நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG #4....திருவெம்பாவை.. பாடல்#4,.. ஒள்நித் திலநகையாய்!!!


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலும் உரையாடலாகவே அமைந்திருக்கிறது.

தோழியர் அனைவரும் ஒன்று கூடி வந்து விட்டனர். உறங்கும் தோழிக்கு, எழுந்து வர மனமில்லை.

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

தோழியர், 'ஒளி வீசும் முத்தைப் போல புன்னகை செய்பவளே!!, உனக்கு இன்னமும் விடியவில்லையா?'என்று கேட்க,

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

அதற்கு எழுப்பப்பட்டவள், 'கிளி போல் அழகிய சொற்களைப் பேசும் நம் தோழியர் எல்லாரும் வந்து விட்டார்களா?' என்று உள்ளிருந்தே குரல் கொடுக்கிறாள்.

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

தோழியர், 'நாங்கள் எண்ணிச் சொல்லுவோம், ஆனால் அத்துணை காலமும், நீ தூங்கி, காலத்தை வீணே கழிக்காதே (அளவுக்கு மீறிய உறக்கம் ஆபத்தே. உறக்கத்தை, 'கெடு நீரார் காமக் கலன்'களுள் ஒன்றெனக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை.). நாங்கள் எண்ணிச் சொல்வதையும் இப்போது செய்ய மாட்டோம்   விண்ணில் வாழும் தேவர்களுக்கு இறவா நிலை தரும் மருந்தாகிய அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளை, கண்களுக்கு இனிமையாக காட்சி தருவானை மனமாரப்  பாடி, உருகி, உள்ளம் நெகிழ்ந்து நின்றுகொண்டிருக்கிறோம். வேண்டுமானால், நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய்த் தூங்குவாயாக'. என்று பதிலுரைக்கிறார்கள். 

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாம் செய்த நல்வினையின் காரணமாக, ஞானிகள் நம்மை வழிநடத்த வரும் போது,  சோம்பியிருக்காது அவர் தம் சொல் கேட்டு நடக்க வேண்டும். இல்லையேல், 'முக்தி தருகிறேன்' என்று முனிவர் வாக்குறுதி அளித்தும் கேளாது பிள்ளைப் பாசத்தால் கட்டுண்டு, பலபிறவி எடுத்து உழன்ற மிட்டாய் வியாபாரியின் கதையாகி விடும். 

இப்பாடலில், சாதகர்கள், சோம்பியிருக்காது, குருவின் சொல் கேட்டு, ஆன்ம சாதனைகளைத் தொடர்ந்து முயல வேண்டும் என்பது சொல்லப்படுகின்றது.

'ஒள்நித் தில நகையாய்' என்று இப்பாடலிலும், தோழியின் புன்னகைக்கு முத்தின் ஒளி ஒப்பிடப்படுகின்றது.

'இன்னம் புலர்ந்தின்றோ' என்று 'உனக்கு இன்னமும் விடியவில்லையா?' என்று கேட்பது. ' இந்தப் பொல்லாத பிறவிச் சுழலில் இருந்து மீள வேண்டும் என்ற அறிவு இன்னும்  உன் புத்திக்கு உதிக்கவில்லையா?' என்று கேட்பதாகக் கொள்ளலாம். மிகப் பெரும் துயரிலிருந்து மீண்டவர்களை, நாம் இப்போதும், 'உனக்கு விடிவு காலம் பிறந்து விட்டதா!!' என்று கேட்பதுண்டு.

'வண்ணக் கிளிமொழியர்' என்று தோழியர்களைக் குறிப்பிடுவதிலும் உள்ளார்ந்த பொருளுண்டு. கிளி,  பூரண‌ ஞானத்திற்கு அறிகுறியாகச் சுட்டப்படுகின்றது.

மதுரையை ஆளும் மீனாளும், அரங்கனை ஆளும் ஆண்டாளும் திருக்கரங்களில் கிள்ளையை ஏந்தி அருள் புரிகிறார்கள். 
(மதுராபுரி நாயிகே நமஸ்தே
மதுராலாப சுகாபிராம ஹஸ்தே)

மஹா மந்த்ரிணீயாக, கலைகளில் சிறக்க வரமருளும் ஸ்ரீராஜ சியாமளையும், ஸ்ரீலலிதையும் தம் திருக்கரங்களில் கிளியை ஏந்தி இருக்கிறார்கள்.

ஸ்ரீஆண்டாளின் திருக்கரங்களில் இருக்கும் கிளி, சுகப்பிரம்ம ரிஷியே என்று சொல்வதுண்டு. 

ஸ்ரீபாஸ்கரராயரிடம் கேட்கப்பட்ட, 'சதுஷ்ஷஷ்டி கோடி யோகினிகளின்(ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்) பெயர்கள் என்ன?' என்ற கேள்விக்கு, ஞானஸ்வரூபிணியான அம்பிகை, கிளியின் உருவில், ராயரின் தோள்களில் அமர்ந்து கொண்டு, பெயர்களை அவருக்குக் கூறினாள் என்பார்கள்.

ஆக, ஞானத்தின் உயர்நிலையில் இருக்கும் தோழியரைச் சுட்ட, 'கிளி மொழியார்' என்ற வார்த்தையைச் சொல்கிறாள் தோழி.

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

'நாங்கள் எண்ணி, உள்ளதை உள்ளவாறு சொல்கிறோம்' என்றது எண்ணிக்கையை அல்ல. நாங்கள் தியானித்து அறிந்த பரம்பொருளை, உள்ளது உள்ளவாறே உனக்குத் தெளிவாக அறிவிக்கிறோம்(அதாவது உபதேசித்து வழிநடத்துகிறோம்). ஆனால் நாங்கள் சொல்லும் போது தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு, நீ வெறுமே கண்களை மூடிக் கொண்டு, பலவாறு எண்ணமிட்டால், பரம்பொருளைப் பற்றி அறியமாட்டாய். நீயும் உன் தரப்பில் இருந்து ஆர்வமுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதே, நாங்கள் உனக்கு உபதேசிக்கும் போது, உன் சாதனை மார்க்கம் எளிதாகும்(உபதேசம் பெறுமுன்பாக, சாதகன் ஓரளவுக்கேனும் பக்குவ நிலை பெற்றிருத்தல் அவசியம்). இல்லையேல், இப்பிறவி வீணே கழியும்' என்பது உட்பொருள்.

இதன் மூலம், என்னதான் குருமூலம் உபதேசங்கள் பெற்றாலும், சாதகன், சோம்பித் திரியாது, முனைப்புடன் முயல வேண்டும். இல்லையேல் எல்லாமும் அவம்(வீண்) என்பது விளக்கப்படுகின்றது.

'விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்'== இறைவனது திருவடிகளில், வேதங்கள் தண்டைகளாக‌  உறைகின்றன.  

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட'(நடராஜர் பத்து)

விண்கடந்து மண்கடந்து நின்ற மறையோனின் கேசாதி பாத வர்ணனை இங்கு செய்யப்படுகின்றது. விஸ்வரூப தரிசனத்தைத் துதிப்பதற்கு ஒக்கும் இது.

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

இதில், 'கண்ணுக் கினியான்' என்பது, அகக் கண்ணுக்கு இனிமையானவன் என்பது பொருள். அதாவது அகக்கண்ணால் பார்க்கப்பட வேண்டியவன்.

பக்தர்கள் பேரானந்தப் பரவச நிலையில், இறைவனை நினைத்து, உருகி, நெகிழ்ந்து ஒன்றி இருக்கும் போது அவர்களைப் புற உணர்வுகள் தீண்டா. அதனால், 'நீயே வந்து எண்ணிக் கொள்' என்றார்கள்.

 நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 

ஊழிமுதல்வனை, ஞான உருவானவனைத் தொழுதலே பேரானந்தம் என்று நாங்கள் சொல்கிறோம். நீ இது பற்றி அக்கறை கொள்ளாது, மாயையின் வசப்பட்ட உறக்கமே இன்பமென்று எண்ணுகின்றாய். சற்று, முயற்சித்து அதிலிருந்து விலகி வந்து எங்களோடு சேர்ந்து பரம்பொருளை சிந்தனை செய். நாங்கள் சொன்னதில் ஏதேனும் குறைவு இருக்குமாயின், நீ மீண்டும் சென்று மாயையின் வசமான மற்ற போகங்களில் ஈடுபடு' என்பது மறைபொருள்.

இதில்  பரிபக்குவ நிலையை அடைந்த பக்தர்களின் உறுதிப்பாடு வியக்க வைக்கும் வகையில் வெளிப்படுகின்றது. ஒரு முறை அந்தப் பேரானந்த அனுபவ நிலை கிடைக்கப்பெற்றவர்கள், தன் முயற்சியால் மீண்டும் சிற்றின்பச் சேற்றினுள் அழுந்த விரும்ப மாட்டார்கள். எனவே, தோழியாகிய பக்குவமற்ற ஆன்மாவை, இவ்வாறு உறுதிபடக் கூறி, சிவசிந்தனை செய்ய அழைக்கிறார்கள் மற்ற தோழியர்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..