அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!!!!.
கார்த்திகை (மார்கசீர்ஷ) மாதம், வளர்பிறை ஏகாதசி, அர்ஜூனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட புண்ணிய தினம். ஒவ்வொரு வருடமும், இது 'கீதா ஜெயந்தி' தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஒரு புனித நூலுக்கு ஜெயந்தி தினம் கொண்டாடுவது என்பது 'பகவத் கீதை'க்கு மட்டுமே. வேறு எந்த நூலுக்கும் இந்தப் பெருமை கிடையாது.
26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிப்பதாக இருக்கிறது.
முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.
அலைகடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்த 'பகவத் கீதை' பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. 'உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை' இம்மூன்றும் பிரஸ்தானத்திரயம்.
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா - (மஹா. பீஷ்ம. 43/1)
என்று வியாஸமஹரிஷி, கீதையின் பெருமையைப் போற்றுகிறார்.
வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை.
கீதையென்னும் ஒப்பற்ற தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினரையும் ஆகர்ஷித்ததால், கீதா ஜெயந்தி, சிங்கப்பூர், மலேசியா, பாலி, கம்போடியா, ஆக்லாந்து, பெர்த், மெர்ல்போன், கேன்பரா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.
பகவத் கீதையை உயிரென மதிப்பவர் பலர் வாழும் நம் நாட்டில், கீதா ஜெயந்தி, மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றது.வடநாட்டின் பல மாநிலங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், கீதை நூலுக்கும் பூஜைகள் செய்து, மலரிட்டு வணங்கி வழிபடுகிறார்கள்.
அன்றைய தினம் ஏகாதசி என்பதால், முழு உபவாசமிருக்கிறார்கள். தனியாகவோ பலர் சேர்ந்தோ, கீதையின் 700 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறார்கள்.
அர்ஜூனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்த இடமாகிய குருக்ஷேத்திரத்தில், கீதா ஜெயந்தி, மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்கு இது ஐந்து நாள் திருவிழா. பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.
எத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் அமுதவாக்காக வெளிவந்த பகவத் கீதையை, இறைவனுக்குச் சமமாக வழிபடுகின்றோம். உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.
கீதா சாரம்:
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
யோகமே உலகப் பொருட்கள் அனைத்தின் தோற்றமும் ஒடுங்குதலும் ஆகும் என்கிறார் ஸ்ரீஅரவிந்தர். கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் 'யோகம்' என்ற சொல்லுடனே வழங்கப்படுகின்றன. விஷாத யோகம்,சாங்கிய யோகம்,கர்மயோகம் என்ற பெயர்களுடன் தொடருகின்ற இந்த அத்தியாயங்களின் உட்கருத்தை உண்மையாக அறிய விழைவோர் உண்மையில் பேறு பெற்றவர்களே!!.
கீதா ஜெயந்தி தினத்தன்று, நம்மால் இயன்றவரை, பகவத் கீதையைப் பாராயணம் செய்வோம். முடிந்தால், தினமும் தொடரலாம் இதை. உள்ளத்திருள் நீங்கி, தெள்ளத்தெளிவாக, உண்மைப் பொருள் தோன்றும் நிச்சயம்.
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
உங்கள் முயற்சி வெற்றி பெற
பதிலளிநீக்குஉளமார்ந்த வாழ்த்துக்கள்...
OM SAI RAM .. gEETHA JEYANTHI DETAILS SUPER THANKS FOR THIS TIPS
பதிலளிநீக்குESSAR
பகவத் கீதை(Gita)in tamil mp3 free download
பதிலளிநீக்கு