நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI...SONG # 6....திருப்பள்ளியெழுச்சி...பாடல் #.. 6


பாடல் 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
  பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

  திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பப்பற வீட்டிருந்து உணரும்நின்அடியார் - மனவிரிவு ஒடுங்கி, பற்றற்ற நிலையில் உன்னை உணருகின்ற நின் அன்பர்கள்.
 
பந்தனை வந்தறுத்தார் ‍==  பிறவித்தளையை அறுத்தவர்.
 
அவர் பலரும் - அவர்கள் அனைவரும்.
 
மைப்புறு கண்ணியர் - மை பொருந்திய கண்களையுடைய மாதர்களும்.
 
மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் - மனித இயல்பின் காரணமாக‌ உன்னை வணங்கி நிற்கின்றார்கள்.
 
அணங்கின் மணவாளா - உமையம்மைக்கு மணவாளனே!
 
செப்புறு கமலங்கள் மலரும் -  கிண்ணங்கள் போன்ற தாமரை மலர்கள் விரிந்து மலரும்.
 
தண்வயல் சூழ் - குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த.
 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபிரானே!
 
இப்பிறப்பறுத்து - இந்தப் பிறவிப் பெருங்கடல் நீக்கி.
 
எமை ஆண்டருள் புரியும் - எங்களை ஆட்கொண்டு அருளும்
 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

முதல் பாடலை வைத்துப் பார்க்கும் பொழுது, 

வினையால் அசத்து விளைதலான் ஞானம்
வினைதீரின் அன்றி விளையா வினைதீர
ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்
ஆனத்தால் அன்பிற் றொழு.(சிவஞான போதம்)

என்பதற்கிணங்க.. அன்பின் உருவான சிவத்தைத் துதித்து,  முற்றாக இருவினை ஒப்பு நிகழ்ந்து, சத்தி நிபாதத்துக்கு காத்திருக்கும் உயிர்களின் நிலையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்..

அந்த நிலையில்.. மனித மனதின் குறுகிய பரப்பு நீங்கி,  எல்லையற்ற பரவெளியில் நிறைந்தருளும் இறை தத்துவத்தை அறிகின்றனர் அடியார்..பரப்பு அற்ற,எல்லையில்லா பிரபஞ்ச வெளியாகிய வீட்டிருந்து இறை தத்துவத்தை உணரும்(இது மூன்று காலத்திலும் பொருந்துவதாகக் கையாளப்படுகின்றது) அடியார் எனவும் பொருள் கொள்ளலாம்.

பற்று முற்றாக ஒடுங்கியவராதலின் பந்தனை... அதாவது கர்மவினைக் கட்டுக்கள் அறுபட்டு நின்றார்.

 மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின் றார்அணங் கின்மண வாளா 

மைப்புறு கண்ணியர் என்பது ஒரு பரிபாஷை.. கண்களுக்கு அஞ்சனம் தீட்டுவது என்பது 'நயன தீக்ஷை' என்னும் பொருளாகக் கொள்ளப்படுகின்றது...  தக்க நிலையில் இருக்கும் உயிர்களுக்கு, எம்பெருமான் தம் திருவிழி நோக்கால் அருள் செய்யும் பான்மை சுட்டப்படுகின்றது..

திங்கள்சேர் சடையார் தம்மைச்  
   சென்றவர் காணா முன்னே 
அங்கணர் கருணை கூர்ந்த  
   அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்  
   சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்  
   பொருவில்அன் புருவம் ஆனார்.(பெரிய புராணம், கண்ணப்ப நாயனார் புராணம்)

அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. (மாணிக்கவாசகப் பெருமான்)

இவ்வாறு அருள் செய்யும் போது, அவர்களின் பக்குவ நிலை மேம்படுத்தப் படுகின்றது.. உயர் ஆன்மீக நிலைக்கு அவர்கள் தகுதி உடையவராகிறார்கள்..

 அணங் கின்மண வாளா ...மாதொரு பாகனைக் குறிப்பதே இது . இருவரும்சேர்ந்து உயிர்கட்கு அருள்பாலித்தாலே ஞானம் கிட்டும்.

 செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் == இங்கு தாமரை, இறைஞானத்தையும், குளிர்ச்சி பொருந்திய வயல், ஞானமாகிய தாமரை மலர்ந்த உள்ளத்துடன் கூடிய‌ ஞானியரின் குளிர்ந்த சுபாவத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்..
  
 திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 

மானிடப் பிறவி என்பது ஒரு நிலை. புல்,பூண்டு என்பதான பல பிறவிகளிலிருந்து இந்நிலைக்கு வந்திருக்கிறோம்.. இது கீழ் நோக்கி மீண்டும் போகலாகாது.. மனிதன், தெய்வ நிலைக்கு உயருதல் வேண்டும்... அதன் காரணமாகவே, 'மானிடப் பிறவியை நீக்கி, நின்னருள் கூட்டுக' என்றார். இந்தப் பிறவி மானிடப் பிறவியானது.. இனி வரும் பிறவி, இப்போது செய்யும் கர்மவினைகளால் என்னாக்குமோ என்ற பதைப்பு ஒவ்வொரு உயிருக்கும் இயல்பில் உண்டு..

மாயையின் காரணமாக, அந்தந்தப் பிறவியில் அதுவே சுகம் என்று எண்ணி வாழுமாறு உளப்பாங்கு அமைவது இயற்கை.. மானிடப் பிறவியே, ஆறாம் அறிவோடு, பிறவியின் காரண காரியங்களை எண்ணி செயலாற்றும் வாய்ப்புப் பெறுகிறது.. ஆதலால்,இந்தப் பிறவி வீண் போகாது, எம்மை ஆண்டு கொண்டு உம் நிலையில் எம்மையும் இணைப்பாய் என்று வேண்டுகோள் வைத்தார்.

பொன்னார் மேனியன் பொற்பாதம் தனைப் பணிவோம்!


மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..