நான் எழுதி,உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் 'கௌமாரம்' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரையை ஆடிக்கிருத்திகை தின சிறப்புப் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உயர்திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.
முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே
செந்தூர்ப்பதிகொண்டோன், செந்திலாண்டவன் , பக்தர் சிந்தைக் குடிகொண்டான் கந்தக் கடவுள் , வந்தனை செய்வாரையும் சொற்றமிழால் தன்னை வைதாரையும், அத்தமிழின்பத்துக்காக, வாழ்வாங்கு வாழவைக்கும் எந்தை, எம்பெருமான் முருகக் கடவுளைப் பரம்பொருளாகப் போற்றும் ,'கௌமாரம்', பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
"ஸ்வாமி' என்ற பெயர், வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான், அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் சுப்பிரமணியர்தான், அவர் குழந்தையாக இருக்கிற கடவுள், குமாரஸ்வாமி" என்று காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவர் அருளியிருக்கிறார்.
சுப்பிரமணியர் என்ற திருநாமமே, சு+பிரம்மண்யம் என்று சிரேஷ்டமான் பிரம்மம் என்ற பொருளில் விளங்குவதாக இருக்கிறது. 'கௌ' என்றால் மயில் என்றும் பொருள். ஆகவே, மயில் வாகனனான முருகப்பெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடும், இந்த மார்க்கத்திற்கு, கௌமாரம் என்று பெயர்.
முருகப்பெருமான், 'தமிழ்க்கடவுள்'என்றே போற்றப்படுகிறார். திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், முருகபக்தியை, சென்ற இடமெங்கும் கோவில்கள் கட்டி, வெளிப்படுத்தினர்.
'முருகு' என்றால் அழகு என்று பொருள். கந்தன், பெயரழகன்,வடிவழகன், அருளழகன், பக்தருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கும் கொடையழகன்.
சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகன். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் (ஸஹ உமா ஸ்கந்தர்) என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை. எனவே மாயைக்கு 'குக மாயை' என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான படைப்புகளுக்கு காரணம் மாயையே.
மயிலானது மாயைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. அதுதன் தோகையை விரிப்பது போலும் ஒடுக்குவது போலும் சிருஷ்டியும் சம்ஹாரமும் நடைபெறுகிறது. அந்த அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட ஞான சக்தி எம்பிரான்.
சிவபெருமானின், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம், அதோமுகம் என்னும் ஆறு முகங்களின் அம்சமான ஆறு நெருப்புப் பிழம்புகள்,சிவனாரின் நெற்றிக் கண்ணின் வழியே வெளிப்பட்டு, பரம்பொருளாகிய முருகப் பெருமான் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.
அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய. (ஸ்ரீ கந்தபுராணம்)
பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்ததால், 'முருகன் மட்டுமே ஆண்பிள்ளை' என்பார் வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபகவான், "படைத்தலைவரில் நான் கந்தன்" என்றுரைக்கிறார்.
ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: (கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்,)
ஸ்ரீ ருத்ரத்தில் வரும் 'நமோ ஹிரண்யபாகவே ஸேநாந்யே' என்ற வரிகள், தேவசேனாபதியாகிய முருகனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஓம் எனும் ஓங்கார ஒலியே வேதங்கள் தோன்றுவதற்கு மூல காரணம். ஓம் எனும் பிரணவம் மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவம்
அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
'உ' காராஸ்து மகேச்வர:
'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
பிரணவஸ்தி த்ரியாத்மக:
பிரணவ ஸ்வரூபமாக, அதன் உட்பொருளாக விளங்கும் பரம்பொருளே முருகன்.
'ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய் '
சுந்தரனே சுகந்தனே சுப்ரமணியனே சூரசம்காரனே!
அந்தமாதியில்லா பரமே அருவ உருவ பெம்மானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)
நிர்க்குணப்பரம்பொருளாகவும், சகுண நிலையில், படைப்பிற்குக் காரணமாகவும் உள்ளவன் முருகப் பெருமான்.
அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு.
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய். (கந்தர் கலிவெண்பா).
என்று குமரகுருபரர், ஐந்தொழிலுக்கும் அப்பாற்பட்ட, குறியும், குணமும், வடிவுமற்று எங்கும் நிறை பரப்பிரம்மமாய் முருகன் அருளுவதைப் புகழ்கிறார்.
திருமுருகப் பெருமானின், ஆறுமுகங்களின் அழகையும் அவை செய்யும் அருட்செயல்களையும் நக்கீரப் பெருமான் தமது 'திருமுருகாற்றுப் படை'யில்,
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
உலகம் கொண்ட இருள் (அஞ்ஞான இருள்) நீங்கப் பொலியும் சூரியனாய் ஒரு முகம். பக்தருக்கு வரம் கொடுக்கும் ஒரு முகம், வேத விதி வழுவாது வேள்வி செய்வோர் வேள்விப் பயனைத் தந்தருளும் ஒரு முகம். வேதத்தில் உள்ள மறை பொருளை, யாவரும் மகிழும் வண்ணம், பூரண சந்திரன் போல் விளக்கி நின்றதொரு முகம். பகைவரை மாய்த்து, இனி பகைவருண்டோ என்று போர்க்களத்தை விரும்பி நின்றதொருமுகம். வள்ளியம்மையிடத்து முறுவல் செய்து மகிழும் ஒரு முகம் என்று இனிது விளக்குகிறார்.
ச... செல்வம்
ர ... கல்வி
வ ... முக்தி
ண ... பகை வெல்லல்
ப ... காலம் கடந்த நிலை
வ ... ஆரோக்கியம்
முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.
பாதாளச் சிறையிலே பாதகர் விரித்த வலையிலே
வேதா மேதைகள், தேவர்கள் யாவரும்; தங்கள்
கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
நாதா காப்பாய்தேவ தேவாவென்றே - நிந்தன்
பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)
என்ற வரிகளில்,முருகன் அவதாரக் காரணத்தை அறியலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என, முருகன் நின்றாடும் தலங்கள் பல இருந்தும், ஆறுபடை வீடுகள் என குறிக்கப்பெறும் தலங்கள் முருகப்பெருமானது வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையவை. அவையாவன,
ஓங்கார ஸ்வரூபியான முருகன், தந்தைக்கு அதனை உபதேசித்த, 'சுவாமிமலை', ஞானப்பழத்துக்காக, கோபம் கொண்டு, பின் சினம் தணிந்த 'பழனி', சூரனை சம்ஹரித்து, பின் சிவபூஜை செய்த 'நிராகுலத்' தலமான 'திருச்செந்தூர்', முருகன், தெய்வானைத் திருமணம் நடந்த 'உல்லாசம்' எனப் போற்றப் பெறும் 'திருப்பரங்குன்றம்', வள்ளியை மணம் புரிந்த,சல்லாபம்' எனப் புகழப்படும் 'திருத்தணி', வள்ளி தெய்வானை சமேதராக அருள்மழை பொழியும் 'சர்வ வியாபக'த் தலமான 'பழமுதிர்சோலை'.
கந்தபுராணத்தைச் சுருக்கமாக, "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” (சிவனாரின் மகன், சஷ்டித் திதியில் மாமரமாகி நின்ற சூரனை வேல் கொண்டு பிளந்தான்) என்று கூறுவதுண்டு.
சிவனாரிடமிருந்து, முருகன் தோன்றியதால், 'சிவமும் முருகனும்' ஒன்றே என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை, சைவத்தின் ஒரு கூறாகவே கருதுகிறது.
பிரம்மதேவர் பிரணவப்பொருள் அறியாததால் அவரைச் சிறையில் அடைத்து, அவரது படைக்கும் தொழிலைத் தானே செய்தது, சூரனை அழித்தது, தேவர்களைக் காத்தது, தனது உண்மையுருவை மறைத்து, வேடனாகவும் விருத்தனாகவும் வந்து வள்ளியை மணம் புரிந்தது, பக்தருக்கு நித்தமும் அருளுவது என்று ஐந்தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் முதலியவற்றைச் செய்யும் பரம்பொருள் கந்தனே என்பதை, கந்தபுராணக் காட்சிகள் மறைமுகமாக நமக்கு எடுத்தியம்புகின்றன.
முருகப்பெருமான், இச்சாசக்தியான வள்ளியையும், கிரியாசக்தியான தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.
கௌமாரத்தில், முருகனே, குண்டலினியாக உருவகப்படுத்தப்படுகிறார். ஆகவே , சில மாநிலங்களில், நாகரூபமாக முருகனை வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.
'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக' (ஸ்ரீகந்தர் ஷஷ்டிக் கவசம்).
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும் ஆறு ஆதாரத் தலங்களாகக் கூறப்படுகின்றன.அவை, மூலாதாரம்....திருப்பரங்குன் றம், சுவாதிஷ்டானம்...திருச்செந்தூர் , மணிபூரகம்....பழனி, அநாஹதம்...சுவாமிமலை, விசுத்தி.....திருத்தணி, ஆஜ்ஞா....பழமுதிர்சோலை.
ஞானசக்தியாகிய முருகப்பெருமான், அன்பர் பலருக்கு ஞானோபதேசம் தந்து ஆட்கொள்ளும் கருணைப் பெருங்கடல். சிவனாருக்கு உபதேசித்த ஏரகத்துச் செல்வன், சித்தர் பலருக்கு ஞானோபதேசம் தந்து முக்தி நிலையை அருளிய
காருண்ய மூர்த்தி. ஸ்ரீ போகர், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ அருணகிரிநாதர், வள்ளலார்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள், என ஷண்முகக் கடவுள், பல மகான்களுக்கு ஞானாசிரியனாக அருள் மழை பொழிந்து வருகிறார்.
பழமுதிர்சோலையில், ஔவைக்கு 'சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டு, அகந்தை அகற்றி, ஞானம் அருளிய குகக் கடவுளின் கேள்விகளுக்குப் செந்தமிழ்ப்பாமாலை சூட்டி விடையளித்தார் தமிழ் மூதாட்டி. அரியது எது? என்ற கேள்விக்கு,
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
என்று துவங்கி, விரிகிறது ஔவையின் பாமாலை.
சரவணப்பொய்கையில் உதித்த ஷண்முகக் கடவுளை, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபட உகந்த தினமாகும். தட்சிணாயனத் துவக்கத்தில், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், ஆடிக் கிருத்திகை என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. அன்று துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் தோறும் விரதமிருந்து, தைக்கிருத்திகை அன்று விரதம் முடிப்பவர்களுக்கு, எம்பெருமான் முருகனருளால் தீராப் பெருந்துயர் தீரும். வைகாசி விசாகம், முருகனின் திருஅவதாரத்தினமாகக் கருதப்படுகிறது. தைப்பூசத்தில், பிரம்ம வித்யா ஸ்வரூபமான வேல் சக்தியால் முருகனுக்கு வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தில் தெய்வானையை அம்மையை மணம் புரிந்தார். ஆகவே, இந்தத் தினங்கள் 'கௌமாரர்கள்' எனப்படும் முருகபக்தர்களால் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. காவடிகள் எடுத்துவந்து பக்தர்கள் முருகப்பெருமானை இந்தத் தினங்களில் வழிபாடு செய்கின்றனர். சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெற வேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை, பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் வைத்து, பொதிகை நோக்கிச் சுமந்து வரும் வேளையில், பழனியில், தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான்.
சுமை காவுபவர்கள்(தூக்குபவர்கள்), சுமை இலகுவாக இருக்க வேண்டி, ஒரு தடியில் சுமைகளைக் கட்டி, இம்மாதிரிச் சுமந்து செல்வர். காவுதடி, என்பதே காவடியாக உருமாறியது. வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே காவடியின் தத்துவம்.
இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. தமிழில் கா என்ற சொல், காப்பாற்று என்று பொருள்படும். முருகனின் திருவடிகள் காப்பாற்றும் என்பதால் முருகனுக்குரிய காணிக்கைகளைச் சுமந்து அவர் திருவடி சேர்க்கும் இம்முறைக்கு காவடி எனப் பெயர். காவடிகள், பால் காவடி, பன்னீர்க்காவடி, என எண்ணிலா வகைகளைக் கொண்டது.
காவடியைச் சுமந்து செல்லும் பக்தர்கள், அரோஹரா' அல்லது 'அரோகரா' என்று முழங்குவது வழக்கம். 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கமே அரோகரா என்றாயிற்று. இதன் பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
என்பதாகும்.
திதிகளில் ஷஷ்டித் திதி, முருகனுக்கு உகந்தது. ஷஷ்டிதிதிக்குரிய தேவி, ஷஷ்டிதேவி எனப் போற்றப்படும் தெய்வானை அம்மை. (ஷஷ்டியில்) சட்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (கரு) வரும் என்ற சொல்வழக்கு, ஷஷ்டி விரதத்தின் மகிமையை உணர்த்துவதாகும். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஆறு தினங்கள் கந்தர்ஷஷ்டி என சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அந்தத் தினங்களில், முருகப்பெருமான் விரதம் இருந்து, ஷஷ்டியன்று சூரசம்ஹாரம் செய்தார். ஆகவே, அந்தத் தினங்களில், முருகப் பெருமானின் தலங்களில்,சூரசம்ஹாரப் பெருவிழா பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, முருகன் வேல் வாங்கிய தலமான சிக்கலில், வேல்பூஜைக்குப் பின், வேல்நெடுங்கண்ணியம்மையிடம் இருந்து, முருகன் வேல் வாங்கும் போது, முருகனின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம்.
திருத்தணித் திருத்தலத்தில் மட்டும், கந்தர்ஷஷ்டி, பூச்சொரிதல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
முருகப் பெருமானது புகழைப்பாடும் துதிகள் அநேகம்...அநேகம். சிவபெருமானது புகழைப்பாடும் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருப்பது போல் முருகப்பெருமானது புகழைப் பாடும் நூல்களும் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பெரும்பணியைச் செய்தவர், திரு.தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆவார்.
- திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
- திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாம் திருமுறை
- திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாம் திருமுறை
- திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காம் திருமுறை
- குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாம் திருமுறை
- பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாம் திருமுறை
- பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாம் திருமுறை
- கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாம் திருமுறை
- திருவகுப்பு - ஒன்பதாம் திருமுறை
- கந்தரனுபூதி - பத்தாம் திருமுறை
- நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர், முதலானவர்கள் பாடல்கள் -பதினோராம் திருமுறை
- சேய்த்தொண்டர் புராணம் (சிவனாரது சேய் ஆன முருகனின் அடியவர் வரலாறு) -பன்னிரண்டாம் திருமுறை இயற்றியவர்.தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.
முருகப்பெருமானுக்கும் அவதாரங்கள் உண்டு. ஸ்ரீ குமாரில பட்டர், மாமதுரை அரசி மீனாட்சியம்மை, சொக்கநாதப்பெருமானின் திருக்குமாரர் உக்கிரபாண்டியனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரை முருகனின் திருஅவதாரங்களாகக் கருதுகிறார்கள்.
'வேலை வணங்குவதே வேலை' என்றிருப்போர் வேதனை தீரும். நாதன் முருகன் நல்லருள் தந்து சோதனை நீக்கிச் சுகம் பல தருவான். ஆறுமுகமும் பன்னிருகரமும் கொண்டு, சேவல்கொடியேந்தி மயில்வாகனத்தில், வள்ளி தெய்வானையோடு, வேல்முருகனாகக் காட்சியளிக்கும் எம்பெருமான் முருகனின் திருவுருவத்தை மனதிலிருத்தி, முருகப்பெருமானின் திருவடிகளைப் பணிவோம்.
முருகன் திருவடிகளே சரணம்.
ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே (பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய 'தௌத்தியம்' (திருவடித் துதி)).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..