நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 23 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI..SONG 5...திருவெம்பாவை......பாடல் #5.. மாலறியா நான்முகனுங் காணா !!

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

சிவனாரின் திருவடியை அறிய வேண்டுமென்று திருமால் முயற்சி செய்தும் கை கூடவில்லை. அவரது திருமுடியைக் காண வேண்டும் என்ற பிரமனது முயற்சியும் வெற்றி பெற வில்லை. இவ்வாறு, திருமாலும் பிரமனும்  அறிய முடியாத அண்ணாமலையாரை நாம் அறிவோம் என்று, பாலும், தேனும் போல் சுவையுடைய பொய்களைப் பேசும் வஞ்சகீ, உன் வாசல் கதவைத் திறவாய்.

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

இப்பூவுலகினரும், வானுலகினரும்,பிற உலகினரும், அறிவதற்கு அரிதாக இருக்கின்றவர் எம்பெருமான். அவரது அழகையும், நம் மீது கொண்ட பெருங்கருணையினால் நமது குற்றங்களை எல்லாம் பொறுத்து ஆட்கொண்டருளும் தகைமையையும் வியந்து பாடி, சிவனே சிவனே என்று நாங்கள் முறையிடினும், அதை உணராது துயில் நீங்காது இருக்கின்றாய். இதுவோ வாசம் வீசும், சாந்தினால் ஒப்பனை செய்யப்பட்ட‌ கூந்தலை உடைய உனது தன்மை!!!


இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மாலறியா, நான்முகனுங் காணா  மலையினை: 'திருமாலும், பிரமனும் அறிய முடியாத மலை' என்ற வரி, திருவண்ணாமலையையும், மலை போல் பெரியவன் இறைவன் என்பதையும் ஒரு சேர வெளிப்படையாகக் குறிக்கிறது. திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது என்பது இவ்விடத்தில் நினைவில் கொள்ளத் தக்கது.

(“வேதக் காட்சிக்கும் உபநிடதத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன்” (கந்தபு. 3 : 21 : 127))

வாய்க்கு அழகு உண்மை பேசுதல், உள்ளத்திற்கு அழகு நேர்மையாக இருத்தல். உண்மையில் அக அழகே அழகு. புற அழகு மறைந்து போவது.

பக்குவமில்லாத தோழி, இங்கு, 'நான் இறைவனை நன்கு அறிவேன்' என்று பொய் (பொக்கங்களே= பொய்கள்) கூறுகின்றாள். 

பால் மன அமைதியைத் தருவது. தேன், தேனீக்களால் சோம்பலின்றி சேகரிக்கப்படுவது. அதனை சுயநலமின்றி, பிறருக்குத் தேனீக்கள் தருகின்றன. மன அமைதியும், தன் நலம் வேண்டாத ஆணவமற்ற தன்மையையும் கொண்டிருப்போர், தங்களைப் பிறர் உயர்வாக எண்ணுவதற்காக தேவையற்ற பொய்களைக் கூறார். இதன் மூலம், பாலும் தேனும் ஊறுதல் போல அதாவது, தன்னலம் இல்லாத அமைதியானவள் போல், தன்னை காட்டிக் கொள்ளும் தோழியின் குணநலன் விளக்கப்படுகின்றது.

'பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்' என்றது, 'உன்னிடம் இல்லாத நற்குணங்களை, இருப்பனவாகப் பொய் கூறும், வஞ்சகி, உன் அறிவினால், உன் உள்ளத்து நிலையை அறிந்து கொள்' என்பதன் குறிப்பாகும். சத்தியமே இறைவன். சத்தியமல்லாத குணங்கொண்ட தோழி 'வஞ்சகி' என கடிந்து அழைக்கப்பட்டாள்.

'சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்' என்றது எத்துணை சொல்லியும் கேளாது உலக மாயையில் ஆழ்ந்திருக்கும் தோழியைக் குறித்து வருந்தியது. எத்தனையோ மஹான்கள் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியில், ஆணித்தரமாக, திரும்பத் திரும்ப உபதேசிக்கப்பட்ட அவர்களது உபதேச மொழிகளைச் சற்றும் எண்ணாது, மனக் கதவை திறவாது பூட்டி வைத்திருக்கும் பக்குவமில்லாத ஆன்மாக்களைக் குறித்து வருந்துவதாகும் இது.

'ஏலக் குழலி ' என்பதற்கு, 'நன்கு ஒப்பனை செய்யப்பட்ட, சாந்தணிந்த கூந்தலை உடையவள்' என்பது பொருள். இதனால், அழியும் இவ்வுடலை ஒப்பனை செய்து அழகு படுத்துபவள் தோழி என்பது குறிப்பு. இவ்வுலகப் பொருட்கள் பால் உள்ள பற்று விடவில்லை தோழிக்கு. இவள் எங்ஙனம் இறைவனை அறிவாள்? என்பது மறைபொருள்.

'அறிவரியான் கோலமும், கோதாட்டுஞ் சீலமும்' என்றது, இறைவனாரின் திருக்கோலத்தையும், சீலத்தையும் ஒருங்கே சுட்டுவன. அவ்வாறு உள்ளும் புறமும் மெய்யழகு பொருந்தியவன், மெய்யழகை அன்றி வேறெதையும் விரும்பான்.

இறைவனார் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனையும், தாழை மலரையும் இறைவனார் சபித்தார். ஆகவே, உண்மையல்லாதவரையும், நிலையல்லாதவற்றை நிலையானது என்று எண்ணி மயங்குவாரையும் இறைவன் விரும்பான் என்பது உட்கருத்து.

மேலும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பாடலில் இறைவன் ஐந்தொழில்படுவது விளக்கப்படுகின்றது. பிரமனும், திருமாலும், ஆக்கல், காத்தல் தொழில்களைக் குறிக்கிறார்கள். 'ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்' என்ற வரி, யாரும் அறியாத என்று இறைவனாரின் மறைத்தல் தொழிலையும், 'ஆட்கொண்டருளி' என்பது அருளலையும், 'கோதாட்டுஞ் சீலமும்' (கோது=குற்றம்) குற்றங்களை, மும்மலங்களை நீக்குதல் என்ற பொருளில் அழித்தலையும் சுட்டுகின்றது. 'கோலமும்' என்றது நம் முன் தோன்றும் நிலையற்ற‌ உலகப் பொருட்கள்.

மேலும், ஞாலமே, விண்ணே, பிறவே என்று மூன்று 'ஏ' காரங்கள் சேர்த்தது,  எண்ணுப் பொருள். இதன் மூலம், அனைத்து உலகங்களும் எண்ணப்பட்டன. ஆகவே, அனைத்து உலகங்களையும் தன்னுள் அடக்கிய, எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்ற, ஈசனாரின் 'விராட் ஸ்வரூபம்' விவரணம் செய்யப்பட்டது. 'உலகெலாம் நிறைந்து உள்ளும் புறம்புமாய' விமலனின் பேரொளி மயமான திருவுருவை இவ்வுலக வாழ்வினின்று விடைபெறும் சமயத்தில் நினைக்கும் பேறு பெற்றவர், பேரின்ப வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம். பேரொளி மயமாக இறைவன் தோன்றிய திருவண்ணாமலையை நினைக்க முக்தி கிட்டும் என்பதன் தாத்பர்யம் இதுவே.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..