பாடல் எண் # 16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
பொருள்:
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை
மேகமே!! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேலே எழும்பி, எம்மை உடையவளாகிய உமையவளின் திருமேனி போல் கருநீல வண்ணம் கொண்டாய்.
ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித்
எம்மை அடிமை கொண்டவளின் சின்னஞ் சிறிய சிற்றிடை போல் மின்னி விளங்கி, எங்கள் பிராட்டியாகிய அம்பிகையின் திருவடியிலிருக்கும் சிலம்பின் ஒலி போல் இடித்து,
திருப்புருவம்
என்னச் சிலைகுலவி
அம்பிகையின் திருப்புருவம் போல் வானவில் இட்டு,
நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
நம்மை அடிமை கொண்ட அம்பிகையைப் பிரியாத எம் தலைவனாகிய சிவபிரானின் அடியார்களுக்கும்,
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
நமக்கும், அவள் உள்ளம் உவந்து, முந்திச் சுரக்கின்ற இன்னருள் போல, ( மழையாகப்)பொழிவாயாக!..
இந்தப் பாடலில், இறைவன் அம்பிகையின் மூலமாகவே உயிர்களுக்கு அருளுவான் என்பது குறிக்கப்பட்டது.. ஐயனின் அருள் அம்பிகையின் மூலமாகவே முதலில் கிடைக்கப்பெறும். அதாவது அம்பிகையே முதலில் அருளுபவள். அதன் பின்னரே எம்பிரான் அருள் கிடைக்கும்.
இந்தப் பாடல் 'எதிர்நிலை உவமம் (விபரீதோபமாலங்காரம்) கையாளப்பட்டிருக்கிறது..பாடு பொருளை, உவமிக்கப்படும் பொருளாகக் கூறுவது மரபு. அங்ஙனம் இன்றி, இங்கு மாற்றிக் கூறப்படுகின்றது. உதாரணமாக, அம்பிகையின் திருமேனி கார்மேகம் போல் திகழ்கிறது என்றுரைக்காது, மேகம், அம்பிகையின் திருமேனி போல் திகழ்கிறது என்கிறார்.
பாவை நோன்பு, பெரும்பாலும் மழை வேண்டியே கடைபிடிக்கப்படுவதால், பாவையர் மழை வேண்டிப் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
உள்ளுறையாக, உமையம்மையின் அருள் மழை பொழிய வேண்டுவதாகவும் இது அமைந்திருக்கிறது.
இப்பாடலில் வரும் 'உடையாள்' என்ற பதத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம்.
முதல் முறை வரும் உடையாள்== அனைத்துலகத்தையும் உடையவள் என்ற பொருளில் வரும்.
எம்மை ஆளுடையாள்== இது, அம்மை, முழுமையாக ஆட்கொண்டருளி, இவ்வுலக விடயங்களிலிருந்து(மாயையிலிருந் து) நீக்கி, தன் வழியில் சேர்த்துக் கொள்பவள் என்பதைக் குறிக்கும்.
நந்தம்மை ஆளுடையாள்== நம்தம்மை ஆளுடையாள்..இப்போது நம் அனைவரையும் உடையவள் என்பது, எல்லாப் பொருள்களிடத்தும், ஆன்ம ஸ்வரூபமான இறைவனையே காணும் ஆன்ம போதக் காட்சியைப் பெற்று விட்டமையைக் குறிக்கிறது. அம்பிகையின் அருளால், மாயத் திரை விலகி, சிவனருள் சித்திக்கப்பெற்றது.
மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.(மாணிக்கவாசகப் பெருமான்).
இதில் சூக்குமமாக, சாதகர்களுக்கு அம்பிகை அருள் செய்யும் பான்மை விளக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்..'நந்தம்மை' என்ற சொல்லை ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும் என்றும் குறிக்கின்றனர்.
பெரிய ஐந்தெழுத்தாகிய(ஸ்தூல பஞ்சாட்சரம்) 'நமசிவாய' மந்திரத்தின் மகிமையைத் துதிப்போம்!!..
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!
ருத்ராம்சமான ஸ்ரீஆஞ்சநேயரின் திருஅவதார தினம், 'ஸ்ரீஹனுமத் ஜெயந்தி' இன்று!!.. ஸ்ரீஆஞ்சநேயரின் திருவருட்பிரசாதம் நம் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்!
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இந்த உண்மை விளக்க பாடலினை
பதிலளிநீக்குஇங்கு பகிர்ந்து கொள்கிறோம்
சிவனருள் ஆவி திரோதம்மலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் இவன்நின்று
நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று