ஸ்ரீமந்நாராயணீயமே பக்திப் பிரவாகம். .நிலையான க்ருஷ்ண பக்தியையே, தியான ஸ்லோகத்தில் பட்டத்திரி பிரார்த்திக்கிறார். பக்தன் , பகவானை, நினைந்து நினைந்துருகி தியானிப்பதிலேயே பேரின்பம் காண்பவன்.. அது போல், அவரது மகிமைகளைப் போற்றுந்தோறும் எல்லையில்லா இன்பம் காண்கிறான். அதற்கு எல்லையிட அவனால் ஆகாது!..
கர்மயோகமும் ஞான யோகமும் பக்தியோகத்திற்கு இணையாக மாட்டா என்பது ஞானிகளின் கூற்று...நூலறிவு ஏதுமில்லா பாமரரும், பகவானை பக்தியினால் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என நாம் பார்க்கிறோம்!.. நாமதேவருக்கு அருளியவன், ஜனாபாய்க்கும் சக்குபாய்க்கும் உற்றவனாய் தொண்டு செய்த தன்மையை அறியாதவர் யார்?!.. பக்தியின் மேன்மையும், பகவானின் அடியார்களாகிய பாகவதோத்தமர்களின் மகிமையையும் சொல்லாதவரில்லை..
கிருஷ்ண பக்தியின் எல்லையில் நின்றவராகிய பட்டத்திரிக்கும், பகவானின் திருவுருவை, பலவாறு தியானித்தாலும் நிறைவு ஏற்படுவதாயில்லை..இதுவரை, பகவா னின் பெருமைகளை எண்ணி, அவரைத் தியானித்தார்.. இப்போதோ, அவரது திருவுருவை, கேசாதிபாதமாக வர்ணித்து தியானிக்கிறார்!.
"குருவாயூரப்பா!..சூரியனை விடவும் பல மடங்கு ஒளி வீசும் கிரீடம், நீண்ட திலகம் பிரகாசிக்கும் நெற்றி, கருணையை மழையெனப் பொழியும் விழிகள், புன்னகையின் உல்லாசம், அழகு வாய்ந்த நாசி, செவிகளிலிருந்து நீண்டு, கன்னங்களைத் தொட்டு,பிரகாசிக்கும் அழகான மகர குண்டலங்கள், கழுத்தில் ஒளி வீசும் கௌஸ்துப மணி, திருமார்பை அலங்கரிக்கும் வனமாலை(வைஜயந்தி), முத்து மாலை, மற்றும் ஸ்ரீவத்ஸம்!!.. இப்படியாக உன் திருவுருவை தியானிக்கிறேன்..”.
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. (திருமங்கை ஆழ்வார்).
பங்கையக் கண்ணன் என்கோ பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ சாதிமா ணிக்கத் தையே. ( நம்மாழ்வார்).
"கேயூரம், அங்கதம், கங்கணம், உத்தமமான ரத்னங்கள் இழைத்த மோதிரம் முதலான ஆபரணங்கள் அணிந்து விளங்கும் உமது நான்கு திருக்கரங்கள், கதை, சங்கு, சக்கரம்,தாமரை முதலியவற்றை ஏந்தியிருக்கின்றன. (இடையில்) தங்க அரைஞாணுடன் பிரகாசிக்கும் பீதாம்பரம், தூய்மையான திருப்பாத கமலங்கள், இப்படி, உமது திருமேனியழகை நான் தியானிக்கிறேன்...".
இன்னும்..இன்னும் எவ்வளவு வர்ணித்தாலும் முடியாத திருவுருவச் சிறப்பினை விவரிப்பது கடினமெனத் தோன்றவே, அதை, கீழ்க்கண்ட ஸ்லோகம் மூலம் புலப்படுத்துகின்றார்.
யத்த்ரைலோக்யமஹீயஸோ(அ)பி மஹிதம்ʼ ஸம்மோஹனம்ʼ மோஹனாத்
காந்தம்ʼ காந்தினிதா⁴னதோ(அ)பி மது⁴ரம்ʼ மாது⁴ர்யது⁴ர்யாத³பி |
ஸௌந்த³ர்யோத்தரதோ(அ)பி ஸுந்த³ரதரம்ʼ த்வத்³ரூபமாஸ்²cஅர்யதோ(அ)
ப்யாஸ்²cஅர்யம்ʼ பு⁴வனே ந கஸ்ய குதுகம்ʼ புஷ்ணாதி விஷ்ணோ விபோ⁴ || 3||
("எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபுவே, உமது திருவுருவம்,மூவுலகிலும் சிறந்ததாக உள்ள பொருள் யாதோ அதை விடவும் சிறந்தது!..எது அனைவரின் மனதையும் கவருமோ, அதை விடவும் கவரக்கூடியது உமது திருவுருவம்!..எந்தப் பொருள், மேலான கவர்ச்சியும் ஒளியும் கொண்டதோ அதை விடவும் மேலான கவரும் தன்மையும் ஒளியும் கொண்டது!..இனிமையுடைய எதனினும் இனிமையானது!..அழகிலும் அழகு அது!.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமான உமது திருவுருவம் யாருக்குத் தான் குதூகலத்தை அளிக்காது?!"..).
மேலும் தொடருகிறார்!..
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
பகவத் ரூப வர்ணனைகள் அனைத்தும் அருமை. அழகு. பாராட்டுகள்
பதிலளிநீக்குதங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றி!..
நீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குதங்களுக்கு மனமார்ந்த நன்றி!..
நீக்குவர்ணனைகளாலேயே பகவானைப் பார்த்தமாதிரி மனதில் உருவகம் உண்டாகிரது. பாதாதி கேசமுதல்
பதிலளிநீக்குபிரஸன்னமாகத் தோன்றும் பகவானே உனக்கு என் நமஸ்காரங்கள். அன்புடன்
ஆழ்ந்து அனுபவித்து வாசித்திருக்கிறீர்கள் அம்மா!.. என்றென்றும் தங்கள் ஆசிகளைக் கோருகின்றேன்..
நீக்கு