கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். (திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம்)
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. (திருமூலர், திருமந்திரம்)
பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனாம் சிவபெருமானை ஆதியும் அந்தமும் நடுவுமாய்த் தொழும் சைவ சமயத்தைப் பற்றி, நானறிந்த வரையில் இக்கட்டுரையில் சொல்லப் புகுகின்றேன்.
மானிட வாழ்வை நல்வழிப்படுத்தி, அந்த உயிரைப் பரிபக்குவ நிலைக்கு இட்டுச் செல்வதே சமயம் ஆகும் இந்து சமயம் என்பது சைவ சமயமே என்பது சைவ சித்தாந்த வழி நடப்போரின் துணிபு. உலகளாவியது இச்சமயம். . சிவனாரை முதன்மைப் படுத்தி வணங்குவதால், 'சிவசம்பந்தம்' பெற்றது என்னும் பொருளில் சைவம் என்று போற்றப்படும் இந்தச் சமயம் அநாதியானது. அதாவது தொடங்கிய காலம் அறிய இயலாதது. சைவசித்தாந்தம் என்னும் மிகவுயர்ந்த உன்னத நெறி, சைவ சமயத்தின் உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.
சிவனாரை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுவோரே சைவர். இறைவன், அனைத்தையும் தாமே அறியும் பேரறிவு உடையவன். அவர் ஒருவரே பதி. இறைவன் எண்குணத்தான்.
எண்குணமாவன, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.
சைவ சித்தாந்தத்தின் படி, உயிர்கள் அநாதியானவை. அவை அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன. இறைவனானவர் அவற்றைப் படைப்பதில்லை. இறைவன் கருணை வடிவானவர். நாம் படைக்கப்பட்டதாலேயே, இவ்வுலகில் துயருறுகிறோம். அவ்வாறிருக்க, அவர் நம்மைப்படைத்து, துன்பத்தில் உழலவிட்டார் எனில் அவர் எங்ஙனம் கருணைக்கடலாயிருத்தல் சாத்தியம்?. ஆகவே ஆன்மாக்களை இறைவன் படைக்கவில்லை.
ஆனால் அவற்றின் மும்மலங்களை நீக்கும் பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைத்தல், படைத்தவற்றைக் காத்தல், மீண்டும் அவற்றை ஊழிக்காலத்தில் ஒடுக்குதல், ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல், வீடுபேறாகிய முத்தியின்பத்தை அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிகிறார்.
ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே. (திருமூலர், திருமந்திரம்)
தநு, கரணம், புவனம் போகம் ஆகியவற்றின் பொருள், முறையே,
தநு= உடல்,
கரணம்=புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம்(மனம், புத்தி) முதலியன,
புவனம்= வினையை அறுவடை செய்யும் களமாக உள்ள இந்த உலகம்,
போகம்= அனுபவிக்கப்படும் பொருள்.
சிவனார், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறார். இதுவே சைவசித்தாந்தம் காட்டும் அத்துவிதம் (இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு) ஆகும்.
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே” (சிவஞானபோதம்)
சைவ சித்தாந்தம், பசு,பதி, பாசம் என்னும் மூன்று பெரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது.
பசு= ஆன்மா
பதி= இறைவன்
பாசம்= ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். திரோதானம், மாமாயை ஆகியவற்றைச் சேர்த்து ஐவகை மலங்களாகக் கொள்வதும் உண்டு.
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. (திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)
அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல் மனித ஆன்மாவை ஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
ஆணவம்: நான், என்னுடையது எனும் கருத்தே ஆணவமாகும். இது சகஜ மலம் என்று கூறப்படுகிறது ஆணவமலம், பிறக்கும் போதே, ஆன்மாவோடு சேர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆன்மா உடலெடுத்து, எங்கும் சென்று, எதையும் செய்ய இயலும்.
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே. (திருமூலர், திருமந்திரம்)
உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார். இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார். சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு கன்மமும் மாயையும் ஆகந்துக மலம் (இடையில் சேர்க்கப்பட்டது) எனப்படுகிறது.
கன்மம் என்பது, ஆன்மாக்கள் பிறவியெடுத்துச் செய்த புண்ணிய பாவங்கள்(நல்வினை, தீவினையாகிய இரு வினைகள்). நல்வினை, தீவினைக்கேற்ப பலனளிப்பவர் இறைவனே.
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
(நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்பெருமான் தேவாரம்).
ஒவ்வொரு பிறவியிலும் இவ்வாறு சேர்ந்த கன்மங்கள் சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இந்த சஞ்சித கன்மங்கள், இன்ப துன்பங்களைத் தந்து பயன்படும்பொழுது பிராரத்தம் எனப் பெயர் பெறும். மனம், வாக்கு, காயம் இவற்றால், எடுத்த பிறவியில் செய்த இருவினைகள் ஆகாமியம் எனப் பெயர் பெறும். மூலகன்மம் நுண்வினை. மற்ற மூன்று வினைகளும் பருவினை எனப்படுகிறது.
ஒரு விதையில் மரமும், மரத்தில் விதையும் தொடர்ந்து வருவது போல், கன்மம், ஆன்மாக்களைத் தொடரும்.
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். (அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார் )
செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. (சிவஞான சித்தியார்)
மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது.
அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த (இருபா இருபஃது, அருணந்தி சிவாச்சாரியார்)
சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்றன.
மும்மலங்களின் அடிப்படையில் சீவர்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் மட்டும் உடையவர், விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இருமலமுடையோர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலமுடையோர் சகலர் ஆவர்.
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. (திருமூலர், திருமந்திரம்)
வீடுபேறாகிய முத்தி நிலை:
வீடு பேறு என்பது உயிர்கள், மும்மலம் நீங்கப் பெற்று சிவனாரின் திருவடிகளில் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். 'திருவடிகளில் கலந்து' என்று சொல்லப்பட்டாலும் சிவனாரின் அடிமையாய், ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றலில்லாமல் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையே இது. முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவா நிலையை அடைகின்றன.
முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதன் மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.
ஆணவ மலத்தின் ஆற்றல், உயிரின், இச்சை, செயல்களை மறைக்க இயலாமல் நிற்கும் நிலையே மலபரிபாகம் எனப்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா (குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு).
(பொருள்: மலபரிபாகம் வரும்வரை, உயிர்கள், பலநாள் அலைப்புண்டு உழலும்)
மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.
புண்ணியம், பசுபுண்ணியம், பதி புண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியமாகிய சிவ புண்ணியமே, சத்திநிபாதத்தின் பயன்.
சிவபெருமானை நினைந்து, அவரை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் பதி புண்ணியம். அவ்வாறில்லாமல் செய்யப்படும் நற்செயல்கள், பசு புண்ணியம் ஆகும். பசு புண்ணியத்தின் பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியம் அவ்வாறு அழிவதில்லை.
பிற உயிர்களுக்குச் செய்யும் நற்செயல்களை, இறையருளால் செய்வதாக நினைந்து செய்யும்போது அது பதிபுண்ணியம் ஆகி விடுகிறது.
இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் (சிவஞான சித்தியார்)
சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை
சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.
தாதமார்க்கம் (சரியை): திருக்கோவிலுக்கும், அக்கோவிலில் உறைகின்ற இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே இந்த நெறி. இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.
சற்புத்திர மார்க்கம்(கிரியை): இது இலிங்கத் திருமேனிக்கு, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் ஆகும். இந்நிலையில் இறையனாருக்கு அபிடேகம் செய்தல் போன்ற வழிபாடுகளின் போது மந்திரம் கூறித் துதித்தல் வேண்டும். இவ்வழிபாடு, திருக்கோவிலில் இருக்கும் இலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படும் போது, பரார்த்தம் எனவும், ஞானாசிரியரிடமிருந்து பெற்ற இலிங்க வடிவத்திற்குச் செய்யப்படும்போது ஆன்மார்த்தம் எனவும் பெயர் பெறும். இதன் மூலமாக, சாமீபம் (இறைவனுக்கு அருகிலிருப்பது) எனும் பேறு கிட்டும்.
சகமார்க்கம் (யோகம்)
இது அட்டாங்க யோகத்தைக் குறிக்கும். அவை, இயமம்( தீய ஒழுக்கங்களை விலக்குதல்) நியமம்( நெறிமுறைகளைக் கடைபிடித்தல்), ஆதனம்(யோகாசனங்கள்), பிரணாயாமம் (பேச்சினை அடக்குதல், மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல்), பிரத்தியாகாரம்(தான் நினைத்த பொருளின் வடிவாக மாற்றிக் கொள்ளுதல்) தாரணை(மனத்தை ஒருநிலைப்படுத்துதல்), தியானம் (இறைவனை ஒளி வடிவினனாக எண்ணுதல்), சமாதி (அந்நினைவில் தன்னை மறந்திருத்தல்) ஆகியவை ஆகும்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே. (திருமூலர், திருமந்திரம்)
இதன் மூலம், சாரூபம்(இறைவனின் உருவ அடையாளங்கள்) பெறலாம்.
சன்மார்க்கம் (ஞானம்): பசு, பதி, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி தெளிவாக உணர்வதால் மும்மலம் நீங்கி ஞானம் கிடைக்கும்.
ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை (சிவஞான சித்தியார்)
திருமறையாகிய வேதம், 28 சிவாகமங்கள், புராணங்கள், சமயக்குரவர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் அருளிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஆகியவற்றை ஓதுதல், ஓதுவித்தல், சைவசித்தாந்தப் பொருள்களைத் தக்கவரிடத்து கேட்டல், கேட்பித்தல், இறைவனாரைச் சிந்தித்தல் ஆகிய ஐந்தும் சாயுஜ்ய நிலை (இறையருளை முழுமையாகப் பெறும் நிலை) தரும் ஞானமார்க்கமாம். இதில் சாயுஜ்ய நிலை 'பரமுத்தி' எனவும் ஏனைய மூன்றும் 'அபரமுத்தி' எனவும் கூறப்படுகின்றன.
(வேதங்கள் போற்றித் துதிக்கும் வேதநாயகனான சிவபெருமானை, நிர்குணப் பரம்பொருளென புகழ்ந்து தொழும் வேத ஸார சிவ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும்).
(வேதங்கள் போற்றித் துதிக்கும் வேதநாயகனான சிவபெருமானை, நிர்குணப் பரம்பொருளென புகழ்ந்து தொழும் வேத ஸார சிவ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும்).
சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டான் அடிமை போன்றதாகும்(திருநாவுக்கரசர் பெருமான்). கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றதாகும்(திருஞானசம்பந்தப் பெருமான்). யோக நெறியில், இரு தோழர்களுக்கு இடையேயான உறவைப் போன்றது(சுந்தரர் பெருமான்). ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்(மாணிக்கவாசகர் பெருமான்).
ஒரு நற்குருவை நாடி, மேற்கூறிய மார்க்கங்களைக் (ஞானம் தவிர்த்து) உணர்த்தும்படி வேண்டுதல் வேண்டும். அவ்வாறு உணர்த்துபவர் 'கிரியா குரு' ஆவார். ஞானத்தை சிவனார் ஒருவரே உணர்த்த வல்லவர் ஆதலின் அவரே ஞான குரு ஆவார்.
மேற்கூறிய மார்க்கங்களில், உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
கிரியாகுரு சரியை முதலியவற்றை, 'தீக்கை' (தீக்ஷை ,பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல்) அளித்து உணர்த்துவார்.
தீக்ஷை சபீசம்(ஓதியுணர்ந்த உத்தமர்களுக்குச் செய்வது), நிர்பீசம் (எழுபது வயதுக்கு மேற்பட்டோர், வியாதியாளர்கள், யோகத்தின் பால் ஈடுபாடுடையோர் முதலியோருக்குச் செய்யப்படுவது) என இருபெரும் வகைப்படும் அது சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகை முறைகளில் ஆசாரியரால் தரப்படும்.
தீக்ஷைகளில் சமய தீக்ஷை , விசேட தீக்ஷை, நிருவாண தீக்ஷை ஆகிய மூன்றும் முக்கியமானவையாகும்.
இதில் சமய தீக்ஷை, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணும் முறையைக் கற்பிக்கிறது. இது சைவ சமயத்தில் நுழைவதற்குத் தரும் அனுமதிச் சீட்டுப் போன்றதாகும். விசேட தீக்ஷை, அன்றாடம் சிவபூசனையைச் செய்யும் நெறியைக் கைக்கொள்ளச் செய்கிறது. நிருவாண தீக்ஷை, பாசபந்தம் அனைத்தையும் நீக்கி, சிவனார் திருவடியை அடையச் செய்வதாகும். இது சிஷ்யனின் பக்குவமறிந்து செய்யப்படுவது.
சிவனார் தம் உடலில் சரிபாதியாக விளங்கும் உமாதேவியாரோடு, திருக்கயிலையில் வாசம் புரிகிறார். திருக்கோவில்களில் இலிங்க உருவில் பேரருள் புரிகிறார். சுயம்பு லிங்கங்கள் தோறும் மூர்த்திகரித்திருக்கிறார். அன்பே சிவமாகி, சிவமே அன்பாகி நின்று விளங்குகிறார்.
தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம் மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.
சைவத்தில் வீரசைவம், காஷ்மீர சைவம் முதலிய பிரிவுகள் பல உண்டு. 63 நாயன்மார்களும் சிவநெறியில் ஒழுகி பிறவாப் பெருநிலை அடைந்தனர்.
சைவசமயம் எந்நாளும் வாழ்வது. அதற்கு சோதனைகள் நேருவது போல் தோன்றுவதெல்லாம் எம்பெருமான், அதன் புகழை ஓங்குமாறு செய்வதற்காகச் செய்யும் திருவிளையாடலே.
சைவ சமயத்தைப் பற்றிய விவரணங்களை ஒரு கட்டுரையில் அடக்குதல் கடலினைக் குடுவைக்குள் அடக்க முயல்வது போன்றதாகும். இதில் உள்ள குற்றங்குறைகளை, படிக்கும் அன்பர்களும் சான்றோர் பெருமக்களும் பொறுத்தருளுவதோடு, மேலதிகத் தகவல்களைத் தந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!!
வகுப்பறை(www.classroom2007.blogspot.in) தளத்தில், க்ஷண்மதங்கள் பற்றி நான் எழுதிய தொகுப்பில் வெளிவந்தது.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
very descriptive and incisive study of saiva sidhantha.
பதிலளிநீக்குsubbu rathinam.
அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல் மனித ஆன்மாவை ஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வேத சார சிவ ஸ்தோத்ரத்தின் பதிவு லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குபதிவு மிக நீளம் இருந்தாலும் நல்ல பதிவு. எனக்கு ஏனோ படித்தவுடன் அனிருத்த பட்டராயரின் சீடன் ஆழ்வார்க்கடியானும், சைவர்களும் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். ஆழ்வார்க்கடியான் தங்கள் பதிவை பார்த்தால் என்ன செய்வார் என்று கற்பனை செய்து பார்த்து ஒரு பதிவு இடுங்களேன்....
////sury Siva said...
பதிலளிநீக்குvery descriptive and incisive study of saiva sidhantha.
subbu rathinam/////
Thank you so much for your valuable comment sir.
///// இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குஅரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல் மனித ஆன்மாவை ஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்./////
தங்களின் சிறப்பான பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா.
//// kshetrayatraa said...
பதிலளிநீக்குவேத சார சிவ ஸ்தோத்ரத்தின் பதிவு லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
பதிவு மிக நீளம் இருந்தாலும் நல்ல பதிவு. எனக்கு ஏனோ படித்தவுடன் அனிருத்த பட்டராயரின் சீடன் ஆழ்வார்க்கடியானும், சைவர்களும் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். ஆழ்வார்க்கடியான் தங்கள் பதிவை பார்த்தால் என்ன செய்வார் என்று கற்பனை செய்து பார்த்து ஒரு பதிவு இடுங்களேன்..../////
தங்களுக்கு என் நன்றி. ஆழ்வார்க்கடியான் என்ன செய்வார்?.. பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்து சாத்துகிறது என்று இரண்டு போட்டாலும் போடுவார். இதில் கற்பனை செய்து பதிவா? ஆஹாஆஆ... இப்பவே கண்ணக் கட்டுதே.....
அன்பின் பார்வதி,
பதிலளிநீக்குமிக விளக்கமான பதிவு. இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும்.. நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
தாங்கள் வருகை தந்து சிறப்பித்தமைக்கும், தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கும் என் உளமார்ந்த நன்றி!!
நீக்குஇவற்றைப் பலமுறைகள் பலர் எழுதிப் படித்திருக்கிறேன். ஆனால் இறைவன் நம்மைப் படைப்பதில்லை எனில் படைத்தல் எவ்வாறு நிகழ்வதாக சைவ சித்தாந்தம் சொல்கிறது? அது இந்தக் கட்டுரையில் வருகிறதா? நான் கவனிக்கவில்லையோ?
பதிலளிநீக்குஇறைவனார், உயிர்களின் மும்மலங்கள் நீங்கும் பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைக்கின்றார்.இதை கட்டுரையின் எட்டாவது பத்தியில் சொல்லியிருக்கிறேன் அம்மா. சைவசித்தாந்தப்படி, உயிர்களை(ஆன்மாக்களை) யாரும் படைப்பதில்லை. ஆன்மாக்களும் அநாதியானவை. ஏழாவது பத்தியில் வருகிறதம்மா..
நீக்குகட்டுரையை ஆழ்ந்து படித்த தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டங்களிட்டு பதிவை சிறப்பித்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா!!
பிரம்மம், பரபிரும்மம் எல்லாம் அத்வைத்தம் இல்லையோ?????? இங்கே பிரம்மம் எப்படி வரும்? ஒரு பின்னூட்டத்துக்கு உங்கள் பதிலில் வந்திருக்கிறதைப் பார்த்தேன்.
பதிலளிநீக்குஇல்லை அம்மா!!. சகோதரர் திரு.க்ஷேத்ரயாத்ரா அவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்து, நகைச்சுவையாகக் கேட்ட கேள்விக்கான பதில் அது. 'பொன்னியின் செல்வனி'ல் வரும் ஆழ்வார்க்கடியான், இதைப் படித்தால் என்ன செய்வார் என்று கேட்டிருக்கிறார் பாருங்கள். அதற்கே நான் பதிலளித்தேன்.
நீக்குமாயை மூலம் படைப்புத் தொழில் நடப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். (காப்பி, பேஸ்ட் செய்ய முடியலை) அந்த மாயை என்பது என்ன? பருப்பொருளா? இதையே தான் அத்வைதத்தில் வேறுவிதமாகச் சொல்கின்றனர், மற்ற ஆசாரியர்கள் சொல்வதும் வேறுவிதம். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதே சரி என்பார்கள். :)))))))
பதிலளிநீக்குசைவ சித்தாந்தப்படி, மாயை என்பது என்றும் உள்ள அநாதியான பொருளாகும். இது உருவமற்ற ஒரே பொருளாக உள்ளது. அறிவற்ற ஜடப் பொருளாகிய அது எங்கும் நிறைந்திருக்கிறது. காரண, காரிய நிலைகளை உடையது. உயிருக்குப் பயன்படாத பொழுது ஒடுங்கியிருப்பது மாயையின் காரண நிலை. உயிருக்குப் பயன்படும் பொழுது, விரிந்து பலவாகத் தோன்றி இருப்பது அதன் காரிய நிலை.
நீக்குஜடப் பொருளான மாயையை, தொழிற்படுத்துபவன் இறைவனே!!. உயிர்கள் நல்லறிவு பெறும் பொருட்டு இவ்வாறு செய்கின்றான் இறைவன். தநு,கரண, புவன போகங்களைப் படைக்கும் பொழுது மாயையைக் கொண்டே படைக்கின்றார் இறைவர்.
தாங்கள் சொல்வது போல், ஒவ்வொரு தத்துவத்திலும், ஒவ்வொரு ஆசாரியர்கள் மாயையை குறித்து விசேஷமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நீண்ட பதிவு. இரண்டாகக் கொடுத்திருக்கலாமோ??????
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது சரிதான் அம்மா!!. இது 'வகுப்பறை' தளத்தில் ஷண்மதங்கள் பற்றி எழுதியபோது, சைவம் குறித்து நான் எழுதிய கட்டுரை. அப்படியே வெளியிட்டு விட்டேன்.தாங்கள் கூறிய அறிவுரையை நிச்சயம் நினைவில் வைத்திருப்பேன்.
நீக்குசைவமும் தமிழும் தரும் வான்முகில் வழாது பெய்க ! என்று தொடங்கி மேன்மை கொள் சைவ நீதி என்ற முடிவில் அனைத்தும் சைவம் அகிலமும் சைவ மானால் உலகில் அமைதி பிறக்கும் .
பதிலளிநீக்கு