நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

INDEPENDENCE DAY.... வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?....


மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியா ரோ?

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (மஹாகவி பாரதியார்).

இந்தப்  பதிவு நமது தாய்த்திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய, பல கோடிக்கணக்கான, முகமறியாத தியாகிகளுக்குச் சமர்ப்பணம்.

நமது தாய்த் திருநாடு சுதந்தரக் காற்றை நிம்மதியாக சுவாசித்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ தியாகிகள், தமது இன்னுயிரை இழந்து, சொத்து சுகங்களைத் துறந்து, வாழ்வின்பங்களை மறந்து, நம் பாரத மாதாவின் அடிமைத் தளையை அகற்றுவதொன்றையே முப்போதும் சிந்தித்து, போராடிப் பெற்ற சுதந்திரம் இது. பெருந்தலைவர்கள் பலரை நினைவு கூரும் நாம், அவர்களின் வழிநடத்துதலின் கீழ், விடுதலைப் பெரும் போரில் பங்கெடுத்த பல லட்சணக்கான, முகம் தெரியாத தியாகிகளையும் இந்த நன்னாளில் நினைவில் வைத்து நன்றி செலுத்துவது இன்றியமையாதது.

அவ்விதம் போற்றப்பட வேண்டிய ஒரு தியாகியைப் பற்றி, இந்த நன்னாளில் உங்களுக்குச் சொல்வதில் பெருமையடைகிறேன்.

அவரே, 'அம்பி அய்யர்' என சுருக்கமாக அழைக்கப்பட்ட,  திரு. 'ச. வெ. இராமச்சந்திர அய்யர்'. சமயபுரம் இவர் வாழ்ந்த ஊர். அங்கு,'சமயபுரம் காஃபி க்ளப்' என்னும் உணவகத்தையும், 'S.V.R கதர் கடை'யையும் நடத்தி வந்த பெருமகனார். இவர். வசதிகளுக்கு குறைவில்லாத வாழ்வு. ஆயினும், பாரத நாட்டின் விடுதலைக்காக நமது தேசப்பிதா காந்திஜியின் தலைமையில் திரண்ட தொண்டர்களுள் ஒருவராக, தமது சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்தார். இவ்வாறு நாட்டுக்கு உழைப்பதை தமது கடமையென்றே எண்ணினாரன்றி அதன் காரணமாக புகழையோ, வேறு சிறப்புகளையோ அவர் எதிர்பார்த்தவரல்ல.

தமிழகத்தைச் சேர்ந்த தியாகிகளில் என்றும் போற்றப்படுபவரும், மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று தன் இன்னுயிரையும் துறந்தவருமான,  அமரர் வீர வாஞ்சி நாதன், இவருக்கு தாய்வழி உறவினர்.
 இந்தப் பகுதி முழுமையும் காண இங்கு சொடுக்கவும்.

திரு. அம்பி அய்யரைக் குறித்து, 2:10:2011 தேதியிட்ட காலைக் கதிர்  நாளிதழில் வெளிவந்த பேட்டியை மேலே கொடுத்திருக்கிறேன்.

அதில் வெளிவராத சில மேலதிகத் தகவல்கள் இதோ:

திரு. இராஜாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக யாத்திரையில்' பங்கெடுக்க பெயர் கொடுத்துவிட்டு, பெரும் ஆவலுடன் காத்திருந்தார் திரு.அம்பி அய்யர்.

 நூறு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதில், விடுபட்டுப் போனவர்களில் திரு. அம்பி அய்யரும் ஒருவர். திரு. டி.எஸ்.எஸ். ராஜன், அவரை திரு.ராஜாஜி அவர்களின் முன்னிறுத்தி, 'பார்வைக்கு இளைஞர் என்றாலும், ஆயிரம் தொண்டர்களுக்குத் தலைவர்' என்று அறிமுகம் செய்தார். திரு. ராஜாஜி அவர்கள், திரு.அம்பி அய்யர் காபி ஓட்டல் வைத்திருப்பதை அறிந்து,  யாத்திரை செல்லும் வழியில் உணவு முதலானவற்றுக்கு உதவுமாறு சொன்னதோடு அல்லாமல், 'மிக சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். வெள்ளைக்கார கலெக்டர் துரை, எங்களுக்கு யாரும் குடிக்கத் தண்ணீர் கூட உதவிடக் கூடாது!மீறினார் சிறைத்தண்டனை நிச்சயம் என தண்டோரா போட்டு கடுமையாகச் செயல்படுகிறார். ஜாக்கிரதை!' என நேரடியாக எச்சரித்தும் விட்டார்.

திரு. ராஜாஜியின் கட்டளையை, திரு.அம்பி அய்யரும் சிரமேற்கொண்டு செயல்படுத்தினார். அவரும், இன்னும் சிலரும் சேர்ந்து அதை எவ்விதம் சாமர்த்தியமாகச்  செயல்படுத்தினார்கள் என்பதை, திரு.ஆக்கூர் அனந்தாச்சாரியார்(யாத்திரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுவரில் ஒருவர்) கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.

"மாம்பழச் சாலையை அடுத்த காவிரி இடது கரை வழியாக யாத்திரை. வைக்கோல் பிரி கயிற்றில் மாவிலைத் தோரணம். செய்தித்தாள் ஒட்டிய நீண்ட தட்டியில், குருவி நீல எழுத்துக்களில் வரவேற்பு வளைவுகள், வாழை மர நுழைவாயில்கள், திட்டமிடப்பட்ட இளைப்பாறும் இடங்களில், நிழல் பந்தல், பெரிய பானைகளில் குடிநீர் என திமிலோகப்பட்டது. மரக்கிளையிலோ, மணற்படுகையிலோ, மூட்டையாக, மளிகைப் பொருட்கள், அரிசி, பருப்பு, சமையலுக்கான மண் பானைகள், சட்டிகள், விறகு உள்பட மறைவாக வைத்திருந்து, முகம் தெரியாத ஒருவர், அதை ஜாடை காட்டி விட்டு மறைந்து விடுவார்" என்கிறார் திரு.ஆக்கூரார். கீழ்நிலைக் காவலர்களுக்கு இந்த ஏற்பாடுகள் தெரியும் என்றாலும் காட்டிக் கொடுக்கவில்லை. அதனால், பெரிதாக ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாத காரணத்தால், வரலாற்றுப் பதிவில் இல்லாமல் போய்விட்டது.
அண்ணல் காந்திஜியின் சமயபுரம் வருகை:

திரு.சு. முருகானந்தம் அவர்கள் எழுதிய, 'நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி' எனும் வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த நூலில், அண்ணல் காந்தியடிகளின் தமிழக சுற்றுப் பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

"10:2:1934, அதிகாலை 3.50 திருச்சிராப்பள்ளி வருகை. ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர் வழியாக, சமயபுரம் அடைதல். காலை 11.00 மணி, சிந்தாமணி அரிஜனக் குடியிருப்பு ஊழியர்கள் கூட்டம்."

என்று மகாத்மாவின் சமயபுர வருகை குறித்த குறிப்பு உள்ளது. இந்தி மொழியை நன்கு அறிந்திருந்த திரு. அம்பி அய்யர், காந்திஜியின் வார்தா முகவரிக்குக் கடிதம் எழுதி, அவர் கேட்டிருந்தபடி, அரிஜன நிதிக்காக, ஆயிரத்தோரு வெள்ளி  ஒரு ரூபாய்கள் தருவதாக ஒப்புக் கொண்டு, நமது தேசப்பிதாவின் சமயபுர வருகைக்கு வழி வகுத்தார்.

அச்சமயம் அங்கு போடப்பட்டிருந்த பந்தல் குறித்த வருணனை:

சமயபுரத்தில் துறையூர் ஜமீனுக்குச் சொந்தமான பெரிய பொட்டல் வெளி உண்டு. வாய்மொழி அனுமதி பெற்று அருகில் இருந்த சிங்கார வேலு சோளக் கொல்லையும் சேர்த்து மிகப் பெரிய பந்தல், நடுவே கீற்றுக் கொட்டகை, மேடை பின்புறம் ஓய்வு எடுக்க தனியிடம் முதலியவை தயாராயின.பந்தல் முழுவதும் மணல் பரப்பப்பட்டது. தூணுக்குத் தூண் தண்ணீர் மண்பானை, மடக்கு (பானை மூடி போன்றது) தகரக் குவளைகள், வெளி முகப்பு முழுவதும் மாவிலைத் தோரணம்,வெளித்தூண்களில்நெட்டிலிங்கக் குலைகள்,முகப்புகளில் வாழை மரங்கள், மேடைப்பகுதி முழுவதும் கதர்த்துணி கொண்டு அலங்காரம் ( S.V.R கதர்க்கடை உபயம்) என காந்திஜியின் வருகை  குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுக் கூட்டத்தில், திரு. அம்பி அய்யர் மட்டுமல்லாது, புது மணப் பெண்ணான அவரது மனைவி திருமதி.லக்ஷ்மி அம்மாளும் காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று, தமது நகைகள் அனைத்தையும் மனமுவந்து நாட்டிற்காக அளித்தார்.

மேலும் சில தகவல்கள்:

மேற்குறிப்பிட்ட நூலில், தடையை மீறி, துறையூரில் கள்ளுக்கடைகளை ஏலத்தில் எடுப்பதைத் தடுக்க பிரசாரம் செய்ததால் கைது செய்யப்பட்டோர் பட்டியலில், திரு.அம்பி அய்யரின் பெயரும் ('ராமச்சந்திர அய்யர் என்று) இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டோரின் மேல் அடக்கு முறை எவ்வாறு பாய்ந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவ்வாறு பல துன்பங்களை, நம் நாட்டு விடுதலைக்காக, மகிழ்வுடன் ஏற்ற பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தாலேயே, நாம் இன்று சுதந்திர நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம்.

என் வேண்டுகோளை ஏற்று, சகோதரர் திரு தனுசு அவர்கள் எழுதிய 'சுதந்திர கீதம்' கவிதைக்கு இங்கு சொடுக்கவும்.

நமது முன்னாள் பாரதப் பிரதமர் திரு. பண்டித ஜவஹர்லால் நேருவின் வருகை:

காந்திஜி, சமயபுரம் வந்து சென்ற பிறகு அடுத்த ஆண்டே, லால்குடி தாலுகா, காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, திரு.அம்பி அய்யரைத் தேடி வந்தது. 1936ல் (15.10.1936) தாலுகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில், திரு.அம்பி அய்யர், கொள்ளிடம் டோல்கேட் பகுதியில், ஸ்ரீயுத பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு, வரவேற்பு மடல் வாசித்து அளித்தார். (படச்செய்தியில், வரவேற்பிதழைக் காண்க) நேருஜியின் பயன்பாட்டிற்காக, டி.வி.எஸ். கம்பெனி மூலம் லண்டனிலிருந்து, பேபி ஆஸ்டின் டூரர் வகை காரை இறக்குமதி செய்து பயன்படுத்தினார். அந்தக் காரை, பின் 1952,வரை திரு. அம்பி அய்யர் பாதுகாத்து வைத்திருந்தார்.

நமது தேசப்பிதா, 'உனது உணவகத்தில் தீண்டாமை பார்க்கக் கூடாது' என்று தம்மிடம் சொன்னதற்காக, அவர் கட்டளைப்படியே நடந்தார். அதன் காரணமாக, 'ஜாதிப் பிரஷ்டம்' உள்ளிட்ட சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கினார். தமது செல்வம் முழுவதையும்  நம் தாய்த் திருநாட்டின் விடுதலை வேள்விக்காகவே செலவழித்தார். இறுதியில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானபோதும் அவர் வருந்தவில்லை.

மேற்கூறிய தகவல்கள் யாவும், அன்னாரது மூத்த மகனும், எனது மாமனாருமான, திரு. ச. இரா. சத்தியவாகீசுவரன் அவர்களால் எனக்குச் சொல்லப்பட்டது. தமது தந்தையாரின் தியாக வாழ்வு குறித்து இன்றளவும் பெருமிதமே கொள்ளும் இவர், தமது தந்தையாரைக் குறித்த வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்துவதில் மிக ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.

நமது தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் வாழ்க்கைச் சரித்திரம், நமக்கு அவர்கள் செய்த‌ தியாகத்தின் மேன்மையையும் சுதந்திரத்தின் மாண்பையும் உணர்த்தும். இதை நமது சந்ததிகளுக்குச் சொல்வது நமது கடமை. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் மிக மிக உயர்ந்தது , சொல்லொணாத மதிப்புடையது என்பதை நமது சந்ததிகளுக்கு உணர்த்துவது நாம் நமது தாய்த்திருநாட்டிற்குச் செய்யும் மிக உயர்ந்த தொண்டாகும். வருங்காலத்தில், அவர்கள், தேசபக்தி மிக்கவர்களாக வளர்ந்து, உயர்ந்து, நம் தாய்திருநாட்டின் மேன்மையை உலகெங்கும் பறைசாற்றுவார்கள் என்பது திண்ணம்.

தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

என்ற மஹாகவி பாரதியின் கவலையை இல்லாமல் செய்வது நமது முழுமுதல்  கடமையாகும்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு

வந்தே மாதரம்!!!!

13 கருத்துகள்:

 1. Gr8! very Happy to see this article during the Nation's Independence Day!

  பதிலளிநீக்கு
 2. தியாகசீலர் அம்பி அய்யர் பற்றி வாசித்தேன். மிகுநத துணிச்சலுடனும், கட்டுப்பாட்டுடனும் இயங்கிய சுதந்திரப் போராட்ட வீரரகள் பலரும் இயங்கியுள்ளனர். ஊருக்கு ஓர் அம்பி ஐயர் இருந்துள்ளார்கள்.

  டி எஸ் எஸ் ராஜனின் தன் வரலாறு மீள் பதிப்பு வந்துள்ளதாம்.நினைவு அலைகள் என்று பெயர்.அதில் கூட அம்பி ஐயர் இடம் பிடித்துஇருக்கலாம். படித்துப்பார்க்க வேண்டும்.

  ((நினைவு அலைகள். தன் வரலாறு- தி.சே.செள.ராஜன். சந்தியா பதிப்பகம், சென்னை – 63. விலை.ரூ.225)

  ஓட்டல் வைத்து இருந்தவர்களிடமும், நாதஸ்வரக் கலைஞர்கள், வக்கீல்களிடமும் தேசபக்தி அதிகமாக இருந்துள்ளது.

  ஓட்டல் அதிபர்கள் தலைமறைவுத் தொண்டர்களுக்கு அடைக்கலமும் உணவும் இலவசமாக அளித்துள்ளார்கள்.கல்லாவில் உள்ளவர்களுக்கு ஒரு தேசத்தொண்டர் சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது பணம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்த ஏற்பட்டதே 'காந்தி கணக்கு' என்ற பிரயோகம். இன்று வேறு பொருளில் விளங்குகிறது.

  தங்களுடைய மாமனாரின் பெயர் சத்தியவாகீஸ்வரன் என்பது களக்காடு சுவாமியின் திருநாம‌ம்.களக்காடு என் தாய்வழி பாட்டனார் மற்றும், பாட்டியின் ஊர். பள்ளி வாத்தியாரான‌ தாத்தாவின் பெயர் கே ஆர் கிருஷ்ணைய‌ர்.பாட்டி ருக்மணி அம்மாள்.

  என் தந்தையார் பற்றிப் படிக்க http://gandhiashramkrishnan.blogspot.in/

  நல்ல பதிவு அளித்தத‌ற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. // kmr.krishnan said...
  தியாகசீலர் அம்பி அய்யர் பற்றி வாசித்தேன்.//

  தங்களது வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி. 'காந்தி கணக்கு' பொருள் அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றி. தங்கள் தந்தையார் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதை அறிவேன். தங்கள் தந்தையாரைப் பற்றிப் படிக்கத் தங்கள் வலைப்பூவின் முகவரியைத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  //சத்தியவாகீஸ்வரன் என்பது களக்காடு சுவாமியின் திருநாம‌ம்.//

  ஆமாம். எங்கள் மூதாதையர்கள் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று குடியமர்ந்தவர்கள். தலைமுறைக்கு ஒருவர் பெயர் சத்தியவாகீஸ்வரன் என்றும் கோமதி(களக்காடு அம்மனின் பெயர்) என்றும் பெயரிடப்படுவது வழக்கம். என் மாமனாரின் மூத்த தமக்கையின் பெயர் கோமதி.

  பதிலளிநீக்கு
 4. //தலைமுறைக்கு ஒருவர் பெயர் சத்தியவாகீஸ்வரன் என்றும் கோமதி(களக்காடு அம்மனின் பெயர்) என்றும் பெயரிடப்படுவது வழக்கம். என் மாமனாரின் மூத்த தமக்கையின் பெயர் கோமதி.//

  என் தாய்மாமன் ஒருவர் சத்தியவாகீஸ்வரன்.என் பெரியம்மா ஒருவர் கோமதி.

  பதிலளிநீக்கு
 5. Thanks you for writing it - enjoyed it thoroughly - keep writing...

  - Murali

  பதிலளிநீக்கு
 6. சகோதரி பார்வதி அவர்கள் நாட்டுக்காக தியாகம் செய்த ராமச்சந்திர அய்யர் அவர்களின் உறவினர் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இவரைபோலவே இன்னும் வெளி உலகம் அறியாமல் இருக்கும் பல்லாயிரம் மாணிக்கங்களை நாம் தவற விட்டுள்ளோம். அவர்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தாலும், வெளிக்கொண்டு வர முடியாமல் போனாலும் மாணிக்கங்கள் மாணிக்கள் தான்.

  சரியான நாளில் நல்லதொரு பதிவு, ராமச்சந்திர அய்யர் அவர்களுக்கு என் வீர வணக்கம்.

  பதிலளிநீக்கு
 7. //thanusu said...
  சரியான நாளில் நல்லதொரு பதிவு, ராமச்சந்திர அய்யர் அவர்களுக்கு என் வீர வணக்கம்.//

  தங்களின் பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தக் கட்டுரையின் சாரத்தைப் பிரதிபலிப்பது போல் அருமையானதொரு கவிதை தந்தமைக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. இப்படிப் பட்டவர்களின் தொண்டு புனிதப் பட வேண்டும். கண்டிப்பாக இது பலரும் படிக்க வேண்டிய பதிவு.

  இப்படி தொண்டாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் கட்டுரைகள் இணையத்தில் இடம் பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய மேலான வருகைக்கும் பாராட்டுக்களுடன் கூடிய‌ கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..