நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 25 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONGS 8 & 9......திருவெம்பாவை..... பாடல் #8 & பாடல் # 9.


கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

அதிகாலைப் பொழுதில்  நாம் காணும் காட்சிகள் இப்பாடலில் விவரிக்கப்படுகின்றது..

வாழி (வாழி' என்ற சொல், ஐந்தாவது வரியின் துவக்கமாக இருந்தாலும், விடியற்காலையில், தோழி எழும்  வேளையில் மங்கலச் சொல்லாக, 'நீ வாழ்வாயாக' என்ற பொருளில் முதலில் கூறப்பட்டது..)

பெண்ணே, நீ வாழ்வாயாக...

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

கதிரவன் உதயமாகும் முன்பாகக் கோழி கூவுகிறது.. நாரை முதலான பறவைகள், சத்தமிடத் துவங்குகின்றன... 

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

திருக்கோயில்களில், ஏழு ஸ்வரங்களாலான இசையை எழுப்பும் ஏழு வித இசைக் கருவிகள் ஒலிக்கத் துவங்குகின்றன. வெண்சங்கு ஒலிக்க, திருக்கோயில்களில் பூசைகள் துவங்கி விட்டன. 

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

சோதி உருவானவரும், ஒப்புவமை இல்லாத,  கருணைப் பெருங்கடலுமான சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம்..உனக்கு அது கேட்கவில்லையா!!.. 

ஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

இது எத்தகைய உறக்கமோ?!!வாயைத் திறந்து பதிலுரைக்கக் கூட‌ மாட்டேன் என்கிறாயே?!!!...(உன் வாயைத் திறந்து பதிலாவது கூறு என்பதாகவும் கொள்ளலாம்)

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

திருக்கரங்களில் சக்கரம் ஏந்திய திருமாலைப் போல் இறைவனாரிடம் அன்புடையவள் ஆவேன் என்று நீ உறுதி கூறிய திறம் இவ்வாறோ?!!! ஊழிக்காலமாகிய பிரளய காலத்தில், யாரிடம் இவ்வுலகப் பொருட்கள் எல்லாமும் ஒடுங்குகிறதோ, முதல்வனாகிய அந்த  இறைவனை, உமையொரு பாகனைப் பாட எழுந்து வாராய்!!!!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

'வாழி' என்ற சொல், தோழி நன்கு வாழ்தலை, அதாவது ஆன்மீகப் பெரு வாழ்வு வாழ்தலை உடையவள்.. ஆகவே ' நீ வாழ்வாயாக' என்று வாழ்த்தி, அவ்விதம் பெருவாழ்வு வாழ விரும்புபவளுக்கு பேருறக்கம் தகாது என உணர்த்தினர்...

கோழி முதலான பறவைகள் சிலம்புவது, விட்டு விட்டு ஒலிக்கும் அவற்றின் குரலோசையை மட்டுமல்லாது, ஆன்மீக விழிப்பு நிலை ஏற்பட்டு, யோக சாதனை பயில்வாருக்கு, குறிப்பிட்ட சில நிலைகளில் கேட்கும் ஓசைகள் சங்கேதமாக உணர்த்தப்பட்டன.. வெண்சங்கின் ஓசையும் அவ்வாறே..

கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ..

இது, 'ஒருவருக்கும் ஒப்புவ‌மையில்லாத சோதி வடிவானவனும் கருணை வடிவானவனுமான இறைவனது உயர்ந்த புகழைப் பாடினோம்' என்று வெளிப்படையான பொருள் தந்தாலும், இதில் 'விழுப்பொருள்கள்' என்ற சொல் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது..

ஒரு சொல்லில் பொதுப் பொருள் மட்டுமல்லாது, சிறப்புப் பொருள் கண்டு தெரிந்து தெளிதல் வேண்டும்..

உதாரணமாக,

'அரிய நான்மறை ஆறங்க மாய்ஐந்து புரியன்'..இதில் ஐந்து புரியன் என்பதைப் பார்க்கலாம்.

பொதுப் பொருள்: ஐந்தொழில் புரியும் இறைவன்..

சிறப்புப் பொருள்..அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக உறைபவன். இவை உயிர்க்கு இடமாக அமைவதால் புரி எனப்பட்டன.

இது போல, 'விழுப்பொருள்கள்' என்பதற்கு சிறப்புப் பொருளாக கீழ்க்கண்டவை சொல்லப்படுகின்றன.

ஒருவருக்கும் சமமில்லாத இறைவனின், பொது இயல்பை மட்டுமல்லாது சிறப்பு இயல்பையும் அறியத் தகுந்த‌ சிவஞானம் சித்திக்க வேண்டும்..என்பது ஒரு பொருள்.. 

விண்ணவ ரும்அறி யாத
விழுப்பொருள் இப்பொருள் ஆகாதே
எல்லைஇ லாதன எண்குணம்
ஆனவை எய்திடும் ஆகாதே (திருப்படை ஆட்சி.. மாணிக்கவாசகப் பெருமான்)

மாபெரும் யோக ரகசியங்கள் அறிந்துள்ள பாடலின் நுண்பொருளையும் ஆய்ந்து அறிந்து உணரத் தலைப்பட வேண்டும் என்பது இரண்டாவது பொருள்.

அது போல், 'கேழில் பரஞ்சோதி' என்பதற்கு 'அஞ்ஞான இருளை நீக்கும் சோதியான சிவபெருமான்' என்னும் பொருளும் கூறப்படுகின்றது.

'ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ'... 

'நஹி நிந்தா ந்யாய'த்தின் அடிப்படையில், ஒரு தெய்வம் பற்றிச் சொல்லும் போது, மற்ற தெய்வங்கள் அந்தத் தெய்வத்தைத் துதித்ததாகச் சொல்வது மரபு...

அவ்வழியில், ஒரு புராணக் கதை இந்த வரியில் நினைவுபடுத்தப் படுகின்றது.. 'சக்கரப்படை' வேண்டி, சிவனாருக்கு ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யத் துவங்கினார் திருமால். சிவ லீலையால், பூசை செய்யும் வேளையில், எடுத்து வைத்திருந்த ஆயிரம் தாமரை மலர்களில், ஒன்று குறைந்தது. தாமரை மலரை ஒத்த தம் திருக்கண்களில் ஒன்றையே ஆயிரமாவது மலராக எம்பெருமானுக்கு அர்ப்பணம் செய்ய முயன்ற போது, எம்பெருமான் தடுத்து, 'புண்டரீகாக்ஷன்' என்னும் திருநாமத்தையும், சக்கரத்தையும் தந்தருளினார்  என்பது புராணம்.. ஆகவே, 'ஆழி தனக்குக்  கிடைப்பதற்காக, நெறிமுறை தவறாது பக்தியுடன் பூசனைகள் செய்த திருமாலைப் போல், பக்தியில் சிறந்தவள் ஆவேன்' என்று தோழி கூறிய உறுதி,  இது போல் தூங்குவதில் வந்து முடிந்ததைக் கண்டு நகைத்தனர் தோழியர்.

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி் (போற்றித் தாண்டகம், அப்பர் சுவாமிகள்)

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

இதில் ஏழைப்பங்காளன் என்பதற்கு மூன்று விதமாகப் பொருள் கூறப்படுகின்றது..

ஏழைகளுக்காக இரங்குபவன்,ஏழைப்பங்களான்' என்று கருணையில் மிக்கவனான எம்பெருமானைக் கூறுவது ஒரு விதம்.

ஏழை==பெண், உமை.. சிவனார் மாதொரு பாகனாகத் திகழ்வதைச் சுட்டுவது ஒரு விதம்..

ஏழை என்ற சொல், உண்மையில் இறைகருணையாகிய செல்வம் இல்லாதவரைக் குறிக்கும்...அவ்விதம் கருணையைப் பெறாது, பெற முயலாது இருப்போரையும் தம் கருணையால் காப்பவர் இறைவன் என்பதால் 'ஏழைப் பங்காளன் என்று  குறிக்கப்பட்டார்.

'பங்காளனையே' என்று 'ஏ' காரமாகக் கொண்டது, நீ வழிபடு தெய்வமாகக் கொண்ட சிவனைத்தான் பாடு என்கிறோம் என்பதாகப் பொருள் கொண்டு, தோழியின் ஏக தெய்வ வழிபாட்டுச் சிறப்பை உணர்த்திற்று..

பாடல் # 9 

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

இது வரை நாம் ஓதிய பாடல்களில், தோழியர்கள், தம்மைச் சேர்ந்தோரை ஒவ்வொருவராக எழுப்பிய வகை கூறப்பட்டது. இந்தப் பாடலில், அவர்கள் எல்லோரும் பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய பின், முதற்கண் இறைவனைப் பாடித் துதிப்பது கூறப்படுகின்றது..

பொருள்:

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

காலத்தால் மிகவும் முற்பட்டனவென்று அறியப்பட்ட பழம்பொருள்களுக்கும், முற்பட்ட பழமையான பரம்பொருளே!!.. 

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

பின்னர் தோன்றப்போகும் புதிய பொருள்களுக்கும் புதிய பொருளாகி நின்ற தன்மை உடைய இறைவனே!!. 

உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

உன்னை ஆண்டவனாகப் பெற்ற, சிறப்புப் பொருந்திய அடியார்களாகிய நாங்கள், உன் தொண்டர்களது திருவடிகளையே வணங்குவோம்!!..அவர்களுக்கே உரிமை உடையவர்களாக எங்களைக் கருதிக் கொள்வோம்!!..

அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

அத்தகைய சிவபக்திச் செல்வர்களே எங்களுக்கு கணவராவார்கள்!!.. அவர்கள் உகந்து கட்டளையிட்ட பணிகளை, அவர்கள் மனதோடு பொருந்தி நின்று, அவர்களுக்கு அடியவராய் ஏவல் செய்து முடிப்போம். 

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

எங்கள் பெருமானாகிய இறைவனே!!.. எங்களுக்கு நாங்கள் விரும்பிய இம்முறையிலான வாழ்வைக் கிடைக்குமாறு அருள் செய்வாயாக. அவ்விதம் செய்வாயாயின், நாங்கள் குறையும் இல்லாது இருப்போம்!!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே'== இது இறைவனாரின் கால தத்துவத்துக்கு அப்பாற்பட்ட தன்மையைச் சொன்னது. இறைவனாரே உலகப் பொருட்களின் தோற்றத்துக்குக் காரணமாயினாராதலின், அனைத்திற்கும் முற்பட்டவரானார்..என்றும் புதிதான பேரானந்த நிலையின் உருவாய் நின்றிருப்பதால், புதிய பொருள்களுக்கும் புதியவரானார்.

(முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்(கு) இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.(திருவம்மானை==மாணிக்கவாசகப் பெருமான்.)

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.(அப்பர் சுவாமிகள்)

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் (சிவஞான சித்தியார்)

சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை  

சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.

இதில், தாச மார்க்கம் இப்பாடலில் விளக்கப்படுகின்றது.. இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே  தாச மார்க்கம்   இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.

பெருமான் மீது பக்தி மீதூறப் பெற்ற இறையடியார்களே தம் கணவராக வர வேண்டும் என்றதும், அவர்தம் மனதோடு பொருந்தி வாழ்ந்து, அவர் இட்ட பணியைச் செய்து முடிப்பதாகக் கூறியதும் இறையடியார்க்குச் செய்யும் அரும்பணியின் பெருமையை உணர்த்தியது..

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்

'எம் தலைவனாகிய நீர், இது ஒன்றையே அருளுவீராயின் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை' என்றது 'தாசமார்க்கத்தின்' பெருமையை எடுத்துரைத்தது.. 

உழவாரப் பணி செய்த அப்பர் பெருமானும், அடியார்கட்கமுதளித்து உய்ந்த அப்பூதி அடிகளாரும் தாச மார்க்கத்தினால் இறை கருணை பெற்ற அருளாளர்களுக்குச் சிறந்த உதாரணங்கள்..

பாவை நோன்பு நோற்றலின் பயனாக, நல்லதொரு கணவரை வேண்டும் பாடலான இதை பக்தியுடன் பாடித் துதிப்பவருக்கு நல்லதொரு மணாளன் அமைவார் என்பது பெரியோர் கூற்று.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. பதிவு அருமை இந்த
    படைப்பை புத்தகமாக வெளியிடுங்கள்

    தொழில் நுட்ப முன்னேற்றத்தில்
    தொலைவில் இருந்தாலும் அறியும் படி

    மின்புத்தகமாகவும் வெளியிடலாம்
    மிகையாக சொல்லவில்லை உண்மையில் சொல்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர்ந்த பேராதரவுக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி!!... இறையருள் கருணையினாலேயே இவ்வாறு பதிவுகள் அமைகின்றன. தங்கள் யோசனையைக் கவனத்தில் கொள்கிறேன் ஐயா!!... மிக்க நன்றி!!

      நீக்கு
  2. தாங்கள் கொடுத்த பொருள்களுக்கு எல்லாம்
    தாராலமாக தரலாம் பல அகச்சான்று உதாரணத்திற்கு....

    ஒருவன் என்னும் ஒருவன் காண்க (மணிவாசகம்)
    மாலுக்கு ஒர் ஆழி ஈந்தாய் போற்றி (அப்பர்)
    அப்பாலுக்கும் அப்பாலுக்கும் அப்பாலாய் (அப்பர்)
    வாழ்வெனும் மையல் விட்டு (சித்தியார்)

    தாங்கள் அறியாததா..எடுத்துத்
    தந்தோம் இன்னமும் மெருகேற்ற..

    நலம் பெறுக..
    நண்மையே பெறுக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரியாதவை நிறைய இருக்கின்றன ஐயா!.. கற்றது கைமண்ணளவு அல்லவா!!.. தாங்கள் கூறிய பாடல்களில் இரண்டை இணைத்திருக்கிறேன்(பதிவின் நீளம் கருதி..) மற்றவற்றையும் சமயம் வரும் போது இணைத்து விடுகிறேன்.. தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா!!

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..