நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 15......திருவெம்பாவை... பாடல் # 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாடல், அன்பு மேலீட்டால் உருகி நின்ற பெண்ணொருத்தியைப் பார்த்து, நீராடும் பெண்கள் தமக்குள் பாடுவதாக அமைந்திருக்கிறது..

வாருருவப் பூண்முலையீர்

கச்சணிந்த  அணிகளுடன் கூடிய கொங்கைகளை உடையவர்களே!!!.. 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

ஒவ்வொரு சமயம் எம்பெருமான் திருப்பெயரை உரைப்பதில் ஆரம்பித்தவள், இப்போது எப்போதும், சிவபிரானின் புகழை ஓயாது உரைக்கும் வாயின‌ள் ஆனாள்...மனம் உருகி, ஆனந்தம் மேலிட,விழிகளிலிருந்து நீங்காது பொழியும் நீர்த்தாரைகளுடன், பூமியின் மேல் விழுந்து, எழாது சிவபிரானையே வணங்குவாள். வேறொரு தெய்வத்தை வணங்கியறியாள்.

பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
 வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பெரிய தலைவனாகிய சிவபிரானின் பொருட்டு, ஒருவர் பித்தாகும் விதம் இவ்வாறோ?!!!..இவ்விதம் ஒருவரைப் பேரானந்தத்தில் ஆழ்த்தி ஆட்கொண்டருளும் சிவபிரானது திருவடிகளைப் புகழ்ந்து பாடி,  அழகிய தோற்றமுடைய  மலர்களால் நிரம்பப் பெற்ற, பொய்கையில் குதித்து நீராடுவோமாக!!!!!!..

பெண்கள் ஒருவரை ஒருவர் முதலில் அழைத்துக் கொண்டு, அதன் பின், ஆன்மீக நிலையில் உயர்ந்த   பெண்ணைச் சுட்டிக்  காட்டிப்  பாடுவதால், 'வாருருவப் பூண்முலையீர்!!' முதலில் வந்தது.

எப்போதும் இறைவனை நினைந்து உருகும் அடியவர்களுக்கு, அவர்களது பக்தியின் பலனாக, மஹான்களின் தரிசனமும் சத்சங்கமும் கிடைக்கிறது. 

அவ்விதம் வாராது வந்த மாமணியான ஒரு பெண் துறவியை, சமாதி நிலையில் நீராடும் துறையில் கண்டு, அந்நிலை தோன்றும் வழி குறித்தும், அந்தத் துறவியைக் குறித்தும் புகழ்ந்து... நமக்கும் அந்நிலை வருதல் வேண்டும் என்ற வேண்டுதலோடு நீராடும் பான்மை கூறப்பட்டது. உள்ளுறையாக, ஆன்மீக உயர்நிலையை அடையும் விதமும் கூறப்பட்டது..

வாருருவப் பூண்முலையீர்...என்பதால் மார்பில் கட்டை விரல் அளவில் ஜோதிஸ்வரூபமாக அமையும் இறைவனை நோக்கி, தாமும் பரிபக்குவ நிலையில் உயர்நிலையை அடைய வேண்டும் என்று வேண்டி நின்றமையாகவும் இதைக் கொள்ளலாம்..

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே======= முதலில் இறைவனின் திருநாமத்தை எப்போதாவது சொல்ல ஆரம்பித்து, பின்பு, இறைவனின் மீது அன்பு சிறிது சிறிதாக அதிகரிக்கிறது..

நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் ==== இறைவனின் மீது அன்பு முதிர்ந்து பேரன்பான நிலையில், ஓயாது வாய் 'நம்பெருமான் சீர்' ஒன்றையே முழங்குகிறது.. எப்போதும் இறைநாமத்தின் மணம் வாயில் நிறைந்திருக்கிறது..

இது 'வாக்கு' முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்..

சித்தங் களிகூர=== நாமம் கூறக் கூற, மனம் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்குகிறது.. எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கி, தியான நிலை கை கூடுகிறது.. சித்தாகாசத்தில், இறைவனோடு மனம் முழுமையும் ஒன்றுகிறது..ஆனந்த நிலையின் அனுபவம் கிட்டுகின்றது.

இது மனம் முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்..

'பாரொருகால் வந்தனையாள்===' இறைவனையே உடலால் எந்நேரமும் தொழுது வணங்கும் நிலை..

இது, 'காயம்' அதாவது உடலால் இறைவனோடு ஒன்றும் நிலை..

இவ்வாறு வாக்கு,மனம், காயம்  ஆகிய அனைத்தாலும் இறைவனோடு ஒன்றும் நிலை வரும் போது, குருவருளால் 'சமாதி நிலை' கிட்டும்..சவிகல்ப,நிர்விகல்ப சமாதி நிலை வரும் போது, தானே அழுவது, சிரிப்பது முதலான நிலைகள் அமைவது இயல்பு. இதன் காரணமாக, மற்றவர்கள் அவர்களை 'பித்து' என்று கூறுவதும் இயல்பே!!..

நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் 
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் 
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. (புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் ==மாணிக்கவாசகப் பெருமான்)

'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே!' என்று அபிராமி பட்டர் உரைப்பதும் இதுவே..

இது சிலருக்கு ஒரு பிறவியிலும் சிலருக்கு பல பிறவிகளில் செய்யும் தொடர்ந்த முயற்சிகளின் மூலமும் கைகூடும்....

ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் உபநிஷதங்கள் வகைப்படுத்தி இருக்கின்றன... சித்தர், ஜீவன் முக்தர், பராமுக்தர் என்ற நிலைகள் கூறப்படுகின்றன. பராமுக்தர், சில தெய்வீகக் காரணங்களுக்காக, மிக அரிதாக, பூமியில் தேகமெடுக்கின்றார். எப்போதாவது நடக்கும் நிகழ்வு இது..

'பார் ஒரு கால் வந்தனை' என்பதால் அவ்விதம் எப்போதோ ஒரு முறை வரும் அவதார உருவினள் என்பதாகவும் கொள்ளலாம்.. எப்போதும் சமாதி நிலையின் பேரானந்த அனுபவத்தில் இருப்பதால், எப்போதாவது ஒரு முறை இவ்வுலக நினைவுக்கு வருகின்றாள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

'ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்'=== அழகிய தோற்றமுடைய‌ மலர்கள் நிறைந்துள்ள உள்ளமாகிய பொய்கையில் ஆழ்ந்து நீராடி(தியானித்து), வித்தகர் தாள் போற்றுமாறு கூறுகிறார். இங்கு மலர்கள் ,' மணம் வீசும் ' என்றல்லாது, 'அழகிய தோற்றமுடைய' என்று வருகிறது. யோக நெறியில் ஒவ்வொரு படியிலும் பெம்மானின் தரிசனம் வெவ்வேறு முறையில் கிட்டும்.. அழகிய தோற்றமுடைய மலர்கள், சிவனாரின் தரிசனங்களை மறை பொருளாகக் குறித்தன.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2 கருத்துகள்:

 1. துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
  அஞ்செழுத்து ஓதில் நாளும் அரனடிக்கு அன்பதாகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்த தங்கள் நல்லாதரவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..