அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பொருள்:
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
அண்ணாமலையாரின் திருவடி மலர்களை, தேவர்கள் தொழுகின்றனர். இறைவனின் திருவடிகளின் பிரகாசத்தில், தேவர்கள் சிரத்தில் அணிந்திருக்கின்ற கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்கள் ஒளியிழந்து விடுகின்றன.
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்==== கண்களுக்கு நிறைவான சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்து இருளை நீக்கும் போது, குளிர்ச்சியான ஒளி பொருந்திய நட்சத்திரங்கள், ஒளி மங்கி மறைகிறது..
அந்த வைகறைப் பொழுதில்,
'பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்'=== பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் ஆகி, ஒளி நிரம்பிய ஆகாயமாகி, இந்நிலவுலகு முழுதுமாகி, இவை அனைத்திலிருந்து நீங்கியும் விளங்குகிற.
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.====நம் அகக்கண்ணால் கண்டு மகிழத்தக்க அமுதமாய் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பாடி, பெண்ணே, பூக்களால் நிரம்பியுள்ள இந்தப் பொய்கையில் மகிழ்ந்து நீராடுவாயாக!!
இப்போது சற்று விளக்கமாகப் பார்க்கலாம்..
தேவர்கள் அண்ணாமலையாக, ஜோதி ஸ்வரூபமாக நின்ற இறைவனின் திருவடி மலர்களை விழுந்து வணங்கும் போது, அவர்கள் சிரத்தில் அணிந்துள்ள கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்களின் ஒளி மங்கியதாகச் சொல்வது, தேவர்கள், தம்மைப் பற்றிய பெருமிதம் நீங்கப் பெற்றார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.
தேவர்கள், நான், எனது என்னும் ஆணவம் நீங்கப் பெறாதவர்கள். இறைவனின்றும் தம்மை வேறுபட்டவனாய் நினைத்து, ஏதேனும் பலனை வேண்டியே இறைவனை வழிபடுகின்றவர்கள்.
வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனநின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மையெலாம் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலும்
தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான்
யானுமுன்னைப் பரவுவனே.(திருச்சதகம், மாணிக் கவாசகப் பெருமான்)
இறைவனின் திருவடி மலர்களின் பிரகாசம் என்பது இறைவனின் ஜோதி தத்துவத்தைக் குறிக்கிறது.சிவலிங்கத்தின் மேல்பாகம் சிவஜோதி என்றும், அடிபாகம் ஆத்ம ஜோதி என்றும் கூறப்படுகின்றது..
சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி - பர
முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி சிவசிவ(திருவருட்பா)
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்== அறியாமையாகிய இருள் நீங்குவதற்காக, ஞான ஒளியாகிய சூரியன் வந்து உதிக்கிறது... அறியாமையால் ஏற்படும் ஆரவாரங்களாகிய தாரகைகள் ஒளி இழக்கின்றன. அஞ்ஞானம் நீங்கி ஞான ஒளி பரவுவதைக் குறிக்கின்றது இது.
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்=== இறைவனின் சர்வ வியாபகத் தன்மையைக் குறிக்கிறது இது..
'பிறங்கொளி சேர் விண்ணாகி' என்பதையே
'விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்== என்று சிவபுராணத்திலும் உரைக்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
'இத்தனையும் வேறாகிக்'===இவ்வுலகப் பொருள்கள் அனைத்தினுள்ளும் நிறைந்து, அதனினும் நீங்கி நிற்பது பரம்பொருளின் வியக்கத் தகுந்த தன்மை..
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.(திருமூலர்) என்ற திருமந்திரப் பாடல்
இதற்கு விளக்கம் தரும்.
'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் ' என்ற அபிராமி அந்தாதிப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. (அப்பர் சுவாமிகள்)
என்ற தேவாரப் பாடலும் இதையே உரைக்கின்றது.
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். ===இங்கு 'கண்' என்பது அகக்கண்ணைக் குறிக்கும். நம் எல்லோருடைய உள்ளத்திலும் உறையும் இறைவனை அகக்கண்ணால் காண இயலும்.. அவ்வாறு காண்பதற்கும் இறைவனி கருணை வேண்டும். அந்தக் கருணையைப் பெற, இறைவனின் கழல்கள் ஒலிக்கின்ற திருவடியைப் பாடிப் பக்தி செய்தல் வேண்டும்..
அவ்வாறு அகக்கண்ணால் காணும் போது, இறைவனின் கருணையால், அமுதாகிய பிறவா பெருநிலை கிட்டும்...
கீழ்க்கண்ட பாடலைப் பொருத்திப் பார்க்கையில், இப்பாடலின் உள்ளுறை புலப்படும்..
புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!.
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
வருகை பதிவு
பதிலளிநீக்கு