நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 21 ஜனவரி, 2019

KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU..PART 39...க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்!!.

Image result for lord baby krishna with sakadasura

வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய  பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை,  வண்டியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்தாள். வீட்டினுள், ஆடலும் பாடலுமாக, சத்தமாக இருக்கும் சூழல், குழந்தையின் நிம்மதியான நித்திரையைக் கெடுக்கக் கூடுமென்று, வீட்டுக்கு வெளியே, வண்டியினடியில் குழந்தையைப் படுக்க வைத்து விட்டு, குழந்தைக்குக் காவலாக சில சிறுவர்களையும் வண்டியருகில் அமர வைத்தாள்!..
பகவானைக் காட்டிலும் உயர்ந்த மதிப்புடைய ஒன்று வேறேது?..எல்லாவற்றிலும் உயர்ந்தவர் பகவானே என்றல்லவா கொள்ள வேண்டும்?!.  பகவானைக் குழந்தையாகப் பெற்றெடுத்த போதிலும், யசோதை இதை மறந்தது மாயையின் லீலையென்றே கொள்ள வேண்டும்.. உலகியல் பொருட்களையே பெரிதென நினைத்து, அவற்றையே வண்டியின் மேற்புறத்தில் பாதுகாப்பாக வைத்தாள் யசோதை!!!.பின் வேலைகளையும் விருந்தினர்களையும் கவனிப்பதில் ஈடுபட்டாள்!. வண்டிச் சக்கரத்தில் வஞ்சக எண்ணத்துடன் வந்து புகுந்திருந்த சகடாசுரனை அவள் அறிந்தாளில்லை!.. ஆனால் மாமாயன் அறியாதது எது?!.

வீட்டினுள் வேலையாக இருந்த யசோதையின் செவிகளில், எதிர்பாராத விதமாக, காவலுக்கு நின்றிருந்த சிறுவர்களின் கூக்குரலும், மரங்கள் சட சட என முறியும் பேரொலியும் கேட்டது. அதைக் கேட்டு, பரபரப்புடனும், பயத்துடனும் வெளியே ஓடி வந்த யசோதை உள்ளிட்ட கோபிகைகள், சுற்றிலும் வீழ்ந்திருக்கும் மரக் கட்டைகளின் நடுவே, குழந்தையைக் கண்டனர்!!!.  பொருட்கள் ஏற்றியிருந்த வண்டி, கட்டைகளும் மரத்துண்டுகளுமாக உடைந்திருக்க, அதன் நடுவில், கோகுல பாலன், யாதொன்றும் அறியாத  குழந்தையாக, கை கால்களை உதைத்த வண்ணமிருந்தான்!.

( ததஸ்ததா³கர்ணன-ஸம்ப்⁴ரமஸ்²ரம
ப்ரகம்பி-வக்ஷோஜப⁴ரா வ்ரஜாங்க³னா: | 
ப⁴வந்தமந்தர்- த³த்³ருʼஸு²: ஸமந்ததோ 
வினிஷ்பதத்³ -தா³ருண- தா³ருமத்⁴யக³ம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ). 

( தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே(நம்மாழ்வார்) ).

கண்ணீர் பெருகும் கண்களுடன் விரைந்து அவ்விடம் வந்த நந்தகோபரும், கோபர்களும், அங்கு எவ்வித ஆபத்துமின்றி யசோதையின் கரங்களின் வீற்றிருந்த நந்தகுமாரனைக் கண்டு ஆனந்தமடைந்தார்கள்!!.

' இவ்வளவு பெரிய வண்டி எப்படி உடைந்தது?!..அதற்கான காரணமொன்றும் வெளிப்படையாகத் தெரியவில்லையே?' என்று ஆச்சரியமாக ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டு, குழந்தையைப் பார்த்தவண்ணம் நின்றார்கள் கோப கோபியர்கள்!.

காவலிருந்த சிறுவர்கள்  , 'குழந்தை பாலுக்காக அழுத வண்ணம், கை கால்களை ஆட்டி உதைத்தது. அதனால் வண்டி குடை சாய்ந்தது!' என்று கூறியதை கோப கோபியர்கள் நம்பவில்லை..பூதனையின் நிலையைக் கண்டிருந்த போதும், அவர்களால்  பகவானின் மகிமையை அறிய இயலவில்லை. 

" வண்டியை உதைத்த இந்த பவழ நிறப் பாதங்கள் அடிபட்டனவோ?, தாமரைத் திருக்கரங்கள் புண்பட்டனவோ?.." என்றெல்லாம் சந்தேகித்துக் கொண்டு, குழந்தையின் திருமேனியைக் கோபிகைகள் தடவிப் பார்த்தார்கள். தங்களுக்குள் மாற்றி, மாற்றி குழந்தையை எடுத்துத் தூக்கித் தழுவிக் கொண்டு கொஞ்சினார்கள்.

குழந்தையைக் கொல்லும் நோக்கத்துடன், வண்டிச் சக்கரத்தில் மறைந்திருந்த சகடாசுரன், சுத்த சத்வ ஸ்வரூபியான பகவானின் திருவடி தீண்டப்பட்டு பகவானிடமே லயமடைந்தான். ஆகையால் அத்தகைய ஒரு அசுரன் அங்கு வந்து, மாண்டத‌ன் அடையாளமாக, ஒரு துரும்பு கூட அங்கிருக்கவில்லை!!!..

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..