நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 27 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU..SONG # 2....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'..பதிகம் # 2


பதிகம் # 2
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
இடப வாகனத்தை விடாது மிக விரும்பிய விண்ணவர் அரசே!, வினைகளினால் சூழப்பட்டவனாகிய நான் உணர்ந்த உண்மைப் பொருளே!, அடியேன்,  நாற்றம்  நீங்காத‌,   முழுவதும் புழு நிரம்பிய இவ்வுடற் கூட்டினிலே கிடந்து, முதுமையின் காரணத்தால், மண்ணிலே மறைந்து கீழ்மையடையும் நிலையைத் தாராது, எம்மைக் காத்து ஆண்டருளிய கடவுளே!.. கருணைப் பெருங்கடலே!..இடைவெளி இல்லாது, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்..நீ இனிமேல் எங்கு எழுந்தருளுவது?!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இங்கு 'விடை என்பது இடபவாகனத்தைக் குறித்தாலும், தர்ம தேவதையே சிவபிரானின் இடபவாகனமாகக் கருதப்படுவதால், இறைவன் விடாது தர்மத்தையே விரும்புவது உணர்த்தப்படுகின்றது.... இப்பதிகத்திலும் இறைவன், 'விண்ணோர்களுக்கு அரசன்' என்றே போற்றப்படுகின்றார்...மனித நிலையிலும் மேம்பட்டது தேவர்களின் நிலை.. இறைவன் தேவாதி தேவன்.. பதிகங்கள் முத்திக்கலப்புரைக்கும் அனுபவத்தைக் கூறுதலாலும், முத்தி, மிக மேலான உயரிய நிலை என்பதாலுமே இறைவன் இவ்வாறு போற்றப்படுகின்றார் என்று கொள்ளலாம்..

இடபத்தை, சித்தாந்த நோக்கில் 'பசு' எனக் கருதினாலும், பசுவாகிய உயிர்களை விடாது விரும்பி, அவை உய்வு பெற்று, தம்மை வந்தடைதலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் எம்பிரான் எனவும் பொருள் கொள்ளலாம்.

விடை வாகனனான எம்பெருமானை, உருவ நிலையின் குறியீடாகக் கருதுவது மரபு,

'தோடுடைய செவியன் விடையேறி' என்ற சம்பந்தப் பெருமானின் பதிகப் பொருளின்படி, 'விடையேறி' என்பது உருவ நிலையையும், 'பொடி பூசி' என்பது அருவ நிலையையும், 'உள்ளங்கவர் கள்வன்' என்பது அருவுருவநிலையையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகின்றது..

'வினையனே னுடையமெய்ப் பொருளே' என்பதில், உடைய என்னும் சொல்லின் பொருள் வெகு அருமையானது.. இறைவன், முத்தர்களுக்கும் பக்தர்களுக்கும் மட்டுமே உடையவனல்ல.. கர்மவினைகளால் சூழப்பட்டு, துன்புறும் ஒவ்வொரு உயிருக்கும் சொந்தமானவன்.. அவ்வுயிர்களைத் தம் கருணையால் ஆள்பவன்.. ஆகவே, நமது வினையின் காரணமாக, இறைவன் நம்மை விரும்பார் என்பது இல்லை.. அவனே நமது அன்னையும் தந்தையும் ஆதலினால் உண்மைப் பரம்பொருளாகிய அவன் கருணை நமக்குக் கட்டாயம் கிட்டும் என்பது குறிப்பால் இவ்விடத்தில்  உணர்த்தப்படுகின்றது.

'முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து'

முடை என்பதை இவ்விடத்தில் நாற்றம் என்பதாய் பொருள் கொண்டால், நாற்றம் நீங்காது இருக்கும் இவ்வுடலைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம். குரம்பை என்பது, உடலையே குறிக்கும். 'மூத்தற' என்பதை, 'அற மூத்து' என மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்..

வயதின் காரணமாக, முதுமை எய்தி, நாற்றம் நீங்காத இவ்வுடல் மரணித்து, மண்ணில் வீழ்ந்து, புழுக்களால் உண்ணப்படும் நிலையைத் தாராது , எம்மை ஆட்கொண்டாய் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
        எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
        குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல   சுகமாலக் (திருப்புகழ்)

முதுமை எய்தாத நிலை, அதாவது என்றும் இளமையோடு இருக்கும் நிலையாவது இறைவனோடு கூடியிருக்கும் நிலை.. பிறப்பிறப்பிலா முத்தி நிலை..

இங்கு 'நாற்றம்' என்பதை, 'வாசனா மலமாகவும் பொருள் கொள்ளலாம்.

'அடியேன் முடை நாய்த் தலையே' என்ற அபிராமி பட்டரின் வாக்கும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

இப்போது முடை என்பதைத் 'தடை' என்னும் பொருளில் பார்க்கலாம். வினைகள், இறையருளைப் பெற  முடியாதபடி தடை செய்கின்றன.. அத்தகைய குறைபாடுகள், தடைகள் விடாத அடியேனாகிய தம்மையும் ஆட்கொண்டார் எம்பிரான் என்கிறார் வாதவூரார்.

இவ்வாறு, தம்மை கீழ்மையிலாழ்த்தாது, அதாவது பிறவிச் சுழலில் சிக்க வைக்காது, தமது கடல் போன்ற கருணையினால் ஆட்கொண்ட இறைவனை, இடைவிடாது எந்நேரமும் தாம் உறுதியாகப் பற்றிப் பிடித்திருப்பதால், அவர் தமது இதயத் தாமரையிலேயே எப்போதும் எழுந்தருளியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

இங்கு 'கடவுளே' என்ற பதம் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.. உள் கடந்து ஒளி உருவாய் நிற்பவன் இறைவன் என்பதாலும், தொடர்ந்து தாம்,தமது நெஞ்சகத்தில் இறைவனை இருத்தி சிந்திப்பதைப் புலப்படுத்தும் பொருட்டும், இவ்வாறு உரைத்திருப்பதாகக் கொள்ளலாம்..

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..