நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 17 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 1..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 1


அன்பார்ந்த பெரியோர்களுக்கு பணிவான வணக்கம்!

சில தினங்களுக்கு முன்பாக, சென்னையில், ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நேர்ந்தது. திருமண நிகழ்வுகளில் 'ஊஞ்சல்' என்பதும் ஒன்று. மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, அதை முன்னும் பின்னும் ஆட்டியவாறு, ஊஞ்சல் பாடல்களைப் பாடுவர். அப்போது, திருவாசகத்தில் 'திருப்பொன்னூசல்' பாடுவது வழக்கம்.. இம்முறை அந்தப் பாடல்களைக் கேட்ட போது,  ஆடி மாதப்பிறப்பினை ஒட்டி,, 'திருப்பொன்னூசல்' பாடல்களுக்கு ,தெரிந்த அளவில் பொருளெழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. எம்மால் ஆவது யாதொன்றும் இல்லை என்பது சர்வ நிச்சயம்.. அரனருளாலேயே இந்த எண்ணம் தோன்றியதென்பதால் அவனருளாலேயே இது நிகழ வேண்டும்.. எம்பெருமான் எம் உள்ளத்தமர்ந்து, இவ்வரிய செயலை நிறைவேற்றித் தர மனமுருகி வேண்டி, இவ்வரிய செயலைத் தொடங்க முற்படுகின்றேன்..

இதைப் படிக்கும் அன்பர்கள், இதில் நான் செய்திருக்கும் தவறுகளைச் சுட்டி, திருத்துமாறு  கோருகிறேன்....கூடுமானவரை, தினம் ஒன்றாக பொருளெழுத இறையருள் கூட்டுவிக்கும் என்று நம்புகிறேன்..
மதுரை,அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேஸ்வர ஸ்வாமி திருவடியிணைகளுக்கு இதை பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்.

திருப்பொன்னூசல் - அருட் சுத்தி 

தில்லையில் அருளியது ‍ 

ஒப்புமை பற்றி வந்த ஆறடித்தரவு கொச்சகக்கலிப்பா

திருச்சிற்றம்பலம்

சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

போர் செய்ய உதவும் வேலையொத்த விழிகளை உடைய பெண்களே!.. சீர் பொருந்திய, மேன்மை மிக்க பவளத்தால் ஆன கால்களையும், முத்து வடங்களை கயிறாகவும் கொண்ட‌(ஊஞ்சலில்), அழகு பொருந்திய, பொன்னால் ஆன ஊஞ்சல் பலகையில் ஏறி,  இனிதாய் அமர்ந்து, நாரணனாகிய திருமால் தேடிக் கண்டடைய முடியாத, அன்றலர்ந்த மலர் போன்ற திருவடியை, நாயினை ஒத்த அடியேனுக்கு, உறைவிடமாகத் தந்தருளிய, திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும், தெவிட்டாத இன்னமுதைப் போன்றவனது திருவடிகளைப் பாடி, நாம் பொன்னூஞ்சலாடுவோம்..!..

சற்று விரிவாக..

முதலில் அருட்சுத்தியைப் பற்றிப் பார்க்கலாம்.. அருட்சுத்தியாவது, இறையருளால் உயிர்கள் அடைகின்ற தூய்மை... பசு, பதி, பாசம் இம்மூன்றினுள், பசுவாகிய உயிரைப் பிணித்திருக்கும் தளையாகிய பாசம், பதியாக இறைவனது கருணையாலேயே நீங்கும்.

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்குஅறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம்செய் யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.(திருமூலர், திருமந்திரம்).

(தம் அடியார்களுடைய ஐம்புல ஆசையாகிய பாசங்களை நீக்கி, அவர்களது கலக்கத்தை போக்கி அருள்கின்றவன் சிவன். ஆதலால்,  அவனை விடாது பற்றித்  தொடருங்கள். தொடர்ந்தால், அவன் சற்றும் காலம் தாழ்த்தாது, திருவுளம் உகந்து, நீங்கள் உய்யுமாறு உங்களுடைய மனங்களை ஒருமுகப்படுத்துவான்)

ஆகவே, இறைவனை எப்போதும் நாடி, அவனது அருள் மழையில் தோய்ந்து வாழ்ந்தோமாயின், பாசம் நீங்குதல் கைகூடும்.. இறைவனது திருவடிப் பேறு கிட்டும்.

பொதுவாக, ஊஞ்சல், மனித வாழ்விற்கு சமமானதாகக் கருதப்படுகின்றது..   உயர்வு தாழ்வு, நன்மை தீமை என இருமைகள் அனைத்தும் மானிடரின் வாழ்வில் சகஜம்.. அனுதினமும் இவற்றைச் சந்தித்தே வாழ வேண்டியுள்ளது.. ஆயினும், ஊஞ்சலின் பலகையும் கயிறுகளும் அசைந்தாலும், ஊஞ்சலின் கால்கள் அசைவதில்லை.. அவை, நிலத்தில் பலமாக ஊன்றி நிற்கின்றன. அது போல், வாழ்வின் ஏற்ற இறக்கங்களிலும், மேடு பள்ளங்களிலும், மனதை பலமாக இறைவனது திருவடிகளில் ஊன்றி நிற்க, இருமைகளால் மனம் பாதிக்கப்படாது... வாழ்வே ஒரு விளையாடல் போல் காணும்..

வாதவூரார், பொன்னூசல் பாடியது, இவ்வுண்மையை நாம் உணரும் பொருட்டே.. மேலும், எச்செயலைச் செய்யினும் அது ஈசனுக்கு அர்ப்பணமாகச் செய்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தையும் வலியுறுத்தும் பொருட்டேயாம்.. ஊசலில் ஆடும் போதும்,  ஆடல் வல்லான் பாதம் சிந்தையுள் வைத்தால் சிறப்போம் என்பதும் கருத்து.

பவளம் காலாக, முத்து வடம் கயிறாக என்றெல்லாம் கூறியது ஊசலாடும் மகளிரின் செல்வச் சிறப்பை உரைப்பதற்காக.. அத்தகைய செல்வச் சூழலில் இருந்தும், இவையெல்லாம் நிலையற்றவை என்று உணர்ந்து, நிலையான, இறைவனின் திருவடிப்பேற்றை அடையும் பொருட்டு, அதைப் புகழ்ந்து பாடியவாறே ஊஞ்சலாடுவதாக உரைத்தார்.

'நாரணனும் காணா' என்றது, இறைவனது திருவடிகள் அடைதற்கு அரியன என்பதை உணர்த்த. 'நாயடியேன்' என்றது, மும்மலங்களால் பிணிக்கபட்ட உயிரின் கீழ்மை நிலையை உணர்த்த.. அந்நிலையில் இருப்பினும், இறைவனது திருவடிகளைப் போற்றினால், இறையருள் கிட்டும்.. அதன் மூலம் பிறவா பெருநிலை அடையலாம் என்பதை உணர்த்தவே, உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடி' என்றார்.. இறைவனை 'ஆரா அமுது' என்றது, இறைவன் பிறவா நிலை தரும் தெவிட்டாத அமுதினைப் போன்றவன் என்பதையும், இறைவன், தன் கருணையால் உயிர்கட்கு பிறவா நிலை தரவல்லவன் என்பதையும் ஒரு சேர உணர்த்தியது.

இவ்வாறு இறைவன் தாளிணைகளைப் போற்றிப் பாட, இறைவனது திருவடி, உயிர்கட்கு உறைவிடமாக அமையும்.  திருவடிப் பேறு கிட்டும் என்றருளினார்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

 1. திருப்பொன்னூசல்' -- பொன்னான பாடல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான விளக்கம்... தொடருங்கள் - இன்னும் அறிய ரசிக்க காத்திருக்கிறோம்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி டிடி சார்!

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..