நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 19 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI....ஆதிரையான் அடிமலர்கள் போற்றி!!... திருவெம்பாவை!!

Image result for வாதவூரார், சிவபெருமான்
தத்துவச் சுரங்கம் திருவெம்பாவை. இதன் பொருள் மிக ஆழமானது. இதைச் சொல்வது என்பது, சாதாரணமான செயலல்ல.. இருப்பினும் இதைச் செய்ய என்னை ஊக்கிய தோழி மேகலா அவர்களுக்கும், உற்சாகப்படுத்திய ஷைலஜா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றி!!.. இதில் எவ்விடத்திலேனும் என்னை அறியாது நான் தவறிழைப்பேனாயின் பெரியோர்கள் திருத்தி அருளக் கோருகிறேன்.
மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவெம்பாவை

சத்தியை வியந்தது!!!

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!

 மார்கழி வந்து விட்டது!!!

"யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவார்"  (சிவஞான சித்தியார் )
என்று சிவனார் திருப்பாதம் போற்றித் தொழுதேத்தும் பொழுது புலர்ந்து விட்டது!!!.. ஒளி பொருந்திய, வாள் போன்ற நீண்ட விழிகளை உடைய பெண்ணே!!!..முதலும் முடிவும் இல்லாத அருட்பெரும் சோதியான இறைவனை நாங்கள் எல்லோரும் புகழ்ந்து பாடுகின்றோம்!!.. இதைக் கேட்டும் நீ ஏன் எழவில்லை?!! உன் செவிகளுக்கு என்னவாயிற்று?!!!.. ஓசை புகாத வலிய காதுகளா அவை?!!. நாங்கள் ஈசனாரின் வார்கழல்களை வாழ்த்திய ஒலி, ஒரு பெண்ணின் செவிகளில் விழுந்ததுமே, அவள், இறைவன் நினைவால் பரவசமெய்தி, விம்மி விம்மி அழுது, தான் , தன் உடல் என்ற உணர்வினை இழந்து, மலர் நிறைந்த படுக்கையின் மேலிருந்து புரண்டு கீழே நிலத்தில் விழுந்து, மூர்ச்சித்தாள். என்னே அவள் தன்மை!!!

இப்போது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் பாவை நோன்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
பாவை நோன்பு என்பது மிகப் பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் நோன்பு. மார்கழி நீராடல், தைந்நீராடல் (திருவாதவூரடிகள் புராணத்தில் கூறப்பட்டவாறு மார்கழிநீராடல் திருவாதிரைக்குப் பத்துநாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில் முடிவு பெறும்.  தைந்நீராடல் மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நடைபெறும்) என்ற பெயர்களால் இது அறியப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் பாடல்கள், இம்மாதத்தில் பெண்கள் ஒன்று கூடி,  விடியலில் தம் தோழியர் இல்லந்தோறும் சென்று, அவர்களை எழுப்பிக் கொண்டு நீராடச் செல்லும் முறையில் அமைந்துள்ளன.

இங்கு, உண்மையில், 'உறங்குவதாக'க் குறிப்பது,   மல இருளாகிய‌ தூக்கத்தில் மூழ்கியுள்ள ஆன்மாக்களையே(‘மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள் செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவை’ =திருப்பெருந்துறைப் புராணம்). அத்தகைய ஆன்மாக்களை, பக்குவம் பெற்ற, உயர்நிலையை அடைந்த ஆன்மாக்கள், இறையருளைப் பெறுவதற்காக அழைத்தலே தோழியர் கூவி அழைத்தல்.

'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பதற்கேற்ப, இறைவனது திருவருளை வணங்கி வேண்டுகிறது இந்தப் பாடல்.

'அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள'(குறள்)

'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி'== திருவண்ணாமலையில் அருளப் பெற்றது திருவெம்பாவை என்பதால், அங்கு சோதி வடிவாய், விண்ணையும் மண்ணையும் கடந்து இறைவன் திருவுருக் கொண்டது இங்கு கூறப்படுகின்றது. இறைவன், முழுமுதற் பரம் பொருள் என்பதும், கருணையில் மிக்கவன் என்பதும் இங்கு உரைக்கப்படுகின்றது.

வாள்தடங்கண் மாதே வளருதியோ === மங்கையரின் விழிகளுக்கு உவமையாக, வேல், மான்,மீன், வாள் முதலியவற்றைக் கூறுதல் வழக்கம். இங்கு குறிப்பாக‌ 'வாள்' கூறப்பட்டது சற்றே சிந்திக்கத் தக்கது. வாளை, கூர்மையான அறிவின் அடையாளமாகச் சொல்வதுண்டு. இங்கு வாள் என்பதை   மெய்யறிவு என்னும் பொருளில் கொள்ளலாம். அறிவுக்கண்ணாகிய மூன்றாவது கண் திறந்து விழிக்காது உறங்குவதே மறைபொருளாகக் குறிப்பிடப்படுகின்றது.

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்

மெய்யான பக்தர்கள், இறைவன் திருநாமம் கேட்டதும், கண்ணீர் பெருக்கி ஆனந்தப் பரவச நிலையை அடைவார்கள். அத்தகைய ஆன்மீக உயர்நிலையை நீயும் அடைய வேண்டும் என்று தோழியை அழைப்பது போல் நம்மையும் அழைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!


(காணொளியை வலையேற்றிய அன்பருக்கு என் மனமார்ந்த நன்றி!)
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. இந்த பதிவினை நேற்றே எதிர்பார்த்தோம்
    இன்று தான் என திருவருள் எண்ணும் போது

    இன்பமே எந்நாளும் துன்பமில்லை என
    இந்த அப்பர் வாக்கை நினைவில் கொண்டு

    மகிழ்கிறோம்
    மனதார வாழ்த்துகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!!.. இறையருளால், திருவெம்பாவையை தொடர் பதிவுகளாக அளிக்க உத்தேசம்...தங்களது வாழ்த்துக்களையும் வழிநடத்துதலையும் எப்போதும் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா!!

      நீக்கு
  2. விளக்கம் மிகவும் அருமை...

    சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..