மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
பொருள்:
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
"மான் போல மருளும் பார்வை அழகையுடைய பெண்ணே!!, 'நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்' என்று நேற்று நீ சொன்னாய். அப்படி சொல்லிச் சென்ற நீ போன திசையைச் சொல்வாயாக.. 'நாம் நேற்று சொன்ன சொல்லைக் காக்கவில்லையே' என்ற நாணம் சிறிதும் இல்லாமல், இன்று நீ இன்னமும் எழாமல் தூங்குகின்றாயே?!!.. உனக்கு இன்னமும் பொழுது விடியவில்லையா!!.. "
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
"இப்பூவுலகும், வானுலகும், பிற உலகங்களும் அறிவதற்கு அருமையானவன், நம் மீது பெருங்கருணை கொண்டு, தானாகவே உவந்து, நம்மை ஆட்கொண்டருள வந்தவனின் நெடிய கழல்கள் அணிந்த திருவடிகளைப் பாடி வந்த எமக்குப் பதில் கூறுவதற்காக, உன் வாய் திறவாய்."
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
"நாங்கள் இவ்வளவு கூறியும், பக்தியால் உன் உடல் உருகி மெலியவில்லை..இவ்வாறு நீ இருப்பது உனக்குத் தான் பொருந்தும்.. எமக்கும் பிறருக்கும் தலைவனாய் இருக்கும் எம்பெருமானை எழுந்து வந்து பாடுவாயாக!!!.."
இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..
'மானே'==='மான் போலும் பார்வையை உடைய பெண்ணே'== தோழி நேற்று, தாமதமாக வந்து சேர்ந்து கொண்டவள். 'தாமதமாகிவிட்டதே' என்ற அச்சத்தால், 'நாளை நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன்' இன்று உறுதி கூறினாள். இன்று அதை செயல்படுத்தவில்லை..இவ்விதம் அச்சத்தால் சொன்ன மொழி உடையவளாதலின் 'மானே' என்று அழைக்கப்பட்டாள்.
' நாணாமே'....சொன்ன சொல்லில் உறுதிப்பாடு இல்லாமல் இருப்பதோடு அதற்காக நாணப்படாமலும் இருக்கின்றாள்..
'திசை பகராய்' என்றது.. சொல்லுக்கும் செயலுக்கும் பொருந்தாத தோழியின் இயல்பைக் குறித்து, கேலியாகச் சொன்னது..
'தலையளி' என்பது பெருங்கருணையை குறிக்கும்.
'வந்தோர்க்குன் வாய்திறவாய்'=== நாங்கள் எம்பெருமானைக் குறித்து பாடியும், எழுந்து வராமல், எங்களுக்குப் பதிலும் கூறாமல் இருக்கிறாய் என்றது, சொன்ன சொல்லைக் காக்காத, குற்றமுள்ள நெஞ்சையுடைய தோழி, பதில் கூறி, உண்மையை ஏற்காமலிருப்பதைச் சுட்டியது.
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்'== பக்தியால் உருகி, உடல் மெலியாது இருக்கின்றாய் என்றது, தோழி தன் பக்தி நிலையில் பூரணமடையாது இருக்கின்றாள் என்பதைக் குறிப்பதாகும்.
'உனக்கே உறும்' என்றது, இத்தகைய இயல்பு உனக்குத் தான் பொருந்தும் என்பது போல் கூறி, அவ்வாறு இருக்கலாகாது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள்.
இதன் மூலம் பக்தர்கள்,உண்மை, நேர்மை முதலான நறுங்குணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது மீண்டும் சொல்லப்படுகின்றது.
'எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனை' == கோன் என்றால் அரசன். எமக்கும் ஏனோர்க்கும் என்று இருவிதமாக விரித்தது, எம் போல் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் உள்ளோருக்கும், அவ்விதம் இல்லாத உன் போன்றோருக்கும் அரசன், தலைவனாகிய இறைவனைப் பாடுவதே அறிவுடைமை என்பதை உணர்ந்து தெளிந்து பாட வருவாயாக என்று அழைக்கிறார்கள்.
மேலும் சற்று விரிவாகப் பார்க்கலாம்..
மாயையாகிய மயக்கத்தில் ஆழ்ந்து, துயிலுகின்றவள் தோழி. அதைக் குறிக்க மானே என்றார்.
'அவ்விதம் மயங்கியிருக்கின்றோமே'என்ற சிந்தனையும் இன்றிஇருக்கின்றாள் தோழி என்பதை 'நாணாது' என்றார்.
'வானே நிலனே பிறவே' == முந்தைய பாடலில், 'விண்' என்ற சொல்லால் மேலுலகங்கள் அனைத்தையும் குறித்தவர், இப்போது 'வான்' என்று வான் முதலாகிய ஐம்பூதங்களையும் குறிக்கிறார். பஞ்ச பூதங்களாக விரிகின்றவர் இறைவன் என்பதையும், பஞ்ச பூதங்களையும் படைத்தவர் எம்பெருமான் என்பதையும் இது ஒருசேரக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி’ ==அப்பர் சுவாமிகள்
அறிவரியான் என்பதற்கு அறிவினால் அறிவதற்கு அரியவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் அவன் அன்பர் தம் பக்திக்கு எளியவன். தானே வந்து ஆட்கொண்டருளும் கருணைப் பெருங்கடல்.
அவனைப் பாடி உருகி, உடல் மெலிவாரைத் தாமே வந்து ஆட்கொள்வான். பாடி மனங்குழைவோரின் பக்திக்கு எளியவன் இறைவன்.
எமக்கும் ஏனோர்க்கும் என்று இரு விதமாக விரித்ததையும் சற்று உற்று நோக்கலாம். இவ்வுலகம் இரட்டைத் தன்மைகள் நிறைந்ததாய் உள்ளது. அவையனைத்திற்கும் அவன் ஒருவனே இறைவன். ('உளதாய் இலதாய்' அருணகிரிநாதர்). இதன் மூலம் ஒரே பரம்பொருள் என்பதும் புலப்படுத்தப்படுகின்றது.
மேற்கூறிய கருத்துக்கள், மாணிக்கவாசகப் பெருமானின் கீழ்க்கண்ட திருவாசக வரிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.
பாடல் # 7
அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்:
அன்னே இவையும் சிலவோ
அன்னையே, எம்பெருமானது திருவிளையாடல்களில் இதுவும் சில போலும்.
பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தேவர்களும், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலான மற்ற விண்ணோர்களும் நினைப்பதற்கும் அரியவன், ஒரு பரம்பொருள், மிகப் பெரும் புகழுடையவன், அவனுடைய சின்னங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் முன்பே 'சிவ' என்றே வாய் திறப்பாய்.
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய்
'தென்னாடுடைய சிவனே' என்று யாம் கூறி முடிக்கும் முன்பாக, தீயோடு சேர்ந்த மெழுகு போல் உருகுவாய், என் பெருந்துணைவன், என் அரசன், அமுதம் போன்றவன் என்று நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இறைவனைப் புகழ்கின்றோம்.
இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
அதைக் கேட்டு இன்னமும் நீ உறங்குகிறாயா?!!.. வலிய, இரக்கமற்ற நெஞ்சை உடைய அறிவிலிகள் போல், ஏதும் செய்யாது படுத்திருக்கின்றாயே?!!, தூக்கத்தின் பெருமையை என்னெவென்று சொல்வது?.
சற்று விரிவாகப் பார்க்கலாம்..
'அன்னே'==இப்பாடலில் எழுப்பப்படும் பெண், எம்பெருமான் மீது பெரும் பக்தியுடையவள். ஆதலில் அவள் 'அன்னையே(அன்னே) என்று விளிக்கப்பட்டாள்.
இவையும் சிலவோ: இதற்கு இருவிதமாகப் பொருள் கூறுகின்றனர். 'உன் குணங்களுள் இவையும் சிலவோ' என்பது ஒரு பொருள். 'இறைவனது திருவிளையாடல்களுள் இவையும் சில போலும்' என்பது ஒரு பொருள். ஆயின், முதலில் 'அன்னையே' என்று விளித்தமையால், பக்தி மீதூறப் பெற்றவள் தோழி என்பது விளங்குகிறது. அத்தகைய தன்மையுடையவளிடத்து, குணக்குறைபாடு காண்பதரிது. இறைவனார், தம் சோதனை போன்றே, இம்மாதிரியான குணக்குறைபாடுகளை அவளிடத்து, தோன்றச் செய்திருக்கிறார் என்பது தோழியரின் உறுதிப்பாடு என்பதாகப் பொருள் கொள்ளுதலே சரியென நினைக்கிறேன்.
பலஅமரர்
உன்னற் கரியான் == 'அமரர்கள் நினைப்பதற்கும் அரியவன்' என்றதன் காரணம், அமரர்கள், அவ்வப்போது, தம் ஆற்றல்களை முதன்மைப்படுத்தி, செருக்கடைவார்கள். அந்தச் செருக்கை அடக்கும் பொருட்டு, சிவனார் அவர் சிந்தைக்கு எட்டாது மறைந்தருளுவார்.
'விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை' ==சிவபுராணம்
ஒருவன்= ஒரே பரம்பொருளான சிவனார்.
‘இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்'== இதற்கும் இருவிதமாகப் பொருளுரைக்கின்றனர்.== அதிகாலையில், பெரும் புகழுடைய சிவனார் திருக்கோயில் திறக்கும் போது, சங்கு முதலிய திருச்சின்னங்கள் முழங்கும். அதைக் கேட்டுத் துயில் நீங்கும் தோழி,'சிவாய நம' என்று உச்சரித்தே துயில் நீங்குவாள் என்பது ஒரு பொருள்...
சிவனடியார்களது சின்னங்களாகிய, உருத்திராக்கம், விபூதி முதலியவற்றின் பெயர்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, சிவனாரின் திருநாமத்தை உச்சரித்து மெய்சிலிர்ப்பாள் தோழி என்பது மற்றொரு பொருள்.. ஆயினும் இங்கே சில யோக சம்பந்தமான செய்திகள் மறை பொருளாயிருப்பதால், முதலில் கூறிய பொருளே ஏற்புடையதென்று நினைக்கின்றேன்.
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்===திருக்கோயில் திறந்து, திருச்சின்னங்கள் ஊதப்பெற்ற பின், அடியார்கள் சிவனாரைப் பாடுவர். அவ்விதம் 'தென்னாடுடைய சிவனே' என்று அவர்கள் துவங்கிப் பாடுதலை முடிக்கும் முன்னரே, தீயிலிட்ட மெழுகு போல் பக்தியால் உள்ளம் உருகுவாள் தோழி.
'என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ'
இத்தகைய இயல்புடைய தோழி, தோழியர், இறைவனைத் தனித்தனியாகப் புகழ்ந்து பாடிய போதும், அதைக் கேட்ட வண்ணம் துயிலுகின்றாள்...உலக மாயையின் விளையாட்டுத் தான் என்னே!!..
'என் ஆன், என் அரையன், இன் அமுது' என்று மும்முறை கூறியது, கவனத்தில் கொள்ளத்தக்கது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க அவன் ஒருவனே துணைவன், அவனே மன்னுயிர்களின் தலைவன், பிறவா நிலையை அருள வல்லவன் அவன் ஒருவனே. இதை நெஞ்சத்துள் வைத்து, ஊக்கமுடன் சாதனா மார்க்கத்தில் முயல வேண்டும் என்பது கருத்து.
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.== 'பேதையர்' என்றது, இங்கு அறிவில்லாத தன்மையைக் குறிக்கிறது. வாளா கிடப்பது, செயலேதும் இன்றி சும்மா இருப்பதைச் சுட்டியது. தோழி இன்று ஏனோ உறக்கத்தின் வசப்பட்டு விட்டாள்..ஏதும் செய்யாது என்றது, சிவ சிந்தனை செய்யாது, சிவனார்குரிய பூசனை முதலியவற்றில் ஈடுபடாது, தோழி உலக விஷயங்களின் பால் செல்வதையே. ஈசனைத் தொழும் செயலே செயல், மற்றதெல்லாம் செயலல்ல என்பது தோழியரின் துணிபு.
ஆன்மீக உயர்நிலையை அடைந்தோர், எவ்விதத்திலும் கீழ் நிலைக்கு இறங்கலாகாது. இறைவன் சோதனை போல், அவர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டு, மாயையில் ஆழ்த்துவான். தளராத பக்தி வைராக்கியத்தால் அவற்றினின்று மீளுதல் வேண்டும் என்பது உட்பொருள்..
என்னே துயிலின் பரிசு என்றது, தோழி மேல் குற்றமில்லை.. ஈசனாரின் லீலையால், மாயையின் வசப்பட்டாள் தோழி என்பதை உணர்ந்து, மாயையை நொந்து கூறியதாம். பரிசு என்பது இங்கு நொந்து கூறும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது.
இதில் மறைபொருளாயிருக்கும் யோக ரகசியங்களுள் ஒன்று மட்டும்..
'இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே ' திருச்சின்னங்களில் சங்கு முதலானவை ஊதும் ஒலி என்பது, தியான நிலையில், ஒருவர் சிதாகாசத்தில் ஒடுங்கும் போது, சங்கிற்கு நிகரான ஒலி சகுண பிரம்ம நிலையில் கேட்கும். நிர்க்குண பிரம்மத்தில் அது கேட்பதில்லை..
தியானத்தின் மூலம், தோழி எய்தியுள்ள ஆன்மீக உயர்நிலையை விவரிக்கும் சொல் அது..
சங்கு திரண்டு முரன்றெழும்
ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள்நம்
மோடு சலித்திடும் ஆகாதே
அங்கிது நன்றிது நன்றெனும்
மாயை அடங்கிடும் ஆகாதே
ஆசையெ லாம்அடி யார்அடி
யோம்எனும் அத்தனை ஆகாதே (திருப்படை ஆட்சி.==மாணிக்கவாசகப் பெருமான்).
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!.
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
தமிழ் ருத்திரம் என சொல்லும் அப்பர்
பதிலளிநீக்குதந்த நின்ற திருத்தாண்கத்தை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி
தங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!!
நீக்கு