நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 12 மே, 2012

விசுத்தி (ஆறாதாரமும் மூலாதாரமும்...... பாகம் 5)...

          
விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக-விஸதம் வ்யோம-ஜநகம்
ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந-வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண-ஸாரூப்ய-ஸரணே:
விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ

"அம்பிகையே, உன்னுடைய விசுத்திச் சக்கரத்தில், சுத்தமான ஸ்படிகம் போல் பிரகாசிப்பவனும், ஆகாச (பிரபஞ்சவெளி)த் தத்துவத்திற்குக் காரணமாகவும் உள்ள சிவனாரையும், அவரோடொத்த எண்ணமுள்ளவளான உன்னையும் வணங்குகிறேன். சந்திரகிரணத்தையொத்த உங்கள் இருவருடைய ஒளியினால், அஞ்ஞானமென்னும் இருள் நீங்கப் பெற்று, இவ்வுலகம் சகோரபக்ஷி போல் இருக்கிறது". (இருள் நீங்கினால் தான், சகோரபக்ஷிகள் கண் தெரிந்து, ஒன்றோடொன்று சேரும் என்பது கவிமரபு).

------(சௌந்தர்ய லஹரி)
இந்தப் பதிவில் நாம் விசுத்திச் சக்கரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

Image result for vishuddhi
விசுத்திச் சக்கரம் இருக்கும் இடமும் அதன் வடிவமும்:

இது அநாகதத்திற்கு மேல், தொண்டைப்பகுதியில் இருக்கிறது. இது பதினாறு இதழ்கள் கொண்ட ஊதா நிறத் தாமரை வடிவானது. இதன் மையத்தில் இருக்கும் கீழ்நோக்கிய முக்கோணத்தினுள், காணப்படும் வெண்ணிற முழுவட்டம் ஆகாசத்தைக் குறிக்கிறது. பதினாறு இதழ்களும் பதினாறு யோக நாடிகளைக் குறிக்கின்றன. இதன் மத்தியில் "நமசிவாய" என்னும் மந்திரத்தில், "வ"என்னும் எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.

இதை குண்டலினி அடையும் போது, சாதகன், பற்றுக்களிலிருந்து விடுபட்டு ,அன்பும் கருணையும் நிறைந்தவனாகிறான். இவ்வாறு நிலைத்த இன்பம் தருதலால் இச்சக்கரம் 'விசுத்தம்' எனப்பட்டது.

இதன் பீஜ மந்திரம் 'ஹங்' ஆகும். இதை முறையான பயிற்சியின் மூலம் உருவேற்றி வர, குண்டலினி, அநாகதத்திலிருந்து இந்தச் சக்கரத்தை அடையும்.

இதன் மூலக்கூறு ஆகாசம். இந்தச் சக்கரத்தின் அதிதேவதைகள், நீல நிற மேனியை உடைய சதாசிவனும், இள ரோஜா நிறமுடைய, நீல நிறப்புடவை அணிந்து, நான்கு கரங்களோடு கூடிய டாகினீ தேவியும் ஆவார்கள்.

இந்தச் சக்கரம் தூண்டப்பட்டால், நச்சுத் தன்மை உடலில் ஏறாது. தீ,ய சக்திகளிடமிருந்தும், தீய எண்ணங்களிலிருந்தும் விடுபட முடியும். முக்காலமும் உணரும் திறன் கிடைக்கும். உடலில் முதுமை தோன்றாது.

இந்தச் சக்கரமே, மிகச்சரியான முறையில் பிறருடன் தொடர்பு கொண்டு, எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அடிப்படை. குற்ற உணர்வு அதிகமாக இருக்குமானால், குண்டலினி இந்தச் சக்கரத்தைத் தாண்டி மேலே செல்ல இயலாது. குண்டலினி இந்தச் சக்கரத்தை வந்தடையும் போது, சாதகன், மற்றவரை ஆதிக்கம் செலுத்தும் மனநிலை, உயர்வு, மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவான்.நிலையான விழிப்புணர்வோடு இருத்தலும், கூடி வாழ்தலின் சிறப்பு, ஒற்றுமையுணர்வின் அவசியம் போன்றவை உணர்தலும் கைகூடும்.

பொய் சொல்வது, அதிகம் பேசுவது போன்ற செயல்கள் இந்தச் சக்கரத்தைப் பாதிக்கும். பிறரை, நியாயமான முறையில் புகழ்வது, சுயமரியாதையோடு செயல்படுவது, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதிருப்பது போன்ற செயல்கள் இந்தச் சக்கரத்திற்கு வலிமை அளிக்கிறது.

பிறர் சொல்வதைச் சரியாகக் கேட்டுப் புரிந்து கொள்ளுதலும், முறையாகப் பேசும் திறனும் இந்தச் சக்கரத்தின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளதால், ஒருவரின் வாழ்க்கை வெற்றி, இந்தச் சக்கரத்தின் செயல்பாட்டாலேயே பெருமளவு நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சக்கரத்தோடு தொடர்புடைய உடல் உறுப்புகள், தொண்டை, நுரையீரல், கைகள், மூச்சுக்குழல், உணவுக்குழல், தைராய்டு சுரப்பிகள் முதலியன.


விசுத்திச் சக்கரத்தில் அம்பிகையின் அருட்காட்சி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள்.

"விசுக்தி சக்ர- நிலயாss- ரக்தவர்ணா த்ரிலோசனா |
கட்வாங்காதி-ப்ரஹரணா வதநைக- ஸமன்விதா ||

பாயஸான்ன -ப்ரியா த்வக்ஸ்தா பசு'லோக பயங்கரீ|
அம்ருதாதி -மஹாசக்தி -ஸம்வருதா டாகினீச்வரீ ||

இதன் பொருள், "விசுத்திச் சக்கரத்தில் தேவி, ரோஜா நிறத்தில், மூன்று கண்களை உடையவளாக அருட்காட்சி தருகிறாள். கட்வாங்கம் முதலிய ஆயுதங்களைத் தரித்தவளாக ஒரு முகத்தோடு கூடியவளாக இருக்கிறாள்.

பாயஸான்னத்தை விரும்பி ஏற்பவளாக, அறியாமைக்கு பயங்கரத்தை (பயத்தை)ஏற்படுத்துபவளாக, அம்ருதா முதலான 16 சக்திகளைத் தன் பரிவார தேவதைகளாகக் கொண்டுள்ள "டாகினி" என்னும் திருநாமமுடைய தேவி, உயிரினங்களின் உடலில் தோல் பாகத்தில் உறைகிறாள்."

சிவயோக நெறியில், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு திருத்தலமுள்ளதை அறிவோம். அதன் படி, திருக்காளத்தி(காளஹஸ்தி) விசுத்தித் தலமாகத் திகழ்கிறது. கைலாசகிரி மலையடிவாரத்தில் உள்ளது இக்கோவில்.

"வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே."

என்று திருஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடும் திருக்காளத்தி,

பஞ்சபூதத் தலங்களில் 'வாயு'வுக்கான தலமாகும். இது சிறந்த 'ராகு, கேது பரிகார ஸ்தலமாகத் திகழ்கிறது. சுயம்புமூர்த்தியான மூலவர் தீண்டாத் திருமேனி.மூலவரின் மேல் சாத்தப்பட்ட தங்கக் கவசத்தை எடுக்கும் போதும், சார்த்தும் போதும் கூட கரம் படக் கூடாது.

மூலவரின் திருநாமம், திருக்காளத்தி நாதர், அம்பிகை ஞானப்பிரசுன்னாம்பிகை. இத்தலத்தில் பிரவேசித்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் எண்ணிலடங்காச் சிறப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. 'நதி, நிதி, பர்வதம்' மூன்றும் இத்தலத்துச் சிறப்புகள். நதி, உத்தரவாகினியாக (வடக்கு நோக்கி ஓடும் ஆறு) அமைந்துள்ள 'பொன் முகலி ஆறு' எனப்படும் சுவர்ணமுகி ஆறு. நிதி, இத்தல இறைவனும் இறைவியும் ஆவர். பர்வதம், இத்தலம் அமைந்துள்ள கைலாசபர்வதம்.

2. நக்கீரர் "கயிலை பாதி, காளத்தி பாதி" என இத்தலத்தின் பெருமை பாடிச் சிறப்பித்துள்ளார்.

3. நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் வழிபட்டு, சிவப்பேறு பெற்ற தலம்.

4. இத்தலத்தில், சிலந்தி, பாம்பு, லிங்கம் ஆகியவை வழிபாடு செய்ததால், மூலவரின் திருமேனியில், கீழ்ப்பாகம் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் தந்தங்களும், மேல்பாகத்தில் ஐந்து தலை நாகமும், கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அருட்காட்சி தருகின்றன.

5.அம்பிகையின் இடையில் உள்ள ஒட்டியாணத்தில் கேதுபகவானின் வடிவம் உள்ளது.திருவடியில் ஆதிசங்கரபகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு' உள்ளது.

6.இங்குள்ள இரண்டு கால் மண்டபம் சிற்பச் சிறப்புகளில் ஒன்று.

7.சிவத்தலமாகிய இங்கு, திருநீற்றுப்பிரசாதம் வழங்கப்படுவதில்லை. பதிலாக, தீர்த்தப் பிரசாதமே வழங்கப்படுகிறது. கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பட்ட மூர்த்தியாதலால் இவ்வழக்கம் .கடைபிடிக்கப்படுகிறது.

சித்தர் பாடல்களில் "விசுத்தி"

"தொல்லைக ளெல்லாந் தொலைக்குமே விசுத்தி

நல்லசிவ நடனமுங் காட்டும்

என்று சித்தர் பெருமக்களால் போற்றப்படும் விசுத்தி சக்கரத்தில், ஈசனின் தரிசனத்தை,
"விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்

பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே " என்ற பட்டினத்தாரின் வரிகளால் அறியலாம்.

திருமூலப்பெருமான், தமது திருமந்திரத்தில், விசுத்திச் சக்கர வடிவத்தை,

ஆயு மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் வினைந்தது தானே.

என்று பாடுகிறார். இந்தப் பாடலின் பொருள், "மூலாதாரத்தில் தொடங்கி ஆராயும் பொழுது, மேலானதும் பதினாறு இதழ்கள் கொண்ட, தாமரை வடிவானதுமான விசுத்தியில், வழிபடப்படும் தூய அறிவு, சிவானந்தமாய்த் திகழும்" என்பதாகும். இங்கு மலர் என்ற சொல் ஆதாரச் சக்கரங்களைக் குறிக்கும்.

பட்டினத்தாரின் சீடரான பத்திரகிரியார் தமது 'மெய்ஞானப் புலம்பலில்'.

"வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்"

என்று விசுத்திச் சக்கரத்தில், அதன் அதிதேவதையான, சதாசிவத்தைக் கண்டு, அவர் அருள் பெறுவது எக்காலம்? என ஏங்குகிறார்.

'வானென்ற விசுத்திஇலே நுனியைப்பாரு
மகத்தான மயேஷ்வரன் தன் ஒளியைப்பாரு'

என்று விசுத்திச் சக்கரத்தில் சிவனாரின் அருட்காட்சி பற்றி, போகமஹரிஷி, தன், சிவயோக ஞானத்தில் கூறுகிறார்.

 திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே
ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே
பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே

என்று அருணகிரிநாதர் புகழும் திருத்தணி, முருகப் பெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் 'கௌமார'த்தில், விசுத்தித் தலமாக இருக்கிறது. பெரும்பான்மையான நூல்கள், திருத்தணியையே விசுத்தித் தலம் என்கின்றன.

(ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் அருளிய, முருகப்பெருமானின் அற்புதத் துதிகளுள் ஒன்றான, "ஸ்கந்த குரு கவசத்" திற்குஇங்குசொடுக்கவும்).

திருச்செந்தூரில், சூரசம்ஹாரம் முடித்துச் சினம் தணிந்து முருகப்பெருமான் அமர்ந்த மலையாதலால் திருத்தணிகை எனப் பெயர்பெற்ற இத்தலம், முருகப்பெருமான் வள்ளியம்மையை மணம் புரிந்த தலமாகும்.

'குன்று தோறாடல்' என்பது பலதலங்களுக்கு வழங்கப்பட்டாலும், திருத்தணியே அச்சிறப்புக்கு உரியதாகக் கருதப்படுகிறது. அதே போல், 'ஐந்தாவது படை வீடு' என்ற பெருமையும் இத்தலத்திற்கே உரியதாகக் கருதப்படுகிறது.

சினம் தணிந்த இடமாதலால், இத்தலத்தில், ஸ்கந்த ஷஷ்டியன்று, சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. இத்தலத்தில், மயில்வாகனத்திற்குப் பதிலாக, தேவலோகத்தின் ஐஸ்வரியம் குறையாதிருக்கும் பொருட்டு, தேவலோகம் இருக்கும் கிழக்குத் திசை நோக்கிய ஐராவதம் இருக்கிறது.

முருகப்பெருமானுக்கு வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டும், வேல், சேவல் கொடி வைக்கின்றனர்.அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளுக்கு கண்ணாடியில் தரிசனம் தந்து ஞானோபதேசம் நல்கிய பிரான். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான, முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு, கல்கண்டு அளித்து, கவிபாடும் வல்லமை அருளிய வள்ளல் பிரான், திருத்தணிகை வேலன். 'திருத்தணி முருகன் வழித்துணை வருவான்' என்பது பிரபலமான வாசகம். இச்சாசக்தியான வள்ளியம்மையோடும், கிரியா சக்தியான தெய்வானையோடும் மகிழ்ந்திருக்கும் ஞான சக்தியாகிய முருகனை வணங்கினால், அவன் அருள் எளிதில் நமக்குக் கிட்டும்.

இறையருளால், அடுத்த பதிவில், நாம் ஆஜ்ஞா சக்கரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..