நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2012

KAPILA AVATHARAM, ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கபில அவதார வைபவம்.


ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ கபில ப்ரசோதயாத் (ஸ்ரீ கபில காயத்ரி)

'மறை' என்று போற்றப்படும் வேதங்களில் மறைந்துள்ள தத்துவங்களை விரிவாக, கதை வடிவில் நமக்கு உபதேசிப்பதே புராணங்கள். புராணங்கள் வெறும் கதை மட்டுமல்ல. இன்றளவும் இராமயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாச புராணங்கள் எத்தனை முறை கூறினாலும் கேட்பதற்கு அலுக்காதவை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிது போல் தோன்றும் தன்மை வாய்ந்தவை. கேட்பவருக்கு, வாழ்வியலில் தேவையான நீதிகளை ஒவ்வொரு முறையும் உபதேசித்து, வாழ்வின் தன்மையை உணர்த்த வல்லவை.

இவற்றுள் முக்கியமானதும், ஒப்புவயர்வற்றதுமான, 'ஸ்ரீமத் பாகவதம்' வேத வேதாந்தங்களில் கூறப்படும் தத்துவ ஸாரமாக விளங்குகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனின் அவதார மகிமைகளையும், பிரபாவங்களையும் விரித்துரைக்கும் இந்நூல், வேதவியாசரால் இயற்றப்பட்டது. இவர் தன் புத்திரர் ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷிக்கு இதை உபதேசிக்க, ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியும், பரீக்ஷித் மஹாராஜாவுக்கு இதை உபதேசித்தருளினார்.

 பாகவதத்தை யாரொருவர் கேட்க விரும்புகிறாரோ, அப்பொழுதே பகவான் அவர்தம் உள்ளத்தில் திருக்காட்சியருளுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தில், பகவானின் அவதார மகிமைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பகவானின் பத்து அவதாரங்களைத் தவிர, மன்னுயிர்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு, எடுத்த, வேறு சில அவதாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

பகவான் ஸ்ரீமந் நாராயணர், கபிலராக, தத்தாத்ரேயராக, நரநாராயணராக, ரிஷபதேவராக பற்பல அவதாரங்களை எடுத்தருளியிருக்கிறார். இந்தப் பதிவில், கபிலராக திருஅவதாரம் செய்து, 'கபில கீதை' எனப் புகழ்பெற்ற சாங்கிய யோகத்தை உபதேசித்தது வரையில் பார்க்கலாம். சாங்கிய யோகம், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்திற்கு அடிப்படையாக அமைந்ததாகும்.

இந்து தர்மத்தின் மெய்ஞ்ஞான மரபு அநாதியானது. ஆழ்ந்த வேர்களுடையது. எதன் தாக்கத்தினாலும் உண்டானதன்று. பன்னெடுங்காலம் முன்பே, மஹாஞானிகளாக விளங்கிய  நம் மூதாதையரால் உள்ளொளியால் கண்டுணரப்பட்டது. எல்லாவிதமான கருத்துக்களுக்கும் இடமளிப்பது. 'நீர்ச்வர வாதம்' எனப்படும் நாத்திகமும் இந்து தர்மத்தின் ஓர் அங்கமே. இந்து தர்மத்தில், வேதங்கள், தத்துவங்கள் (அதாவது,பிரஸ்தானத் திரயம் எனப்படும் கீதை, உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியன) ஆறு மதங்கள் (காணபத்யம், கௌமாரம் முதலான‌  க்ஷண்மதங்கள்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம்,நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சை, உத்தர மீமாம்சை) முதலியவை அடங்கிய பெரும் தொகுப்பு நம் தர்மம். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றுவதாயினும், பல தரப்புச் சிந்தனைகளுக்கு இடமளிப்பவையாக நம் தர்மம் இருந்து வருவதை  நம் கண்முன் காட்டும் கண்ணாடிகள்.

இவற்றுள் சாங்கிய யோகம், ஸ்ரீ கபில மஹரிஷியால் அருளப்பட்டது. ஸ்ரீ கபில மஹரிஷியின் அவதார வைபவத்தை இப்போது பார்க்கலாம்.

கபிலரின் திருஅவதாரம்.

கர்த்தமப் பிரஜாபதி, சரஸ்வதி நதிக்கரையில், பத்தாயிரம் வருஷங்கள் தவமியற்றியதின் பலனாக, பகவான் ஸ்ரீமந் நாராயணர், அவருக்கு சப்த பிரம்ம வடிவினராகக் காட்சியளித்தார். 

 .
தமது தரிசனத்தினால் மகிழ்ந்திருந்த கர்த்தமரிடம், பகவான், 'கர்த்தமரே, பிரம்ம புத்திரரும், ராஜரிஷியும், தருமத்தை நன்குணர்ந்தவரும், பரந்த இப்பூமியை ஆள்பவருமான, ஸ்வாயம்புவ மனு, தன் தர்மபத்தினியான, சதரூபாவுடன், உம்மைக்காணும் பொருட்டு, நாளை மறுநாள் வருவார். உத்தம குணசாலியும், அழகியுமான தம் புத்திரியாகிய தேவஹூதியை உமக்குக் கொடுக்கப் போகிறார். நீரும் அவளை ஏற்று, க்ருஹஸ்த தர்மத்தை பரிபூர்ணமாக அனுசரித்து, எல்லாக் கர்ம பலன்களையும் என்னிடமே அர்ப்பணம் செய்து, என்னை அடையப் போகிறீர். உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள். பிறகு, பத்தாவதாக, நானும் உமது வீர்யத்தால், உமது பத்தினியாகிய தேவஹூதியிடம் எனது அம்சமாக அவதரித்து, ஸாங்கிய தத்துவ ஸம்ஹிதையைச் செய்யப் போகிறேன். நீர் எனது அவதாரம் நிகழ்ந்ததும், சந்நியாச தர்மத்தைக் கைக்கொண்டு, என்னிடத்தில் உம்முடன் உலகையும், உம்மிடத்தில் என்னையும் காணப் போகிறீர்' என்ற அமுத வார்த்தைகளை அருளினார்.

பகவான் குறிப்பிட்ட நாளில், ஸ்வாயம்புவ மனு, பொற்தேரில், தமது பத்தினியுடனும், புத்திரியுடனும் கர்த்தமரை நாடி, பிந்து ஸரஸ் வந்தடைந்தார்.  அவ்விடத்தில் தங்கியிருந்த கர்த்தமர், ஸ்வாயம்புவ மனுவை தக்க முறைகளில் வரவேற்றுச் சிறப்பித்தார். ஸ்வாயம்புவ மனுவும், தாம் வந்த காரியத்தை கர்த்தமருக்கு விவரித்து, தம் புதல்வியான தேவஹூதியை மணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கர்த்தமர், விவாகத்திற்குச் சம்மதித்தாராயினும், தாம் தேவஹூதிக்கு புத்ர சந்தானம் உண்டாகும் வரையே அவளுடன் க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருக்க இயலும் என்றும், அதற்குப் பின், பகவானின் கட்டளைப்படி சந்நியாச தர்மத்தைப் போற்றி அனுஷ்டிக்க விரும்புவதாகவும் கூறினார். 

நிபந்தனையை தேவஹூதி ஏற்றாள். கர்த்தமருக்கும் தேவஹூதிக்கும் விவாகம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்வாயம்புவ மனுவும், சதரூபாவும், மணமக்களுக்கு, விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை பரிசளித்து, தம் புதல்வியிடம் பிரியாவிடை பெற்று, தம் நகரை அடைந்தனர்.

தேவஹூதி, தனது இன்சொல்லாலும் உள்ளன்போடு கூடிய பணிவிடைகளாலும், பரம தேஜஸ்வியான தனது கணவரை சந்தோஷப்படுத்தி வந்தாள். இடைவிடாத பகவத் ஆராதனையின் பயனாக, யோக சித்திகள் கைவரப் பெற்றிருந்த கர்த்தமர், தமது யோக பலத்தால், தமது மனைவியின் ஆசைக்கு ஏற்ப உண்டாக்கப்பட்ட விமானத்தில்,  தமது மனைவியுடன் ஏறி அமர்ந்து, தேவப் பெண்கள் பணி செய்ய, வெகு ஆச்சரியமான பூமண்டலம் முழுவதையும்  தம் மனைவிக்குச் சுற்றிக் காட்டிவிட்டு,  தம் ஆசிரமம் திரும்பினார்.

நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு அவர்களுக்கு அழகிற்சிறந்த ஒன்பது பெண்குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களே, கலா, அனுசூயை, சிரத்தை, ஹவிர்பூ,கதி, க்ரியை,கியாதி, அருந்ததி மற்றும் சாந்தி ஆகியோர். அதற்குப் பின் பல நாட்கள் கழித்து, கட்டையில் அக்னி பிரவேசிப்பதைப் போல் பகவான், கபிலராக தேவஹூதியிடம் தோன்றினார். கபிலர் அவ்வாறு திருஅவதாரம் செய்த இடமே 'கபில வாஸ்து' என்னும் நகரம். இங்கேயே பின்னாளில் புத்தபகவானும் அவதரித்தார்.

பிறகு, ஸரஸ்வதி நதியால் சூழப்பட்ட கர்த்தமருடைய ஆசிரமத்துக்கு, பிரம்மதேவர் தம்மால் தோற்றுவிக்கப்பட்ட நவப் பிரஜாபதிகளுடன் வந்தடைந்தார். (பிருகு, அங்கிரசு, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிரது, மரீசி,அதர்வணர், வசிஷ்டர் ஆகியோரே நவப் பிரஜாபதிகள்).  பின், பிரம்மதேவரின் கட்டளையின்படி, தமது ஒன்பது குமாரிகளையும், நவப்பிரஜாபதிகளுக்கு கர்த்தமர் மணம் செய்து கொடுத்தார். கலாவை, மரீசி முனிவருக்கும், அனுசூயையை அத்ரி முனிவருக்கும் மணம் செய்து கொடுத்தார். ஹவிர்ப்பூ,புலஸ்தியருக்கும், கதி, புலஹருக்கும், கிரியை கிரதுவுக்கும் மனைவியானார்கள். பிருகு முனிவர் கியாதியையும், வசிஷ்டர் அருந்ததியையும், அதர்வணர் சாந்தியையும் ஆங்கீரசர் சிரத்தையையும் விவாகம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு, கர்த்தமர், தாம் முன்பே செய்திருந்த பிரதிக்ஞையின் படி, தமது மைந்தனாக அவதாரம் செய்திருந்த பகவானிடம் அனுமதி பெற்று, சந்நியாச தர்மத்தை மேற்கொள்ள வனம் சென்றார். மௌன விரதம் பூண்டு, ஆத்மாவையன்றி வேறு எதிலும், நாட்டமில்லாதவராய், பற்றறுத்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் பூமியில் சஞ்சாரம் செய்தார். இறுதியில் அனைத்தையும் சமமாகப் பாவிக்கும் மனமுடைய அவரால், பகவானின் பரமபதம் எய்தப்பட்டது.

தந்தை வனம் சென்ற பின், தன் தாயாருக்கு, பயங்கரமான ஸம்ஸாரத்தை தாண்டுவிக்கும் பொருட்டு அத்யாத்ம வித்தையை உபதேசிக்க எண்ணி, கபிலர் பிந்து ஸரஸ்ஸிலேயே தங்கியிருந்தார். ஓர் நாள், தேவஹூதி, தனக்குப் புதல்வனாக அவதரித்திருப்பது பகவானே என்பதைத் தன் கணவரிடமிருந்து தெரிந்து கொண்டவளானபடியால், கபிலரை நோக்கி பிரகிருதி, புருஷ விவேகத்தை தனக்கு உபதேசிக்கும்படி வேண்டிக் கொண்டு சரணடைந்தாள்.

அவள் வேண்டுகோளை ஏற்று பகவான் 'கபில கீதை' எனப் புகழப்படும் சாங்கிய யோகத்தை உபதேசித்தருளினார்.

வனம் ஏயுஷி கர்த்தமே ப்ரஸன்னே
மத ஸர்வஸ்வம் உபாதிசம் ஜனன்யை
கபிலாத்மக வாயுமந்திரேச த்வரிதம்
த்வம் பரிபாஹி மாம் கதௌகாத் (ஸ்ரீமந் நாராயணீயம், 14வது தசகம்)

"ஹே குருவாயூரப்பனே! தமது கடமைகளை முழுவதுமாக முடித்த பின், கர்த்தமருக்கு, தெளிவான மனம் அமைந்தது. அதன் பின் அவர், தவம் புரிய காட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பின், தத்துவங்கள் அனைத்தையும், உனது தாயான தேவஹூதிக்கு நீ கபிலராகத் தோற்றம் கொண்டு உபதேசம் செய்தாய். என்னை பிணிகள் அணுகாமல் நீயே காப்பாற்ற வேண்டும்." 
(வாத நோய்களிலிருந்து குணமளிக்க வல்ல மாமருந்தாகிய ஸ்ரீ வாதபுர நாதாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்).

இவ்வாறு தேவஹூதிக்கு ஆத்ம மார்க்கத்தை உபதேசம் செய்துவிட்டு, தன் தாயான அவளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பகவான் அவ்விடம் விட்டு, ஆசிரமத்தின் வட கிழக்குத் திசை நோக்கிச் சென்றார்

தனக்கு உபதேசிக்கப்பட்ட ஆத்ம மார்க்கத்தை விடாது அப்பியாசம் செய்து, தியானத்திலாழ்ந்தாள் தேவஹூதி. அவளது சரீரம் ஆசிரம வாசிகளால் பாதுகாக்கப்பட்டது. எல்லா ஜீவர்களுள்ளும் உறைபவனான ஸ்ரீ வாசுதேவனையே  தியானித்திருந்த அவள், தவமும் யோகமும் உருவெடுத்தாற்போல் விளங்கினாள். அதனால், அவள் தேகம் வாட்டமுறாமல் விளங்கியது. வெகு விரைவிலேயே, அவள் பகவானின் பரமபதத்தை அடைந்தாள். தேவஹூதி சித்தியடைந்த இடம், சித்திபதம் என்ற பெயருடைய புண்ணிய க்ஷேத்திரமாக விளங்குகிறது. அவள் ஸ்தூல தேகம், அவ்விடத்தில் ஓடும் ஒரு நதியோடு கலந்து மாத்ரி தீர்த்தம் எனும் பெயருடைய புண்ணிய நதியாகி விளங்குகிறது. இது இன்றும் குஜராத் மாநிலம் சித்தாபூர் எனும் இடத்தில் உள்ளது.

கபில மாமுனிவர், பாதாள உலகத்தில் தவம் செய்து கொண்டிருந்த பொழுது, சூரிய குல மன்னனான ஸகரனின் புதல்வர்கள் அறுபதினாயிரம் பேரும் கணக்கற்ற அதர்மச் செயல்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றைத் தாங்க முடியாத தேவர்கள், கபிலரிடம் வந்து முறையிட, அவரும் சில நாட்களிலேயே அவர்கள் மடிவார்கள் என்று ஆறுதலளித்தார். ஸகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்த பொழுது, யாகக் குதிரையை, இந்திரன் பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று,   தவம் செய்து கொண்டிருக்கும் கபில முனிவருக்குப் பின்னால் கட்டி வைத்து விடுகிறான். குதிரையைத் தேடிய ஸகர மன்னனின் புதல்வர்கள், கபில முனிவரே, குதிரையை அபகரித்தவர் என்றெண்ணி அவரை இம்சிக்க, தவத்திலிருந்து கபிலர் கண் விழித்தார். தவத்திலிருந்து கபிலர் கண்விழிக்கும் போது அவர் பார்வையில் படுபவர் எவரும் சாம்பலாவர். ஆகவே, அவர் பார்வை பட்டு, அறுபதினாயிரம் பேரும் சாம்பலாயினர்.

அதன் பின், ஸகர மன்னனின் பௌத்திரனான அம்சுமான், இவர்களைத் தேடி வந்து, சாம்பல் குவியலைக் கண்டு மனம் வருந்த, கபிலர் அவனைத் தேற்றி, முதலில் யாகக் குதிரையைக் கொண்டு ஸகர மன்னனிடம் சேர்த்து யாகத்தைப் பூர்த்தி செய்யுமாறும், அம்சுமானின் பேரனான பகீரதன் தவத்தால், கங்கை பூமிக்கு வந்து, இந்த சாம்பல் குவியல்களின் மீது படும்போது அவர்கள் நற்கதி அடைவார்கள் என்றும் வரமளித்தார். (இவ்வாறு அம்சுமானுக்கு உரைத்தவர், சுபர்ணன் எனும் திருநாமமுடைய பக்ஷிராஜனான கருடபகவான் என்றும் கூறப்படுகிறது).

கபில மாமுனிவர், கங்கா ஸாகரம் எனும் இடத்தில் இன்றும் சித்தர், சாரணர், கந்தர்வர்கள் முதலானவர்களால் பூஜிக்கப்படுகிறவராய், சாங்கிய ஆசாரியர்களால் போற்றப்படுகிறவராய், உலக நன்மையின் பொருட்டு நிஷ்டையிலிருக்கிறார். அவர் பாதாளத்திலிருந்து வெளிப்பட்டு பூமிக்கு வந்த பிலம் (துவாரம்), நீரால் நிரம்பி, கபில தீர்த்தம் எனும் பெயரில் கீழ்த்திருப்பதியில் விளங்குகிறது. அவ்விடத்தில் உள்ள 'கபிலேஸ்வர ஸ்வாமி' எனும் திருநாமமுடைய இலிங்கம், அவரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாக ஐதீகம்.
"மரங்களில் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: | 
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: ||  
(பகவத் கீதை பத்தாவது அத்தியாயம்,விபூதி யோகம்).

ஸ்ரீகபில முனிவருக்கும் தேவஹூதிக்கும் இடையே நடந்த ஸம்வாதமாக ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்படும் 'சாங்கிய யோகத்தை'ப் பற்றி வரும் பதிவில் பார்க்கலாம். 

 .
வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..