பட்டத்திரி, தொடர்ந்து சொல்கிறார்!..
"இவ்விதம் உன் அவயவங்களைத் தியானிப்பவர்களுக்கு, உன் பரப்பிரம்ம ஸ்வரூபம், தானே மனதுள் பிரகாசிக்கிறது. அந்த சமாதி நிலையை அடைந்த பின்னர், அதிலிருந்து நழுவ நேர்ந்தால், மறுபடியும் தாரணை முதலியவற்றை நாங்கள் தொடங்குவோம்!.. இந்த தொடர் அப்பியாசத்தால், சுகர், நாரதர் போல், பக்தர்களில் தலைசிறந்தவராவோம்!..".
இவ்விதம், யோகமார்க்கத்தில் ஏற்படும் நிலைகள் குறித்து சொல்லி வரும் பட்டத்திரி, ஒரு சிறந்த யோகி, முக்தி நிலை அடையும் மார்க்கங்கள் குறித்தும் சொல்லத் துவங்குகின்றார்.
"பிறப்பற்றவரே!.. உம்மிடம் லயமாகும் சமாதி நிலையில் வெற்றியடைந்த பின்னர், யோகியானவன், சத்யோ முக்தி (இந்தப் பிறவியிலேயே, நேரடியாக முக்தி நிலை அடைதல்) யையோ அல்லது கிரமமுக்தி (பூவுலகங்களுக்கு மேல் இருக்கும் தெய்வீக உலகங்களில் பிறவிகளை அடைந்து பின் முக்தி அடைதல்) யையோ விரும்பினால், அதற்கேற்ப பிராணவாயுவை, (உடலில் மறைமுகமாக இருக்கும்) ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழி மேலேற்றுகின்றான்..".
"சத்யோ முக்தியை விரும்பினால், ஆறு ஆதாரங்களைக் கடந்த பின் உம்மிடம் லயிக்கின்றான்.. கிரம முக்தியை விரும்பினால், நெருப்பு, பகல், சுக்ல பட்சம், உத்தராயணம் ஆகியவற்றின் ஆதிபத்திய தேவதைகளால், ஆதித்ய லோகத்தில் சேர்க்கப்பெற்ற யோகி, மிக மகிழ்ச்சியுடன், துருவ பதம் வரை செல்கின்றான்.."
"அதன் பின், உமது பக்தனாகிய யோகி, பிரளயத்தின் பொழுதோ அல்லது அதற்கு முன்பாகவோ பிரம்ம லோகத்தை அடைகின்றான். அங்கோ, அல்லது உமது லோகத்திலோ (வைகுண்டம்) வசித்துக் கொண்டு, மஹாபிரளயத்தின் போதோ அல்லது அவன் விரும்பும் பொழுது பிரம்மாண்டத்தைப் பிளந்து கொண்டோ முக்தனாகின்றான்.
அவ்விதம், பிரம்மாண்டத்தைப் பிளக்கும் பொழுது, அதன் ஏழு ஆவரணங்களான (அடுக்குகள்), பூமி, நீர், ஒளி, வாயு, ஆகாசம், மஹத், பிரக்ருதி ஆகியவற்றை அந்தந்த வடிவாகிக் கடந்து, எதுவும் சூழாமலிருக்கும் உம்மிடம் வந்து முக்தியடைகின்றான்.."
அர்ச்சிராதி₃க₃திமீத்₃ருஶீம் வ்ரஜந் விச்யுதிம் ந ப₄ஜதே ஜக₃த்பதே |
ஸச்சிதா₃த்மக ப₄வத்₃கு₃ணோத₃யாநுச்சரந்தமநிலேஶ பாஹி மாம் ||
("சச்சிதானந்த வடிவாகிய ஸ்ரீஅப்பனே!...இப்படியாக, ஒளி வடிவான அர்ச்சிராதி மார்க்கத்தில் உம்மையடைபவர், மீண்டும் நழுவிக் கீழே வருவதில்லை (அதாவது, பிறவியை அடைவதில்லை).. உம் கல்யாண குணங்களையே பாடும் என்னைக் காத்தருள வேண்டுகின்றேன்...").
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே. (ஸ்ரீ நம்மாழ்வார்).
(தொடர்ந்து தியானிப்போம்!).
அன்பர்களுக்கு மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. இறையருளால், வரும் ஆண்டு, எல்லா விதத்திலும் சிறப்பானதாக அமைய வேண்டுகிறேன்!..எல்லா நலமும் பெற்று வளமோடு வாழப் பிரார்த்திக்கிறேன்!..
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
அருமை அம்மா...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க வளமுடன்!..
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் பார்வதி!
பதிலளிநீக்குஅழகான தொடர் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது... திரும்பவும் வருகிறேன்...
தங்கள் வருகை பேருவகை கொள்ள வைத்தது!.. மிக்க நன்றி கவிநயா!.. மீண்டும் கட்டாயம் வருகை தந்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கோருகிறேன்.
நீக்கு