நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

VASANTHA PANCHAMI....வசந்த பஞ்சமி(4/2/2014).


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்...

ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் நான்கு நவராத்திரிகளில், 'சியாமளா நவராத்திரி', தை அமாவாசை மறு நாள் துவங்கிக் கொண்டாடப்படுகின்றது..(சியாமளா நவராத்திரி பற்றிய சென்ற வருடப் பதிவுக்கு இங்குசொடுக்கவும்..). சாரதா நவராத்திரியின் பஞ்சமி திதி , ஸ்ரீலலிதா தேவியின் திருஅவதார தினமாகக் கொண்டாடப்படுவது போல், சியாமளா நவராத்திரியின் பஞ்சமி திதி (சுக்ல பஞ்சமி திதி), ஞானாம்பிகையான ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருஅவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது..

இன்று, (4/2/2013), வசந்த பஞ்சமி தினம். இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீபஞ்சமி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது...மானிடர்கள் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானமே... அதை அருளும் சரஸ்வதி தேவி அவதரித்த தினமாதலால் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் வழங்கப்படுகின்றது..வங்காளத்தில் இது சரஸ்வதி பூஜை தினமாகவே கொண்டாடப்படுகின்றது..

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், லௌகீக உலகில் அறிவு சார்  கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது, ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை..

வாக் தேவியான அம்பிகையே ஸ்ரீராகவேந்திரருக்கு, அவர் சன்யாச ஸ்வீகாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் புலப்படுத்தியவள்.. ஞானாபீஷ்டம் அம்பிகையின் அருளாலேயே சித்தியாகும்...ஸ்ரீவேத வியாசர், பிருஹஸ்பதி, யாக்ஞவல்கியர், வசிஷ்டர், பராசரர், பரத்வாஜர் முதலான எண்ணற்ற ரிஷிகள், சரஸ்வதி தேவியை வழிபட்டே ஞான ஒளி பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஜோதிடத்தில், ஒரு ஜாதகரின் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாகக் குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.

இது தென்னிந்தியாவில் சரஸ்வதி தேவி குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில், இல்லங்களில் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்படுகின்றது..வசந்த பஞ்சமி, 'வசந்த ருது'வின் ஆரம்ப தினமாகவே கருதப்படுகின்றது.. தென்னிந்தியாவின் பல சிவன் கோயில்களில் இந்த தினத்தில், ஸ்வாமி புறப்பாடு நடைபெறுகிறது..இந்தியாவின் தென்கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில், வசந்த பஞ்சமி தினம், புது வருடத் துவக்கமாகவே கொண்டாடப்படுகின்றது.

வசந்த பஞ்சமி தின வழிபாடுகள்:

வசந்த பஞ்சமி தினத்தில், விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகச் சிறப்பு... அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது..எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று துவங்கலாம்..ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.

பூஜை முறைகள்:

பூஜை முறைகள் கொஞ்சம் விஸ்தாரமானவை..பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகின்றது.

முதலில், தூய்மையான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு கிழக்குப் பார்த்து பூஜை மேடையை அமைக்க வேண்டும்.. கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும்.. பூஜை துவங்கும் முன்பாக, தூபங்கள் கமழச் செய்யவும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.

பரிபூர்ணத்தைக் குறிக்கும் கலச ஸ்தாபனம், விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின், ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.

அம்பிகை சத்வ குண ஸ்வரூபிணி... அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலியன சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன.. ஆகவே சத்வகுண ஸ்வரூபனான  திருமால் பூஜை செய்யப்படுகின்றார்.. சில புராணங்களின்படி, சரஸ்வதி தேவி, சிவனாரின் சகோதரியாகக் கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.

 சிவ, விஷ்ணு பூஜைகளுக்குப் பின், சரஸ்வதி தேவியின் பிரதிமைக்கு/படத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.. வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, (இயன்றோர் முத்து மாலைகள், ஸ்படிக மாலைகளும் சாற்றலாம்) அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும்.அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை(த்வாதச நாமங்கள்)கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

வெண்மை தூய்மைக்கும், மஞ்சள் ஞானத்திற்கும் குறியீடாகக் கருதப்படுகின்றது.. குரு பகவானுக்கும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் மஞ்சள் வஸ்திரங்கள் சாற்றி வழிபாடு செய்வது மரபு. ஆகவே அம்பிகைக்கு வெண்ணிற‌ அல்லது மஞ்சள் நிற வஸ்திரங்களைச் சாற்றுகிறோம்.

நிவேதனங்களில் முக்கியமானவை, குங்குமப்பூ ஹல்வா மற்றும் குங்குமப்பூ கலந்த கல்கண்டு, வெல்லப் பொங்கல்.. வடமாநிலங்களில் மஞ்சள் நிற இனிப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன..

குங்குமப்பூ, ஆயுர்வேத மூலிகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.. மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, கண் பார்வைக் கோளாறுகளை நீக்க வல்ல மருந்தாகவும் செயல்படுகின்றது.. அறிவு வளர்ச்சிக்கு மிக அவசியமான இவற்றைப் பெறும் நோக்கத்துடனேயே குங்குமப்பூ நிவேதனங்களில் பிரதானப்படுத்தப்படுகின்றது.. இவை தவிர உலர்பழங்கள் உள்ளிட்ட எதையும் நிவேதனமாக வைக்கலாம்.. பாயசம்,  மற்ற இனிப்புகள் போன்றவையும் நிவேதிக்கலாம்..

வாசனைப் பொருட்கள் சேர்த்த தாம்பூலம் நிவேதித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, தீப ஆரத்தி எடுக்கவும்.. பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகள் நீங்க, மன்னிப்புக் கோரி வணங்கவும்..பூஜை நிறைவில் மஞ்சள் நீரில் இரு தீபங்கள் ஏற்றி ஆரத்தி செய்யலாம்.

பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறு நாள் காலையிலோ, இயன்றதை நிவேதனமாகச் செய்து  புனர் பூஜை செய்து, அம்பிகையையும், மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.

விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின்படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜை முறைகளையும் பின்பற்றலாம்.

விஸ்தாரமான பூஜைகள் செய்ய இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து, தெரிந்த சரஸ்வதி துதிகளைப் பாராயணம் செய்து, இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீசரஸ்வதி தேவியைப் போற்றும் 'ஸ்ரீசரஸ்வதி அந்தாதி' துதிக்கு இங்கு சொடுக்கவும்.

அம்பிகையின் அவதாரம் குறித்த புராணக் கதை:

ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக‌ இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள்.. 

ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை  நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த  ஓசையுடனும்,  முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது.. மானிடர்கள் மொழியறிவு பெற்றனர்.

பிரம்மதேவர் மகிழ்ந்தார்..வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி  என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார்.

இவ்வாறு ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே 'வசந்த பஞ்சமி'.

வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும் நாம சங்கீர்த்தனம், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பு..

பெரும்பாலான வடமாநிலங்களில், இன்று பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படுகின்றது.. வண்ணமயமான பட்டங்கள் செய்து பறக்க விட்டு, வசந்த காலத்தை வரவேற்கின்றனர். இது ஒரு போட்டியாகவும் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

நம் உள்ளங்களில் ஞான தீபமேற்ற வேண்டி அம்பிகையைத் தொழுது வணங்குவோம்!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..