நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 26 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU, SONG # 1...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய., 'பிடித்த பத்து' பதிகம் -1


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

சிவராத்திரியை முன்னிட்டு, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகங்களுக்கு, சிவனருளால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை பொருள் எழுத முயன்றிருக்கிறேன்.. தினமொரு பதிகமாக கூடுமானவரை எழுத எண்ணம்...அரனருள் சிறக்கப் பிரார்த்திக்கிறேன்....

சிவராத்திரியை ஒட்டிய சென்ற வருடப் பதிவு, தங்களின் மேலான பார்வைக்காக...


மாணிக்கவாசகப் பெருமான், 'பிடித்த பத்து' பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை 'பிடித்த பத்து' எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் 'முத்திக் கலப்புரைத்தல்' எனப்பட்டது...

பிடித்த பத்து (முத்திக் கலப்புரைத்தல்)

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்: உம்பர்‍- தேவர்..'தேவர்கட்கு அரசரே!,அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற கலந்திருப்பவனே!, அழுக்கினை உடைய உடல் தரித்த எனக்கு, புதிய பொருள் போலத் தோன்றி வந்து, என் குடி முழுவதும் ஆண்டு, மாயையினால் ஆன இவ்வுலக வாழ்வு நீங்குமாறு, பேரின்ப வாழ்வு தந்தருளிய அமுதம் போன்றவனே!.. 'செம்மையான, மெய்ப்பொருள் நீயே' என்று துணியப்படுபவனே!...சீர்மை பொருந்திய கழலிணைகள் உடையவனே!..நிலையான பேரின்ப நிதியாகிய செல்வமே!.. சிவபெருமானே!...யாம் உய்யும் பொருட்டு, உம்மைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!...நீ இனிமேல் என்னை விட்டு எங்கெழுந்தருளிச் செல்வது?....'

சற்றே விரிவாக...

இங்கு 'யோகம்' என்ற சொல், 'சேர்ந்திருப்பது', 'கலந்திருப்பது' என்னும் பொருளில் அறியப்படுகின்றது.. எம்பெருமான் இப்பிரபஞ்ச முழுதும் நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பினன் ஆதலின், 'ஒழிவு அற நிறைந்த யோகமே' என்றார்... 

'ஊத்தையேன்' அல்லது 'ஊற்றையேன்' என்பது, 'அழுக்கான உடல் தரித்த என்னை' என்று பொருள் தரும்.. இதில் அழுக்கு என்பது புற அழுக்கு மட்டுமல்லாது, மும்மலங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்..

பாம்பாட்டிச் சித்தரின்

ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே 
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே 
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் 
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’

என்ற பாடலையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'வம்பெனப் பழுத்த' என்ற சொல்லின் பொருள் மிக ஆழமானது.. இருப்பினும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.. இறைவன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்.. பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியன்..
இறைவன், புதிய பொருள் போலத் தோன்றி தம் குடி முழுதும் ஆண்டு கொண்டான் என்கிறார்....

அஞ்ஞான இருள் நீங்கி, என்றும் புதிதான ஞான ஆதித்தன் (இறைவன்) உதித்து, தம் ஆன்மாவை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்ட இயல்பையே வியந்துரைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். இங்கு 'குடி' என்னும் சொல், உற்றார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் குறிப்பதாகவே பெரும்பான்மையான உரையாசிரியர்கள் கொள்கின்றனர். இவையெல்லாம் நிலையானவை அல்ல என்பது வாதவூரார் அறியாததல்லவே!!.. பல பிறவிகளின் கர்ம மூட்டையால் பிணிக்கப்பட்டுள்ள ஆன்மாவை, இறைவன் அருள் தந்து அவனுடையதாக்கிக் கொள்ளலையே 'குடி முழுதும் ஆண்டு' என்றார்... தம்மை முற்றாக, முழுமையாக இறைவன் ஏற்றுக்கொண்டதையே அவர் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்..

அடுத்து வரும் 'வாழ்வு அற' என்ற வரியும் இதை உறுதி செய்கிறது.. இறைவனது அருள் பெற்ற உயிர்,மீண்டும் பிறவா நிலையை அடைகிறது.. பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபடுகிறது...

'வாழ்வு அற வாழ்வித்த மருந்தே' என்பதால், இவ்வுலகத்தில் பிறவி எடுத்தல் என்னும் நிலை நீங்குமாறு பேரின்ப வாழ்வளித்து அருள் செய்தான் இறைவன் என்பதைச் சொல்கிறார்.. மருந்தே என்பது இங்கு அமுதமே என்பதாகப் பொருள்படும்.. இறவா நிலை தரக் கூடியது அமுதம்.. இறைவன் பிறப்பிறப்பு நீக்கி சாயுஜ்ஜிய நிலையை அருளியதைச் சுட்டுவதாக, இதனைக் கொள்ளலாம்.

செம்பொருள் என்பது, உண்மையான பொருள் என்பதாகப் பொருள்படும்.. உண்மையான பொருள் எது என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், இறுதியாக, சிவமே மெய்ப்பொருள் என்று துணிவர்.. ஆகவே, 'அத்தகைய உண்மையான பொருள் நீயே' என்று துணியத் தக்கவனே என்றார்..

சீருடைக் கழலே என்பதில் கழல் என்பது ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளைக் குறிக்கின்றது.. உண்மையான சிவப்பரம்பொருளின் திருவடிகளை அடைவதே மானிடப் பிறவி எய்தியதன் நோக்கம்... 

தில்லை மூதூர் ஆடிய திருவடி 
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 

என்று கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகப் பெருமான் அருளியதை இங்கு ஒப்பு நோக்கிப் பொருள் கொள்ளலாம்.

'எம்பொருட்டு' என்றது, பதிகங்களைப் பாடும் நமக்கு அறிவுறுத்தியது.. நம் பொருட்டு,  நாம் உய்ய வேண்டுமெனில், எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க வேண்டும்..  இதனைச் செய்வதால் பலனடைவோர் நாம் தான் அல்லவா?!.. சிக்கெனப் பிடித்தல் என்பது, நம்மை முற்றாக இறைவனது திருவடிகளில் சமர்ப்பித்து..'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பதற்கிணங்க,  இறைவனை மிக உறுதியாகப் பற்றிப் பிடித்தலாகும்.. 'சிக்கென' என்பதன் மூலம் தளராத உறுதிப்பாடு கூறப்பட்டது..உறுதியாக, 'நீயே கதி' என இறைவனைப் பற்றிப் பிடிப்போரின் இதயத் தாமரையில் இறைவன் நிரந்தரமாக எழுந்தருளுவான் ஆதலின், 'எங்கெழுந்தருளுவது இனியே..' என்றார்.. சித்தம் சிவலோகமாக மாறிய பின், எங்கும் அதுவே காணுதலால், அவர் பிறிதோரிடத்து தோன்றுதல் என்பது கிடையாது.. ஆகவே 'தாம் வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது...' என்று உரிமையுடன் உரைத்தார்...

இவ்வாறு, தாம், இறையனாரின் இணையடிகளை உறுதியாகப் பற்றிப் பிடித்தமையும் அதன் காரணமாக, இறைவன், தம் ஆன்மாவின் மலங்கள் நீங்குமாறு செய்து, பேரின்ப வாழ்வளித்தமையையும் உரைக்கிறார் பெருமான்...'முத்திக் கலப்புரைத்தல்' சொல்லும் பதிகங்களில், முதற் பதிகத்தின் பொருள் இவ்வாறு அமைந்ததாகக் கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!..

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. சிவராத்திரியை முன்னிட்டு
    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. பிடித்தப் பத்தைப் பிடித்துப் பற்றிப்
    பிடித்துப் பற்றினை விடுத்தப் பெருமகன்
    பிடித்துப் படைத்தப் பாடலின் பொருளைப்
    பிடித்துப் பிழிந்துக் கொடுத்தவர் வாழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறையருளுக்கும் தங்களது அற்புதமான பாடலுக்கும் மனமார்ந்த நன்றி!..எழுதத் துவங்கியதன் பலனடைந்தது போலவே உணர்கிறேன்...மிக்க நன்றி!..

      நீக்கு
  3. வம்பு என்பது புதுமை எனும் பொருளைத் தருமெனினும், இந்தப் பாடலில் அந்தப் பொருள் மிக நன்றாகப் பொருந்துமெனினும், இது பொதுவாக நாம் உணர்ந்தறியா ஒரு பொருள் என்பதால்,...

    அந்தச் சொல்லுக்குப் பெரும்பாலும் நாம் உணர்கின்ற பொருளாகிய, நிலையின்மை, வீண் வார்த்தை, தீம்பு வார்த்தை, சிற்றொழுக்கம், பயனிலாமை என்னும் பொருளைக் கொண்டு இப்பாடலை நோக்கினால்,....

    'வம்பெனப் பழுத்த ஊத்தையேன் தனக்கு என் குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே!' எனவும் கொண்டு,.....

    வெறும் தீய சொற்களையே சொல்லிக்கொண்டு உபயோகமற்றவனாக வளர்ந்துத் திரிந்த என் மீது கருணை கொண்டு, என்னை மட்டுமின்றி, என் குடி முழுதையுமே இனிப் பிறவித் துன்பமின்றிச் செய்வித்து, எம்மை வாழவைத்த அருமருந்தே!

    எனவும் பொருள் கொள்ளலாமோ என எண்ணுகிறேன்.

    தவறெனில் பொறுத்தருளவும்.

    வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் பொறுத்தருள என்ன இருக்கிறது அண்ணா!...மிக மிக அருமையான பொருளுரை இது..மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...என் பணிவான நன்றி!..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..