நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI...SONG # 4...திருப்பள்ளியெழுச்சி...பாடல் # 4


பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்  
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் 
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் - இனிய ஓசையையுடைய வீணையையும்  யாழினையும் மீட்டுபவர்கள்  ஒரு புறமாக காத்திருக்கின்றனர்.

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் - வேதங்களோடு தோத்திரங்களைச் சொல்லித் துதிக்கும் பக்தர்கள் ஒரு பக்கமாக, உன்னைத் தொழக் காத்திருக்கின்றனர்.

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் - நெருங்கித் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை ஏந்திய கரங்களை உடையவர்கள், புஷ்ப கைங்கரியம் செய்வோர் ஒரு பக்கத்தில் காத்திருக்கின்றனர்.

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ‍- பக்தி மீதூற, நின் திருமலர்த் தாளிணைகளை நினைவில் எப்போதும் நிறுத்தி, உன்னை வணங்குதலையுடையவரும்,  ஆனந்தத்தால் அழுகையையுடையவரும், துவளுதலையுடையவரும் ஒரு பக்கத்தில் காத்திருக்கின்றனர்.

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் – தலையின்மீது இரு கைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் காத்திருக்கின்றனர்.

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும்  - அடியேனையும் அடிமை கொண்டு இனிய அருளைச் செய்கின்ற.

எப்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எம் தலைவனே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

வீணைக்கு ராஜ வாத்தியம் என்ற பெயருண்டு

எம்பெருமான் வீணை மீட்டுவது சங்கார காலத்தில்.. இவ்வுலகனைத்தும் மீளத் தோன்றும் பொருட்டு.

சங்கார காலத்தில், தம்முள் ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் பொருட்டு,சுத்த மாயையின் முதல் விருத்தியாகி நிகழ்வது வீணையின் நாதம்.

பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
யொத்துலக மெல்லா மொடுங்கியபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.(அப்பர் சுவாமிகள்)

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி(கோளறு திருப்பதிகம்).

நாத மயமானவன் இறைவன்.. ஓம் என்ற ஓங்கார நாதத்திலிருந்தே சிருஷ்டி துவங்கியது... அந்த ஓங்காரத்துள் ஒலிக்கும் ஒலியாக இருப்பவன் இறைவன்..

நாதம் சிவ தத்துவம்.. விந்து சக்தி தத்துவம் (நாத விந்து கலாதீ நமோநம==அருணகிரிநாதர்)

பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.(திருமந்திரம்)

பூமன்னும் நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் நாமன்னும் 
வேதம்வே தாந்தம் விளக்கம் செய் விந்துவுடன் 
நாதம்நா தாந்தம் நடுவேதம் போதத்தால்
ஆம் அளவும் தேட அளவிறந்த அப்பாலைச் 
சேமஒளி எவருந் தேறும் வகை மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலை போற்றி (போற்றி பஃறொடை)

 இறைவனது அருள் வேண்டி, அவனைத் துதிக்கும் முறைமைகள்  இந்தப் பாடலில்  சொல்லப்பட்டதாகவும் கொள்ளலாம்..

பரம்பொருளை விக்ரக முறையில் ஆராதிக்கும் போது, நம் உடல், மனம் இரண்டும் ஓர் அலைவரிசையில் இணைகிறது.. எண்ணம், சொல், செயல் என்ற மூன்றும் இறைபணியில் ஈடுபடுகிறது..

பிரம்மத்தை, எத்தனை வடிவங்களின் மூலமாக ஆராதிக்க முடிகிறது!!!...

இன்னிசை என்பதால் நாதப் பிரம்மத்தின் மூலமாக‌...இருக்கொடு தோத்திரம் என்பதால், வேதங்கள் முதலான தோத்திரங்களைக் கூறி, சப்த பிரம்மத்தின் மூலமாக, மலர்கள் தொடுத்து அணிவிப்பதாலும், தூவி வணங்குவதாலும், செயல் மூலமாக, தொழுது, அழுது துவள்தல் என்பவை ஆழ்ந்த பக்தியின் மூலமே சாத்தியப்படும் என்பதால், எண்ணத்தின் மூலமாக..

ஐம்புலன்களும் இறைவழிபாட்டில் ஒன்றுகிறது விக்கிரக ஆராதனையின் போது.. வேறு எவ்விதமாகவேனும் இப்படி ஒன்றிணைக்க இயலுமா..

எங்கும் நிறைந்த பரம்பொருளை இப்படி விக்ரக வடிவில் வைத்து ஆராதிப்பது, ஆன்மீகத்தின் முதல் படி... இம்முறையில் இறை நம்பிக்கை உறுதியாகிறது..

விக்ரக வடிவிலிருக்கும் பரம்பொருளுக்கு செய்யபடும் பூசனைகள், நாளடைவில்  தன் உள்ளேயும் எவ்விதப் புறத்தூண்டுதலுமின்றி நடைபெறுவதை சாதகன் காண்கிறான். உள்முக வழிபாடு சிரமமின்றி கை கூடும் போது, வெளி முக வழிபாடு தானே விலகி வழிவிடும்..

இறைவன் திருமலரடி தொழுவோம்!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..