நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI... SONG..# 7..திருப்பள்ளியெழுச்சி...பாடல் #.. 7

பாடல் 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்  
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே 
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச  
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
 எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

அது பழச்சுவை என – பரம்பொருள் கனியின் சுவை போன்றது எனவும்.

அமுது என - அமுதத்தின் இன் சுவையை ஒத்தது எனவும்.

அறிதற்கு அரிதுஎன - அறிவதற்கு அரிய‌து எனவும்.

எளிது என ‍ இல்லை..அறிவதற்கு எளிமையானது எனவும் 

அமரரும் அறியார் ‍ தமக்குள் வாதம் செய்து கொண்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் இருப்பர்.

இது அவன் திருவுரு - இதுவே அப்பரமனது திருவுரு.

இவன் அவன் எனவே ‍  இவனே நம் பெருமான் என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும்படியாக‌.

எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் – இங்கு எழுந்தருளிவந்து எங்களை ஆட்கொண்டருளுகின்ற.

மதுவளர் பொழில் - தேன் நிரம்பி வழியும் மலர்கள் நிறைந்துள்ள‌ சோலைகள் சூழ்ந்த.

திருவுத்தரகோச மங்கை உள்ளாய் - திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே!

திருப்பெருந்துறை மன்னா – திருப்பெருந்துறைக்கரசனே!

எதுஎமைப் பணிகொளும் ஆறு - எங்களை நீ பணி கொண்டு ஆட்கொள்ளும் விதம் யாது?.

அது கேட்போம் - அதனைக் கேட்டு அதன்படி நடப்போம்.

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எமது பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
  கரிதென எளிதென அமரரும் அறியார்=== பழம் என்பது பொதுவாக வாழைப்பழத்தையே குறிக்கும்..கனியக் கனிய சுவை மிகும் பழம் வாழை..கனிந்து குழைந்து சுவை மிகும் பழம் போல்,  பரிபக்குவ நிலை கூடக் கூட, உள்ளம் முதிர்ந்து குழைகிறது.. பரிபக்குவ நிலை பெற்ற உள்ளத்தின் நிலை இதுவானால், அதனைத் தருகின்ற இறைவனும் இது போலத் தானோ என்று தோன்றுகிறது ஒரு சமயம்..

குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய
மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து,
எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!(நீத்தல் விண்ணப்பம், (மாணிக்கவாசகப் பெருமான்.))

மாழை மாமணிப் பொதுநடம் 
          புரிகின்ற வள்ளலே அளிகின்ற 
     வாழை வான்பழச் சுவைஎனப் 
          பத்தர்தம் மனத்துளே தித்திப்போய் 
     ஏழை நாயினேன் விண்ணப்பம் 
          திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும் 
     கோழை மானிடப் பிறப்பிதில் 
          உன்னருட் குருஉருக் கொளும்ஆறே. (திருமுன் விண்ணப்பம், வள்ளலார் பெருமான்)

ஆயினும் அவ்வாறு, பழச்சுவையை ஒத்தவனே இறைவன் என்று கூற இயலாது.. அதனையும் மீறிய அமுதத்தின் சுவையாக இருக்கக்கூடுமல்லவா..

பழச்சுவையாவது உண்ண உண்ணத் தெவிட்டும் அமுது என்பது உண்ண உண்ணத் தெவிட்டாதது..
 உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் 
          ஒருவனே சிற்சபை உடையாய்  என்று வள்ளலார் பெருமானும் , ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என  சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமானும் பாடிப் பரவுகிறார்..

இறையனுபவம் என்பது எப்போதும் முழுமையாக உணரப்பட்டதாகச் சொல்ல இயலாது..அது அவனருளால் அமுதுண்ட அமரர்களே ஆனாலும் சரி...ஆம்!.. நஞ்சுண்ட நீலகண்டன் அருளால் அன்றோ நலமாக அமரர்கள் அமுதம் பெற்றனர். ஆலகால விஷம் உண்டு அமுதத்தை அளித்தது போல், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெறுதல் வேண்டும் அவனருளால்.

அறிதற்
  கரிதென எளிதென அமரரும் அறியார்=== நாம் அவனை அடைவதற்குண்டான வழி எது?.. அது அரிதா அல்லது எளிமையானதா என ஐயனால் காக்கப்பட்ட அமரரும் அறியார்.. எவ்விதம் எம்பிரானை அணுக, அடைய முடியும் என்பதை யாரும் அறியவியலாது.

இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
  எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்=== இம்மாதிரி, அழுத்தமாக, இது இறைவன்,இது அவன் திருவுருவம் என அறியும் நிலை எப்போது வாய்க்கும் என்றால், சிவசாயுஜ்யம் என்னும் நிலையிலேயே வாய்க்கும்.. முற்றாக இறைவனோடு இணையும் போது, நாம் வேறு அவன் வேறு எனும் நிலை அழியும் போது, திரோதானம் என்னும் மறைப்பு விலகும் போது..இறைவன் உள்ளத்துள்   தோன்றி நிலை பெறும் பொழுது வாய்க்கும்..

அந்நிலை வேண்டி, இறைவனை எழுந்தருள வேண்டுகிறார். இங்கு என்பது அன்பர் தம் உள்ளத்தைக் குறிக்கும்.. 'இறைவனோ தொண்டர் தம் உள்ளத்தொடுக்கம்' என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கல்லவா..

திருவுரு பற்றி மேலும் ஒரு விளக்கம்.

இறைவன் தம் சக்தியினால் மூவகை உருக் கொள்கிறான். அவை, உருவம், அருவம், அருவுருவம் என்பன அவை..

உருவம் கண்ணுக்குப் புலப்படுவது.. ஆயினும், அது ஞானியருக்கும், யோகியருக்கும் மட்டுமே புலப்படும்..அடியாருக்கு அருள்புரிய இறைவன் திருவுளங் கொள்ளும் போது, உருவத் திருமேனியை ஏற்பான்.

அருவம்== இது கண்ணுக்குப் புலப்படாதது.. ஆயினும் ஒரு வரம்புக்கு உட்பட்டது..

அருவுருவம்..இது ஒளிப்பிழம்பாய் வரை கடந்து தோற்றமாவது.. இதில் இறைவனுக்கு கரங்கள், விழிகள் முதலிய உறுப்புகள் தோற்றமாவதில்லை.. இலிங்கத் திருமேனியும் அருவுருவத் திருமேனியே..

அடியார்களுக்கு அருள்புரியும் பொருட்டு, திருவுருக் கொண்டு எழுந்தருள வேண்டுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
  மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா=== மது என்பது தேனைக் குறிக்கும்...தேன் நிரம்பிய மலர்கள் நிறைந்த பொழில் என்பது விரிவு..தேனிருக்கும் மலர்கள் நிறைந்த பொழில் போல, ஞானத் தேன் நிறைந்த பதமலர்கள் கொண்ட இறைவன் என்பது உட்பொருள்

இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் 
          இடர்களும் துன்பமும் எல்லாம் 
     பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் 
          புலையனேன் பொருட்டல இதுநின் 
     மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய 
          வகுத்தனன் அடியனேன் தனக்கே 
     எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் 
          இடரும்மற் றிலைஇலை எந்தாய். (வள்ளலார் பெருமான்)

இறைவன் அமர்ந்தருளும் பல திருத்தலங்கள் இருக்க, உத்திரகோச மங்கை இங்கு சொல்லப்பட்டது பொருளுடையது..

உத்திரம்=உபதேசம், கோசம்=ரகசியம். மங்கை என்பது உமாதேவியார். அம்மைக்கு வேதாகம ரகசியங்களை ஐயன் உபதேசித்தருளிய தலம் இது..

சமய தீக்ஷை, நயன தீக்ஷைக்கடுத்து, உபதேசமருளும் மந்திர தீக்ஷை இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகின்றது..

மேலும் எம்பிரான் திருவுருக் கொண்டு காட்சி கொடுத்தருளல் வேண்டுமென்பதே இப்பாடலில் முதல் நிலைப் பொருள்.. அப்படிப் பார்க்கும் போது, உத்திரகோச மங்கையில், அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் இறைவன் வேதாகமங்களை உபதேசித்து, தன் ஞான வடிவும் காட்டியருளினான் என்கிறது புராணம்..

உத்திர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்(மாணிக்கவாசகப் பெருமான்)

என்பது இதனைப் புலப்படுத்தும்..

அவ்வேலை அன்புடையார் அறுபதினாயிரவர்க்கும் அளித்துப் பாச
வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி
மைவேலை அனைய அங்கயற்கண் நங்கையடு மதுரை சார்ந்தான்
இவ்வேலை நிலம்புரக்க முடிகவித்துப் பாண்டியன் என்றிருந்த மூர்த்தி 

(திருவிளையாடற்புராணம், வலைவீசிய படலம்)

திருப்பெருந்துறைக் கோயிலில் ஆவுடையார் உண்டு. இலிங்கத் திருமேனி இல்லை.. அவ்விதம் பெருந்துறையில் உறையும் இறைவனானவன், உத்திரகோசமங்கையில் நிகழ்ந்ததைப் போல, ஞான உருவம் கொண்டு அருளல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

 இறைவனே,நீ எங்களைப் பணி கொள்ளும் வழி எது?'...அதை அறிவித்தருள்க,அதன்படி நடப்போம்' என்று விண்ணப்பம் செய்தார்.

'இறைவா, எமக்கு வேண்டுதல் வேண்டாமை இல்லை.. எது உன் திருவுளமோ அதன்படி' என்னும் ஆன்மானுபூதி வாய்க்கப் பெற்ற மனநிலை இங்கு சொல்லப்படுகிறது... எல்லாம் இறைவன் செயல் என்று முற்றாக உணர்ந்த ஞானியர் நிலை அது...

தமக்கென்று எந்த விருப்பமும் இல்லை.. இறைவனைச் சரணடைந்தாயிற்று....அவனே திருவுளங் கொண்டு, ஆண்டருளுதல் வேண்டும்.. அவன் விரும்பும் விதத்தில், சொல்லும் முறையில்  நடத்தல் வேண்டுமெனும் சரணாகதித் தத்துவமே இங்கு சொல்லப்படுவது என்று தோன்றுகிறது

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..