நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

KANNANAI NINAI MANAME.....BAGAM IRANDU... PART..41...க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.41.ஸ்ரீகிருஷ்ணனுக்கு நாமகரணம்!.

Image result for krishna's namakarana

குழந்தை பிறந்து நாட்கள் பல கடந்தும், நந்தபாலனுக்கு நாமகரணம் செய்வதற்கான சமயம் வாய்க்கவில்லை.. வசுதேவரின் முதல் மனைவி ரோகிணி, நந்தகோபரின் இல்லத்திலேயே பாதுகாக்கப்பட்டு வந்த சமயம் அது!.தேவகியின் வயிற்றிலிருந்த ஏழாவது கர்ப்பம், யோகமாயையால் ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப் பெற்று, ரோகிணியும் ஒரு புதல்வனை ஈன்றிருந்தாள்!..வாசுதேவனுக்கு மூத்தவனான அக்குழந்தையும் நந்தகோபரின் இல்லத்திலேயே வளர்ந்து வந்தான்!..

நந்தகுமாரன் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் மரண வாசலை அடைந்து கொண்டிருந்த சமயமாதலால்,  நாமகரணத்தை வெளிப்படையாகச் செய்வது, துன்பத்தை வரவழைக்கலாம் என்றுணர்ந்த வசுதேவர், தன்னைச் சந்திக்க வந்த கர்க்க மஹரிஷியிடம், நந்தபாலனாக வளர்ந்து வரும் வாசுதேவனுக்கும், தம் முதல் மனைவி ரோகிணிக்குப் பிறந்த‌ புதல்வனுக்கும்  நாமகரணத்தை ரகசியமாகச் செய்விக்கக் கோரினார்!!. 

கர்க்க மஹரிஷி, சிறந்த சோதிட நிபுணர். மஹா ஞானி!..  யது குலத்தின் ஆசாரியர்!..நந்தகுமாரனாகப் பிறந்திருப்பது யாரென்றறிந்தவர்!.. கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு தமக்குக் கிட்டியிருப்பதை உணர்ந்து, உடன் கோகுலம் வந்து, நந்தகோபரைச் சந்தித்து, குழந்தைகளுக்கு நாமரகரணம் செய்விக்கவே தாம் வந்திருப்பதாகச் சொன்னார்.  தாம் யது குலத்தின் ஆசாரியனாதலால், வெளிப்படையாக இதைச் செய்வது, கம்சனுக்கு சந்தேகம் அளிக்கலாம். ஆகவே அதை ரகசியமாக நடத்த வேண்டுமென்றும் சொன்னார்.

நந்தகோபர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். கர்க்க மஹரிஷியை தக்க முறையில் உபசரணைகள் செய்தார். தம் குழந்தைக்கும், வசுதேவரின் புதல்வனுக்கும் செய்ய வேண்டிய மங்கள காரியங்களைச் செய்தருளுமாறு உளங்கசிந்து வேண்டிக் கொண்டார்!..

கர்க்க மஹரிஷி, மெய் சிலிர்த்து, உளம் பூரித்தார்!.. 'பிரபுவே!.. ஆயிரம் நாமங்கள்  மட்டுமல்ல, அளவிலா திருநாமங்கள் உடையவரே!.உமக்கு எப்படி நாமகரணம் செய்யக்கூடும் என்னால்?!' என்று அதிசயித்தார் கர்க்க மஹரிஷி.

(கத²மஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர
நாம்னோ ஹ்யனந்தனாம்னோ வா | 
இதி நூனம்ʼ க³ர்க³முனிஸ்²சக்ரே தவ 
நாம நாம ரஹஸி விபோ⁴ || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

பின், 'க்ருஷி' என்ற தாதுவையும் 'ண' என்ற எழுத்தையும் இணைத்து, 'ஸத்' ஆகிய ஆனந்த ஸ்வரூபத்தை, அல்லது உலகை ஆகர்ஷிக்கும், கவரும் தன்மையைக் குறிக்கும் 'கிருஷ்ணன்' என்ற திருநாமத்தைக் குழந்தைக்கு இட்டார்!..மேலும் சில திருநாமங்களையும் குழந்தைக்கு வைத்தார்.

ரோகிணியின் புதல்வனுக்கும் ராமன் முதலான பல பெயர்களை வைத்தார். இதை ஸ்ரீமத் பாகவதம், 'முன்னொரு காலத்தில்  தங்கள் குழந்தை, வசுதேவருக்குப் பிள்ளையாக பிறந்திருந்ததால் இவன் வாசுதேவன். இவனுக்கு மேலும் பல பெயர்களும் உண்டு. ரோகிணியின் புதல்வன் ராமன், மிகுந்த பலவானாக இருக்கப் போவதால், பலராமன், யாதவர்களை ஒன்றிணைக்கப் போவதால் சங்கர்ஷணன்' என்றெல்லாம் நந்தகோபரிடம் கர்க்க முனிவர் கூறினார் என்று சொல்கிறது.

கர்க்க மஹரிஷி, குழந்தைகளின் உண்மையான ஸ்வரூபத்தை வெளிப்படுத்தாமல்,'இவர்கள் இயற்கையை மீறியதான பெருமையை உடையவர்கள். அதிலும் உமது குழந்தையை அன்பு செய்பவர்கள் துன்பத்தால் கலங்க மாட்டார்கள். எவர் அவ்விதம் செய்வதில்லையோ அவர்களது அழிவு நிச்சயம்!. இவன் பல அசுரர்களை வெல்வான். தன்னைச் சேர்ந்தவர்களை உத்தம கதியை அடையச் செய்வான். இவனது குற்றமற்ற புகழை, மக்கள் எக்காலமும் கேட்கப் போகிறார்கள். இவனால் எல்லா கஷ்டங்களையும் கடந்து, சுகமுடன் வாழ்வீர்கள்!.. இக்குழந்தையை நம்பியிருங்கள்!' என்றெல்லாம் நந்தகோபருக்குச் சொன்னார் கர்க்க மஹரிஷி.

(யாதுமில்லை மிக்கதனில் என்றென்றது கருதி
காதுசெய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம்
மாதுகிலின் கொடிக் கொள்மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர்சரணே.(நம்மாழ்வார்) ).

இதைக் கேட்டு அளவில்லாத ஆனந்தமடைந்த நந்தகோபரும் மற்றவர்களும், ஸ்ரீகிருஷ்ணனைக் கொண்டாடி மகிழ்ந்தனர்!..

(தொடர்ந்து  தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது,'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..