நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 10 அக்டோபர், 2013

VIJAYA DASAMI POOJA(14/10/2013).. SHAMI POOJA.. செல்வ வளம் பெருக்கும் விஜயதசமி பூஜை.( ஷமி பூஜை).


அன்பர்களுக்கு பணிவான‌ வணக்கம்.

எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றி அருளும் விஜய தசமி நன்னாளில், பொதுவாக, சரஸ்வதிக்கு புனர் பூஜை செய்வது வழக்கம். பிறகு பூஜையில் வைத்த புத்தகங்களை எடுத்து, படிப்பார்கள். புதிய முயற்சிகளில் அன்றைய தினம் ஈடுபட்டால், கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக, தென்மாநிலங்களில் அன்றைய தினம் விஸ்தாரமான பூஜை செய்வது வழக்கத்தில் இல்லை. ஆனால் வடஇந்தியர்கள், அன்றைய தினம் செல்வ வளம் தரும் மிக விசேஷமான பூஜையைச் செய்கிறார்கள். 'ஷமி பூஜா' என்றழைக்கப்படும் அந்தப் பூஜை முறையை சற்று விரிவாக, இந்தப் பதிவில் காணலாம். ஷமி என்பது தமிழில் வன்னி மரத்தைக் குறிக்கும். வன்னி மரத்தைப் பூஜிப்பதே ஷமி பூஜை. சில பகுதிகளில், வன்னியோடு சேர்த்து, ஆத்தி(ஆப்டா) மரத்தையும் பூஜிக்கின்றார்கள். விஜயதசமியன்று, இந்த மரத்தின் இலைகள் பொன்னுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன.

வன்னி மரத்தின் மருத்துவ குணங்கள்:

பாலைவனங்களிலும் வளரக் கூடிய மரம் இது. அனைத்து விதமான தட்ப வெப்ப சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து வளரும் மரம் வன்னி. பூ, இலை, காய், பட்டை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. பூக்களைக் காய வைத்து, பொடி செய்து உட்கொண்டால், பித்தம் கட்டுப்படும். சொறி, சிரங்கு முதலியவை குணமாகும். கருவுற்ற பெண்கள் உட்கொள்ள, கரு தங்கும்.

இலையை அரைத்துப் பற்றுப் போட, காயங்கள் விரைவில் ஆறும். வன்னி இலையையோ காயையோ நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்த  பல்வலி குறையும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். பட்டையை அரைத்துப் பூசினால், விஷஜந்துக்கள் தீண்டிய பின் ஏற்படும் வலி குறையும். தொழுநோயை நீக்கும் மருந்துகளில் இது உபயோகிக்கப்படுகின்றது. வன்னி மரப் பிசினை தண்ணீரில் இட்டு அருந்த சுகப்பிரசவம் ஏற்படும். மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படுவதால் இது 'கற்பக மரம்' என்றும், 'பாலை வனங்களின் தங்க மரம்' என்றும் அழைக்கப்படுகின்றது. எல்லா மரத்தையும் கரையான் அரிக்கும். ஆனால் இந்த மரத்தை கரையான் அரிக்க இயலாது. வன்னி மரக் காற்றை சுவாசித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்கும். யுனானி மருத்துவத்திலும், வன்னி மரம் பெருமளவில் பயன்படுகிறது.

வன்னி மரத்தின் ஆன்மீக சக்தி:

வன்னி மரம் சனிபகவானின் நல்ல கதிர்வீச்சுக்களை  உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உடையது. ஆகவே, மூட்டு வலி, வாதம் முதலிய நோய்களை நீக்கும் அற்புதத் தன்மை வன்னி மரத்திற்கு இருப்பதாக நம்பப்படுகின்றது. வன்னி மரத்தை அணைத்தவாறு தினம் அரை மணி நேரம் இருந்தால் இந்த நோய்கள் குறையும்.

பல சிவாலயங்களில் வன்னி மரம் தலவிருட்சமாக இருக்கிறது. விநாயக சதுர்த்தி பூஜைக்கு வன்னி இலைகள் பயன்படுத்துவது சிறந்தது என விநாயக புராணம் கூறுகிறது. வேலன் வள்ளியை மணப்பதற்காக, வன்னி மர வடிவிலேயே தோன்றினான்.

விருத்தாசல தல புராணம், வன்னி மரத்தின் சிறப்புக்களை புகழ்ந்துரைக்கிறது. அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மிகப் பழமையான வன்னி மரம் உள்ளது. இங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு கோயில் கட்ட உத்தேசித்து, வேலையாட்களை திருப்பணியில் ஈடுபடுத்தினார். வேலையாட்களுக்கு கூலியாக, வன்னி மரத்தின் இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அதற்குத் தகுந்த பொன்னாக அந்த இலைகள் மாறும். இது கல்வெட்டுச் சான்றுகளிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய பெருமை வாய்ந்த வன்னி மரத்தை, விஜய தசமி நன்னாளில் பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஷமி பூஜையின் புராண காரணங்கள்:

ஸ்ரீராமர், ராவணனை எதிர்த்துப் போருக்குக் கிளம்புவதற்கு முன், ஒரு வன்னி மரத்தை மும்முறை சுற்றி வணங்கிப் பின் கிளம்பியதாக ஐதீகம். மேலும் அவர், ஒரு வன்னி மரத்திலேயே தன் ஆயுதங்களை வைத்து, போருக்கு உபயோகித்தாராம்.

பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் போது, அர்ஜூனன்  பாண்டவர்களின் ஆயுதங்களை, வன்னி மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருந்தான். 'பிருஹன்னளை' என்ற பெயரில் இருந்த அவனும் பாண்டவர்களும், விராட தேசத்தில் மறைந்து வாழ்ந்தனர். துரியோதனன், இதை அறிந்து, விராட நகரைத் தாக்கிய போது,  அர்ஜூனன், வன்னி மரத்தை வணங்கி, அங்கிருந்த ஆயுதங்களை எடுத்து, கௌரவ சேனையை  வென்றான்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வன்னி மரத்தை விஜயதசமி நன்னாளில் வணங்குவது  குறித்த ஒரு புராணம் இதோ..

முன்னொரு காலத்தில் கௌத்ச்யன் என்பவன், வரதந்து முனிவரிடம் குருகுல வாசம் செய்து, நன்முறையில் கல்வி கற்றுத் தேர்ந்தான். குரு தக்ஷணை தர வேண்டிய வேளை வந்தது. ஆனால் குருவோ பிரதிபலன் எதிர்பாராதவர்.  அவர் கௌத்ச்யனிடம், 'என் ப்ரியமான சிஷ்யனே,  கற்ற வழியில் நிற்பதே நான் எதிர்பார்க்கும் குரு தக்ஷிணை. வேறு ஏதும் இல்லை' என்று கூறினார். ஆனால் கௌத்ச்யனோ, அவரை விடாது வற்புறுத்தினான்.

வரதந்து முனிவர், கௌத்ச்யனால் ஆகாத ஒன்றைக் கேட்டால் தான் அவன் விடுவான் என்று எண்ணி, 'கௌத்ச்யா, நீ கட்டாயம் எனக்கு குருதக்ஷிணை தந்து தான் ஆக வேண்டுமானால், நீ கற்ற பதினான்கு சாஸ்திரங்களுக்கு இணையாக, பதினான்கு கோடி பொற்காசுகளைக் கொடு' என்று கூறினார்.

கௌத்ச்யன், ஏழை அந்தணன். அவனால் இது எப்படி முடியும்?. சற்று சிந்தித்தவன், பிறகு, அயோத்தியை அப்போது ஆண்டு வந்தவரான ரகு மஹாராஜாவிடன் சென்று கேட்க முடிவு செய்தான்.

ஆனால், கௌத்ச்யனுக்கு சோதனை அங்கும் நேர்ந்தது. ரகு மஹாராஜா, அப்போதுதான் ஒரு பெரும் யாகத்தை நடத்தி முடித்து அனைவருக்கும் தான தருமங்கள் செய்திருந்தார். ஆகவே அவர் கௌத்ச்யன் கேட்ட அளவு செல்வம் தர இயலவில்லை. ஆனால், அவர் கௌத்ச்யனுக்கு மறுப்புத் தெரிவிக்காமல், 'நீ சென்று, இன்னும் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வருவாயானால், நீ கேட்ட செல்வம் தருகிறேன்' என்று கூறி வழி அனுப்பினார். பின்னர், தேவலோகம் சென்று, இந்திரனிடம், தனக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகோள் விடுத்தார்.   ரகு மஹாராஜாவின்  செய்கையால்  மகிழ்ந்த இந்திரன், குபேரனை அழைத்து, அயோத்தி நகரைச் சுற்றியுள்ள வன்னி, ஆத்தி மரங்களிலிருந்து பொன்மழை பொழிய வைக்க உத்தரவிட, குபேரனும் அதன்படியே செய்தார். பின், சகல மரியாதைகளுடனும், ரகு மஹாராஜாவை வழி அனுப்பி வைத்தார் இந்திரன்.

அயோத்தி வந்த ரகு மஹாராஜா, கௌத்ச்யனை அழைத்து, பொற்காசுகள் அனைத்தையும் கொடுத்தான். குருவுக்கு தக்ஷிணை கொடுத்தது போக, மீதிப் பொற்காசுகளை, கௌத்ச்யன், அரசனுக்கே திருப்பித் தர முடிவு செய்தான். ஆனால் ரகு மஹாராஜாவோ, 'கௌத்ச்யனே, நான் தானம் தந்த பொருளை திரும்பப் பெறுவது சரியல்ல' என்று கூறிவிட்டார். உடனே, கௌத்ச்யன், அனைத்துப் பொற்காசுகளையும், அயோத்தி நகர மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.

இவ்வாறு, ரகு மஹாராஜாவின் தயாள குணத்தாலும், கௌத்ச்யனின் நேர்மையாலும், அயோத்தி நகர மக்கள் அனைவர் இல்லத்திலும் தங்க மழை பொழிந்தது.  இந்த சம்பவம் நடந்த தினம் ஒரு விஜய தசமி.

ஆகவே, விஜய தசமி தினத்தில், வன்னி, ஆத்தி மரத்தின் இலைகள் தங்கத்துக்கு சமமாகப் போற்றப்படுகின்றன.

பூஜை செய்யும் முறை:

முன்பு, வன்னி, ஆத்தி மரத்தின் கிளைகளை ஒடித்து வந்து வீட்டில் வைத்துப் பூஜிக்கும் வழக்கம் இருந்ததாம். ஆனால் இது, கிட்டத்தட்ட, மரங்களை அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டதால், இப்போது குறைந்து விட்டது. உண்மையில், மரங்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று பூஜிப்பதே சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.

வன்னி மரத்தை ஆராதித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

வன்னி மரத்திற்கு சந்தனம்,மஞ்சள், குங்குமத்தால் அலங்காரம் செய்து, பூக்கள் சமர்ப்பித்து, கீழ்வரும் ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

ஷமி ஷம்யதே பாபம் ஷமி சத்ரு விநாசினி
அர்ஜூனஸ்ய தனுர்தாரி ராமஸ்ய பிரியதர்ஷினி
கரிஷ்யமான யாத்ராயா யதாகாலம் சுகம் மயா
தத்ர நிர்விக்ன க்ருத்ருத்வம் பவ ஸ்ரீராம பூஜிதா

(பாவத்தை நீக்கி அருளும் மரம் வன்னி. ஸ்ரீராமருக்கு மிகப் பிடித்தமான மரமான வன்னியிலேயே, பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். ஓ வன்னியே!, உன்னை ஸ்ரீராமர் பூஜித்திருக்கிறார். நான் வெற்றியை நோக்கி நம்பிக்கை வைத்துப் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். அந்தப் பயணத்தை, இடையூறுகள் அற்றதாகவும் நலமானதாகவும் ஆக்கி அருள்வாயாக.)

ஆத்தி மரத்தை துதிக்கும் ஸ்லோகம்:

அஷ்மாந்தக்  மஹாவிருக்ஷா மஹா தோஷ நிவாரண
இஷ்டான தர்ஷனம் தேஹி குரு சத்ரு விநாசனம்

(ஓ ஆத்தி(அஷ்மாந்தக்) மரமே, நீ எல்லாவித குறைபாடுகளையும் நீக்கி அருள்வாய். என்னை என் நலம் விரும்பும் நண்பர்களோடு எப்போதும் ஒன்றாக வைத்திருப்பதோடு, எனக்கு எதிரிகளும் இல்லாமல் செய்வாய்)

அதன் பின், அரிசி, வெற்றிலை, பாக்கு முதலியவற்றை மரத்தின் வேரில் சமர்ப்பித்து விட்டு, மரத்தை வலம் வர வேண்டும்.  அதன் பின், வேரடி மண்ணில் கொஞ்சமும், இலைகளில் கொஞ்சமும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, பூஜையறையில் வைக்கப்படுகிறது. இலைகளை, 'தங்கம்' என்று சொல்லி, உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இளையோர்கள், மூத்தோர்களுக்கு தங்கம் பரிசளிப்பதும் உண்டு!.

மஹாராஷ்டிராவில், தசராவுக்கு குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு தங்கம் பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. முற்காலத்தில், போருக்குச் செல்லும் ஆண்கள், வெற்றியோடும், பெரும் பொருட்செல்வத்துடனும்  நகர் திரும்பும் பொழுது, நகர எல்லையில், அவர்களின் மனைவியரும் சகோதரியரும் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். அவர்களுக்கு வீரர்கள் தங்கம் பரிசளிப்பர். பின் விட்டுக்கு வந்து, தாங்கள் கொண்டு வந்த செல்வ மூட்டைகளை, குலதெய்வக் கோயிலில் வைத்து வழிபட்டு, மூத்தோர்களின் ஆசிகளைப் பெறுவர். இப்போது இந்த வழக்கமே, வன்னி, ஆத்தி  இலைகளை விநியோகிக்கும் வழக்கமாக மாறி விட்டது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் விஜயதசமியன்று 'பாரிவேட்டை' திருவிழா நடப்பதையும்,,  ஸ்வாமி அல்லது அம்பாள்,  கோயிலிலிருந்து புறப்பாடு ஆகி, சிறிது தூரம் சென்று,  அம்பு போடும் வழக்கம் உள்ளதையும் இதோடு நாம் இணைத்துப் பார்க்கலாம்.

குஜராத்,மஹாராஷ்டிரா போன்ற சில வட இந்திய மாநிலங்களில், வன்னி பூஜையின் போது, அபராஜிதா அம்பிகையும் பூஜிக்கப்படுகின்றாள். வன்னி மரத்தின் கீழ் எட்டுத் தளங்களுள்ள தாமரை மலரை வரைந்து, அதன் நடுவில், அபராஜிதா தேவியின் திருவுருவச் சிலையை வைத்து, பூஜிக்கின்றனர்.

'ஹே அபராஜிதா, அழகிய, பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணியை அணிந்தவளே!, பூஜிப்பவர்களுக்கு அளவில்லாமல் அருள் செய்யும் தாயே!, எமக்கு வெற்றி அருள்வாய்!' என்று பிரார்த்திக்கின்றனர்.

வட இந்தியாவில் சில பகுதிகளில், 'ஸீமோல்லங்கன்(ஸீமா + உல்லங்கன்) என்னும் சடங்கு தசராவின் போது செய்யப்படுகிறது.   முற்காலத்தில், விஜயதசமியன்று ஆயுதங்களுக்குப் பூஜை செய்து, அதன் பின்,  நகர் எல்லையைத் தாண்டி, போருக்குச் செல்லும் வழக்கம் இருந்ததாம்.  நகர் எல்லையைக் கடந்து வெற்றி கண்ட வீரர்களின் செயலை நினைவுபடுத்தும்  வகையில், ஊர் எல்லையை கடக்கும் இந்த சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. அபராஜிதா தேவியின் பூஜை, இந்த சடங்கு நடக்கும் முன் நிகழ்த்தப்படுகின்றது.

இது போல், ஆயுத பூஜையின் முன்பும், இந்த பூஜை நடத்துவது சில பகுதிகளில் வழக்கத்தில் இருக்கிறது.

இந்த பூஜை செய்வதால், தான்ய விருத்தி ஏற்படும். செல்வம் பெருகும். குறிப்பாக, தங்கம் நிறையச் சேரும் என்பது நம்பிக்கை. ஆகவே, விஜய தசமி தினத்தன்று, இதை பெரும்பாலோர் நம்பிக்கையுடன் செய்கின்றனர்.

விஜயதசமியன்று, இந்தப் பூஜையைச் செய்வதால், பொருட்செல்வத்தோடு, அம்பிகையின் அருட்செல்வமும் வற்றாது பெருகும் என்பது நிச்சயம். வளமோடு வாழ்ந்து நலமோடு சிறக்க, வன்னியை, விஜயதசமி தினத்தன்று பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

NAVARATHIRI (5/10/2013 TO 14/10/2013).....நவராத்திரி..



அன்பர்களுக்கு வணக்கம்.

எங்கும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியின் மகிமை போற்றும் 'சாரதா நவராத்திரி' வரும் ஐந்தாம் தேதி முதல் துவங்குகின்றது. நவராத்திரியின் மகிமை குறித்தும் பூஜை முறைகள் குறித்தும் மிக விரிவாகவே சென்ற வருடப் பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

சென்ற வருடத்திய நவராத்திரி பதிவுகளின் சுட்டிகளுக்குக் கீழே சொடுக்கவும்..

1. நவராத்திரி மகிமை.

2. கொலு வைக்கும் முறை.

3. நவராத்திரி கோலங்களும் நிவேதனங்களும்.

4. நவராத்திரி பூஜா முறைகளும் பலன்களும்.

வருடம் முழுதும் நாம் முப்பெருந்தேவியரின் அடி தொழுது போற்றுகின்றோம். ஆயினும் சாரதா நவராத்திரி தினங்களில் முப்பெருந்த் தேவியருக்கான பூஜைக்கென்றே மும்மூன்று நாட்கள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஸ்வரூபிணியான அம்பிகையின் திருப்பாதங்கள் தொழுது பூஜிப்பதற்காக, நம் முன்னோர்கள் மூன்று மூன்று தினங்களை குறித்திருக்கிறார்கள். வருடம் முழுதும் பூஜிக்க முடியாதவர்கள் கூட, அந்த தினங்களில் அம்பிகையைத் தொழுதால், அதிக வரம் பெறலாம். வருடம் முழுதும் நலம் பெறலாம்.

நேரமிருப்பவர்கள் விரிவாக சஹஸ்ரநாம பூஜை, நிவேதனம் என்று செய்யலாம். நேரமில்லாதவர்களுக்காக, இந்தப் பதிவில் சில எளிய முறை பூஜைகளைச் சொல்லியிருக்கிறேன். பணிக்குச் செல்லும் பெண்கள் அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில், சுமார் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள் இந்தப் பூஜைகளைச் செய்து விடலாம்.

ஐந்து முகக் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கை ஏற்றிப் பூஜிக்கலாம். விளக்கில் இரண்டு முகம் ஏற்றியும் பூஜிக்கலாம். பொதுவான பூஜை முறைகளை முதலிலும், ஒவ்வொரு தேவிக்கும் உரிய நாமாவளிகளை தனியாகவும் தந்திருக்கிறேன். பொருத்தமாகச் சேர்த்துக் கொண்டு பூஜிக்கவும்.

சங்கல்ப மந்திரத்தில், அந்தந்த தேவியரின் பெயரைக் கூறிக் கொண்டு பூஜிக்கவும். ஸரஸ்வதி பூஜை அநேகமாக இரண்டு நாட்கள் தீபத்தில் செய்வோம். மஹாநவமியன்று சாஸ்த்ரோக்தமாக புஸ்தக மண்டலத்தில் செய்வதே சிறந்தது. சிலர் மூல நக்ஷத்திரத்திலேயே புத்தகங்கள் வைப்பார்கள். அச்சமயத்திலும் புத்தகங்களிலேயே அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.

பூஜை முறை(பொது).

விநாயகர் வந்தனம்.(கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொள்ளவும்)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ( என்று சொல்லி நெற்றிப் பொட்டில் ஐந்து முறை குட்டிக் கொள்ளவும்).

சங்கல்பம்:
மமோ பார்த்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ துர்க்கா/லக்ஷ்மி/ ஸரஸ்வதி ப்ரஸாதேந, மம ஸகல க்லேச நிவ்ருத்தி த்வாரா ஸர்வாபீஷ்ட சித்யர்த்தம், அஸ்மின் தீப மண்டலே துர்க்கா/லக்ஷ்மி/ ஸரஸ்வதி பூஜாம் கரிஷ்யே. என்று கூறி, புஷ்பம் அக்ஷதையை வடக்காகச் சேர்க்கவும்.

பின்னர், தீபத்தை ஏற்றவும்.
'தீபம் ஜ்யோதிர் பரப்ரஹ்மம்
தீபம் சர்வ தமோபஹம்
தீபேன சாத்யதே சர்வம்
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே.' என்று சொல்லி விளக்கேற்றவும் அல்லது

வழிபட வேண்டி நானும்
நின்னையே மனதில் பதித்து
திருவிளக்கு ஏற்றி வைத்தேன்
விழுமிய தீபந்தன்னில்
விளங்க நீயும் வாராய்
ஓம் ஸ்ரீ தேவி! என்றும் சொல்லலாம்.

பின்னர், புஷ்பம், அக்ஷதை எடுத்துக் கொண்டு,

அஸ்மின் தீப மண்டலே, ஸ்ரீ துர்க்கா தேவீம் / ஸ்ரீமஹாலக்ஷ்மீம் / ஸ்ரீமஹா சரஸ்வதீம் ஆவாஹயாமி, (என்று தீபத்தின் பாதத்தில் சமர்ப்பிக்கவும்)

பாத்யம் சமர்ப்பயாமி (அம்பிகையின் திருவடிகளை அலம்புவதாகப் பாவித்து, சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

அர்க்யம் சமர்ப்பயாமி (அம்பிகையின் திருக்கரங்களை அலம்புவதாகப் பாவித்து, சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்).

ஆசமநீயம் சமர்ப்பயாமி(அம்பிகைக்கு, அருந்துவதற்கு நீர் தருவதாகப் பாவித்து, சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

ஸ்நாநம் சமர்ப்பயாமி(அம்பிகைக்கு ஸ்நாநம் செய்விப்பதாகப் பாவித்து,சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

ஸ்நாநாநந்திரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி(சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

வஸ்த்ரார்த்தம் புஷ்பாணி சமர்ப்பயாமி (பூக்களை திருவிளக்கின் பீடத்தில் சமர்ப்பிக்கவும்..இயன்றால் ரவிக்கைத் துண்டும் சாற்றலாம்)

கந்தம் சமர்ப்பயாமி(சிறு பூவால் சந்தனம் தோய்த்து, திருவிளக்கில் சமர்ப்பிக்கவும்)

குங்குமம் சமர்ப்பயாமி(குங்குமம் சமர்ப்பிக்கவும்)

சர்வோபசாரார்த்தம் அக்ஷதாம் சமர்ப்பயாமி(அக்ஷதை சேர்க்கவும்)

(குங்குமம் ஸமர்ப்பயாமி -க்கு அடுத்ததாக, ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி அலங்க்ரணார்த்தம் புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி புஷ்பை: பூஜயாமி எனச் சொல்லிய பின்னர், நாமாவளி கூறுவதும் வழக்கத்தில் இருக்கிறது. --இதனை நினைவூட்டிய சகோதரர் உயர்திரு.விஎஸ்கே அவர்களுக்கு மிக்க நன்றி)

(பின் கீழே கொடுத்திருக்கும் நாமாவளிகளைக் கூறி, புஷ்பமோ, அக்ஷதையோ, குங்குமமோ கொண்டு அர்ச்சிக்கவும்)

அதன் பின், 

ஊதுவத்தி ஏற்றிக் கொண்டு, 'தூபம் ஆக்ராபயாமி' என்று விளக்கிற்கு சுற்றிக் காட்டவும். 

 ஒரு அகல் விளக்கில் அல்லது தீபக் காலில் தீபம் ஏற்றி, ''தீபம் தர்ஸயாமி' என்று விளக்கிற்கு சுற்றிக் காட்டவும்.

'நைவேத்யம் நிவேதயாமி' (இயன்றவற்றை நிவேதிக்கவும்)

தாம்பூலம் சமர்ப்பயாமி( வெற்றிலை பாக்கு, பழம் சமர்பிக்கவும்.

கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி( கற்பூர ஆரத்தி காட்டவும்)

பிரதக்ஷிண நமஸ்காரான் சமர்ப்பயாமி(என்று புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு மூன்று முறை ஆத்ம பிரதக்ஷிணம் செய்து சமர்ப்பிக்கவும்)

மேற்கூறிய உபசாரங்களை, அதே மந்திரங்களைக் கூறித் தான் செய்ய வேண்டுமென்பதில்லை. அம்பிகை அன்புருவானவள். 'அம்மா' என்ற ஒரு சொல் போதும் உலகனைத்தையும் ஈன்ற அந்த தயாபரியை உருகச் செய்ய. 'அம்மா, எழுந்தருள்வாய், அம்மா, இந்த உபசாரத்தை ஏற்றுக் கொள்வாய்' என்று உள்ளம் உருகிச் சொல்லும் ஒவ்வொன்றையும் அந்த ஸ்ரீமாதா கட்டாயம் பிரத்யக்ஷமாக ஏற்கிறாள்.
நாமாவளிகள்: ஸ்ரீதுர்க்கா தேவி.
  1. ஓம் துர்க்காயை நம:
  2. ஓம் மகா காள்யை நம:
  3. ஓம் மங்களாயை நம:
  4. ஓம் அம்பிகாயை நம:
  5. ஓம் ஈஸ்வர்யை நம;
  6. ஓம் சிவாயை நம:
  7. ஓம் க்ஷமாயை நம:
  8. ஓம் கௌமார்யை நம:
  9. ஓம் உமாயை நம:
  10. ஓம் மஹாகௌர்யை நம:
  11. ஓம் வைஷ்ணவ்யை நம:
  12. ஓம் தயாயை நம:
  13. ஓம் ஸ்கந்த மாத்ரே நம:
  14. ஓம் ஜகன் மாத்ரே நம:
  15. ஓம் மஹிஷ மர்த்தின்யை நம:
  16. ஓம் சிம்ஹ வாஹின்யை நம:
  17. ஓம் மாகேஸ்வர்யை நம:
  18. ஓம் த்ரிபுவனேச்வர்யை நம:

ஸ்ரீ மஹாலக்ஷ்மி
  1. ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நம:
  2. ஓம் வரலக்ஷ்ம்யை நம:
  3. ஓம் இந்திராயை நம:
  4. ஓம் சந்திர வதனாயை நம:
  5. ஓம் சுந்தர்யை நம:
  6. ஓம் சுபாயை நம:
  7. ஓம் ரமாயை நம:
  8. ஓம் பிரபாயை நம:
  9. ஓம் பத்மாயை நம:
  10. ஓம் பத்மப்ரியாயை நம:
  11. ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம:
  12. ஓம் சர்வ மங்களாயை நம:
  13. ஓம் பீதாம்பர தாரிண்யை நம:
  14. ஓம் அம்ருதாயை நம:
  15. ஓம் ஹரிண்யை நம;
  16. ஓம் ஹேம மாலின்யை நம;
  17. ஓம் சுபப்ரதாயை நம:
  18. ஓம் நாராயணப்ரியாயை நம:

ஸ்ரீ சரஸ்வதி தேவி.
  1. ஓம் சரஸ்வத்யை நம:
  2. ஓம் சாவித்ர்யை நம:
  3. ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம:
  4. ஓம் ஸ்வேதா நநாயை நம:
  5. ஓம் ஸூரவந்திதாயை நம:
  6. ஓம் வரப்ரதாயை நம:
  7. ஓம் வாக்தேவ்யை நம:
  8. ஓம் விமலாயை நம:
  9. ஓம் வித்யாயை நம:
  10. ஓம் ஹம்ஸ வாகனாயை நம:
  11. ஓம் மஹாபலாயை நம:
  12. ஓம் புஸ்தகப்ருதே நம:
  13. ஓம் பாஷா ரூபிண்யை நம:
  14. ஓம் அக்ஷர ரூபிண்யை நம:
  15. ஓம் கலாதராயை நம:
  16. ஓம் சித்ரகந்தாயை நம:
  17. ஓம் பாரத்யை நம:
  18. ஓம் ஞானமுத்ராயை நம:
இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி பொருந்தியன. மனதை ஒரு முகப் படுத்தி வழிபட, தேவியின் கருணையால் எல்லா நலன்களும் விளையும்.

பூஜை முடிந்ததும் யாரேனும் ஒருவருக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது. இயலாதோர், மாலை வேளையிலேனும் அளிக்கலாம். இந்தப் பூஜையையும் மாலை வேளைகளில் செய்யலாம். தாம்பூலம் தரும் முறை (சொடுக்கவும்) பதிவு, தாம்பூலம் அளிப்பது குறித்து உதவக் கூடும்.

கொலு வைப்பது குறித்த டிப்ஸுக்கு இங்கு சொடுக்கவும்.

அன்பர்கள் அனைவரும் ஜகன்மாதாவின் பேரருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

PITHRU VAZHIPAADU( MAHALAYA PAKSHA (20/9/2013 TO 4/10/2013) SPECIAL POST)... பித்ரு வழிபாடு (மஹாளய பக்ஷம்..(20/9/2013 TO 4/10/2013).


அன்பர்களுக்கு வணக்கம்...

ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மாதம், பௌர்ணமியை அடுத்து வரும் பதினைந்து தினங்களும் மஹாளய பக்ஷம் என்று வழங்கப்படுகிறது. பித்ரு வழிபாடு எனப்படும் மூதாதையர், நீத்தார் வழிபாடு செய்ய உகந்த தினங்களாகப் போற்றப்படும் இந்த தினங்களின் சிறப்பைப் பற்றியும், சுவதா தேவியைப் பற்றியும், மிக விரிவாகவே சென்ற வருடப் பதிவொன்றில் சொல்லியிருக்கிறேன். சுட்டிக்கு கீழே சொடுக்கவும்.

1. மஹாளய பக்ஷம்.

'மறந்ததை மஹாளயத்தில் விடு' என்னும் சொல்லுக்கேற்ப, பித்ருக்களுக்கு உரிய திதியில் நீத்தார் கடன் நிறைவேற்ற மறந்தோர் மஹாளய பட்சத்தில் செய்யலாம். மஹாளய பக்ஷத்தின் பதினைந்து தினங்களும் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய சூழலில், ஏதாவது ஒரு திதியில், அநேகமாக தந்தையார் மறைந்த திதியில் மட்டும் செய்கின்றனர்.

இவ்வாறு ஒரே ஒரு திதியில் செய்யப்படும் சிரார்த்தம் 'சக்ருன் மஹாளயம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்தப் பதிவில், மஹாளய பக்ஷத்தின் முக்கிய தினங்களாகக் கருதப்படும் மத்யாஷ்டமி, அவிதவா நவமி மஹாபரணி, வியதீபாதம், கஜச்சாயா யோகம் மாக ஸ்ரார்த்தம் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

மத்யாஷ்டமி. 
மஹாளய பக்ஷத்தின் பதினைந்து தினங்களில் மத்தியில் அதாவது முன் ஏழு, பின் ஏழு தினங்களுக்கு நடுவில் வரும் அஷ்டமி திதியே மத்யாஷ்டமி.  மஹாளய பக்ஷத்தில், வேறு திதிகளில் செய்ய சௌகரியப்படாதோர் மத்யாஷ்டமியில் செய்யலாம். இந்தத் திதியின் சிறப்பு, திதி, வார, நக்ஷத்திர தோஷங்கள் எதுவும் இதற்கு இல்லை என்பதே.

வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதியில் மறைந்தவர்களுக்கும், பௌர்ணமி திதியில் மறைந்தவர்களுக்கும், மத்யாஷ்டமியில் சிரார்த்தம் செய்யலாம். பௌர்ணமி திதியில் மறைந்தவர்களுக்கு, மஹாளய அமாவாசையும் சிரார்த்தம் செய்ய உகந்ததே.

மத்யாஷ்டமியில் திருவாதிரை நக்ஷத்திரம் சேர்ந்து வருமாயின் அது ஆருத்ராஷ்டமி என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய தினத்தில், பித்ரு காரியங்கள் மட்டுமின்றி, சிவபூஜை செய்வது மிகச் சிறப்பான பலனைத் தருகின்றது.

பொதுவாக, சிரார்த்தம் செய்ய ஏற்ற தலங்கள் என்று பலவற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால் அஷ்டமி சிரார்த்தத்துக்கு ஏற்ற இடம் எது தெரியுமா?. மதுரை அருகில் இருக்கும் அழகர் கோவில் திருத்தலத்தின் மலை மேலிருக்கும்(பழமுதிர் சோலை) நூபுர கங்கைத் தீர்த்தக் கரையே அந்த இடம்.

மத்யாஷ்டமி திதிக்கு அடுத்து வரும் நவமி திதி, அவிதவா நவமி என்று சிறப்பிக்கப்படுகின்றது. சுமங்கலியாக இறைவனடி சேர்ந்த பெண்களுக்கு அன்றைய தினம் சிரார்த்தம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும் செயலாகக் கருதப்படுகின்றது. அவர்கள் புண்ணிய லோகம் அடைந்து அம்பிகையின் ஸ்வரூபத்தைப் பெறுவதால், அவர்களை அம்பிகைக்கு சமமாகவே மதிக்கின்றது நம் சம்பிரதாயம். சிரார்த்தம் செய்வதோடு, அன்றைய தினம் அன்னதானம் செய்வதும், சுமங்கலிகளுக்கு உணவளித்து, மங்கலப் பொருட்கள் தாம்பூலமாகத் தருவதும் மிக விசேஷமானதாகும்.

மஹாபரணி:

 மஹாளய பக்ஷத்தில், பரணி நக்ஷத்திரம் அபரான்ன‌ காலத்தில் வரும் போது செய்யப்படுவது பரணி சிரார்த்தம் .

முதலில் அபரான்ன‌ காலம் என்றால் என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் பித்ரு காரியத்திற்கென நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது (ராகு காலம், நல்ல நேரம் போல்). அதன்படி ஒதுக்கப்பட்ட நேரமே அபரான்ன‌  காலம். சுமார் இரண்டு மணி நேரம் வரும் இது, ஒவ்வொரு நாளும் மதியம் ஒன்றரை மணியிலிருந்து மூன்றரை மணி வரை நீடிக்கும்.

இந்த அபரான்ன‌ காலத்தில் பரணி நக்ஷத்திரம் வந்தால் அதுவே 'மஹாபரணி' தினம். இது பொதுவாக, மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தி திதி அல்லது பஞ்சமி திதியில் வரும். சில சமயம் திருதியை திதியிலும் வருவதுண்டு. ஆகவே, மஹாபரணி சிரார்த்தம் செய்ய எண்ணுவோர் திதி குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.

பரணி நக்ஷத்திரத்திற்கு ஏன் இத்தனை சிறப்பு என்றால், இது பித்ருக்களின் அதிகாரியாகிய யமதர்மரால் ஆளப்படுவது. அதனாலேயே பித்ருபக்ஷத்தில் இது சிறப்புப் பெறுகிறது.

மஹாபரணி சிரார்த்தம், கயாசிரார்த்தத்திற்கு ஈடானது. மிகுந்த புண்ணிய பலன்களைத் தர வல்லது.

மஹாவியதீய பாதம்:

வியதீபாதம் என்பது இருபத்தேழு யோகங்களுள் ஒன்று. இந்த யோகம் மஹாளய பக்ஷத்தன்று ஏற்படும் போது அது மஹாவியதீபாதம் என்றழைக்கப்பட்டு பித்ரு காரியம் செய்வதற்கு சிறப்பான நேரமாகிறது(மார்கழி மாதத்தில் வரும் மஹாவியதீய பாதம் வேறு).

வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை பிறந்தது குறித்த ஒரு புராணக் கதை உள்ளது.

தேவகுருவான பிரஹஸ்பதியின் மனைவி தாரை. அவளிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டான் சந்திரன். அவனை கோபமாகப் பார்த்தார் சூரிய பகவான். பதிலுக்கு, சந்திரனும் பார்க்க, அந்த உஷ்ணப் பார்வைகளின் சங்கமத்தில் உதித்தவனே வியதீபாத புருஷன். இந்த தேவதைக்கு அதிபதி சிவபிரானாவார்.

கஜச்சாயா யோகம்:

பொதுவாக, இந்த யோகம் ஏற்படும் அமைப்பு ஒவ்வொரு வருடமும் வருவது அரிது. ஆனால் இந்த யோகம் அமையுமாயின் அது  பித்ருபக்ஷத்திலேயே அமையும். அந்த நேரத்தில் செய்யப்படும் தானங்கள், தரும காரியங்கள், பித்ரு காரியங்கள் இவற்றின் பலனை எழுத்தில் வடிக்க இயலாது. அவ்வளவு நன்மையான பலன்களைத் தர வல்லவை அவை.

சூரியன் ஹஸ்த நக்ஷத்திரத்திலும், சந்திரன் மக நக்ஷத்திரத்திலும் இருக்க, அன்று திரயோதசி திதி சேரும் போது இந்த யோகம் ஏற்படுகின்றது.

சூரியன், சந்திரன் இரண்டும் இணைந்து ஹஸ்த நக்ஷத்திரத்தில் காணப்படும் மஹாளய அமாவாசை தினமும் இந்த யோகத்தைத் தருவதாகச் சொல்லப்படுகின்றது. 

ஆயினும் இந்த யோகம் பகல் நேரத்தில் ஏற்படுமாயின் மிகுந்த வலிமையுள்ளது என்றும் இரவு நேரத்தில் ஏற்படுமாயின் வலிமையிழக்கின்றது என்றும் ஒரு கூற்று இருக்கின்றது.

மக நக்ஷத்திரத்திற்கு அதிபதி பித்ரு தேவதை. ஆகவே, மஹாளய பக்ஷத்தில் அந்த நக்ஷத்திரத்திற்கு மிகுந்த சிறப்பு உண்டு.

மாக ஸ்ரார்த்தம் என்பது, மக நக்ஷத்திரம் அபரான்ன‌ காலத்தில் இருக்கும் தினத்தில் வருவதாகும். இரண்டு தினங்களின் அபரான்ன‌ காலத்தில் மக நக்ஷத்திரம் வருமானால், எந்த தினத்தின் அபரான்ன‌ காலத்தில் மிக நீண்ட நேரம் மக நக்ஷத்திரம் இருக்கின்றதோ அதை மாக சிரார்த்த தினமாகக் குறிப்பது மரபு.

எந்த தினத்தின் அபரான்ன‌ காலத்தில் மக நக்ஷத்திரமும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்றதோ அந்த தினத்தை மாக திரயோதசி சிரார்த்த தினமாகக் கொள்கிறார்கள்.

பித்ரு வழிபாட்டுக்கு உரிய இந்த சிறப்பான தினங்களில் நீத்தார் கடன் செய்ய வேண்டுவோர் முறையாகச் செய்து,  அவர்களது ஆசிபெற்று,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013

MUZHU MUTHARKADAVUL (VINAYAKA CHATHURTHI SPECIAL POSTING(9/9/2013) ...முழு முதற்கடவுள்(விநாயக சதுர்த்தி சிறப்புப் பதிவு.)



அன்பர்களுக்கு வணக்கம்.

'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், நம் பாரத நாடெங்கும் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. விநாயகரைப் பற்றிய செய்திகளுடன், விநாயக சதுர்த்தி பூஜை செய்யும் முறை பற்றி என் சென்ற வருட பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சுட்டிகளுக்கு கீழே சொடுக்கவும்.



3.விநாயக சதுர்த்தி பூஜை.  (பகுதி 3)

'முழுமுதற்கடவுள்' என்ற பதம், பொதுவாக, ஆதி அந்தமில்லா பரம்பொருள் ஒன்றையே குறிக்கும்.  அப்படிப் பார்க்கும் போது, ஷண்மதங்கள் ஒவ்வொன்றும், தத்தமது முக்கியக் கடவுளரையே 'முழுமுதற்கடவுள்' என்று போற்றுகின்றன. ஆனால் பொதுவில் 'முழுமுதற்கடவுள்' என்றதும் நினைவுக்கு வருபவர், ஞானமூர்த்தியாகிய விநாயகரே ஆவார்.

அண்டமனைத்தும் விநாயகரில் அடங்கியிருப்பதன் குறியீடே அவரது பெருத்த வயிறு. மேலும் அனைத்து தெய்வங்களாலும் உபாசிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டவர் இவரே.

உமாதேவியார், முருகன், பிரம்மா, இந்திராதி தேவர்கள், மன்மதன், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணிதேவி, ஆதிசேஷன், சந்திரன், அங்காரகன்(செவ்வாய்), அகத்தியர், காசிபர் முதலான முனிவர்கள்  என, விநாயகரைத் தொழுது அருள் பெற்றோர் பலர். இது ஒன்றே, அவரே முழு முதற்கடவுள் என்பதைத் தெளிவாக விளக்கும்.

பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம், இந்த விருத்தாந்தங்களை பெரும் சுவையுடன் விளக்குகிறது. அதிலிருந்து சில பகுதிகளைச் சுருங்கக் காணலாம்.

உமாதேவியார் விநாயகர் அருள் பெற்றது.

இமவானின் மகளாக, பார்வதி தேவி என்ற திருநாமத்துடன் உமாதேவி வளர்ந்து வருகையில், சிவனார் கங்கையை மணக்கும் முன் தம்மை மணந்திட வேண்டுமென்று நினைத்து, முறையாக, விநாயக சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து, தன் மனோரதம் நிறைவேறப் பெற்றார்.

முருகப் பெருமான் விநாயகர் அருள் பெற்றது:

வள்ளி திருமண சமயத்தில், முருகப்பெருமானுக்கு விநாயகர் செய்த உதவி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் விநாயக புராணம், நமக்குத் தெரியாத வேறொரு செய்தியையும் விளக்குகின்றது. சூரபன்மனை வெல்வதற்காக, கிருஷ்ணா நதி தீரத்தில், ஷண்முகர், விநாயகரைக் குறித்துத் தவம் இருந்து, அதன் பலனாக, ஸ்ரீவிநாயகரது அருளும் அவரது மயில் வாகனமும் கிடைக்கப் பெற்றார்.  அந்த இடமே, 'மோர்காம்' என்று வழங்கப்படும், ஸ்ரீமயூரேச விநாயகர் கோயில் கொண்ட திருத்தலமாகும். அதன் பின்னரே முருகப்பெருமான், திருக்கயிலை அடைந்து, சிவனார் ஆணைப்படி, தேவசேனாபதி ஆனார்.

பிரம்மா விநாயகர் அருள் பெற்றது:

முதன்முதலில் சிருஷ்டியைத் தொடங்கு முன், பிரம்மதேவர், விநாயகரை வழிபட மறந்துவிட, அதன் பலனாக, அவர் சிருஷ்டி செய்தவை யாவும் குறைபாடுள்ளவையாக அமைந்து விட்டன. அதன் பின், அவர், விநாயகரைத் தொழுது, அவர் அருளால் சிருஷ்டியை முறையாகச் செய்து வரலானார்.

இந்திராதி தேவர்கள், விநாயகரை உபாசித்தது:

விநாயக பக்தனான, பலி என்னும் அசுரன், தேவாதி தேவர்களையும் போரில் வென்றான். அதன் காரணமாக, மிகுந்த அலைப்புண்ட தேவர்கள், இறுதியில் நாரத முனிவரின் ஆலோசனைப்படி கணபதியை உபாசிக்க, பின் அவர் அருளால், இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடைந்தனர்.

ஆதி சேஷன் விநாயகரை உபாசித்தது:

முன்பொரு முறை,  ஆதி சேஷன், சிவனாரின் சிரத்திலிருக்கிறோம் என்றெண்ணி கர்வமடைந்த க்ஷணத்தில், பூவுலகுக்குத் தள்ளப்பட்டார். பூவுலகுக்குத் தள்ளப்பட்ட வேகத்தில், அவரது தலை பூமியில் மோதி ஆயிரம் பிளவாக ஆகியது. அவரது மகத்துவங்கள் யாவும் மறைந்தது. அதன் பின், நாரத முனிவரின் ஆலோசனைப்படி, கணேச மந்திரத்தை உபாசித்தார். அதன் பலனாக, சிவனார் சிரத்தில் ஐந்து தலைகளோடு அமர்ந்திருக்கவும், ஆயிரம் பிளவுகளும் ஆயிரம் சிரங்களாகி, பூவுலகைத் தாங்கவும், ஒரு தலையோடு கூடிய உருவினனாக, விநாயகப் பெருமானுக்கு உதரபந்தனமாக(இடுப்பில் இருக்கும் கயிறு) விளங்கவும் அனுக்கிரகிக்கப் பெற்றார்.

ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் அருளால், தமக்கு நேர்ந்த அபவாதம் நீங்கப் பெற்றதை 'சியமந்த்கோபாக்கியானம்' விவரிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரது தர்மபத்தினியாகிய ஸ்ரீருக்மணி தேவி, தம் புதல்வன் பிரத்யும்னன், சம்பராசுரனுடன் யுத்தம் செய்யச் சென்று வெகு காலமாகியும் திரும்ப வராததால், நாரதர் ஆலோசனைப்படி, கணேச மந்திரத்தை, விநாயக சதுர்த்தி அன்று விதியுடன் ஜபம் செய்தார். அதன் பலனாக, சதுர்த்தியிலிருந்து ஆறாவது தினத்தில், பிரத்யும்னன் வெற்றியுடன் வந்து சேர்ந்தான். 

இவ்வாறாக, மனிதர்கள் மட்டுமல்லாது தேவர்களும் விநாயகரை உபாசித்து நன்மையடைந்தனர்.

விநாயக சதுர்த்தி பூஜையில் அருகம்புல், எருக்கம் மாலை, வன்னி இலை மூன்றும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அனலாசுரன் கதை அருகம்புல்லின் முக்கியத்துவத்தை விளக்குவது போல், வன்னி இலையின் முக்கியத்துவத்தை விளக்கும் அற்புதக் கதை ஒன்று விநாயக புராணத்தில் இருக்கிறது.

பிரம்ம தேவர், காயத்ரி தேவி, சாவித்ரி தேவி என்னும் தன் மனைவியர் இருவருள், காயத்ரி தேவியை மட்டும் அழைத்துக் கொண்டு, சஹ்யாத்ரி மலைச் சாரலில் ஒரு வேள்வியைத் தொடங்கினார். செய்தியைக் கேள்வியுற்ற சாவித்ரி தேவி, கடும் கோபமுற்று, வேள்விக்கு வந்த இந்திராதி தேவர்களை நோக்கி, 'நீங்கள், இந்த வேள்விக்கு எவ்விதம் உடன்படலாம்?' எனக் கேட்டாள். சரியான பதில் வராது போகவே, அவர்கள் அனைவரையும் நீராக உருமாறுமாறு சபித்து விட்டாள். செய்வதறியாது திகைத்த அவர் தம் தேவிமார்கள், பின்,  பிரம்ம தேவர்    ஆலோசனைப்படி, வக்ரதுண்ட கணபதியை பல காலம் உபாசித்தனர். ஆனால் அவர் பிரத்யக்ஷமாகவில்லை.

அதன் பின், ஆகாயத்திலிருந்து எழுந்த அசரீரி வாக்கின்படி, வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்தனர். விநாயகரும் அவர்கள் முன் தோன்றி, தேவர்களது சாபத்தை நீக்கினார். அதன் பின், தேவர்களனைவரும், மந்தார மரத்தடியில், ஹேரம்ப விநாயகரை பிரதிஷ்டித்து பூஜித்தனர். பிரம்மாவும், பன்னிரண்டு ஆண்டுகள், ஹேரம்ப விநாயகரை வன்னி இலையால் பூஜித்து, அதன் பலனாக, தம் யாகத்தை மீண்டும் தொடங்கி நிறைவேற்றினார்.

கணபதி, எளிய பூஜையில் அகமகிழ்பவர். ஆத்மார்த்தமாக பக்தி செலுத்துபவர்களுக்கு, வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடல். பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கும் செயல்கள், பெருவெற்றியாக நிறையுமாறு செய்யும் வள்ளல்.

அமைதியாக, ஆத்மார்த்தமாக, முழு மனதையும் செலுத்தி, விநாயகரைப் பூஜிப்பதால், எப்படிப்பட்ட தீவினையும் மாளும். நம்மால் ஆன எதையும் விநாயகருக்கு நிவேதிக்கலாம்.

கணேச‌ பஞ்சரத்ன ஸ்லோகத்தைச் சொல்லி, விநாயக சதுர்த்தி அன்று விநாயகரைத் துதிக்கலாம். கீழே இருக்கும் காணொளி இணைப்பில் கணேச பஞ்சரத்னம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காணொளியை வலையேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல.

கர்நாடகாவில், விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் கௌரி பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். கௌரி பூஜை செய்வது பற்றி, என்

1. ஸ்வர்ணகௌரி விரத பூஜை பகுதி 1(சொடுக்கவும்)

2. ஸ்வர்ணகௌரி விரத பூஜை பகுதி 2 (சொடுக்கவும்)

ஆகிய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.  குலதெய்வப் பிரீதி, இந்த தினத்தில் கௌரி பூஜை செய்வதால் ஏற்படும்.

மறு நாள் விநாயகரைப் பூஜித்து, பின் விஸர்ஜன தினத்தில், கௌரி, கணேசர் இருவரையும் சேர்த்து நீர் நிலைகளில் சேர்ப்பிக்கிறார்கள்.கர்நாடகாவில் இது மிகப் பெரிய பண்டிகை. தீபாவளி போல் புதிய ஆடைகள் அணிந்து கொண்டாடுகிறார்கள். வீட்டில் பிறந்த பெண்களுக்கு, 21 வகை மங்கலப் பொருட்களுடன் சீர் செய்கிறார்கள். அன்றைய தினம் அவர்களை உணவருந்தவும் அழைக்கிறார்கள்.

கணேஷ் சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹாராஷ்டிராவில், விநாயக மூர்த்தங்களை, வீட்டுக்கு எடுத்து வந்து குறைந்தது ஒன்றரை நாள், அல்லது ஐந்து, ஏழு, பத்து தினங்கள் பூஜித்துக் கொண்டாடுவார்கள். பொதுவாக, சதுர்த்தி அன்று துவங்கி, அனந்த சதுர்த்தசி வரை மொத்தம் பத்து தினங்கள் விழா நடைபெறும். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம் அல்லது பந்தலில் கணேச பிரதிமையை வைத்துப் பூஜிப்பார்கள்.

முதல் நாள் பூஜை, நாம் செய்வது போல், கணேச மந்திரங்கள் சொல்லி நடத்துவார்கள். அதன் பின், கணேசரின் பிரதிமை வீட்டில் இருக்கும் வரை, காலை, மாலை இரு வேளையும் ஆரத்தி நடைபெறும். வீட்டில் உள்ளோர், விருந்தினர் அனைவரும் அதில் பங்கு பெறுவர். அதன் பின், பூ, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை, கணேசரின் பிரதிமை மீது தூவி வழிபாடு செய்வர். கொப்பரைத் தேங்காய், வெல்லம் சேர்த்த பிரசாதம் விநியோகிக்கப்படும்.

சதுர்த்தி தினத்தன்று மட்டும், ஐந்து முறைகள் ஆரத்தி நடக்கும்.

ஆரத்திகள் மந்திர புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெறும்.

குழுவாகச் சேர்ந்து, பெரிய பந்தல்களில், மிகப் பிரம்மாண்டமான பிரதிமைகளைச் செய்து பூஜிப்பதும் வழக்கம். பத்தாம் நாள் நிறைவில் பெரும் ஊர்வலமாக, கணேச பிரதிமைகள் எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். பத்து தினங்களுக்கு மேலாக, பிரதிமைகளை வீட்டில் வைப்பதில்லை.

இந்தியத் திருநாடே கொண்டாடாடி வழிபடும் விநாயக சதுர்த்தி தினத்தன்று, ஸ்ரீவிநாயகரை உளமார வழிபடுவோம். வேண்டும் வரங்களைப் பெறுவோம்.

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

PALALA GOWRI, POLALA AMAVASA VIRTHAM( 5/9/2013)....பல கௌரி (பலால கௌரி, போலால அமாவாசை) விரதம்


அன்பர்களுக்கு வணக்கம்!

நம் கலாசாரத்தில், அழகியலோடு கூடிய பலவிதமான பண்டிகைகள், விரதங்கள் கொண்டாடப்படுகின்றன.  ஒவ்வொரு பண்டிகை/ விரதத்துக்கும் பின்புலமாக, இறைநம்பிக்கையை வலுப்படுத்தும் கதைகள் சொல்லபடுகின்றன. பெரும்பாலும் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்ப நலன் வேண்டி செய்யப்படுவதாகவே இந்த விரதங்கள் இருக்கின்றன.

நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மற்றும் விரதங்களைக் கண்டறிந்து சொல்வதே இம்மாதிரி பதிவுகளின் நோக்கம்.  நம் நாட்டின் பெருமைப்படத்தக்க கலாசாரப் பின்புலத்தை அறிவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

நமக்குத் தேவையான நன்மைகளைப் பெறும் பொருட்டு, பலவிதமான கௌரி விரதங்கள், பூஜைகள் கொண்டாடும் வழக்கம் நம் பாரம்பரியத்தில் இருக்கிறது. கௌரி தேவி வேண்டும் வரங்களை அருள்பவள். வெண்ணிறத்தை கௌவர்ணம் என்று சொல்வது வழக்கம். சிவனாரிடமிருந்து மின்னலெனத் தோன்றிய வெண்ணிற ஒளியே கௌரி தேவியாக உருப்பெற்றதென புராணங்கள் கூறுகின்றன.

வெண்ணிறமாக இருப்பதாலும் மலைகளின் மேல் தங்கி அருள் புரிதலாலும் 'கௌரி' என அழைக்கப்பட்ட கௌரி தேவிக்கு, 108 விதமான ஸ்வரூபங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான சில வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் திருவடிவங்களைப் போற்றும் முகமாக கௌரி விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

கேதார கௌரி, சம்பத் கௌரி, ஸ்வர்ண கௌரி, கஜகௌரி என பலவிதமான கௌரி விரதங்கள் இருக்கின்றன. திருமண முகூர்த்தத்திற்கு முன்பாக, மணமகள், கௌரி பூஜை செய்வது  பல சமூகங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில்,  இந்தப் பதிவில், ஆந்திர, கர்நாடகா மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் பலகௌரி விரதத்தைப் பற்றிப் பார்க்கலாம்.இது போலால அமாவாசை விரதம், பலால கௌரி விரதம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது.

விரதம் அனுஷ்டிக்கப்படும் தினம்:
ஒவ்வொரு வருடமும் சிராவண(ஆவணி) மாத அமாவாசை தினத்தன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம், 5/9/2013, வியாழனன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வட இந்திய மாநிலங்களில், பிதோரி அமாவாசை, பய்ல் போலா அமாவாசை என்றும் அழைக்கப்படும் இந்த விரதம், சந்திரமானன பஞ்சாங்கத்தின்படி, சிராவண மாத கடைசி தினம்(அமாவாசை) அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

யார் விரதம் அனுஷ்டிக்கலாம்?
இந்த விரதம், பார்வதி தேவியால், தேவேந்திரனின் மனைவி இந்திராணிக்கு உபதேசிக்கப்பட்டது. அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த புத்திர பாக்கியம், இந்த விரததை அனுஷ்டிப்பதால் கிட்டும்.

ஆகவே திருமணமான மங்கையர், புத்திரப் பேறு வேண்டியும், குழந்தைகள் இருப்போர், தம் குழந்தைகளின் நலனுக்காகவும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

இந்த விரதம், தென்னிந்தியாவில், குழந்தைகளைக் காக்கும் கௌரி தேவியாகிய‌ பார்வதி தேவியின் ஒரு அம்சமாகிய போலெரம்மா, போச்சம்மா என்ற பெயர்களால் வழங்கப்படும் தேவியைக் குறித்துச் செய்யப்படுகின்றது.  தமிழ்நாட்டில் இந்த தேவி,  சீதலா தேவி என்ற  வழங்கப்படும் மாரியம்மனைக் குறிக்கின்றாள். அம்மை, வைசூரி முதலிய கொடிய நோய்கள் குழந்தைகளை அண்டாது காக்கும் மகிமையுள்ள தேவி இவள்.

வட நாட்டின் சில பகுதிகளில் துர்காதேவியை குறித்தும்,64 யோகினிகள்,  பிரம்மாணி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி, கௌமாரி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய‌ சப்த மாத்ருகா தேவியரைக் குறித்தும் இந்த விரதம் செய்யப்படுகின்றது.

விரதம் அனுஷ்டிக்கப்படும் விதம்:

இது, 'சீதலா சப்தமி'என்று சில வட மாநிலங்களிலும், 'சீதலா சஷ்டி' என்று ஒரிசாவிலும் வழங்கப்படும் விரதங்களைப் போன்றே அனுஷ்டிக்கப்படுகின்றது.  'பிதா, பித்' என்றால்  மாவு என்று பொருள் சொல்லப்படுகின்றது. மாவினால் ஆன தேவியின் உருவம் வைத்துப் பூஜிப்பதால், இது பிதோரி அமாவாசை விரதம் என்று அழைக்கப்படுகின்றது. 64 யோகினிகளைப் பூஜிக்கும் வழக்கம் இருக்கும் இடங்களில், 64 சிறிய உருவங்கள், (கோதுமை அல்லது அரிசி)மாவினால் செய்து பூஜிக்கின்றார்கள்.

பெண்கள் தனித்தனியாக, தம் இல்லங்களிலோ அல்லது அம்மன் திருக்கோயில்களில் ஒன்று கூடியோ இந்த விரதத்தை நடத்துவார்கள்.

தேவி போச்சம்மாவின் திருவுருவப்படம் அல்லது அன்னையின் கோயிலின் படம் ஒன்று, பூஜையறையில் வரையப்படுகின்றது. மாவினால் திருவுருவங்கள் வைத்துப் பூஜிக்கப்படும் வழக்கமுள்ளவர்கள் அவ்வாறு வைத்துப் பூஜிக்கிறார்கள். பின், தூப தீப ஆராதனைகள் செய்து ஷோடசோபசார பூஜைகள் செய்யப்படுகின்றது. கௌரி அஷ்டோத்திரம் (சொடுக்கவும்), துர்கா ஸ்துதி, பவானி அஷ்டகம் முதலியவை சொல்லித் துதிக்கின்றார்கள்.

அம்மை, வைசூரி முதலிய கொடிய நோய்களை விரட்டும் மகிமையுள்ள சீதலாஷ்டகம், சீதலா தேவி ஆரத்தி முதலியவற்றைப் படிக்க கீழே சொடுக்கவும்.

1.சீதலாஷ்டகம்.

2.சீதலாதேவி ஆரத்தி.

அன்றைய தினம், குழந்தைகளுக்கு மங்கள ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அணிவிக்கிறார்கள். விரத பூஜை முடிவில், நோன்புச் சரடுகள் வைத்து வழிபட்டு, தம் குழந்தைகள் நலன் வேண்டி அவர்களது கரங்களில் கட்டி, அவர்களது நலனுக்காக வேண்டுவார்கள்.

சில வித்தியாசமான நிவேதனங்கள் இந்த பூஜையின் போது படைக்கப்படுகின்றன.

தாலிகாலு பரவான்னம்(அரிசி மாவினால் செய்யப்பட்ட சேவையை உபயோகித்துச் செய்யப்படும் பாயசம்) பில்லாலு(அரிசி மாவினால் செய்யப்படும் சப்பாத்தி) முதலிய நிவேதனங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன.

சற்று வித்தியாசமான இவற்றின் செய்முறையின் லிங்க் கொடுத்திருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

நிவேதனங்கள் (சொடுக்கவும்).

போலால அமாவாசை விரதக் கதை:
ஒரு ஊரில் ஏழு அண்ணன் தம்பிகள் வசித்து வந்தார்கள். அனைவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. கடைசித் தம்பிக்கு ஏழு குழந்தைகள். அந்தக் குடும்பத்தின் ஏழு மனைவிமார்களும், போலால அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க ஆவல் கொண்டனர். ஆனால் சோதனையும் வேதனையும் சேர்ந்தது போல், ஒவ்வொரு வருடமும், கடைசித் தம்பியின் ஒரு குழந்தை இறைவனடி சேர்ந்தது. அதனால், ஒவ்வொரு வருடமும் இந்த விரதம் அனுஷ்டிப்பது தடை பட்டது. இம்மாதிரி நிகழும் போது ஒரு வருடத்திற்கு எந்தப் பண்டிகையும் கொண்டாடக் கூடாதென்பது சம்பிரதாயம்.

அண்ணன் மனைவியர் அறுவரும், கடைசி ஓரகத்தி, தன் குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளாததே இதற்குக் காரணம் என்று நினைத்தனர். சமயம் வாய்க்கும் போதெல்லாம் இதைச் சொல்லிக் காட்டி அவளை மன வேதனைப்படுத்தினர்.

ஏழாவது வருடம். கடைசி தம்பியின் ஒரு குழந்தை மட்டுமே உயிரோடு இருந்தது. அவன் மனைவி, மிகுந்த கவனமுடன் அதைப் பராமரித்து வந்தாள்.ஆனால், விதி செய்த சதி, போலால அமாவாசை தினத்தன்று, காரணம் தெரியாமல் திடீரென அந்தக் குழந்தையும் மரித்தது.

இந்தப் பேரதிர்ச்சியால் அவள் செய்வதறியாமல் திகைத்தாள். இந்த வருடமாவது போலால அமாவாசை விரதம் கொண்டாட, அவள் ஓரகத்தியர் செய்திருக்கும் ஏற்பாடுகளை அவள் அறிவாள். இது தெரிந்தால் நிச்சயம் பெரும் பிரச்னை வெடிக்கும். புத்ர சோகத்திற்கென அழுவதா அல்லது ஓரகத்தியரின் கொடுமைக்கு அஞ்சுவதா என அவளுக்குத் தெரியவில்லை.

திடீரெனத் தோன்றிய உணர்வினால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, குழந்தையை மறைத்தாள். தானும் கோயிலுக்குச் சென்று, விரதத்தில் கலந்து கொண்டு, அம்பிகையை விழிகளில் நீர் பெருக, பூஜை செய்தாள்.

கருணைக் கடலான அம்பிகை, அந்தப் பெண்ணுக்கு கருணை புரிய திருவுளம் கொண்டாள்.

அன்று இரவு, அனைவரும் தூங்கிய பின், இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் போலெரம்மா கோயிலுக்குச் சென்றாள் அந்தப் பெண். அம்பிகையிடம் முறையிட்டு, கதறி அழுதாள். அச்சமயம், இரவு பத்தி உலாத்துதல்(ஊர் எல்லையை காவலுக்காகச் சுற்றுதல்) செய்வதற்காக, அம்பிகை விக்ரக உருவிலிருந்து வெளிப்பட்டாள். ஏதும் அறியாதவள் போல், அந்தப் பெண்ணிடம் வந்து, அவள் அழுகைக்கான‌ காரணம் கேட்டாள்.

அழுது கொண்டே அந்தப் பெண் தன் நிலையைக் கூறி விட்டு, 'இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையின் நிலையைச் சொன்னால் பெரும் பிரச்னை வெடிக்கும். குழந்தையைப் பாதுகாக்காததோடு, குழந்தை இறந்த செய்தியை மறைத்து விரதம் செய்தது தவறு என்று குற்றம் சாட்டுவார்கள். இதை சொல்லாமல் விட்டால், நாளைக்குக் குழந்தை எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்? என்று கதறினாள் அந்தப் பெண்.

அம்பிகை போலால அமாவாசை விரதப் பலனைத் தர திருவுளம் கொண்டாள். மந்திர அக்ஷதையை அவளிடம் கொடுத்து, இறந்த பாலகன் மீதும், மற்ற ஆறு குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீதும் தூவி, அவர்களது பெயரைச் சொல்லி அழைக்குமாறு கூறி விட்டு மறைந்தாள். அன்னையின் ஆணைப்படி செய்தாள் அந்தப் பெண்.

என்ன ஆச்சரியம்!. இறந்த எழுவரும் உறங்கி எழுந்ததைப் போல் உயிர்பெற்று வந்தனர். அந்தப் பெண்ணின் ஆனந்தம் தாளமுடியாததாக இருந்தது. பெருமகிழ்வுடன், அனைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இல்லம் சேர்ந்தாள் அவள்.

குழந்தைகளோடு அவளைக் கண்ட அனைவரும், அதிசயித்து விசாரிக்க, நடந்ததைக் கூறினாள் அந்தப் பெண். அனைவரும் அன்னையின் அருள்மழையை வியந்து போற்றினர். தம் குழந்தைகளின் நலனுக்காக 'போலால அமாவாசை விரதத்தை' தொடர்ந்து செய்யத் துவங்கினர். அது முதல் இந்த விரதம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

வட இந்தியாவின் சில பகுதிகளில், இது பிதோரி அமாவாசையாகக் கொண்டாடப்படுகின்றது என்பதை முன்பே பார்த்தோம். இந்தக் கொண்டாட்டம், நமது மாட்டுப் பொங்கலை பெரும்பாலும் ஒத்திருக்கின்றது.

அன்றைய தினம், உழவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் முகமாக, அவற்றை அலங்கரித்து வழிபடுகின்றனர். மறுநாளிலிருந்து, விதை விதைத்தலும், நிலத்தை உழுதலும் ஆரம்பமாகும்.

போலா அமாவாசைக்கு முன் தினம், மாடுகளின் மூக்கணாங்கயிறுகள் அவிழ்க்கப்படுகின்றன. மஞ்சள், கடலை எண்ணை கலந்த கலவை கொண்டு அவை குளிப்பாட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் செய்வது போல், அவற்றின் உடலெங்கும் வண்ண, வண்ணப் பொட்டுக்கள் வைத்து, கொம்புகளுக்கு வண்ணமடித்து, மலர்கள், வண்ணக் காகிதங்கள் இவற்றால் அலங்கரிக்கின்றனர்.

அதன் பின், மாடுகளை நிறுத்தி வழிபாடு செய்து, கிச்சடியை உணவாகத் தருகின்றனர். மாலை வேளைகளில் மாடுகளின் ஊர்வலமும் நடக்கின்றது

சில மாநிலங்களில், இந்த தினத்தை ஒட்டி விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன.

வேறு சில மாநிலங்களில், பசுவுக்கும் காளை மாட்டுக்கும் மழை வேண்டி திருமணம் செய்கிறார்கள். மனிதர்களுக்குச் செய்வது போலவே அனைத்துச் சடங்குகளும் நடைபெற்று, கோவில்களைச் சுற்றி பிரதக்ஷிணமாக மாடுகளை அழைத்துச் செல்கின்றார்கள்.

இந்த அமாவாசை தினத்தன்று பித்ருவழிபாடு மிக விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆகவே அன்றைய தினம் தர்ப்பணம் முதலியவை செய்வதும் மிக நல்லது.

தொன்று தொட்ட நம்பிக்கைகளின் விளைவாக எழுந்த இந்த விரத பூஜைகள், ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்வோருக்கு அளவில்லாத நற்பலன்களைத் தருவது கண்கூடு.

இம்மாதிரியான விரதங்கள் செய்யும் வழக்கமில்லாதவர்களும் இந்தக் குறிப்பிட்ட தினங்களில் தங்களால் இயன்ற இறைவழிபாட்டினை மேற்கொண்டு நலமடையலாம்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.