நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 14 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME...PART ..12...கண்ணனை நினை மனமே!.. பகுதி 12..விராட்புருஷ உற்பத்தி!..


சென்ற பதிவு குறித்து சிறியதொரு விளக்கம்!..

சென்ற பதிவில், "சத்யோ முக்தியை விரும்பினால், ஆறு ஆதாரங்களைக் கடந்த பின் உம்மிடம் லயிக்கின்றான்" என்று வரும் வரி குறித்த அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமான விளக்கம் இது.. ஆறு ஆதாரங்கள் என்பது நம் உடலில் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களைக் குறிக்கும்.. இது குறித்து, முன்பே 'ஆறாதாரமும் மூலாதாரமும்' (சொடுக்குக) பதிவில் எழுதியிருக்கிறேன்.. அதனைத் தொடர்ந்த பதிவுகளில் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்தைக் குறித்தும் விளக்கியிருக்கிறேன். பதிவுகளில் இருக்கும் விஷயங்கள், பெரியோர்களின் வாய்மொழி மூலமாகவும், அவர்கள் பரிந்துரைத்த நூல்களில் இருந்த தகவல்களைத் தொகுத்தும் எழுதப்பட்டன‌.

என்னால் இயன்ற அளவுக்கு, ஒவ்வொரு பதிவிலும் தகவல்கள் தந்திருக்கிறேன்!..

அடுத்ததாக, கிரம முக்தி..மண்ணுலகத்திற்கு மேலாக, பல தெய்வீக உலகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது..அந்த உலகங்களில், தெய்வீகமான பிறவிகள் எடுத்து, அதன் பின்னர், யோகியானவன் முக்தி அடைகின்றான். இது குறித்து, 'ஒரு யோகியின் சுயசரிதம்' நூலில், ஸ்வாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி, தம் வாய்மொழி மூலமாகவே விளக்கியிருக்கிறார் (அத்தியாயத்தின் தலைப்பு..'ஸ்ரீயுக்தேஸ்வர் மீண்டும் உயிர்த்தெழுகிறார்!). 

மிக விரிவான விளக்கம் அது!..

இனி இந்தப் பகுதியில், விராட் புருஷ உற்பத்தி குறித்துக் காணலாம்..

இந்த தசகம், விராட்புருஷ உற்பத்தியைப் பற்றியது..ஒன்றான பரம்பொருள், தன் சங்கல்பத்தால், பலவாக விரிதலும், அதற்கான காரண காரியங்களும் இந்த தசகத்தில் சொல்லப்படுகின்றன..இப்பிரபஞ்சப் பொருட்களனைத்தையும் ஒரு உருவாகக் கொண்டால் அதுவே விராட்புருஷ சொரூபம்!...இதை விளக்கமாக, வரும் தசகங்களில் பார்க்கலாம்..

"வ்யக்தாவ்யக்தமித³ம்ʼ ந கிஞ்சித³ப⁴வத்ப்ராக்ப்ராக்ருʼதப்ரக்ஷயே
மாயாயாம் கு³ணஸாம்யருத்³த⁴விக்ருʼதௌ த்வய்யாக³தாயாம்ʼ லயம்| 
நோ ம்ருʼத்யுஸ்²ச‌ ததா³ம்ருʼதம்ʼ ச‌ ஸமபூ⁴ந்நாஹ்னோ ந ராத்ரே​: ஸ்தி²தி
ஸ்தத்ரைகஸ்த்வமஸி²ஷ்யதா²​: கில பரானந்த³ப்ரகாஸா²த்மனா ||"
(​"குருவாயூரப்பா!.. முந்தைய  மஹா பிரளயத்தில், மாயையானது உம்மிடம் ஒடுங்கியிருந்தது.. முக்குணங்களாகிய, சத்வ, ரஜோ, தமோ குணங்கள் சமமாக இருந்தன..அபோது, ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் காணப்படும் இந்தப் பிரபஞ்சம் இல்லை.. அப்போது, பிறப்பு, இறப்போ, பகல் இரவோ எதுவுமில்லை... நீர் ஒருவர் தான் பரமானந்தப் பிரகாச​மாக இருந்தீர் அல்லவா?"​)​. 

"ஸ்ரீ அப்பனே!.. பிரளயத்திற்கு முன்பு, நீர் உமது பேரானந்த நிலையில் லயித்திருந்தாய்...காலம், கர்மங்கள், முக்குணங்கள், அனைத்து உயிர்கள், காரியமான பிரபஞ்சம் யாவும் உம்மிடம் லயமாகியிருந்தன. அவை இல்லாமல் ஆகிவிட்டதாகச் சொல்லவில்லை..சக்திரூபமாக இருந்தன.. அவ்வாறில்லாவிட்டால், ஆகாச புஷ்பம் போன்று அவை மீண்டும் எப்படித் தோன்றும்?" (ஆகாச புஷ்பம் என்பது, இவ்விடத்தில், இல்லாத ஒன்றைக் குறிக்கச் சொல்லப்பட்டது).

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல் 
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் 
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் 
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (திருமழிசை ஆழ்வார்).

"இவ்விதமாக, இரண்டு பரார்த்த காலம் நிறைவடைந்ததும், நீர் சிருஷ்டி செய்ய வேண்டுமென்ற உமது ஈக்ஷணையை, (சங்கல்பத்தைச் செய்தீர்!.).அதனால், மாயை தானாகவே சலனமுற்றது... மாயையிலிருந்து, காலமும், கர்மங்களும்,  அவற்றுக்கு ஏற்ற சுபாவ‌ங்களும் தோன்றி, குணங்களை மலரச் செய்து, மாயைக்கு உதவி செய்தன.."

உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு 
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் 
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் 
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?  (திருமழிசை ஆழ்வார்). 

(இரண்டு பரார்த்த காலம்= ஒரு பரம்..பிரம்மாவின் ஆயுட்காலம்..இவ்விடத்தில் பிரம்மாவின் ஆயுட்காலம் குறித்த ஒரு குறிப்பு..நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகம்.ஆயிரம் சதுர்யுகம் பிரம்மாவின் ஒரு பகல். ஆயிரம் சதுர்யுகம் அவரது இரவு.. இவ்விதமான பகலும் இரவும்  கொண்டது ப்ரம்மாவின் ஒரு நாள். அத்தகைய 360 நாட்கள் அடங்கியது அவரது ஒரு வருடம். இவ்விதமான‌ நூறு வருடம் அவரது ஆயுட்காலம். இதுவே பரம் எனப்படும். இதில் பாதி பரார்த்தம் ஆகும். ஆக, பிரம்மாவின் ஆயுட்காலம் இரண்டு பரார்த்தம். பிரளயத்திற்கு பின்னர், அவ்வளவு காலம், விஷ்ணுவின் யோகநித்திரை...அதற்குப் பின்னரே சிருஷ்டியின் துவக்கம்).

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..