நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கங்கையிற் புனிதமாய காவிரி...(ஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு)

தலைக் காவிரி
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!” (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்).

(2:8:2012, ஆடிப் பெருக்கு).

கர்நாடகத்தின் குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் அன்னை காவிரி, வையகம் வாழ, தன் இடம் விட்டு, ஆறாய்ப் பிரவாகமெடுத்து, சில இடங்களில் நதியாய் நடந்து, சிற்றோடையாய் சிரித்து, தாய் தன் மக்கள் மீது காட்டும் பேரன்பு வெள்ளமென பெருகி விரிந்து, பூக்கள், இலைகள், மூலிகைகள் எனச் சுமந்து, வேற்றுமை இன்றி வளங்களை வாரி வழங்கி மகிழ்கிறாள்.

'பெருக்கு' என்ற சொல்லுக்கு, பெருகுதல் என்று மட்டும் பொருள் அல்ல. 'கூட்டிப் பெருக்குதல்' என்ற சொல்லையே, 'பெருக்கு' என்றும் சுருக்கமாகச் சொல்வதுண்டு. வீட்டில் இருக்கும் குப்பைக் கூளங்களை அகற்றி, வீட்டைச் சுத்தம் செய்வது போல், ஆற்றில் வெள்ளம் பெருகும் போது, அதில் இருக்கும் அசுத்தங்கள் யாவும் அகற்றப்பட்டு, வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.

இதைத் தத்துவார்த்தமாக நோக்கினால், அன்பெனும் வெள்ளம் பாய்ச்சப்படும் போது, மனமாசுகள் யாவும் அகன்று, இறை நிலை கைகூடும் எனவும் கொள்ளலாம்.

காவிரியின் தோற்றம் குறித்த புராணக்கதை:

அகத்திய மாமுனிவர், பொதிகை மலைக்கு வரும் வழியில், அங்கிருந்த மரத்தில் தம் முன்னோர்கள் தலை கீழாகத் தொங்குவதைக் கண்டார். வம்ச விருத்திக்காக, மணம் முடிக்க வேண்டிய, அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டார்.

ஒரு நாள் அவர் விதர்ப்ப நாட்டை அடைந்த போது, அந்நாட்டு மன்னன் வேள்வி ஒன்றைச் செய்து கொண்டிருந்தான். அகத்தியரை வரவேற்று உபசரித்த மன்னன், வேள்வியில் பங்கு கொள்ள வேண்டினான். வேள்வித்தீயில் ஒரு பெண் தோன்றினாள். அப்போது ஒரு அசரீரி,'அகத்தியா, இவளே நீ மணமுடிக்க வேண்டியவள். இவள் பெயர் 'லோபமுத்திரை' என்பதாகும்' என்று கூறியது. ஆனால் அப்பெண்ணோ, 'நான் விதர்ப்ப ராஜன் யக்ஞ குண்டத்தில் தோன்றியதால் அவருடைய மகளாவேன்.அவரிடம் அனுமதி பெற்றால் என்னை மணமுடிக்கலாம்' என்றாள். விதர்ப்ப நாட்டு அரசனோ, லோபமுத்திரையை மணமுடிக்க வேண்டுமானால், அகத்தியர் பெரும் பொருள் தரவேண்டுமென்றான். லோப முத்திரையும் அரசன் சொற்படி நடக்க அகத்தியரை வற்புறுத்தினாள்.

பின், பல மன்னர்களிடம் யாசித்து, அரசன் கேட்ட பொருளை, அகத்தியர் அளிக்க, அவனும்  மனமுவந்து, லோபமுத்திரையை, அகத்தியருக்கு மணம் செய்து வைத்தான்.

அகத்தியர், லோபமுத்திரையை நோக்கி, 'அடங்காத ஆறு போல் என்னை ஆட்டி வைத்ததன் காரணமாக, நீராக மாறி என் கமண்டலத்துள் அடங்குவாய்' என்று கூறி, அவளை நீராக மாற்றி தன் கமண்டலத்துள் அடக்கினார். 
ஸ்ரீ அகத்திய மாமுனிவரும் லோபமுத்திரா தேவியும்
அவர் குடகு மலைப் பகுதியை அடைந்து, கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது, விநாயகப் பெருமான், உலக நன்மைக்காக, ஒரு காகத்தின் உருவெடுத்து, அந்தக் கமண்டலத்தைத் தட்டி விட்டார். ஒரு காகம் தட்டி விட, கமண்டலத்திலிருந்து நதியாய் விரிந்தமையால், 'காவிரி' எனப் பெயர் பெற்றாள் காவிரித்தாய்.

நடந்தவை அனைத்தையும் தம் ஞான திருஷ்டியால் அறிந்தார் அகத்தியர். நாடு வளம் கொழிக்கும் பூமியாக மாறவே, விநாயகப் பெருமான் இந்த லீலையை நடத்தியருளினார் என்பதை உணர்ந்தார். பின், தன் கமண்டலத்துள் எஞ்சியிருந்த நீரை எடுத்துக் கொண்டு, பொதிய மலையை அடைந்து, அந்த மலைச் சிகரம் ஒன்றின் மேல் எஞ்சியிருந்த நீரை ஊற்ற, அது 'பொருநை'(தாமிர பரணி) நதியாக விரிந்தது.
 
காவிரியின் தோற்றம் குறித்து வேறொரு புராணக் கதையும் உண்டு. அன்னை ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி, கங்கையை முத்துமாலையாக்கி, தன் கழுத்தில் அணிந்திருந்தாள். அவள் தன் திருமார்பில் பூசியிருந்த குங்குமச் சாந்தின் நிறம் பெற்றதால், செந்நிறமான(தாமிர நிறம் பெற்ற) அந்த முத்துமாலையை, அன்னை ஸ்ரீ லலிதா, பொதிய மலைக்கு வருகை புரிந்த அகத்தியரிடம் அளிக்க, அவர் முன் அது 'தாமிர பரணி' என்னும் பெயர் கொண்ட பெண்ணாக உருமாறி நின்றது. அப்பெண்ணை, அவர், நீராக மாற்றி, தம் கமண்டலத்துள் அடைத்து, குடகு மலை நோக்கிச் சென்றார். அங்கு விநாயகப் பெருமான், கமண்டலத்தைத் தட்டி விட, காவிரி தோன்றினாள். பின் மீண்டும் அகத்தியர் பொதிய மலையை அடைந்து 'தாமிரபரணி'யை தோற்றுவித்தார் என்றும் கூறப்படுகிறது.

பதினெட்டாம் பெருக்கு:

கருணை பொங்கும் உருவிலெல்லாம், பெண்மையின் சாயல் கண்டு மகிழ்ந்து போற்றிடும் நம் கன்னித் தமிழ் பண்பாடு, மலை, வயல், காடு, மேடு என அனைத்தும் கடந்து வந்து மக்களின் வாழ்வை வளமாக்கும்  ஆறுகளையும், நதிகளையும் பெண் தெய்வங்களாகக் கொண்டாடியதில் வியப்பில்லை. 

தமிழர் பண்பாட்டில் காவிரித்தாய்க்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு. சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களிலிருந்து, தற்காலப் புதினங்கள் வரை, தமிழரின் பண்பாடு கூறும் பல நூல்களிலும் காவிரியன்னை சிறப்பிடம் பெறுகிறாள்.

'சோழவளநாடு சோறுடைத்து' என்று புகழ்பெறும் வண்ணம், சோழநாட்டை வளநாடாக்கிய பெருமை காவிரியன்னைகே உண்டு.

சோழ மன்னர்களும் காவிரியன்னையைச் சிறப்பிக்கத் தவறவில்லை. மேற்கே சஹ்யாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்பத்திரண்டு  சிவாலயங்களைக் கட்டுவித்தார் ஆதித்த சோழ மாமன்னர்.  சோழ மன்னன், கரிகாற்பெருவளத்தான் காவிரிக்குக் கல்லணை கட்டிப் பெரும்புகழ் பெற்றான்.
Picture
தம்மைக் கண் போல் காத்து, வாழ்வில் வளம் சேர்க்கும் காவிரியன்னை, ஆடி மாதம், கார்காலத் துவக்கத்தில், புது வெள்ளம் கண்டு, பெருக்கெடுத்து ஓடி வருவதை, தம் வீட்டுப் பெண் தம்மைக் காண வருவதாகவே எண்ணி, பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் தமிழர் பெருமக்கள். தன் பிறந்த குடகு மலை விட்டு, தமிழகத்தின் தாகம் தீர்க்கவென, தீராத பாசத்தோடு வரும் காவிரியன்னைக்கு, ஆடி மாதம் 18ம் தேதியன்று, 'ஆடிப்பெருக்கு' விழாக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

காவிரி ஆறு கரைபுரண்டோடும் பகுதிகளில் இருக்கும் படித்துறைகள் பெரும்பாலும் 18 படிகள் கொண்டதாக இருக்கும். அவை அனைத்தும் மூழ்குமளவு வெள்ளம் வருவதால் பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப் படுவதாக ஐதீகம்.

ஆடிப் பெருக்கன்று காவிரியில் நீராடுதல் சிறப்பு. ஆடிப் பெருக்கன்று நீராடினால் கோடிப் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
ஆன்மீக ரீதியாகப் பார்த்தோமானால், காவிரிக்கரையில், பூமிக்கடியில் ப்ருத்வி யோகத்தில் இருக்கும‌ எண்ணற்ற யோகிகளும் மகரிஷிகளும், ஆடிப்பெருக்கு  தினத்தில், காவிரியில் ஸ்நானம் செய்து, தம் தவப்பயனைக் காவிரியில் சேர்ப்பதாகவும், அதனால் அன்றைய தினம் காவிரியில் நீராட, தீராத துன்பங்களும் தீரும் என்பதும் நம்பிக்கை.

வசிஷ்ட மஹரிஷி சொற்படி, அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, ஸ்ரீராமபிரான், காவிரி நதியில் நீராடிய நன்னாளே, ஆடி பதினெட்டு என்றும் ஒரு கூற்று உண்டு.
அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டு, 'தட்சிண கங்கை' என்று போற்றப்படும் காவிரியன்னைக்கு, காவிரிக் கரையோரம் வாழும் மக்கள், ஆடிப் பெருக்கன்று, பிறந்த வீட்டுச் சீராக, மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யச் சரடு, காதோலை, கருகுமணி, ரவிக்கைத் துணி போன்றவற்றை, முறத்தில் வைத்து, ஆற்றில் விட்டு பூஜிக்கிறார்கள். 

நீரில் மஞ்சளைக் கரைத்து அன்னைக்கு மங்கல விழாக் கொண்டாடுகிறார்கள்.   தீபங்கள் ஏற்றி, ஆற்றில் விட்டு, தம் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வரம் வேண்டுகிறார்கள்.
இரு கரைகளிலும், நுங்கும் நுரையுமாகப் பெருகும் வெள்ளம், நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை நினைவுபடுத்துவதால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு, வளைகாப்பு, பூச்சூட்டல் சமயங்களில், வாய்க்கு ருசியாக,சர்க்கரை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை முதலான பிசைந்த சாத வகைகளைச் செய்து உண்ணச் செய்வது போல், காவிரியன்னையையும் கர்ப்பிணிப் பெண்ணாகப் பாவித்து,  கலந்த சாத வகைகளை காவிரிக்கரைக்கு எடுத்து வந்து, அன்னைக்கு நிவேதனம் செய்து பகிர்ந்து  உண்கிறார்கள்.

புது மணத் தம்பதியர், தம் மண மாலைகளைப் பாதுகாத்து வைத்திருந்து, பதினெட்டாம் பெருக்கன்று ஆற்று நீரில் விட்டு மண வாழ்வு மணம் வீச அன்னையை வேண்டுகின்றனர்.

திருமண தினத்தன்று கட்டிய மஞ்சள் கயிற்றை மாற்றி, புது மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்துடன், பவளம், முத்து, மகாலட்சுமிக் காசு, அன்னப் பறவைக் காசு முதலான மங்கலச் சின்னங்களைக் கோர்த்து, புது மணமகளுக்கு அணிவிக்கும் 'தாலிப் பெருக்குதல்' எனப்படும் நிகழ்வும் காவிரிக்கரையில் நடைபெறும். ஆடிப்பெருக்கன்று தாலி பெருக்க, மங்கலம் நிறையும் என்பது நம்பிக்கை.
.

காவிரிக் கரையில் நடைபெறும் 'சுமங்கலி பூஜை' சிறப்பான ஒன்று. குடும்பம் குடும்பமாக, கரையோரத்தில் வாழை இலை விரித்து, திருவிளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யச்சரடு உள்ளிட்ட பொருள்களை வைத்து வணங்கி, குடும்பத்தில் மூத்தவர் கையால், திருமாங்கல்யச் சரடைப் பெற்றுக் கொண்டு, சுமங்கலிப் பெண்கள், தம் கழுத்தில் கட்டிக் கொள்வர். அதில் வைக்கப்படும் காப்புக் கயிற்றை, ஆண்களும், திருமணமாகாத பெண்களும் பெற்றுக் கொண்டு அணிந்து கொள்வர். இது அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை.
விவசாயிகளுக்குக் கொண்டாட்டமான தினம் ஆடிப் பெருக்கு. அன்று அவர்களும் காவிரியன்னையை பூஜித்து மகிழ்வர்.

'தென்னகத்தின் திரிவேணி சங்கம'மாகப்  போற்றப்படும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா மிக விசேடமாகக் கொண்டாடப்படும்.

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(தொண்டரடிப்பொடி ஆழ்வார்).

'ரங்கம்' என்றால், ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான இடம் என்பது பொருள்.

'பூலோக வைகுண்டம்'  எனப் போற்றப்படும் திருவரங்கம் மட்டுமல்லாது, 'பஞ்சரங்கத் தலங்கள்' என்று சிறப்பித்துக் கூறப்படும் தலங்கள் அனைத்தும் காவிரியன்னையை அணைந்தே அமைந்துள்ளன.
'ஆதிரங்கம்' எனப் பெயர் பெற்ற, கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணம், மத்திய ரங்கமான திருவரங்கம், அப்பாலரங்கம் என்று சொல்லப்படும் திருப்பேர்நகர் என்ற கோவிலடி, சதுர்த்தரங்கம் என்று  போற்ற‌ப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவில், பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று புகழப்படும், காவிரியின் வடகரையில் அமைந்துள்ள, திருஇந்தளூர் திருத்தலம் ஆகிய ஐந்துமே, பஞ்சரங்கத் திருத்தலங்களாகும்.

திருவரங்கத்தில், காவிரித்தாய், கொள்ளிடமாகப் பிரிந்து,  நீராலான மாலையைப் போல் ஸ்ரீரங்கநாதரைச் சுற்றிக் கொண்டு ஓடி,பின் மீண்டும் இணைகிறாள்.

காவிரியன்னை, ஸ்ரீரங்கநாதரின் சகோதரியாகவே போற்றப்படுகிறாள். ஸ்ரீரங்கநாதர், தன் செல்லத் தங்கைக்கு, சீர் செய்ய, ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளுகிறார்.  சீர்வரிசைகளாக, புதுப் பட்டுப்புடவை, மாலைகள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை, முறத்தின் மீது வைத்து, அதைக் கோவில் யானை மீது ஏற்றி, கோவிலிலிருந்து எடுத்து வருகிறார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் முடிந்ததும், அதை அவர் திருப்பாதங்களில் சமர்ப்பித்து, பின் கோவில் யானை மூலமாகவே, படித்துறையில் காவிரியன்னைக்கு வழங்கும் விழா நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கன்று இந்த நிகழ்வைக் காண்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகப் புனிதமான, புண்ணியங்கள் சேர்க்கும் நிகழ்வாகும் இது.

ஆடிப் பெருக்கு, காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மட்டுமல்லாது, மற்ற ஆறுகள் பாயும் கரையோரங்களில் வாழும் மக்களாலும் சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. ஆற்றங்கரையோரம் வாழும் வாய்ப்பில்லாதவர்களும், தத்தமது இல்லங்களில், காவிரியன்னையின் பிரதிமைக்கு பூஜைகள் செய்து, பிசைந்த சாத வகைகள் நிவேதனம் செய்து கொண்டாடுகின்றனர்.

ஆடிப்பெருக்கு தினத்தன்று, காவிரியன்னையைப் போற்றி வழிபாடு செய்து,


வெற்றி பெறுவோம்!!!!

4 கருத்துகள்:

  1. அழகாக அன்னைக் காவிரியை
    அகத்தியனில் ஆரம்பித்து அப்பன்
    அரங்கனின் சீர்வரிசையோடு அருமையாக
    ஒரு குறும்படமாகவே படைத்திருக்கிறீர்கள்!
    மிகவும் அற்புதமாக படைத்துள்ளீர்கள் சகோதரி...

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  2. // ஜி ஆலாசியம் said...
    மிகவும் அற்புதமாக படைத்துள்ளீர்கள் சகோதரி...//

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா!!

    பதிலளிநீக்கு
  3. ஆடிப் பெருக்கின் பெருமைகளை எளிமையாக விளக்கி இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆடிப் பெருக்கின் அருமை பெருமைகளை அழகாகவும் எளிமையாகவும் கொடுத்துள்ள தங்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..