செய்யுந் தொழிலுடன் தொழிலேகாண்; சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும் வானத் தையுமுன் படைத்தவனே!
ஐயா, நான்முகப் பிரமா, யானை முகனே, வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே, கமலா சனத்துக் கற்பகமே. ( மஹா கவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை.
மூலாதார மூர்த்தியாய், ஓங்கார பிரணவப் பொருளாய், முழுமுதல் கடவுளாய், தனக்கு மேல் நாயகன் இல்லாததால் 'விநாயகர்' என்றே புகழ்ந்து துதிக்கப்படும் கற்பகக் கணபதிக்கு மிக உகந்த விரதம் சதுர்த்தி விரதமாகும். அதிலும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றே சிறப்பிக்கப்படுகிறது.
இன்று (5:8:2012) மஹா சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சுக்ல பட்ச(வளர்பிறை) சதுர்த்தி 'வர சதுர்த்தி' என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி சங்கட ஹர சதுர்த்தி என்றும் போற்றப்படுகிறது. சிராவண மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி 'மஹா சங்கட ஹர சதுர்த்தி' எனப் போற்றப்படுகிறது. இன்று ஒரு நாள் விநாயக மூர்த்தியை வேண்டி விரதமிருக்க, ஒரு வருடம் சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்த பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது.
ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.
'சங்கட ஹர' என்றால் சங்கடத்தை நீக்குதல். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"
இதன் பொருள்:
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதன் பலனாக, சத்ராஜித் எனும் யதுகுலத்தைச் சேர்ந்த குறுநில மன்னனிடம் இருந்த 'சியமந்தக மணி' என்னும் தினந்தோறும் எட்டுப் பாரம் பொன் சுரக்கும் வல்லமை பெற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அபகரித்துக் கொண்டதாக அவருக்குப் பெரும் பழி ஏற்பட்டது. உண்மையில் அந்த ரத்தினத்தை, சத்ராஜித், பிரசேனன் என்னும் பெயருடைய தன் தம்பியிடம் கொடுத்து வைத்திருந்தான். ஒரு நாள் பிரசேனன், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது, ஒரு சிங்கம் அவனை கொன்று விட்டு அவனிடம் இருந்த மணியைக் கவர்ந்து கொண்டது. அந்த சிங்கத்தைக் கரடி அரசனான ஜாம்பவான், போரிட்டு வென்று சியமந்தக மணியைத் தனதாக்கிக் கொண்டார்.
தன் தம்பியை, சியமந்தக மணிக்காக ஸ்ரீ கிருஷ்ணரே கொன்றிருக்கக் கூடுமென்ற அபவாதத்தை சத்ராஜித் பரப்பினார். ஸ்ரீ நாரத மஹரிஷி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து, சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு இது என்பதை விளக்கி, விநாயகரை வழிபட, இந்த அபவாதம் நீங்கும் என்று எடுத்துரைத்தார். அதன் படி ஸ்ரீ கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டார்.
பின் அந்த அபவாதத்தை நீக்குவதற்காக, இந்த சியமந்தக மணியைத் தேடி, ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிற்கு வந்தார். பிரசேனன் ,சிங்கம் ஆகியோர் இறந்து கிடப்பதை பார்த்துப் பின், கரடியின் காலடித் தடத்தை பின்பற்றி, கானகத்துள் சென்ற போது, ஒரு குகைக்குள் மட்டும் பெரும் ஒளி தென்பட, உள்ளே சென்றார். அது, ஜாம்பவானின் குகை. அவர் மகள் ஜாம்பவதி, தன் தம்பியின் தொட்டிலின் மேல் சியமந்தக மணியைக் கட்டித் தொங்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி மேற்கூறிய ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.
"சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள்.
இந்த மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்துத் தன் அபவாதம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. சத்ராஜித் தன் மகளான சத்யபாமாவை தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்தான்.
இந்தப் புராணத்தைப் படிப்பவர்கள் யாவரும் அவர்களுக்கு நேர்ந்த வீண் பழி நீங்கப் பெறுவர்.
சங்கட ஹர சதுர்த்தி பற்றிய மற்றொரு புராணக் கதை:
'புருகண்டி முனிவர்' என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகப் பெருமானின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். புருகண்டி முனிவர், தம் ஆசைகளை நிறைவேற்றிய விநாயகப் பெருமானுக்கு 'ஆஷாபூரன்' என்னும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.
ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கம் இதனாலேயே ஏற்பட்டது. இதனால் இரண்டு விதப் பலன் ஏற்படுகிறது.
நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஆகவே, புண்ணியச் செயல்களை மட்டுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். இதையே, மஹாபாரதத்தில், ஸ்ரீ யுதிஷ்டிரரும் அறிவுறுத்துகிறார்.
புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகை புரிகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர், தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.
மற்றொரு புராணக் கதையைப் பார்க்கலாம்.
அங்காரக பகவான், விநாயகரைப் பூஜித்தே கிரக பதவி அடைந்தார். ஆதலால், செவ்வாய்க்கிழமையன்று வரும் சங்கட ஹர சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்றே போற்றப்படுகிறது.
'கிருத வீர்யன்' எனும் மன்னனுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறில்லை. ஒரு நாள் அவன் கனவில் அவன் தந்தை தோன்றி, 'இந்த ஓலைச் சுவடியில் குறிப்பிட்டிருக்கும் விரதத்தைச் செய்தால் குழந்தைப்பேறு அடைவாய்' என்று சொல்லி மறைந்தார்.விழித்துப் பார்த்தால் அவன் கையில் ஒரு சுவடிக்கட்டு இருந்தது.
மறு நாள், வேத பண்டிதர்கள் அதைப் படித்து,'மன்னா, இந்த விரதம் விநாயகரை வழிபட்டுச் செய்ய வேண்டிய அங்காரக சதுர்த்தி எனும் விரதம். இதன் விவரங்களைப் பற்றி பிரம்மதேவர் அருளிய விஷயங்கள் இந்தச் சுவடியில் இருக்கின்றன' என்று கூறி விவரிக்க, மன்னனும் அங்காரக சதுர்த்தி அன்று விரதம் துவங்கி விரதம் இருந்தான்.
விரதப் பலனாக, அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு கைகளோ, கால்களோ இல்லை. ஆனால் மனம் தளராமல் 'கார்த்த வீர்யன்' எனப் பெயரிட்டு, அக்குழந்தையை வளர்த்த கிருத வீர்யன், உரிய வயதில் அக்குழந்தைக்கு ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை உபதேசம் செய்தான்.
இடைவிடாது அந்த மூல மந்திரத்தை, பன்னிரு ஆண்டுகள் கார்த்த வீர்யன் ஜபிக்க, அதன் பலனாக, விநாயக மூர்த்தி அவனுக்கு தரிசனம் தந்து, ஆயிரம் கை கால்களையும் அர்ஜூனனுக்கு நிகரான பலத்தையும் அருளினார். அதனால் அவனுக்கு 'கார்த்த வீர்யார்ஜூனன்' என்றே பெயர் ஏற்பட்டது. பின், ஸ்ரீ தத்தாத்ரேயரின் அருளால், அனுக்கிரக சக்தியையும் பெற்றான். இன்றும் ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனரை வேண்டி, ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூன மந்திரம் ஜபிக்க, அவை திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் |
சூரசேனன் எனும் மன்னன், தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்ததோடு தன் நாட்டு மக்களையும் விரதம் அனுஷ்டிக்கச் செய்து எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்றான்.
விநாயகப் பெருமான, ஞானகாரகனான, கேது பகவானுக்கு அதிதேவதையாதலால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வணங்க, கேதுகிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை 108 முறை ஜபித்தல் விசேஷம். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய சமயத்தில், மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும். அருகம்புல்லால் ஆனை முகனை அர்ச்சிப்பது நலம் பல தரும். நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க அந்த தோஷம் நீங்கும்.
இருபத்தோரு முறைகள் ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷம் ஜபம் செய்வது மிகச் சிறந்தது. இயலாவிடில் தகுந்தவர்களைக் கொண்டு இந்த ஜபம் செய்விக்கலாம்.
'ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்' துக்கு இங்கு சொடுக்கவும்.
விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு. விநாயகருக்கு, 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவது உபவாசம் இருக்க இயலாவிடில், பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
கோவிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்தல் சிறப்பு. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம் படிப்பது அளவில்லாத நன்மை தரும்.
வெற்றி பெறுவோம்!!!!
very nice explanation. keep writing.
பதிலளிநீக்குvery happy to know about the stories about Chathurthi. keep writing.
பதிலளிநீக்கு// Jaya Ramachandran said...
பதிலளிநீக்குvery happy to know about the stories//
Thank you so much Jaya.
Vital information, Akka.
பதிலளிநீக்குI have read this in Gheivaththin Kural also.
Refreshing to read here too.
//Bhuvaneshwar said...
பதிலளிநீக்குVital information, Akka.
I have read this in Gheivaththin Kural also.//
தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி. 'தெய்வத்தின் குரலில் படித்தேன்' என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது, 'சியமந்தகோபாக்கியானம்' என்று நினைக்கிறேன். புராண நிகழ்வுகளைத் தவிர, இந்தக் கட்டுரை என்னால் சொந்தமாக எழுதப்பட்டதே.
//புராண நிகழ்வுகளைத் தவிர, இந்தக் கட்டுரை என்னால் சொந்தமாக எழுதப்பட்டதே.//
பதிலளிநீக்குஅன்புடைய சகோதரி,
குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
சங்கடஹர சதுர்த்தி பற்றி தெய்வத்தின் குரலில் படித்து இருக்கிறேன், இதே புராண நிகழ்வை ஜகத்குருவும் சொல்லி இருக்கிறார் என்னும் பொருளில் அவ்விதம் எழுதினேனே அல்லாது, தாங்கள் அதையே இங்கு பதிவிட்டு இருப்பதாக சொல்லும் எண்ணத்தில் எழுதவில்லை.
மன்னிக்கவும்.
Bhuvaneshwar said...
பதிலளிநீக்கு//மன்னிக்கவும்.//
சகோதரர் அவ்விதம் சொல்லவேண்டியதில்லை. தாங்கள் சொல்வதன் பொருள் எனக்குத் தெரிந்தது. தங்கள் கருத்துரையைப் படிப்பவருக்கு வேறு பொருள் தோன்றக்கூடும் என்பதாலேயே அவ்வாறு தெரிவித்தேன்.மிக்க நன்றி.