அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!!..
நம் பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் விரதங்களில் கௌரி விரதங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு!!..
ஸ்வர்ண கௌரி விரதம், பலால கௌரி விரதம் முதலான பல கௌரி விரதங்களை 'ஆலோசனை' பதிவுகளில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த பதிவில், 'திந்த்ரிணீ கௌரி விரதம்' பற்றிப் பார்க்கலாம்.
பார்வதி தேவி, எம்பெருமானை அடையும் பொருட்டுத் தவம் இருந்த காலத்தில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமர்ந்து தவம் செய்தார். அவ்வாறு தவம் இருந்த தினங்களே கௌரி விரத தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன. கௌரி தேவியின் 108 விதமான ஸ்வரூபங்களில் மிக முக்கியமான சில ஸ்வரூபங்களைப் போற்றும் விதமாகவும் கௌரி விரத தினங்கள் அமைகின்றன.
பார்வதி தேவி, எந்தெந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இயற்றினாரோ அந்தந்த மரத்தின் மலர்கள் அல்லது இலைகளைப் பயன்படுத்துதல், அந்தந்த மரக் கிளைகளின் கீழ் கௌரி தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜித்தல் ஆகியன மிக அதிக அளவு பலன் தரும்.
திந்த்ரிணி கௌரி விரதம், பார்வதி தேவி, மகிழ மரத்தடியில் தவம் செய்ததைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுவதால், மகிழ மரத்தின் அடியிலோ அல்லது மகிழ மரக்கிளைகளின் அடியிலோ கௌரி தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜிக்கலாம். மகிழம்பூவால் அர்ச்சித்தல் நலம் தரும்.
விரதம் அனுசரிக்கும் தினம்:
கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் வரும் துவிதியை தினமே திந்த்ரிணீ கௌரி விரதம் அனுஷ்டிக்கும் தினம். இதற்கடுத்த திருதியை தினமே 'ரம்பா திருதியை' எனப் போற்றப்படுகின்றது (வைகாசி சுக்ல பக்ஷ திருதியை தினமே 'ரம்பா திருதியை' என்றும் கூறுவதுண்டு).
விரதக் கதை:
தேவலோக நடனப் பெண்களுள் ஒருத்தியே ரம்பா தேவி. அழகிற் சிறந்த அரம்பை, ஒரு சமயம் இந்திரன் முன்னிலையில் நடனமாடிக் கொண்டு இருந்தாள். வேகமாக ஆடும் போது, திடீரென்று, அவளது தலையில் இருந்த பிறைச்சந்திரனும், மற்ற அணிமணிகளும் கழன்று விழுந்தன. அவளது முக வசீகரம் பறிபோயிற்று. இதனால் நடனத்தை நிறுத்திய ரம்பா, தன்னைச் சுற்றியிருந்தவர்களின் கேலிப் பார்வைக்குத் தான் ஆளானதை நினைத்து மனம் வெதும்பினாள்.
கலையை தெய்வமாக மதிக்காமல், தன் நடனத்தையும் அழகையும் உயர்வாக எண்ணியதாலேயே இந்த அவமானம் தனக்கு ஏற்பட்டது என்பதை தேவேந்திரன் வாயிலாக உணர்ந்த ரம்பா, இதற்குப் பிராயச்சித்தம் கௌரி தேவியைப் பூஜிப்பது மட்டுமே என்பதை அறிந்து, அவ்வாறு பூஜித்துப் பலன் பெற, பூவுலகம் வந்தாள்.
கார்த்திகை மாதம், அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை துவிதியை நன்னாளில், முறைப்படி உபவாசம் இருந்து, கலசத்தில் மஞ்சளால் பிரதிமை செய்து, அலங்கரித்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து விரத பூஜையைச் செய்தாள் ரம்பா. ரம்பையின் பூஜையால் மனம் மகிழ்ந்த கௌரி தேவி, மறு நாள் திரிதியை தினத்தன்று அதிகாலையில், மடியில் குமரனை ஏந்திய திருக்கோலத்தில் ரம்பைக்குத் தரிசனம் அளித்தாள்.
ரம்பைக்கு இணையற்ற முகவசீகரத்தையும் கலைகளில் வல்லமையையும் பொன்னாலான அணிமணிகளையும் அருளிய அன்னை, ரம்பையின் பெயரால் அன்றைய தினம், 'ரம்பா திருதியை' தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அருளினாள். அன்றைய தினம் கௌரி தேவியோடு ரம்பையையும் வழிபடுவோர்,ரம்பை பெற்ற அனைத்தையும் பெறுவர் என்பது ஐதீகம். கர்ம வினையால் இழந்தவற்றை அருளும் வல்லமை மிக்கது இந்த விரதம்.
விரத பூஜை செய்யும் முறை:
கௌரி விரத தினத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ பூஜை செய்யலாம். பூஜை நிறைவுறும் வரை முழு உபவாசம் இருக்க வேண்டியது அவசியம். பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து இந்தப் பூஜையைச் செய்யலாம்.
இதற்கு, நீர் நிரம்பிய ஒரு கலசத்தில், மஞ்சளால் கௌரி தேவியின் பிரதிமையைச் செய்து அலங்கரிக்க வேண்டும்.மகிழ மரக்கிளைகளை அருகில் வைக்கலாம். பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். நிவேதனம் செய்ய இனிப்புப் பதார்த்தங்களே சிறந்தவை. குறைந்தது ஐந்து வகையான பழங்கள் மற்றும் இனிப்புகள் சமர்ப்பிப்பது சிறந்தது. இயலாதவர்கள், இயன்ற பக்ஷணங்கள் மற்றும் பழங்களை நிவேதிக்கலாம்.
முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, பின், கௌரி தேவிக்குப் பூஜை செய்ய வேண்டும். கௌரி அஷ்டோத்திரம் கூறி அர்ச்சித்து, தூப தீபங்களால் ஆராதனை செய்து, பக்தியுடன் நிவேதனங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கற்பூர ஆரத்தி எடுத்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து வழிபட வேண்டும். பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.
ரம்பா திருதியை:
திருதியை தினத்தன்று அதிகாலையில் நீராடி, மற்ற கடமைகளை முடித்து, பூஜைக்கு அமர வேண்டும். கௌரி தேவிக்குப் பூஜை செய்து வழிபாடு செய்து விட்டு, மன்மதா, புஷ்பதந்தா, சம்மோகனா, சித்ரலேகா, ரமாநேகா,மஞ்சுளா, சௌந்தர்யா ஆகிய எட்டு அரம்பையர்களோடு கூடிய ரம்பாதேவியை மனதால் தியானித்து, வேண்டும் வரங்களைக் கோரி வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்கு அம்பிகையிடம் மனதார மன்னிப்புக் கோரி, பின் கௌரி தேவியின் துதிகளைப் பாடி, ஆரத்தி எடுக்க வேண்டும்.
பூஜை நிறைவுற்ற சிறிது நேரத்திலோ அல்லது மாலையில் விளக்கேற்றி, பால் நிவேதனம் செய்த பின்போ, கலசத்தில் ஆவாஹனம் செய்திருக்கும் கௌரி தேவியை, இருப்பிடம் எழுந்தருள(யதாஸ்தானம்)ச் செய்து விடலாம்.
அன்றைய தினம், இயன்ற அளவு தங்கத்தாலான ஆபரணங்கள் வாங்கி, பூஜையில் வைத்தோ அல்லது ஆலயங்களில் வைத்து அர்ச்சனை செய்தோ அணிந்தால், அஷ்ட ஐச்வரியங்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.
மேலும், இவ்வாறு பூஜை செய்பவர்கள், முக வசீகரம் மற்றும் ஆடல், பாடல் கலைகளில் வல்லமை பெற்று விளங்குவர்.
'அதிர்ஷ்டம் வரவேண்டும்' என்ற நிலையில் இருப்போரும், இந்த விரத பூஜையைச் செய்து, அம்பிகையைத் துதித்து வரம் பெறலாம்.
கௌரி தேவியைத் துதித்து,
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
அடுத்த பதிவுக்கு
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறோம்
மிக்க நன்றி ஐயா!!
நீக்குRAMBA THRATHIYAI POOJA DETAILS SUPER AND I HAVE NOT HEARD ABOUT THIS SO FOR THANKS A LOT
பதிலளிநீக்குESSAR
THANKS A LOT SIR..
நீக்குதிந்த்ரிணீ கௌரி வ்ரதம் பற்றிய விபரங்களை எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி.
நீக்கு