நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 29 ஜூன், 2013

RUDRAKSHA MAHIMAI....ருத்ராக்ஷ மகிமை.


ருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ருத்ராக்ஷம் என்பது என்ன?

'ருத்ராக்ஷம்' என்ற சொல்லை, ருத்ரன், அக்ஷம்(கண்கள்) என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

ருத்ரனாகிய எம்பெருமானின் திருவிழிகளிலிருந்து தோன்றியதால் ருத்ராக்ஷம் என்ற பெயர் ஏற்பட்டது. கருணைப் பெருங்கடலான சிவபிரானைப் போல், நம் பாவங்களை நீக்கும் திறம் பெற்றதாலும், சிவபிரானின் திருவிழிகளைப் போன்ற சிறப்புடையதாலும் ருத்ராக்ஷம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

ருத்ராக்ஷம் அணிபவரை, தம் பார்வையாலேயே சிவனார் ரக்ஷிக்கிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

ருத்ராக்ஷம் தோன்றிய புராணம்:

திரிபுராசுரனை வதம் செய்வதற்காக, சிவனார் கண்கள் மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். அவனை வதம் செய்யத் தேவையான அகோர அஸ்திரம் என்னும் ஆயுதம் செய்வதற்காக, கண்களை மூடும் போது, அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பூமியில் விழுந்தது.  அந்தக் கண்ணீர் ருத்ராக்ஷ விருட்சங்களாயின. அவற்றின் விதைகளே ருத்ராக்ஷ‌ம். மற்ற விதைகளில் இல்லாத தனிச்சிறப்பாக, விதையின் இருபுறமும் துளைகள் காணப்படுகின்றன.

மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்ராக்ஷங்கள் உண்டானதாகக் கூறப்படுகிறது.

சிவனாரின் வலக்கண்ணாகிய சூரியனிலிருந்து பழுப்பு நிற ருத்ராக்ஷங்கள் பன்னிரண்டு வகைகளும், இடக்கண்ணாகிய சந்திரனிலிருந்து, வெண்மை நிறமுடைய ருத்ராக்ஷங்கள் பதினாறு வகைகளும், அக்னியாகிய நெற்றிக் கண்ணிலிருந்து, கறுப்பு நிறமுடைய பத்து வகைகளும் உண்டாயின.

ருத்ராக்ஷம் அணிவதால் ஏற்படும் பலன்கள்:

பொதுவாக சிவபிரானை வழிபடும் சைவர்களே ருத்ராக்ஷத்தை அணிந்து கொள்கிறார்கள். ருத்ராக்ஷம் அணிபவர் சிவ அம்சமாகவே கருதப்படுவார். ஏனென்றால்,பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே, இந்தப் பிறவியில் ருத்ராக்ஷ‌ம் அணியும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். ருத்ராக்ஷ‌ம் அணிய வேண்டும் என்ற எண்ணம் வருவதே புண்ணியங்களின் தூண்டுதலால் தான்.

பொதுவாக, ஆண், பெண், குழந்தைகள் அனைவருமே ருத்ராக்ஷம் அணியலாம் என்றே கூறப்படுகிறது. பெண்களுக்கு விதி விலக்கில்லை. ஆயினும் சிவ தீக்ஷை பெற்று, ருத்ராக்ஷம் அணிவது சிறப்பு.

ருத்ராக்ஷங்களில், நெல்லிக்காய் அளவுள்ளதே மிக உத்தமமானதாகக் கூறப்படுகின்றது. ருத்ராக்ஷத்தை, வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் பூண் செய்து அணியலாம். பட்டு கயிற்றில் கோர்த்தும் அணியலாம். சிவனடியார்கள், ருத்ராக்ஷத்தை மாலையாகச் செய்து அங்கங்களில் தரிக்கிறார்கள். ருத்ராக்ஷத்தைக் கோர்க்கும் போது, அதன் முகம், மேல் நோக்கி இருப்பதாகத் தான் கோர்க்க வேண்டும்.

எந்த மந்திரமோ, யாகமோ செய்து அறியாதவனும், ருத்ராக்ஷ மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம், பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுகின்றான். ருத்ராக்ஷத்தை தலையில் அணிந்து கொண்டு நீராட, கங்காஸ்நான பலன் கிட்டும்.

ருத்ராக்ஷம் அணிந்தவருக்கு, உணவு உடை முதலியவை தருபவன், சிவலோகம் அடைகிறான்.

ஒருவன் மரணம் அடையும் நேரத்தில், இதைத் தரிப்பானாகில், அவன் இறந்த பின், ருத்ர லோகத்தை அடைகின்றான். அவன் வம்சமே புனிதமடைகிறது.

பஞ்ச பூதங்களை வெல்லும் சக்தி ருத்ராக்ஷத்திற்கு உண்டு. நவக்கிரகங்களின் தூண்டுதலால், ஒருவர் தீய செயல்களைச் செய்யாமல் தடுக்கும் சக்தியும் ருத்ராக்ஷத்திற்கு உண்டு. கண் திருஷ்டியிலிருந்து ஒருவரைக் காக்கும் சக்தி படைத்தது ருத்ராக்ஷம். சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் படைத்தது. தான் இருக்கும் சூழல் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் படைத்தது  ருத்ராக்ஷம்.

தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை உண்டுபண்ணக் கூடியது ருத்ராக்ஷம்.

புருஷர்களில் விஷ்ணுவும், கிரகங்களில் சூரியனும், நதிகளில் கங்கையும், தேவர்களில் மஹாதேவரும், தேவிகளில் கௌரியும், ரிஷிகளில் காஸ்யபரும், குதிரைகளில் உச்சைஸ்ரவஸூம், எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறு மணிகளில் சிறந்தது ருத்ராக்ஷம் என்று போற்றுகிறது தேவி பாகவதம்.

கனி ரூபமாக இருக்கும் ருத்ராக்ஷத்தை, கண்ணால் கண்டாலே பெரிய புண்ணியம். அதை ஸ்பரிசிப்பது மிகச் சிறந்த நற்பலன்களைத் தரும். அதை உடலில் தரித்துக் கொண்டாலும், அதனால் ஜபம் செய்தாலும் ஏற்படும் பலன்களை அளவிட முடியாது.

சிவபக்தர்களுக்கு ருத்ராக்ஷ தானம் செய்வது மிகச் சிறப்பான பலன்களை அளிக்க வல்லதாகும்.

ருத்ராக்ஷம் அணியும் முறை:

ருத்ராக்ஷம், அணிவதற்கு முன், ஒரு வார காலம், பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி, துடைத்துவிட்டு,  காய்ச்சாத பசும் பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாகத் துடைக்கவேண்டும்.

பின், பூஜை அறையில் வைத்து, ஐந்தெழுத்தை குறைந்தது, 108 தடவைகள் ஓதி, பின் அணியலாம்.

இதைத் தொடர்ந்து அணிந்தாலும், வருடத்திற்கொருமுறை தூய்மைப்படுத்தும் வேலை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி, அல்லது மஹா சிவராத்திரி அன்று அணியத் தொடங்குவது நல்லது. நல்ல நாள் பார்த்து அணியலாம். திங்கட்கிழமையில், சிவாலய அபிஷேக, ஆராதனை செய்த பின்பு அணியலாம்.

ருத்ராக்ஷம் அணிபவர்கள், குடிப்பது, புகைப்பது, அசைவம் உண்பது ஆகியவற்றை செய்யவே கூடாது.

 ருத்ராக்ஷம் அணிவது குறித்த விவரங்களுக்கு இங்கு  சொடுக்கவும்.

ஏக முக ருத்ராக்ஷம், பஞ்ச முக ருத்ராக்ஷம் என்றெல்லாம் ருத்ராக்ஷத்தில் பிரிவுகள் உண்டு. ஒரு ருத்ராக்ஷத்தை எடுத்துப் பார்த்தால், அதைப் பகுதி பகுதியாகப் பிரிப்பது போன்ற கோடுகள் தெரியும். அந்தக் கோடுகளே 'முகம்' எனப்படும். அந்தக் கோடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, முகம்(அ) முகங்களைக் கணக்கிட வேண்டும்.

இப்போது, ஒவ்வொரு முக ருத்ராக்ஷத்தின் சிறப்பையும் அதை அணிவதால் ஏற்படும் பலன்களையும் பார்க்கலாம்.

ஒரு முகமுள்ள ருத்ராக்ஷம் சிவ ஸ்வரூபமாகவே கருதப்படுகின்றது. அதை அணிந்து கொண்டால் பிரம்மஹத்தி தோஷமே நீங்கி விடும் என்பது ஐதீகம்.

பொதுவாக, ஒரு முகமுள்ள ருத்ராக்ஷம் கிடைப்பது அரிது. மிக விலைமதிப்புள்ளதாக இருக்கிறது.

இரண்டு முகமுள்ள ருத்ராக்ஷம் தேவ தேவி ஸ்வரூபம். இதை அணிய, புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் ஆகிய இருவகைப்பட்ட பாவங்களும்(அறிந்தும் அறியாமலும் செய்கிற பாவங்கள்) நீங்கும். சில ருத்ராக்ஷங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியதைப் போல் காணப்படும். இதுவும் அபூர்வ வகையே. இதுவும் சிவசக்தி ஸ்வரூபமாகக் கூறப்படுகிறது. இந்த ருத்ராக்ஷம் 'கௌரி சங்கரம்' என்றும் அழைக்கப்படுகின்றது.

மூன்று முகமுள்ளது, அக்னி ஸ்வரூபம். இதை அணிவதால், ஸ்திரீ ஹத்தி முதலிய மாபாவங்கள் நீங்கும்.

நான்கு முகமுள்ளது பிரம்ம ஸ்வரூபம். இதை அணிவதால், ஜீவன்களை வதைத்தது முதலான பாவங்கள் நீங்கும்.

ஐந்து முகமுள்ளது காலக்னி ருத்ர ஸ்வரூபம். உண்ணக் கூடாத உணவை உண்டதால் ஏற்படுகின்ற தோஷங்களை நீக்கும் வல்லமை உள்ளது இது.

ஆறு முகமுள்ளது முருகனின் ஸ்வரூபம். இதை வலது காதில் அணிய வேண்டும். இதுவும் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கும்.

ஏழு முகமுள்ளது மன்மதனின் ஸ்வரூபம். பிறர் பொருளை அபகரித்தது முதலான பாவங்கள் நீங்கும்.

எட்டு முகமுள்ளது விநாயகருடைய ஸ்வரூபம். மாபாவங்களை நீக்கும் தன்மை உடையது இது.

ஒன்பது முகமுள்ளது பைரவ ஸ்வரூபம். இது ஞான விருத்தி அளிக்கும் தன்மை உடையது. இதை இடது தோளில் அணிய வேண்டும்.

பத்து முகமுள்ளது விஷ்ணு ஸ்வரூபம். இது கிரக தோஷங்களையும், சர்ப்ப விஷங்களையும் போக்கும்.

பதினோரு முகமுள்ளது ஏகாதச ருத்ர ஸ்வரூபம்.  இதை சிகையில் அணிய வேண்டும். மிகச் சிறப்புள்ள ருத்ராக்ஷம் இது. இதை அணிவதால், ஆயிரம் அஸ்வமேதம்,நூறு வாஜபேயம், கோடி கோதானம் முதலியவை செய்த பலன் கிடைக்கும்.

பன்னிரண்டு முகமுள்ளது துவாதச ஆதித்ய ஸ்வரூபம். இதை அணிவதால், மிருக பயமும், நோய் நொடி நீங்குதலும், பிராணிகளை வதைத்த பாவமும் நீங்கும்.  இதைக் காதிலே அணிய வேண்டும்.

பதிமூன்று முகமுள்ளது ஷண்முகருடைய ஸ்வரூபம். சகல போகங்களையும் அளிக்க வல்லது இது.

பதினான்கு முகமுள்ளது சாக்ஷாத் சிவபிரானுடைய அம்சமாகவே கூறப்படுகிறது. இதை அணிந்திருப்பவரை தேவர்களும் பூஜிப்பார்கள்.

ருத்ராக்ஷத்தை மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாகவும் குறிப்பிடலாம். இதன் மேல் பாகம் பிரம்மா, அடிப்பாகம் விஷ்ணு, நடுவில் உள்ள பாகம் ருத்திரன் ஆகியவர்களின் அம்சம் நிறைந்ததாகும்.

ருத்ராக்ஷத்தின் மருத்துவ குணங்கள்: 

சமீபத்திய ஆராய்ச்சிக் குறிப்புகள், புற்று நோய் விளைவுகள், ருத்ராட்சம் அணிவதால் தணிவதாகக் குறிப்பிடுகின்றன. பித்தம், தாகம், விக்கல், கபம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்து. மன நோய்களுக்கு மகத்தான மருந்து ருத்ராட்சம். நாக்கு ருசியற்று போனவர்களுக்கு, இதை  பொடி செய்து நீருடன் தர,ருசி அதிகரிக்கும். திப்பிலி முதலியவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்த, சுவாசம் சம்பந்தமான நோய்கள் குணமடையும்.

தேள் கொட்டி விட்டால், ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து, அதன் மேல் எலுமிச்சை சாறு விட்டு, ஒரு கல்லில் இழைத்து, தேள் கொட்டிய இடத்தில் தடவினால், வலி உடனே நீங்கும்.

இதைப் பால் விட்டு இழைத்து, அதை கண் இமைகள் மீது தடவ, தூக்கம் வராமல் தொல்லைப் படுபவர்கள், நிம்மதியான உறக்கம் வரப் பெறுவார்கள்.இதைத் தூளாக்கி, துளசிச்சாறோடு கலந்து சாப்பிட பக்கவாதம் நீங்கும்.

ஹை பி.பி. உள்ளவர்கள், இதை தண்ணீரில் சில மணி நேரம் ஊறப்போட்டு, பின், அந்த நீரை மட்டும் அருந்த, குணமாகும். இதை அணிவதால், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் அதிகரிப்பு, ரத்த அழுத்தம் சமப்படுவது, மன அமைதி முதலியவை கிட்டும். இதய நோயைக் குணப்படுத்தும். பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சற்று மந்தமான செயல்பாட்டுடன் இருந்தால், ஆறு முக ருத்ராட்சம் அணிவிக்கலாம். இது சுறு சுறுப்பை நல்கும்.

இதை அணிவதால், அதிகப்படியான உடல் வெப்பம் உறிஞ்சப்படுகிறது. வெப்பம் அதிகரிப்பதாலேயே, வாய், வயிற்றுப் புண் உண்டாகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட, கழுத்துப் பகுதியில் இதைக் கட்டும் போது, வெப்பம் சமப்படுத்தப்படுகிறது.

ருத்ராக்ஷம் அணிவதால் ஏற்படும் பலன்கள் தொடர்பான புராணக் கதைகள்:

விந்திய மலைச் சாரலில் திரிந்து கொண்டிருந்த ஒரு கழுதையின் மேல், ஒரு வியாபாரி, ருத்ராக்ஷ மூட்டையை வைத்து ஓட்டிச் சென்றான்.  மூட்டையின் பாரம் சுமக்க முடியாததாக இருந்தது. அதனால்  அந்தக் கழுதை மயக்கமுற்று, பூமியில் விழுந்து உயிர் விட்டது. ருத்ராக்ஷ மூட்டையைச் சுமந்ததனால், அதன் உயிரை சிவதூதர்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

செல்வச் செருக்கினால் மிகக் கொடும் பாவங்களை செய்த சுதீஷ்ணன் என்பவன், தன் செல்வங்கள் எல்லாம் பறி போனதும், திருட்டுத் தொழிலைச் செய்து ஜீவித்து வந்தான்.

அவனது அந்திய காலத்தில், அவன் மரணமடைந்ததும், அவன் உயிரை எடுத்துச் செல்ல எம கிங்கரர்கள் வந்தனர். ஆனால் அதற்கு முன்பே அவன் உயிர் சிவ தூதர்களால் எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்து அதிசயித்தனர். யமதூதர்கள் காரணம் கேட்ட போது, சிவ தூதர்கள் பின்வருமாறு கூறினர்.

'இவன் உயிர் விடும் பொழுது, இவனுக்கு பத்து முழ தூரத்திற்குள் ஒரு ருத்திராக்ஷ மரம் இருந்ததை நீங்கள் கவனிக்கவில்லை.  ருத்திராக்ஷ மரத்தின் மீது பட்ட காற்று இவன் மேனியைத் தீண்டியதுமே இவன் செய்த பாவங்கள் நீங்கிவிட்டன. ஆகவே இவன் சிவ ஸ்வரூபம் அடையத் தகுதி உள்ளவன்.' இவ்வாறு சிவ தூதர்கள் பதிலளித்தனர்.

பல சிவத்தலங்களில் ருத்ராக்ஷ சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. இராமேஸ்வரத்தில், நடராஜர் சந்நிதியில் ருத்ராக்ஷ மண்டபம் அமைக்கப்பட்டு அழகுற விளங்குகிறது.

இத்தனை சிறப்பான பலன்கள் உடைய ருத்ராக்ஷத்தை தரித்து, எம்பெருமானின் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

16 கருத்துகள்:

  1. ருத்ராக்ஷ்த்தின் மகிமை, பலன்கள், அணிவதால் உண்டாகும் பயன்கள் பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி!!!

      நீக்கு
  2. நல்லதொரு அருமையான தகவல்கள் தாங்கியப் பதிவு.
    பகிர்விற்கு நன்றிகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா!!!

      நீக்கு
  3. ருத்ராக்ஷ்த்தின் மகிமை, பலன்கள், அணிவதால் உண்டாகும் பயன்கள் பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Nan grahasthan rudhraksham aniyalama endhendha velaigalil aniya koodadhu dhayavu seidhu vilakkavum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் தாராளமாக அணியலாம்.. நான்கு அல்லது ஐந்து முக ருத்ராக்ஷம் அணியலாம்..எப்போதும் அணிந்திருக்கலாம்.. வருடத்திற்கொரு முறை பதிவில் கூறியபடி சுத்தம் செய்து அணியவும்.

      நீக்கு
  5. Thanks for the great information. Could you please let us know where we can get authentic & original Rudrakshams?

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..