'பாவை நோன்பு' இருக்கும் மகளிர் இறைவனைத் துதிக்கும் பாடல்கள் என்பதால், திருவெம்பாவை பாடல்களை, மார்கழி மாதம் இறைவன் திருமுன் பாடி வேண்டுகிறோம்..இருபது பாடல்களைக் கொண்டது திருவெம்பாவை.. ஆகவே, பத்து பாடல்களைக் கொண்ட திருப்பள்ளியெழுச்சியையும் இணைத்து, மார்கழி முப்பது நாட்களும் பாடி, இறைவனைத் துதிக்கின்றோம்..
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பல பதிகங்கள் இருக்க, திருப்பள்ளியெழுச்சியைத் தேர்ந்து பாடுவது குறித்த எனது புரிதல்..
ஆலயங்களில் அதிகாலையில் நடக்கும் 'விஸ்வரூப தரிசனம்' பெரும் சிறப்பு வாய்ந்தது என்பதை அன்பர்கள் அறிவீர்கள்..
பிற சமயங்களில் ஆலய தரிசனத்தின் போது, நாம் இறைவனைத் தரிசிக்கச் செல்கிறோம். ஆனால், விஸ்வரூப தரிசனத்தின் போது, இறைவன் முதல் நாள் இரவு செய்த அலங்காரம், நிர்மால்யங்களோடு அருளுகிறார்..திரை விலக்கப்பட்டதும், தம் முன், இத்தனை அதிகாலையில் யார், யார் வந்திருக்கிறார்கள் என்று நோக்குவார்..(அதாவது இறைவன் நம்மைப் பார்க்கிறார் என்பது ஐதீகம்)
இயல்பாகவே அதிகாலை வேளையில், நம் மனம் தூய்மையாக இருக்கும்.. அதோடு சேர்ந்து, இறைவனின் அருட்பார்வை நம் மீது விழும் போது, நமக்கு ஏற்படும் நன்மைகளை, அனுபவித்தால் அன்றி புரிந்து கொள்ளுதல் இயலாது..
மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்தம். அதாவது தேவர்கள் துயிலெழும்பும் காலம்..
தேவாதிதேவனான இறைவனைத் துயிலெழுப்பும் விதமாகப் பாடி, அவரது விஸ்வரூப தரிசனத்தின் போது, அவரது அருட்பார்வை நம்மீது விழும்படியாகக் கோரும் திருப்பள்ளியெழுச்சியை, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழி மாதத்தில் பாடுவது நன்மை தரும் என்று கருதி இணைக்கப்பட்டிருக்கலாம்.
இனி முதல் பாடலைப் பார்க்கலாம்..
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
பொருள்:
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
'என் வாழ்வுக்கு ஆதாரமான பொருளே, உலகப் பொருட்கள் யாவற்றுக்கும் முதலாக விளங்கும் இறைவனே!..
'புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றி'=== பொழுது புலர்ந்தது.. நினது பூப்போன்ற மென்மையான, ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளுக்கு, இரு மலர்களைச் சமர்ப்பித்து பூசித்து,
நின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு== அதன் பயனாக, நினது திருமுகத்தில், எம் மீது அருள் கொண்டு மலரும் அழகிய புன்னகையைக் கண்டு..
நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.===
நின் திருவடிகளைத் தொழுதோம்...
நீர் வளம் மிக்கதாதலால், திருப்பெருந்துறையின் குளிர்ந்த வயல்களில், தாமரை மலர்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. அந்தத் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்சுரக்கும் சிவபிரானே!.. இடபக் கொடியை உடையவனே!.. எம்மை அடிமையாகக் கொண்டருளுபவனே!.. எம்பெருமானே!.. பள்ளி எழுந்தருள்க..
இப்போது, தத்துவ விளக்கம் குறித்து, சிறிது சிந்திக்கலாம்.
இதில் திரோதான சத்தியைக் குறித்துப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
நம் வாழ் முதலாகிய பொருள் இறைவனே!.. உயிர்களின் மும்மலங்களை நீக்குவித்து ஆட்கொள்ள வல்லது இறைவனின் பேரருட்சக்தியே...
இந்தப் பாடல், இறைவனைக் குறித்த ஞானம் நம்முள் மலர்வது குறித்துப் பாடப்பட்டது....
'சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்' என்பதிலிருந்து, சேற்றிலிருந்து மலரும் செந்தாமரை போல், அஞ்ஞானமாகிய சேறு படிந்திருக்கும் உள்ளத்திலிருந்தே, அவை நீங்கி, ஞானமாகிய தாமரை மலருதல் வேண்டும் என்று குறித்தார்.
'அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே' என்று சிவபுராணத்தில் சிவபிரானைப் பாடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
'ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்' என்ற வரியினை எடுத்துக் கொள்ளலாம் நாம்..இறைவனைத் துதித்த மாணிக்கவாசகப் பெருமான், உடனடியாக, இறைவன் திருக்கரங்களில் இருக்கும் மானையோ, மழுவையோ பாடாமல், கொடியையும் அதிலிருக்கும் இடபத்தினையும் குறித்துப் பாடுகிறார்.
மும்மலங்களுடன் கூடிய நிலையிலிருக்கும் உயிர்களின் நிலை 'சகல நிலை'. சகல நிலையிலிருக்கும் உயிர்களின் ஆணவம் முதலாகிய மும்மலங்கள் நீங்குதல் இறையருளாலேயே நிகழும்..
இதற்கு 'தீக்கை' துணை செய்யும்
இந்த தீக்கை பெறுதலே கொடியேற்றம்..மும்மலங்களின் தாக்கம் நீங்கும்படிக்கு தீக்கைக் கிரமங்களினால் கொடி கட்டினேன் என்கிறார் உமாபதி சிவாச்சாரியார்.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே. (கொடிக்கவி)
'த்வஜாரோஹணம்' என்று வடமொழியிலும், 'கொடியேற்றம்' என்று தமிழிலும் வழங்கப்படும் நிகழ்வு,ஒவ்வொரு திருக்கோயில் திருவிழாவிலும் மிக முக்கியமானது.. இதிலும் ஒரு சைவ சித்தாந்த உட்பொருள் மறைந்துள்ளது..
சைவசித்தாந்த மரபுப்படி,
கொடிமரம் = பதியாகிய இறைவன்
கொடிச்சீலை = திரோதன சத்தி;
இடபம்=உயிர்(பசு)
கொடிமரத்தில் சுற்றப்பெறும் தர்ப்பைக்கயிறு- பாசம் என்ற மலங்கள்
கொடிச்சீலை ஏற்றப் பயன்பெறும் கயிறு இறைவனின் அருட் சக்தி
என்று கருதப்படுகிறது. ஆக இறைவனுடன் பாசமும் பற்றும் அறுத்து ஆன்மா கலப்பதே கொடியேற்ற உற்சவத்தின் தத்துவம். ' ஏற்றுயர் கொடியுடையாய்' என்று இறைவனின் திருமுன், நாம் உய்ய,கொடியேற்றுகிறார் அடிகள்.
இவ்வாறு செய்து, எனை உடையேனாகக் கொள்ளுதல் வேண்டும் என்றார். 'எம்மை' என்று பன்மையில் கூறாது 'எனை' என்று ஒருமையில் குறித்ததால், ஒவ்வொரு உயிரும், தமக்கு ஞானம் அருளல் வேண்டும் என்று தனித்தனியே இறைவன் தாள் பணிய வேண்டும் என்பதைக் குறித்தார்.
திருவாசகமே 'சிவராஜ யோக நெறி'.. இதிலும் அந்த நெறி மறை பொருளாக இருப்பதில் வியப்பில்லை..'திருப்பெருந்துறை யுறை சிவபெருமான்' என்ற குறிப்பினால் இதை உணரலாம்.மாணிக்கவாசகப் பெருமானால், எழுப்பப் பட்ட இந்த திருக்கோயில், ஆகம நெறியில் அல்லாது, சிவராஜ யோக நெறிப்படி அமைந்திருப்பதை அன்பர்கள் அறிந்திருப்பார்கள்.
இதை ஆழ்ந்து சிந்திக்க விரும்பும் அன்பர்கள், கீழ்க்கண்ட குறிப்புகளைத் துணை கொள்ளலாம்.
சைவ சித்தாந்தத்தில், குண்டலினி உறையும் மூலாதாரமாக, பிரதான கோபுரவாயில் சொல்லப்படுகிறது. பலிபீடம் சுவாதிஷ்டானமாகவும், துவஜஸ்தம்பம் மணிபூரகமாகவும், நந்தி பீடம் அநாகதமாகவும், உட்கோபுரவாயில் விசுத்தியாகவும், அந்த்ராளக் கோபுர வாயில் ஆக்ஞா சக்கரமாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இறைவனின் கருவறையே சஹஸ்ராரம்.
இறைவனைக் கருவறையில் துயிலெழச்செய்து, பூசனை செய்தலை இவற்றோடு பொருத்தி உணரலாம்.
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
அருமை..அருமை
பதிலளிநீக்குஅன்பு சகோதரியே..
இருபதோடு பத்து சேர்த்து சொல்வீர்கள் என
இன்று காத்திருந்தோம்.. நன்றி...
கடந்த நாளில் மீனாட்சியம்மன் கோவிலில் திருபள்ளியெழுச்சிக்கு
காலை 4 மணிக்கு வரிசையில் நின்று துதிப்பதை நினைவு கூட்டியது
இதை படித்த பிறகு தான் பாரதமாதாவுக்கு
இந்த முண்டாசு கவி திருப்பள்ளி எழுச்சி பாடினரோ என
ஆய்வு கட்டுரை ஒன்றில் எழுதி கேட்ட வரிகளை
அப்படியே மீண்டும் மலர வைத்தது..
வாழ்க.. வளமுடன்
தொடர்க பலமுடன்..
தங்களின் தொடர்ந்த நல்லாதரவுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!
நீக்குஆலோசனை ஒன்று சொல்ல
பதிலளிநீக்குஅனுமதிப்பீர்களா...? (பதிவு தொடர்பாக தான்)
சந்தேக விளக்கம் என ஒரு தொடர் ஆரம்பியுங்கள்
சில சந்தேகங்களுக்கு விளக்கம் தந்து இளைய தலைமுறைகளை
வழிப்படுத்தலாம்.. முதிய தலைமுறைகளை
ஆற்றுப்படுத்தலாம்.. யோசியுங்கள்
அறிவிப்பு மற்றும் பதில் கிடைத்ததும்
அறிவுக்கு எட்டிய கேள்விகளை அனுப்புகிறோம்,
தங்கள் யோசனையைக் குறித்து.. யோசிக்கிறேன் ஐயா!
நீக்கு