந்து தாம்,தமது நெஞ்சகத்தில் இறைவனை இருத்தி சிந்திப்பதைப் புலப்படுத்தும் பொருட்டும், இவ்வாறு உரைத்திருப்பதாகக் கொள்ளலாம்..

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 26 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU, SONG # 1...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய., 'பிடித்த பத்து' பதிகம் -1


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

சிவராத்திரியை முன்னிட்டு, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகங்களுக்கு, சிவனருளால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை பொருள் எழுத முயன்றிருக்கிறேன்.. தினமொரு பதிகமாக கூடுமானவரை எழுத எண்ணம்...அரனருள் சிறக்கப் பிரார்த்திக்கிறேன்....

சிவராத்திரியை ஒட்டிய சென்ற வருடப் பதிவு, தங்களின் மேலான பார்வைக்காக...


மாணிக்கவாசகப் பெருமான், 'பிடித்த பத்து' பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை 'பிடித்த பத்து' எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் 'முத்திக் கலப்புரைத்தல்' எனப்பட்டது...

பிடித்த பத்து (முத்திக் கலப்புரைத்தல்)

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்: உம்பர்‍- தேவர்..'தேவர்கட்கு அரசரே!,அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற கலந்திருப்பவனே!, அழுக்கினை உடைய உடல் தரித்த எனக்கு, புதிய பொருள் போலத் தோன்றி வந்து, என் குடி முழுவதும் ஆண்டு, மாயையினால் ஆன இவ்வுலக வாழ்வு நீங்குமாறு, பேரின்ப வாழ்வு தந்தருளிய அமுதம் போன்றவனே!.. 'செம்மையான, மெய்ப்பொருள் நீயே' என்று துணியப்படுபவனே!...சீர்மை பொருந்திய கழலிணைகள் உடையவனே!..நிலையான பேரின்ப நிதியாகிய செல்வமே!.. சிவபெருமானே!...யாம் உய்யும் பொருட்டு, உம்மைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!...நீ இனிமேல் என்னை விட்டு எங்கெழுந்தருளிச் செல்வது?....'

சற்றே விரிவாக...

இங்கு 'யோகம்' என்ற சொல், 'சேர்ந்திருப்பது', 'கலந்திருப்பது' என்னும் பொருளில் அறியப்படுகின்றது.. எம்பெருமான் இப்பிரபஞ்ச முழுதும் நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பினன் ஆதலின், 'ஒழிவு அற நிறைந்த யோகமே' என்றார்... 

'ஊத்தையேன்' அல்லது 'ஊற்றையேன்' என்பது, 'அழுக்கான உடல் தரித்த என்னை' என்று பொருள் தரும்.. இதில் அழுக்கு என்பது புற அழுக்கு மட்டுமல்லாது, மும்மலங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்..

பாம்பாட்டிச் சித்தரின்

ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே 
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே 
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் 
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’

என்ற பாடலையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'வம்பெனப் பழுத்த' என்ற சொல்லின் பொருள் மிக ஆழமானது.. இருப்பினும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.. இறைவன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்.. பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியன்..
இறைவன், புதிய பொருள் போலத் தோன்றி தம் குடி முழுதும் ஆண்டு கொண்டான் என்கிறார்....

அஞ்ஞான இருள் நீங்கி, என்றும் புதிதான ஞான ஆதித்தன் (இறைவன்) உதித்து, தம் ஆன்மாவை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்ட இயல்பையே வியந்துரைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். இங்கு 'குடி' என்னும் சொல், உற்றார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் குறிப்பதாகவே பெரும்பான்மையான உரையாசிரியர்கள் கொள்கின்றனர். இவையெல்லாம் நிலையானவை அல்ல என்பது வாதவூரார் அறியாததல்லவே!!.. பல பிறவிகளின் கர்ம மூட்டையால் பிணிக்கப்பட்டுள்ள ஆன்மாவை, இறைவன் அருள் தந்து அவனுடையதாக்கிக் கொள்ளலையே 'குடி முழுதும் ஆண்டு' என்றார்... தம்மை முற்றாக, முழுமையாக இறைவன் ஏற்றுக்கொண்டதையே அவர் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்..

அடுத்து வரும் 'வாழ்வு அற' என்ற வரியும் இதை உறுதி செய்கிறது.. இறைவனது அருள் பெற்ற உயிர்,மீண்டும் பிறவா நிலையை அடைகிறது.. பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபடுகிறது...

'வாழ்வு அற வாழ்வித்த மருந்தே' என்பதால், இவ்வுலகத்தில் பிறவி எடுத்தல் என்னும் நிலை நீங்குமாறு பேரின்ப வாழ்வளித்து அருள் செய்தான் இறைவன் என்பதைச் சொல்கிறார்.. மருந்தே என்பது இங்கு அமுதமே என்பதாகப் பொருள்படும்.. இறவா நிலை தரக் கூடியது அமுதம்.. இறைவன் பிறப்பிறப்பு நீக்கி சாயுஜ்ஜிய நிலையை அருளியதைச் சுட்டுவதாக, இதனைக் கொள்ளலாம்.

செம்பொருள் என்பது, உண்மையான பொருள் என்பதாகப் பொருள்படும்.. உண்மையான பொருள் எது என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், இறுதியாக, சிவமே மெய்ப்பொருள் என்று துணிவர்.. ஆகவே, 'அத்தகைய உண்மையான பொருள் நீயே' என்று துணியத் தக்கவனே என்றார்..

சீருடைக் கழலே என்பதில் கழல் என்பது ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளைக் குறிக்கின்றது.. உண்மையான சிவப்பரம்பொருளின் திருவடிகளை அடைவதே மானிடப் பிறவி எய்தியதன் நோக்கம்... 

தில்லை மூதூர் ஆடிய திருவடி 
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 

என்று கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகப் பெருமான் அருளியதை இங்கு ஒப்பு நோக்கிப் பொருள் கொள்ளலாம்.

'எம்பொருட்டு' என்றது, பதிகங்களைப் பாடும் நமக்கு அறிவுறுத்தியது.. நம் பொருட்டு,  நாம் உய்ய வேண்டுமெனில், எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க வேண்டும்..  இதனைச் செய்வதால் பலனடைவோர் நாம் தான் அல்லவா?!.. சிக்கெனப் பிடித்தல் என்பது, நம்மை முற்றாக இறைவனது திருவடிகளில் சமர்ப்பித்து..'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பதற்கிணங்க,  இறைவனை மிக உறுதியாகப் பற்றிப் பிடித்தலாகும்.. 'சிக்கென' என்பதன் மூலம் தளராத உறுதிப்பாடு கூறப்பட்டது..உறுதியாக, 'நீயே கதி' என இறைவனைப் பற்றிப் பிடிப்போரின் இதயத் தாமரையில் இறைவன் நிரந்தரமாக எழுந்தருளுவான் ஆதலின், 'எங்கெழுந்தருளுவது இனியே..' என்றார்.. சித்தம் சிவலோகமாக மாறிய பின், எங்கும் அதுவே காணுதலால், அவர் பிறிதோரிடத்து தோன்றுதல் என்பது கிடையாது.. ஆகவே 'தாம் வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது...' என்று உரிமையுடன் உரைத்தார்...

இவ்வாறு, தாம், இறையனாரின் இணையடிகளை உறுதியாகப் பற்றிப் பிடித்தமையும் அதன் காரணமாக, இறைவன், தம் ஆன்மாவின் மலங்கள் நீங்குமாறு செய்து, பேரின்ப வாழ்வளித்தமையையும் உரைக்கிறார் பெருமான்...'முத்திக் கலப்புரைத்தல்' சொல்லும் பதிகங்களில், முதற் பதிகத்தின் பொருள் இவ்வாறு அமைந்ததாகக் கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!..

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

SEETHA ASHTAMI..சீதா அஷ்டமி...(23.2.2014)...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

இந்தப் புண்ணிய பாரத பூமியில் தினந்தோறும் திருநாளே!.. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகவே விளங்குகிறது.. 

இன்றைய தினம் 'சீதா அஷ்டமி'.. பூமியின் புதல்வியாகிய அன்னை, தான், ஜனகனின் திருமகளாகப் போற்றப்பட திருவுளம் உவந்த‌ புண்ணிய தினம் இன்று...

ஜனக மகாராஜன், பொன்னேர் பூட்டி உழத் தொடங்கிய நன்னாளில், பூமியிலிருந்து கிடைத்த பெட்டியில் கண்டெடுத்தார்.  ஒரு பெருங்கருணைப் பொக்கிஷத்தை..

ஜனக மகாராஜன், ஒரு வேள்வி செய்ய விரும்பி, அதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்தார்... யாகபூமியை சமம் செய்வதற்காக, முறைப்படி வழிபாடுகள் செய்து, எருதுகளில் தங்கக் கலப்பையைப் பூட்டி, உழ ஆரம்பித்தார்..அப்போது, ஓரிடத்தில், ஏர் முனை நகராது போகவே, அதை ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பெட்டி கிடைத்தது...பெட்டியில் சிறு குழந்தையாகத் திருமகள் தோன்றியருளினாள்

கம்ப இராமாயணம், பால காண்டம், கார்முகப் படலம், பாடல்கள்  16,  17 &  18. இந்த நிகழ்வை மிக அழகுற விவரிக்கின்றன. 'கொழுமுகத்தின் முனையில், சூரியன் உதயமாவதுபோல் ஒளி தோன்றியது'.  என்று சீதையின் திருஅவதார நிகழ்வை விவரிக்கின்றார் கம்பர் பெருமான்.

இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து, அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு, அலகு இல் பல சால் உழுதேம்

'உழுகின்ற கொழு முகத்தின், உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற, புவி மடந்தை திரு வெளிப்பட்டென, புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும், இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள். 

'குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து, அவை உய்யப்
பிணங்குவன; அழகு, இவளைத் தவம் செய்து பெற்றதுகாண்;
கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார், வேறு உற்றார்

அன்னையைப் 'பெண்ணரசி' என்று போற்றுகிறார் கம்பர்.. சீதையின் தூய குணங்களைச் சிந்தித்தால், அதுவே நம் உள்ளத்தைப் பண்படுத்தும்...

இராமாயணத்தில் இரு நிகழ்வுகள், சீதையின் உயர்ந்த குணத்தைப் புலப்படுத்துகின்றன..

சீதா தேவி, அனைவரிடமும் சமமாக அன்பு செலுத்துபவர்... மன்னன் மகளாயினும், அனைவருக்கும் மதிப்பளித்து, அதன் பலனாக, குடிமக்களின் பேரன்பைப் பெற்றவர்..

ஸ்ரீராமர், சுயம்வரத்தில் வென்றதும், ஜனகர், இது குறித்து, தம் தூதர்கள், புரோகிதர் மூலம் தசரதருக்கு செய்தி அனுப்புகிறார்.. செய்தியைக் கேட்டு மகிழ்ந்த தசரதர், செய்தியைக் கொண்டு வந்தவருக்கு முத்து மாலை பரிசளிக்கிறார்.

ஆனால் செய்தி கொணர்ந்த புரோகிதரோ அதை வாங்கிக் கொள்ளப் பணிவுடன்  மறுத்து, கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். '

சீதா தேவி, தன் தந்தைக்குச் சமமாக, என்னையும் மதித்து நடக்கிறார். ஆகவே, நான் இப்போது மணப்பெண் வீட்டுக்காரன். நாங்கள் சீதனங்களைத் தரலாமே  அன்றி, பெற்றுக் கொள்வது முறையல்ல' என்று அன்புடன் கூறுகின்றார்.


இதிலிருந்து சீதையின் பணிவு,அன்பு முதலான பல நற்குணங்கள் புலப்படுகின்றன.

மற்றொரு நிகழ்வு..

ஸ்ரீராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதர் நாள் குறிக்கின்றார்.. பட்டாபிஷேக தினத்தன்று, ஸ்ரீராமரின் மாளிகையை அடைந்த  அமைச்சர் சுமந்திரர் பெருவியப்படைகிறார். அங்கே சீதா தேவி, முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்.. ஒரு அரசனின் மகள், ஒரு சக்கரவர்த்தியின் மருமகள், இன்று பட்டமேற்கப்போகும் ராஜாராமனின் பட்டமகிஷியாகப் போகிறவள்...எளிமையாக முற்றம் பெருக்குவதைக் கண்டு பதைக்கிறார் அமைச்சர்.. ஆனால் சீதையின் பதிலோ எளிமையாக வருகிறது..'ஏன் இதனாலென்ன.. இன்று பட்டாபிஷேகம்.. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திருநாள்.. இதில் பங்கு பெற வேண்டுமென்று அரண்மனை வேலையாட்களுக்கு மட்டும் ஆவல் இருக்காதா..அவர்கள் விரைவாக தத்தமது இல்லங்களுக்குச் சென்றால் தானே அழகாக அலங்கரித்துக் கொண்டு விழாவில் பங்கு கொள்ள இயலும்.. ஆகவே நானே அவர்களை அனுப்பிவிட்டேன். இது நமது இல்லம் அல்லவா.. இந்த வேலைகளை நானே செய்வதில் என்ன தவறு?!!'

அசோகவனத்தில் தன்னைப் படாத பாடு படுத்திய அரக்கியருக்கும் கருணை சுரந்தவர் சீதாதேவி..அவர் படாத துன்பங்களா மனித வாழ்க்கையில்..பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கும் ஜானகி தேவி அவதரித்த தினம் இன்று..

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினமே சீதா அஷ்டமி.. இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் சிலவற்றிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வைசாக சுக்ல நவமி தினம் சீதையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது... எனினும் பெரும்பாலான பகுதிகளில் சீதையின் ஜெயந்தி உத்சவம் இன்று தான்..

இன்றைய தினம், ஸ்ரீ சீதா தேவிக்குப் பூஜைகள் செய்து வழிபடுவது மிக நல்லது..

இல்லங்களிலும், ஸ்ரீ சீதாராமரின் திருவுருவப்படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீராமரின் அஷ்டோத்திரங்களைக் கூறி வழிபடலாம்.. அண்ணலின் திருநாமங்களைக் கூறியல்லவோ அனுமன் அசோகவனத்தில் அன்னையின் உயிர் காத்தான்!!...

திருக்கோயில்களில் இன்று விசேஷ வழிபாடுகள் செய்யப்படுவதால், கோயில்களுக்குச் சென்று ஸ்ரீ சீதாராமரை தரிசனம் செய்யலாம். இராமாயணம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் மிக நல்லது..

ஜானகி தேவியின் ஜன்ம தின உத்சவத்தில், அன்னையின் அருங்குணங்களைச் சிந்தித்து வணங்கி,  நலம் பெறுவோம்!..

வெற்றி பெறுவோம்!!!!!....

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ANGARAHA CHATHURTHI...அங்காரக சதுர்த்தி..(18/2/2014)..

 
 அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

முழுமுதற்கடவுளான கணேசரைப் போற்றும் விரதங்களில் முதன்மையானது சதுர்த்தி விரதம்.. அதிலும் தேய்பிறை சதுர்த்தி 'சங்கடஹர சதுர்த்தி' என்றே சிறப்பிக்கப்படுவதை நாம் அறிவோம்..

மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. பொதுவாக, செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி 'அங்காரக சதுர்த்தி' என்றே போற்றப்படுகின்றது.. மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்திக்கும் இந்த சிறப்பு உண்டு..

விரதம் தோன்றிய  புராணக் கதை:

பரத்வாஜ முனிவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவர் அங்காரக பகவான்.(பரத்வாஜ முனிவருக்கும், தேவலோகத்துப் பெண்ணான துருத்திக்கும் பிறந்து, பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்றும்...அங்காரகன் சிவபெருமானின் வியர்வையிலிருந்து உதித்தவர் என்றும் புராணங்கள் உண்டு..)

பரத்வாஜ முனிவர், ஸ்ரீவிநாயகரின் பரம பக்தர்.. தந்தையின் வழியிலேயே மைந்தனின் மனம் சென்றது.. ஒரு நன்னாளில் தந்தையிடமே  கணநாயகரின் திருமந்திரத்தை உபதேசம் பெற்றுக் கொண்டார். தவறாது அதை ஜபித்து வரலானார்.. அகமும் புறமும் அம்பிகை பாலனின் திருவடி தொழுதது!.. 

அங்காரகனின் தீவிரமான தவம், கணபதியின் கருணையைப் பெற்றது.. அவர் முன் எழுந்தருளினார் விக்னேஸ்வரர்.. 'வேண்டுவன கேள்' என்று இன்மொழி பகர்ந்தார்..

அங்காரகர்,'தமது பெயரும் நினது பெயரோடு இணைத்து வழங்கப்படுதல் வேண்டும்' என்பதையே கோரிக்கையாக வைத்தார். ஆனால் கயிலை நாதனின் திருப்புதல்வர் கிரக பதவியையே அளித்தார்.. 

மேலும், அங்காரகனுக்கு உரியதாகிய செவ்வாய் கிழமை வரும் தேய்பிறை சதுர்த்திக்கு, 'அங்காரக சதுர்த்தி' என்றே பெயர் வழங்கப்படும் என்று வரமளித்தார். 

இந்த நிகழ்வு நடந்த தினம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி..மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி, எந்தக் கிழமையில் வந்தாலும் அதுவும் 'அங்காரக சதுர்த்தி' என்றே வழங்கப்படும் என்ற ஆசியும் அளித்தார் ஏகதந்தர்..

சங்கடஹர சதுர்த்தி விரதங்களிலேயே மகிமை வாய்ந்தவை அங்காரக சதுர்த்தியும், மஹா சங்கடஹர சதுர்த்தியும்.. அதிலும் அங்காரக சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்,  அளவற்றவை..

செவ்வாய் பகவான் பூமி காரகன்.. கடன்களில் இருந்து நிவாரணம் தருபவன்.... ஆற்றலின் ஊற்றுக்கண் அங்காரகனின் திருவருளே!..ஜாதகத்தில் செவ்வாய் பகவானோடு ராகு/கேது பகவானின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றவர்கள் அங்காரக சதுர்த்தி விரதமிருப்பது மிக நல்லது..பொதுவாகவே இம்மாதிரி அமைப்புள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியிலிருந்தே தொடங்குவது வழக்கம்..மாசி மாதம் தொடங்கி, தொடர்ந்து ஒரு வருடம், சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள் கடன் தொல்லையிலிருந்து முழுவதுமாக விடுபடுவர் என்கின்றன சோதிட நூல்கள்.

அங்காரக சதுர்த்தி விரதத்தினால் பெறப்படும் ஆன்மீக ரீதியிலான பலன்கள் குறித்து, பவிஷ்ய புராணமும் நரசிம்ஹ புராணமும் விளக்குகின்றன.. இந்த விரதம் இருப்பவர்கள், தமது இகலோக வாழ்க்கை நிறைவடையும் நேரத்தில், விநாயகப் பெருமானின் வாசஸ்தலமான ஸ்வானந்த லோகத்தை அடைகிறார்கள். ஆகவே, பிறவித் தளையிலிருந்தும் விடுபடுகின்றார்கள்.

விரதம் இருக்கும் முறை:

சதுர்த்தி விரதத்துக்கும் சந்திர பகவானுக்கும்  இருக்கும் தொடர்பு  நாம் அறிந்ததே!.... வர (சுக்ல பக்ஷ) சதுர்த்தி விரதம் மற்றும் சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்போர், மாலையில் சந்திரோதயம் ஆன பின்னரே பூஜைகள் மேற்கொண்டு விரதம் நிறைவு செய்ய இயலும்..

அங்காரக சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் நீராடி, கணபதியின் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் திருமுன்பாக, விளக்கேற்றி, சிறிய அளவில் நிவேதனம்(உலர் பழங்கள், இரு வாழைப் பழங்கள்.. இது போல் இருக்கலாம்) செய்து, ஆரத்தி காட்டி வழிபடவேண்டும்....விரதம் இருக்க சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்..

அன்று முழுவதும், முழு உபவாசம் இருப்பது சிறப்பு.. இயலாதோர் ஒரு வேளை உணவு அருந்தலாம்.. அதிகம் பேசாது விரதம் இருக்க வேண்டும். சந்திரோதய நேரம் வரை மௌன விரதம் இருப்பது சிறந்தது.

அன்று மாலையில் சந்திரோதய வேளையில் பூஜை தொடங்க வேண்டும்.. கணபதியின் திருவுருவப்படத்தை அல்லது விக்கிரகத்தை செந்நிற வஸ்திரம் கொண்டு அலங்கரித்து, பஞ்சோபசார/ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்.. செந்நிறத்தாலான மலர்கள் சமர்ப்பிப்பது சிறப்பு!..21 தூர்வாயுக்ம பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்..மோதகம் முதலான நிவேதனங்கள் செய்யலாம்..

பூஜை நிறைவடைந்தவுடன், சந்திர பகவானுக்கும் அர்க்கியங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.. பிரசாதங்களை விநியோகித்த பின், விரதம் நிறைவு செய்யலாம்..

'ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷம்' பாராயணம் செய்வது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது..இயன்ற மற்ற துதிகளும் பாராயணம் செய்யலாம்..

அங்காரக சதுர்த்தி விரதம் இருப்போரின் அல்லல்கள், ஆனைமுகன் அருளால் நிச்சயம் அகன்று நல்வாழ்வு கிடைக்கும்!...

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.