நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.. SONG # 3..... திருப்பள்ளியெழுச்சி. பாடல் # 3


பாடல் எண் : 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்=== உதய காலத்தில், குயில், கோழி முதலான பறவைகள் ஒலி செய்கின்றன.. திருக்கோயில்களில் சங்குகள் முழங்குகின்றன‌..

ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது ==உதயமாகும் சூரியனின் ஒளியோடு, தாரகைகளின் ஒளி ஒன்றிணைகிறது. அதாவது, தாரகைகள், சூரியனின் ஒளி முன்பு ஒளியிழக்கின்றன.

விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்====இறைவா, எமக்கு அன்போடு, கழலணிந்த நின் திருவடி மலர்களை காட்டி அருள்வாயாக. பள்ளி எழுந்தருள்க..

சங்கொலி என்பது மங்கலச் சின்னம்.. சங்கொலிக்கும் பணி செய்பவர்கள், காலையில் திருக்கோயிலில் சங்கு முழங்குவர். இவ்வாறு ஒலி எழுப்ப, வலம்புரி சங்கு தான் பயன்படுத்துவது வழக்கம். சங்கு இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள்..

ஒவ்வொரு ஆலயத்தின் கருவறைக்கும் 'லக்ஷ்மி துவாரம்' என்று திருப்பெயரிட்டு அழைப்பது வழக்கம்.

சங்கின்  ஊது துவாரத்திலிருந்து வெளிவரும் காற்று நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது.  பலர் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் இல்லத்தி சுத்தமான காற்று நுழையும். பலர் கூடும் திருக்கோயிலிலும் சங்கொலி செய்வதால், அங்கு இருக்கும் காற்று தூய்மை செய்யப்பட்டு, சுத்தமான பிராணவாயுவை சுவாசிக்க இயலும்.

சங்கொலி, வேத முழக்கங்களுக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டது அக்காலத்தில்.. ஆகவே  'இயம்பின சங்கம்' என்றார்

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப 
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச் 
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் 
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. (திருஞானசம்பந்தப் பெருமான்)

பேரொளி மயமானது சிவஞானம்.. ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் சோதி அவன். அவனளிக்கும் தன்மயமான ஞானமும் அவ்வாறே..

சிவமே பிரகாசம்..சொல்லால் விளக்கவொண்ணா அந்த சுயம்பிரகாச சோதி முன் எந்தப் பிரகாசம் நிற்க இயலும்?..

ஓங்கொளியாய் அருள்ஞான மூர்த்திஆகி
உலகம்எலாம் அளித்துஅருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலர்இதழி திங்கள் கங்கை
திகழ்அரவம் வளர்சடைமேல் சேர வைத்து
நீங்கல்அருள் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றுஇமையோர் துதிசெய்ய நிருத்தம் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வாம் (சிவப்பிரகாசம், உமாபதி சிவம்)

'ஓங்கு ஒளி' அதாவது,திருவருள் ஞானமே வடிவானது.. ஓங்கு ஒளி அது.. என்றார்.

விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்==இறைவனே விரும்பி நமக்கு அருள் செய்து , முத்திப் பேறு தருதல் வேண்டும்.. 'தாளிணை' என்ற பதத்துக்கு ஏற்ப, அம்மையோடு அப்பனும் விரும்பி அருள் சுரத்தல் வேண்டும்.. 

சிவனை அவன் திருவடிஞா னத்தால் சேரச் 
செப்புவது செயல் வாக்கு சிந்தை எல்லாம்
அவனை அணு காஎன்றும் ஆதலானும்
அவன்அடி அவ் ஒளிஞானம் ஆத லானும்
இவனும் யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை
என்பு மச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
அவம்அகல எனை அறியேன் எனும்ஐயம் அகல
அடி காட்டி ஆன்மாவைக் காட்டலானும்.(சிவஞான சித்தியார்)

இவ்வாறு அருள் தந்து மும்மலங்களை நீக்குவதற்கான கிரமமே 'தீக்கை' என்று செந்தமிழில் வழங்கப்படுகின்றது..
'தீக்ஷா' என்னும் வடமொழிச் சொல்லுக்கு, அஞ்ஞானத்தை, மலங்களை நீக்கி, ஞானத்தை அருள்வது என்று பொருள் சொல்லப்படுகின்றது.

 ஒரு உதாரணம் பார்ப்போம்.

பக்குவ நிலை வாய்த்த சகலருக்கு அருள் செய்யும் போது குருவடிவம் தாங்குவான்.. இது, காட்டில் இருக்கும் ஒரு மானுக்கு இன்னொரு மானைக் காட்டி அதைப் பிடித்தல் போலவாம். இவ்வாறு ஆன்மாக்களுக்குத் தக்கவாறு அருள் செய்யும் பான்மைக்கு தீக்கை இன்றியமையாதது.. 

தீக்கையின் வகைகள்:

சட்க்ஷு தீக்கை (பார்வையால் செய்யப்படுவது)
ஸ்பரிச தீக்கை (திருக்கையால் தொட்டுச் செய்யப்படுவது) . வாசக தீக்கை(ஐந்தெழுத்தையும் பொருளையும் உபதேசிப்பது ). 

பாவனையால் உணர்த்தப்படுவது பாவன  தீக்கை. அருள் நூலால் வழங்கப்படுவது ஆகமதீக்கை. உயிர்களின்  அறிவோடு கலந்து உயிருக்கு உயிராய் வழங்கப்படுவது யோக தீக்கை.

'யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் '=====

அறிவினால் அறிதற்கு அரியவன் அவன்..அவனருளால் கிட்டிய ஞானம் ஒன்றினால் மட்டுமே அவனை அறிய இயலும்..'அன்பெனும் பிடியுள் அகப்படும் ஆனந்த மலை' அவன்.. ஆழ்ந்து அன்பு செய்தால், அவனருள் கிட்டி, அதன் மூலம் ஞானம் வாய்க்கும்.. பந்த பாசக் கட்டுக்கள் அகலும். இவ்விதம் அகலுதற்கும் அவனருள் அவசியம்.. அவனருள் இருந்தாலன்றி அவன் தாள் பணிதல் இயலாது.

'அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி '(சிவப்பிரகாசம்)

இதைக் கேள்வியாகக் கேட்கிறார் வினாவெண்பாவில் உமாபதி சிவம்..

அறிவு அறிந்து எல்லாம் அசத்து ஆகும் ஆயின் 
குறி இறந்த நின் உணர்வில் கூடா பொறிபுலன்கள்
தாமாய் அறியா தடமருதச் சம்பந்தா!
யாம் ஆர் அறிவார் இனி.

பொருள்(சுருக்கமாக)...அறிவினால் அறிய முடியாதெனில் வேறு எவ்விதம் இறைவனை அறிவது..

இதற்கு விடை சிவஞானசித்தியாரில் இருக்கிறது..

செம்பு இரத குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச்
 செம்பொன் உடன் சேரும் மலம் சிதைந்தால் சீவன்
 நம்பன் உடன் கூடும் எனில் எனில் பொன்போல் அல்லன்
  நற்குளிகை போல அரன் நணுகுமலம் போக்கி 
 அம்பொன் அடிக் கீழ்வைப்பன் அரும்களங்கம் அறுக்கும்
 அக்குளிகை தானும் பொன் ஆகாது ஆகும் 
 உம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன்
 உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே...

பொருள்(சுருக்கமாக)செம்பு தானே பொன்னாவதில்லை.. அது ரசக்குளிகையின் மூலம் பொன்னாக்கப்படுகின்றது.. ரசக் குளிகை, செம்பின் களங்கத்தைத் தீர்க்கிறது.. அது போல், இறைவனருள் மலங்களை ஒழித்து, வீடு பேறு தருகிறது..

மாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. இந்த பாடலின் வரிகளை நமது
    இளையராஜா திரைப்படத்தில் இசையாக்கிஇருக்கிறார்

    கடவுளை காண வேண்டும் என துடிப்பவருக்கான
    கட்சிதமான வரிகள்

    சிவப்பிரகாசம் சொல்லும் செய்தி
    சித்தாந்த செய்திகளுடன் அமைந்த

    பதிவுக்கு வாழ்த்துக்கள்
    பணிவான வணக்கங்களுடன்



    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான பகிர்வு அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..