அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!!!
'விவாஹ பஞ்சமி' என்பது, ஸ்ரீராமனுக்கும், சீதா தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த புண்ணிய தினமாகும். இது மார்கசீர்ஷ மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவில், குறிப்பாக, சீதை பிறந்த தலமாகிய ஜனக்புரியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்தப் புண்ணிய நன்னாளில், ஸ்ரீராமரையும் சீதையையும் வணங்கி வழிபடுவதும், திருக்கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்துவதும் மிகுந்த நற்பலன்களைத் தரும். குறிப்பாக , திருமணத் தடை விலக, விவாஹ பஞ்சமி தினத்தன்று ஸ்ரீராமரைப் பூஜித்து வழிபடுவதோடு, ஸ்ரீராமர் திருக்கோயில் கொண்டருளும் கோயில்களுக்குச் சென்று அர்ச்சித்து வழிபடுவது சிறந்ததொரு பரிகாரமாகும்.
இந்தப் பதிவில், ஸ்ரீராமரது திருக்கல்யாண உற்சவத்தின் காணொளியையும், கம்ப இராமாயணம், கடிமணப் படலத்தில் இருந்து சில பாடல்களையும் அன்பர்களது மேலான பார்வைக்காகச் சமர்ப்பிக்கிறேன்.
காணொளியை வலையேற்றிய அன்பருக்கு என் மனமார்ந்த நன்றி!!
கம்ப இராமாயணம் - கடிமணப் படலம்
சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.
இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான்.
வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ.
வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார்.
இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்.
இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்.
அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்.
இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான்.
பல் வகை மங்கல ஆரவாரம்
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை.
ஸ்ரீசீதா, லக்ஷ்மண, ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவருளை வேண்டி,
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.
jai sri ram - sita ramachandramurthy kalyana mahotsvam--- arumai tks
பதிலளிநீக்குESSAR
THANKS A LOT SIR..
நீக்கு