நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 3....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 3.



பதிகம் # 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:
"தாயும் தந்தையும் ஆனவனே!.. நிகரில்லாத மாணிக்கமே!..அன்பாகிய கடலில் விளைந்த ஆரமுதே!..பொய்யான, வீணான செயல்களையே செய்து, வாழ்நாளை பாழாகக் கழிக்கின்ற, புழுக்களை இடமாக உடைய உடலைக் கொண்ட கீழ்மையேனுக்கு, மிக உயர்ந்த சிவபதத்தை அளித்தருளிய, பக்தர்களின் உண்மையான செல்வமாகிய சிவபெருமானே, இப்பிறவியிலேயே, நான் உய்யும் பொருட்டு, உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறேது?."

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இறைவனே நமக்கு அன்னையும் தந்தையும்.. நம் பால் வரம்பில்லாத அன்போடு  இருப்பவன் ஆதலினால் இறைவனே அன்னை, தீமையான நெறியிலிருந்து நம்மை விலக்கி, நன்னெறி காட்டுதலால் இறைவனே நமது தந்தை என்கிறார் வள்ளலார் பெருமான்..

     திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற் 
     குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும் 
     பொருவில் அன்னையும் போக்கது தந்தையும் 
     தரும வெள்விடைச் சாமிநின் நாமமே(திருவருட்பா)

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்று,  திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் அருளியிருப்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'ஒப்பிலா மணியே' என்பது, 'நிகரில்லா மாணிக்கமே' என்பதாக, இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது.... 

'மாணிக்கம்' என்கின்ற சொல், எம்பிரானைப் போற்றும் பல பதிகங்களில் பயன்படுத்தப்படுவதால், இது சிறப்பு வாய்ந்ததெனப் புலனாகிறது..

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே என்று சுந்தரர் பெருமானும்,

தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.என்று அப்பர் பெருமானும்,

வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா 
     மாணிக்க மேகருணை மாகடலே ‍ என்று வள்ளலார் பெருமானும் பாடிப்பரவுகின்றார்கள்.

இதற்கு ஒரு அருமையான விளக்கம் கேட்கப் பெற்றேன்..முத்தி நிலையாவது, சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலை...மாணிக்கத்தோடு பளிங்கை இணைத்து வைத்தால், வெண்ணிறப் பளிங்கு, மாணிக்கத்தின் சிவந்த நிறத்தைப் பெற்று, அதுவும் மாணிக்கமே என்று சொல்லத் தகுமாறு தோன்றும்... அதைப் போல், சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலையை உயிர்கட்கு அருளுதலால், எம்பிரானை 'மாணிக்கம்' என்கிறார்கள்.

அன்பினில் விளைந்தஆ ரமுதே===பாற்கடலைக் கடையும் போது வந்த ஆலகால விஷத்தை உண்டு, உயிர்கட்கு நலமருளியவன் எம்பிரான்..  ஐயனின் அருளால் அன்றோ அமுதம் கிடைத்தது!... பக்தர்கள், எம்பெருமான் மீது கொண்ட கடல் போன்ற பேரன்பில் தோன்றும் அமுதமே சிவம்!..'அமுதம்' இங்கும் முத்தி நிலையைக் குறிக்கும் குறியீடாகவே கொள்ளப்படுகின்றது.

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்====உயிருக்கு நன்மை தருவது, எம்பிரானின் கழலிணைகளை இடையறாது சிந்தித்தலாம்.. அதை விடுத்து, உலகியல் விஷயங்களில் சிந்தனையை உழல விடுவது வீண் காலம் கழித்தலேயாகும்..பிறவியின் நோக்கமே பெருமானை அடைதல் என்றிருக்க, அதற்கு உதவாத செயல்களைச் செய்தல் பொய்ம்மையைப் பெருக்கி, பொழுதைச் சுருக்குதலேயாம்.. இங்கு 'பொழுது' என்பது வாழ்நாளைக் குறிக்கும்.. வீணே காலம் கழித்தலால், நம் வாழ்நாள் சுருங்கி, பெருமானை நினைத்து உய்வு பெறும் கால அவகாசம் குறைகிறது..

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. (அப்பர் பெருமான்)

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த====இவ்வரிகளின் மூலம், இவ்வுடலின் நிலையாமை புலப்படுத்தப்படுகின்றது... நிலையாத இவ்வுடல் எடுக்கும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, எம்பிரான், மிக உயர்ந்த சிவபதம் அருளியமை பகன்றார் வாதவூரார்.

'செல்வமே சிவபெரு மானே'===அடியார்களின் பெருநிதியம் சிவபிரான். ஆகவே 'செல்வமே' என்றார்.

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.== இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் என்றருளுகிறார் வாதவூரார்.. இறைவனை அடைய, வேறொரு பிறவி அவசியமில்லை.. இப்பிறவியில், வினைகளால் சூழப்பட்ட இவ்வுடலில் இருப்பதால், இறைவன் அருள மாட்டான் என்பதில்லை..உள்ளன்போடு, உறுதியோடு சிவனை நினைந்தால், கட்டாயம் அவன் கழலிணைகள் அடையலாம். அடியார்கள், தமது பக்தியால் பரமனடி தொழுது வேண்ட, இம்மையிலேயே அவன் கட்டாயம் அருள் செய்வான் என்று திண்ணமாகக் கூறுகிறார்..

இவ்வாறு இறைவன் கழலிணைகளை உறுதியாகப் பற்றிப் பிடிக்க, இறைவன், தன் திருவடிகளைத் தந்து, முத்திநிலை அருளுவான்..சிவத்தோடு கலந்த பின்பு, எம்பிரான் தனியாக எழுந்தருளுவதெங்கே!.. ஆதலினால், 'எங்கெழுந்தருளுவது இனியே?!' என்றார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..