அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
'அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது '===சூரியனின் தேர்ப்பாகனான அருணன், இந்திரன் திசையாகிய கிழக்குத் திசையை அணுகினான்..அதாவது, சூரியன் உதிக்கத் தொடங்கினான்.இருள் முழுவதும் அகன்றது..
'உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ'=====இறைவா, உன் மலர்ந்த திருமுகத்தினின்றும் சிறிது சிறிதாக அன்பர்கள் பால் பெருகுகின்ற கருணையைப் போல், சூரியன் உதயகிரியிலிருந்து எழுந்தான்..
நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்====நின் திருவிழிகள் போலும் தாமரை மலர்கள் மலர்ந்தன. அவ்விடத்து, ஆறு பாதங்களை உடைய வண்டுகள் ரீங்காரமிடத் துவங்கின..
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. ==தன் அருளாகிய பெருநிதியை, உயிர்கள் பால் கொண்ட அன்பால், அவர்கட்கு தருவதற்காக எழுந்தருளும் ஆனந்த மலை போன்ற இறைவனே.. பள்ளி எழுந்தருள்க..
'உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ'=====இறைவா, உன் மலர்ந்த திருமுகத்தினின்றும் சிறிது சிறிதாக அன்பர்கள் பால் பெருகுகின்ற கருணையைப் போல், சூரியன் உதயகிரியிலிருந்து எழுந்தான்..
நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்====நின் திருவிழிகள் போலும் தாமரை மலர்கள் மலர்ந்தன. அவ்விடத்து, ஆறு பாதங்களை உடைய வண்டுகள் ரீங்காரமிடத் துவங்கின..
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. ==தன் அருளாகிய பெருநிதியை, உயிர்கள் பால் கொண்ட அன்பால், அவர்கட்கு தருவதற்காக எழுந்தருளும் ஆனந்த மலை போன்ற இறைவனே.. பள்ளி எழுந்தருள்க..
அதிகாலையில் நாம் தரிசிப்பது 'விஸ்வரூப தரிசனமே'.. விஸ்வரூப தரிசனம் என்பது இவ்வுலகனைத்தையும் தம்முள் அடக்கிய எம்பிரானின் தரிசனம்.. தேவர்கள் உட்பட உலகப்பொருளனைத்தும் இறைவனுள் அடக்கம்..அருணன், இந்திரன் முதலான தேவர்கள், திசைகள், இருள் நேரத்தில் ஒளி தரும் சந்திரன், சூரியன், மலைகள், அலைகடல் என அனைத்தும் ஓருருவான இறைவனின் தரிசனத்தை இப்பாடல் குறிக்கிறது எனக் கொள்ளலாம்..
அருணன்இந் திரன்திசை அணுகினன்== சூரியன் உதிப்பதற்கு முன் தோன்றும் செந்நிறச் சாயை அருணன் எனப்படுகிறது.. கிழக்குத் திக்கு அஷ்ட திக் பாலர்களில் ஒருவரான இந்திரனுக்குரியது.. கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு, உச்சி ஆகிய ஐந்து திசைகள் நோக்கி எம்பிரானின் ஐந்து திருமுகங்கள் (சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம்)அமைந்துள்ளன.. இதில் கிழக்குத் திசை நோக்கி அமைந்திருப்பது தத்புருஷம்..எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் யாவற்றிலும் கிழக்கு நோக்கியே அவரது திருமேனியை எழுந்தருளச் செய்வது மரபு.. நம்மை நோக்கியிருக்கும் திருமுகம் தத்புருஷமே..
அதிகாலையில், இறைவன் திருமுன் கூடி நிற்கையில் முதற்கண் நம்மை நோக்குவது தத்புருஷ முகம்..நம்மை காத்தருளும் முகம் நோக்கியே 'பள்ளி எழுந்தருள்க' என்றார்.
உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ ==== இறைவனின் வலக்கண்ணையே சூரியனாகச் சொல்வது மரபு.. இங்கோ, கருணையின் சூரியன் என்றார்.. ஆக, இங்கு சூரியனாகச் சொல்லப்படுவது எம்பிரானின் கருணை.. எழ எழ என்பதால், மெல்ல மெல்ல சூரியோதயம் ஆகும் என்பது குறிக்கப்பட்டு, அது போல் சிறுகச் சிறுக, எம்பிரானின் கருணை உயிர்களை வந்து அடையும் என்றார். அவ்வாறு அடைந்து, அந்தச் சிறு துளி பெருவெள்ளமாகி ஆட்கொள்ளும் பான்மையையே 'அலைகடல்' என்றார்.
பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.'(திருவருட்பயன்)..
(உலகியலார், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் சேர்ப்பதற்கும், அதனை நுகர்வதற்கும் துணை செய்யும்படியாக, சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி இருப்பது போல, இறைவனது திருவருள், உயிர்கள் நல்வினை தீவினைகளைப் புரிவதற்கும் அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களை நுகர்வதற்கும் உதவி, பேரறிவொளியாய் எங்கும் நிற்கும்).
சூரியனின் ஒளி இருவிதப் பயன்களை மக்களுக்குத் தருகிறது.. ஒன்று, உலகப் பொருட்களை நாம் காணுமாறு செய்வது.. மற்றொன்று, தனக்கு(ஒளிக்கு) முதலாகிய சூரியனைக் காட்டுவது..
இறைவனின் கருணையே, மும்மலங்கள் நீங்க வேண்டி தனு,கரண புவன போகங்களைப் படைத்தது.. அதுவே, மும்மலங்கள் நீங்க வேண்டி உயிர்களுக்கு அருள் செய்வதும்.
உலகியலார், சூரிய ஒளியால் தெரியும் உலகப் பொருட்களை நுகர்வதிலேயே கருத்தாக இருக்கின்றனர்.. அவ்வாறில்லாமல், சூரியனை(இறைவனை) நோக்குவதில் நாட்டம் பெற்றால், சூரியனின் ஒளி போன்ற இறைவனின் அருள், நமக்கு இறைவனைக் காட்டும்.. மறைப்பு நீங்கும்.. திரோதான சுத்தி கிட்டும்.
'திரள்நிரை யறுபதம் முரல்வன '
வேதங்கள் எம்பெருமானை யாண்டும் தொழுதேத்துவதும்.. நான்மறைகள் எம்பிரானின் கழல்களாய் ஒலிப்பதுவும் நாம் அறிவோம்..
வேதத்தின் ஆறு அங்கங்களாகவும் இருப்பவன் எம்பிரான். (ஆறு அங்கங்கள்== சிட்சை, வியாகரணம்,சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம்)
ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. (திருமூலர்)..
ஆறு அங்கங்களையுடைய மறை வடிவான எம்பிரானின் திருவடி மலர்களில் இருந்து, பிறவிப்பயனாகிய தேனை அடையும் பொருட்டு ஆன்மாக்களாகிய வண்டுகள் துதி செய்வதாகவும் கொள்ளலாம்.
சத்,சித்,ஆனந்தம் என்னும் மூன்று மண்டபங்களால் ஆன திருப்பெருந்துறை ஆலயத்தில் உறைந்திருக்கும் பேரானந்த வடிவே எம்பிரான்.. ஆனந்தமலையென்பது பேரானந்த நிலையே..
மாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..