நம் பழம்பெரும் பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும், பலவிதமான பூஜைகள், வழிபாடுகள், விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த விரதங்களும் பூஜைகளும் மிக முற்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு விரதமும் பூஜையும் பிரத்தியேகமான செய்முறைகள், விதிகளைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் செய்வதாகவே இவை அமைந்திருக்கின்றன.
மேலும் ஒவ்வொரு விரதம்/பூஜைக்கும் ஒரு விரதக் கதை உண்டு. பூஜை நிறைவுற்ற பின் கதையைப் படிப்பது கட்டாயம்.
இந்த விரதங்கள்/பூஜைகளின் வழிபடு தெய்வம், இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம் வேறுபடுகின்றது. பெரும்பாலும் அன்னை சக்தியின் அம்சங்களாகத் திகழும் தேவியரே பிரதான தெய்வம்.
இம்மாதிரியான, பூஜை/விரதங்களில், நானறிந்த, அதிகம் பிரபலமாகாத சிலவற்றை தங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன்.. அந்த வரிசையில் அஹோய் விரதம் குறித்த தகவல்கள் இந்தப் பதிவில்..
அஹோயி அஷ்டமி விரத பூஜை:
தாய்மை என்னும் உன்னதமான, ஒப்புவமையில்லாத உறவின் பெருமையை அறியாதார் யார்?!!. தன் குழந்தைகள் நலன் வேண்டி, அன்னையானவள் அநேக நோன்புகளைச் செய்கிறாள். விரதம் இருந்து, தன் மக்கள் நிறை வாழ்வு வாழ வேண்டுகிறாள். தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டி நோற்கும் நோன்புகளின் ஒன்று இது..
அண்டமெல்லாம் பரந்து விரிந்த அன்னை சக்தியின் அம்சங்களில் ஒன்றே ஸ்ரீ அஹோய் மாதா/அஹோய் பகவதி என்னும் திருநாமத்துடன் வழிபடப்படும் கிராம தேவதை. குழந்தைகளின் நலம் காக்கும் தேவியாக வழிபடப்படும் இந்த அன்னையே அஹோயி அஷ்டமி பூஜையில் பிரதான இடம் பெறுகிறாள். ஹோய் மாதா என்றும் தேவி அறியப்படுகின்றாள்.
விரதம் செய்யும் தினம்:
இம்மாதம் வட இந்தியர்களுக்கு கார்த்திகை மாதம்.. கார்த்திகை கிருஷ்ண பக்ஷ அஷ்டமியே அகோயி அஷ்டமி என்று வழங்கப்படுகின்றது. நம் பஞ்சாங்கத்தின்படி, தீபாவளிக்கு முன்னதாக வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் இது அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம், இது வரும் சனிக்கிழமை, அக்டோபர் 26ம் தேதி வருகின்றது. 27ம் தேதியும் சில பகுதிகளில் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த விரதத்தை இந்த மாதத்தில் அனுசரிப்பதற்கும் காரணம் இருக்கிறது...
வட இந்தியர்கள், ஒரு வருடத்தின் பன்னிரண்டு மாதங்களையும், ஸ்ரீகிருஷ்ணரின் பன்னிரு திருநாமங்களுடன் இணைத்து வழங்குகிறார்கள். அதன்படி, இந்த மாதம் தாமோதர மாதம். பிரபஞ்சம் நிறைந்த பரம்பொருள், யசோதையால் உரலில் கட்டப்பட்ட லீலை நடந்த மாதம் இது என்று கூறப்படுகிறது. சின்னஞ் சிறிய கண்ணனின் திரு வயிற்றில்(உதரம்), கயிறு (தாமம்) கட்டப்பட்டதால் 'தாமோதரன்' என்னும் உயரிய திருநாமம் வழங்கலாயிற்று.. கண்ணன், உரலில் கட்டப்பட்ட விருத்தாந்தத்தை நித்தம் நினைத்துத் தொழுவோர், பந்தம் என்னும் கட்டுக்களில் இருந்து விடுபடுவர். மேலும், விஷமக்காரக் கண்ணன், வெண்ணை திருட ஆரம்பித்த மாதம் இதுவாம்.... பத்ம புராணத்தின்படி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகப் பிடித்த மாதம் இது.
இந்த மாதம் ஒவ்வொரு நாளும், மாலை வேளையில், ஸ்ரீகிருஷ்ணருக்கும் துளசிக்கும் தீபங்கள் காட்டி, ஸ்ரீதாமோதராஷ்டகம் பாராயணம் செய்வது விசேஷப் பலன்களைத் தரும்..
(ஸ்ரீ தாமோதராஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்..அருமையான ஸ்லோகப் பதிவுகளைத் தொடர்ந்து அளித்து வரும் சகோதரர் திரு.க்ஷேத்ரயாத்ராவின் வலைப்பூ இது )
இந்த மாதத்தில் செய்யும் விரதங்கள் மிக அதிகப் பலன் கொடுக்கும் என்பது ஐதீகம். அதனால் இம்மாதம், வட இந்தியர்களுக்கு விரதங்கள் அனுசரிக்கும் மாதம்.
ஆகவே குழந்தைகளின் நலன் நாடும் இந்த விரதம், இந்த மாதம் அனுசரிக்கப்படுகின்றது.
பொதுவாக இந்தியாவில் கிழக்குப் பகுதி மாநிலங்களில் வசிப்போர், இந்த விரதத்தைக் கட்டாயம் கடைபிடிக்கிறார்கள். மஹாராஷ்டிரா, இந்த விரதம் அனுஷ்டிக்கும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது.
விரதக் கதை:
விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் வரக் காரணமான கதைகளை, தற்போது பார்க்கலாம். இவை செவி வழிக் கதைகளே. ஆனாலும், ஆழ்ந்த இறைநம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன.. இந்த விரதத்துக்கு இரண்டு மூன்று கதைகள் வழங்கப்பட்ட போதிலும், அடிப்படையில் அவை அனைத்தும் பொதுவான விஷயங்களைக் கொண்டுள்ளன. அவை,
1.குழந்தைகளின் நலனை, ஆழ்ந்த நம்பிக்கையோடு கூடிய வழிபாடு நிச்சயம் காப்பாற்றும்.
2.நெருப்பானது அறிந்து தொட்டாலும் அறியாது தொட்டாலும் சுடும் என்னும் உண்மை போல், பாவமானது அறிந்து செய்தாலும் அறியாது செய்தாலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
3.இறைவனின் கருணை, கர்மவினைகளையும், பாவங்களையும் மன்னித்து நீக்க வல்லது.
முதல் கதை:
அது ஒரு கிராமம். ஏழு மகன்களை உடைய ஒரு தாய், தீபாவளியை முன்னிட்டு தன் இல்லத்தை அழகுற அலங்கரிக்கத் துவங்கினாள்... அவளுக்கு சற்று அதிக அளவில் மண் தேவைப்பட்டது. உடனே, அருகில் இருந்த காட்டுக்குச் சென்றாள், சிறிய குத்தீட்டி போன்ற ஆயுதத்தை வைத்து குழி தோண்ட ஆரம்பித்தாள். சற்றுப் பெரிய குழியாக வெட்டி விட்டு, குத்தீட்டியை அருகில் இருந்த புதரில் எறிந்தாள்.. கூடைகளில் மண்ணை சேகரிக்க ஆரம்பித்தாள்.
வேலை முடிந்தது. குத்தீட்டியைத் தேடியவள், புதரிலிருந்து அதனை எடுக்கச் சென்ற போது அதிர்ந்தாள்.. அந்தோ... அங்கு ஒரு சிங்கக் குட்டி, இவள் எறிந்த குத்தீட்டியால் உயிர் துறந்திருந்தது...
பதறிப் போனாள் அந்தப் பெண்... அறியாமல் செய்த தவறு.. ஆயினும் என்ன செய்ய நேரும்?!!!!.. வருத்தத்துடன் குத்தீட்டியையும் கூடைகளையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினாள்..
ஆனால், பண்ணிய பாவம் சும்மா விடவில்லை. அடுத்தடுத்த வருடங்களில் அவள் ஏழு மகன்களும் மறைந்தனர். துயரத்தால் அழுது புலம்பினாள் அந்தப் பெண்.. என்ன பாவம் செய்தோம்?!!! என்று வருந்தினாள்..ஒரு வேளை, தான் அந்த சிங்கக் குட்டியைக் கொன்றது காரணமோ என்று அவளுக்குத் தோன்றியது..
கிராமத்துப் பெண்கள் அவளை நாடி வந்து ஆறுதல் சொன்னார்கள்.. அதில் ஒரு மூத்த பெண்மணியிடம், தான் அறியாது சிங்கக் குட்டியைக் கொன்றது குறித்து விவரித்தாள் அந்தப் பெண்.. இந்தப் பாவத்திற்குப் பரிகாரமும் கூறுமாறு கேட்டுக் கொண்டாள்.
அதற்கு அந்த முதியவள் 'பார், எப்போது நீ செய்த தவறை உளமார ஒப்புக் கொண்டாயோ, அப்போதே உன் பாவத்தில் பாதி குறைந்து விட்டது. நம் அஹோயி மாதா,தாய்க்கெல்லாம் தாய். அவளிடம் முறையிடு.. வரும் அஷ்டமி தினத்தில், விதிமுறைப்படி விரதம் இரு.. கட்டாயம் நல்வழி பிறக்கும். நம்பிக்கையுடன் இருந்தால் நல்வாழ்வு வாழலாம்..' இப்படிப் பலவாறு கூறித் தேற்றினாள்.
விரத நெறிமுறைகளைக் கேட்டறிந்து, அதன் படி நம்பிக்கையுடன் விரதத்தைத் தொடர்ந்து கடைபிடித்தாள் அந்தப் பெண். அன்னை அஹோயி, அவளது பூஜைகளை ஏற்று, அவளை மன்னித்து அருள்புரிந்தாள். அன்னையின் அருளால், அந்தப் பெண் விரைவில், தன் அனைத்துக் குழந்தைகளையும் உயிருடன் கண்டடைந்து சுக வாழ்வு வாழத் துவங்கினாள்.
இதைக் கண்ட கிராமத்தார் அனைவரும், தம் குழந்தைகளின் நலனுக்காக, இந்த விரதத்தை அனுஷ்டிக்கத் துவங்கினர்.
மற்றொரு கதை;
முற்காலத்தில், தாத்யா என்னும் ஒரு சிற்றூரில் சந்திரபான் என்னும் ஒருவன் வசித்து வந்தான். வட்டிக்குப் பணம் கடனாக வழங்கும் தொழில் செய்து வந்த அவன், அந்தத் தொழில் மூலம் ஏராளமாகப் பணம் குவித்தான்..
அவன் மனைவி சந்திரிகா.. அழகிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மங்கையான அவள், தன் கணவனின் அன்புக்குகந்தவளாகவும் திகழ்ந்து வந்தாள்...
ஆனால் குறைகளில்லா வாழ்வேது?.. சந்திரிகா பல குழந்தைகளை ஈன்றாள். ஆனால் அவை யாவும் விரைவில் உயிர் துறந்தன...
சந்திரபான் மனம் கலங்கினான். எத்தனையோ வழிமுறைகளில் முயன்றும் அவர்களின் ஒரு குழந்தைக்கும் நீண்ட ஆயுள் ஆசீர்வதிக்கப்படவில்லை.
கணவன் மனைவி இருவரும், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தனர். தம் செல்வம் அனைத்தையும் ஒன்று திரட்டி பெரும் மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். 'யார் இருக்கிறார் இவற்றை ஆள?' என்னும் எண்ணம் அவர்கள் உள்ளம் முழுமையையும் ஆக்கிரமித்தது... அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு, அருகிலிருந்த கானகத்துக்குச் சென்ற அவர்கள், அங்கு ஓர் மரத்தடியில் மூட்டையை வைத்து விட்டு, நடக்கத் துவங்கினர்...
நடந்து, நடந்து பத்ரிகாசிரமத்திற்கு அருகில் வந்து விட்டனர். அங்கே ஒரு அழகு வாய்ந்த குளத்தைக் கண்ட தம்பதிகள், அதன் அருகே அமர்ந்தனர்.
மனத் துயரம் தாங்காமல், உணவையும் நீரையும் துறந்து, உயிர் துறக்கத் தீர்மானித்தனர்.
அவ்வாறே ஏழு தினங்கள் சென்றன. ஏழாவது தினம் ஒரு அசரீரி எழுந்தது, 'தம்பதிகளே, நீங்கள் உங்கள் பழைய கர்மவினைகளின் காரணமாக, இந்த துன்பத்தை அடைந்தீர்கள். நாளை அஹோய் அஷ்டமி. சந்திரிகா, அஹோய் மாதாவைத் தொழுது, அஹோய் அஷ்டமி விரதம் அனுஷ்டிப்பாளாக... இந்தப் புனிதக் குளம், பெருமை வாய்ந்த 'ராதாகுண்ட்' ஆகும். நீங்கள் இருவரும், விரத அஷ்டமியன்று இரவு, இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து, அஹோய் மாதாவைப் பூஜித்தால், விடிவதற்குள் அன்னை பிரசன்னமாவாள். அவளிடம் நீங்கள், உங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளைக் கேட்டுப் பெறுங்கள்..' இவ்வாறு அந்த அசரீரி கூறியது.
சந்திரிகா, முழு நம்பிக்கையுடன் விரதம் அனுஷ்டித்தாள். நாள் முழுவதும், உணவும் நீரும் இன்றி அன்னையைத் துதித்தாள். இரவு வந்தது. வானெங்கும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டலாயின. தம்பதிகள் இருவரும் குளத்தில் மூழ்கி எழுந்து, அன்னையைப் பூஜித்தார்கள். பின் மன நிறைவுடன் இருவரும் அங்கிருந்து வீடு திரும்பலாயினர்.
வரும் வழியில், அசரீரி கூறியபடி அன்னை பிரசன்னமானாள். தம்பதிகள் மனமகிழ்ந்து அன்னையைத் துதித்தார்கள்.. மாதா, அவர்களுக்கு வேண்டும் வரம் நல்குவதாக வாக்களித்தாள். இருவரும், தமக்கு 'நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உள்ள சத்புத்திரன் வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தனர். அன்னை, 'அவ்வாறே' என வரமளித்து மறைந்தருளினாள்.
சில காலம் சென்று, சந்திரிகா, தான் வேண்டிய வரத்தின் படி, ஒரு அழகான ஆண்குழந்தையை ஈன்றேடுத்தாள். தம்பதிகள் இருவரும் மனம் மகிழ்ந்தனர்.
( விரதம் அனுஷ்டிக்கும் முறையை அடுத்த பதிவில் காணலாம்..)
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.)
அதிகம் அறிந்திராத அரிய பல தகவல்களை அடுக்கடுக்காய்த் தந்து மகிழ்த்தும் தங்களுக்கென் அன்பான வணக்கம்.
பதிலளிநீக்குஊக்கமூட்டும் வார்த்தைகளுடன் கூடிய தங்களது அருமையான கருத்துரைக்கு என் பணிவான நன்றி...
நீக்கு