நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 15 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME...PART 8....கண்ணனை நினை மனமே!..‍பகுதி 8....

பக்தர்கள், பகவானிடத்திலே எப்போதும் ஈடுபட்ட மனதுடையவர்களாக, அவரது லீலைகளைப் பற்றியே சிந்தித்து,  தன்னையொத்த மனப்பாங்குடையவர்களிடம் சத்சங்கம் செய்து கொண்டு சஞ்சரிப்பதையே இயல்பாகக் கொண்டவர்கள்..அவ்விதம் இருக்கும் போது, உலகத்தின் மாயா வேகம் அவர்களைத் தாக்காது.. ஸ்திரமான மனதுடையவர்களாய், உலகியல்களால் பாதிக்கப்படாது, தாமரை இலைத் தண்ணீர் போல், பற்றற்று உலகியலை நடத்துவார்கள்.. பகவானின் நாம ஸ்மரணை அவர்களது இயல்பில் ஒன்றியதாயிருக்கும்..

ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைப் போல், 'ஒரு கையால் பகவானைப் பிடித்தவாறு, மறு கையால்  உலகியல் கடமைகளைச் செய்து கொண்டு' காலம் கழிப்பார்கள்.

ஆனந்த ரூபமான பகவானின் நினைவில் எப்போதும் ஆழ்ந்திருப்பதால், ஆனந்தமே இயல்பாகி, எவ்விதத் துன்பங்களும் தாக்காமல், பகவானைச் சார்ந்தே, அவனது கைக்கருவியாகவே தங்களை எண்ணிக் கொண்டு, வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.. 

இதையே பட்டத்திரி, தம் ஸ்லோகங்கள் மூலம் சொல்லி வருகிறார்.. அதை மேலும் தொடர்ந்து பார்க்கலாம்..

"முனிவர்களில் சிறந்தவர்களான, நாரதர் முதலான உத்தம ரிஷிகள், உம்முடைய திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டே இருப்பதால், துன்பமற்றவர்களாக, எவ்விடத்திலும் பிரகாசிக்கும் ஆனந்த ரூபமான அத்வைதப் பிரவாகத்தில் மூழ்கியவர்களாக, சஞ்சாரம் செய்கிறார்கள்.. இதை விடவும் அவர்கள் அடையக் கூடிய பேறு வேறு என்ன இருக்க இயலும்?" (அதாவது, எப்போதும் பகவானைத் தியானிப்பவர்கள், எங்கும் எவ்விடத்தும் அவரே நிறைந்திருக்கக் காண்கின்றனர்).

(காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா ( மகாகவி பாரதியார்)).

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று. (நம்மாழ்வார்).

"எனக்கு உம்மிடத்தில் பூரணமான பக்தி இருக்க வேண்டும்..அதுவே என் துன்பக்குவியல்கள் அனைத்தையும் நீக்கிவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை.. இல்லையெனில், வியாச பகவான் இயற்றியருளியவையும், உம்முடைய உபதேசமும் (ஸ்ரீமத் பகவத் கீதை), வேதங்கள் சொல்வதும், தெருவில் செல்லும் ஒரு வழிப்போக்கனின் வார்த்தையைப் போல் அர்த்தமற்றதாகி விடும்!.."

"குருவாயூரப்பா!.. உம்மிடம் கொள்ளும் பக்தியானது, துவக்கத்தில் இனிமை அளிக்கிறது, அது வளரும் போது, அனைத்துத் துயரங்களும் நீங்கி விடுகின்றன. அது மேலும் முதிரும் போது, இதயத்தில், நிர்மலமான ஞானத்தை ஏற்படுத்தி, பிரம்ம ஐக்கியத்தையும் அருளிவிடுகிறது.. இதற்கு மேல் வேண்டுவதென்ன!"

இவ்விதம் சொல்லி வரும் பட்டத்திரி, பக்தனின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, கீழ் வரும் ஸ்லோகம் மூலம் விளக்குகின்றார். தன் செயல்பாடுகள் அனைத்தும், கிருஷ்ணார்ப்பணமாக அமைய வேண்டி பிரார்த்தித்து, அதன் மூலம் பக்தர்களின் பிரார்த்தனை என்னவாக இருக்க வேண்டுமென்பதை விளக்குகின்றார்..

விதூ⁴ய க்லேஸா²ன்மே குரு சரணயுக்³மம்ʼ த்⁴ருʼதரஸம்ʼ
ப⁴வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜனவிதௌ⁴ | 
ப⁴வன்மூர்த்யாலோகே நயனமத² தே பாத³துலஸீ
பரிக்⁴ராணே க்⁴ராணம்ʼ ஸ்²ரவணமபி தே சாருசரிதே ||

"ஸ்ரீஅப்பனே!.. என் கால்கள் உமது திருக்கோயில்களுக்குச் செல்லட்டும்.. கைகள் உமக்கு பூஜை செய்வதிலும், கண்கள் உம் திருவுருவை தரிசிப்பதிலும், மூக்கு உமது திருவடிகளில் சமர்ப்பித்த துளசியை முகர்வதிலும், காதுகள் உம் லீலைகளைச் சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் மட்டுமே ஈடுபடட்டும்.. இவ்வாறு நான் இன்புறுவதற்கு, என் துன்பங்களைப் போக்கி அருள்வாயாக!!".

(இந்த ஸ்லோகத்தை, "ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா' என்று துவங்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்துடனும், "நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை" என்று துவங்கும் அபிராமி அந்தாதி பாடலுடனும் ஒப்பு நோக்கலாம். இவை அனைத்தும், கருத்தில் ஒத்திருப்பது கண்கூடு!.. ஆகவே பக்தனின் செயல்பாடுகள் எவ்வாறிருக்க வேண்டும் என்பது அனைத்து வித வழிபாடுகளிலும் ஒன்றாகவே சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்!).

(தொடர்ந்து தியானிக்கலாம்).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. சௌந்தர்யலஹரி,அபிராமி அந்தாதி முதலானவைகளுடன் ஒப்பிட்டுக்கூரியிருப்பது மனதைக் கவர்ந்தது. மிக்க அழகாக இருக்கிரது, அறிவு பூர்வமாகச் சிந்திக்கவும் வைக்கிறது, இந்தத் தொடர் பதிவுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..