கோகுலத்தில் நந்த பாலனுக்கு நாமகரணம் ஆகி விட்டது!!. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கண்ணனும் பலராமனும் வளர்ந்து வந்தார்கள்!.. குட்டிக் கண்ணன், தவழத் தொடங்கி விட்டான்!!. வெகு வேகமாக அவன் தவழ்ந்து விளையாடும் அழகே அழகு!!. தவழும் போது ஒலிக்கும் தன் கால் கொலுசுகளின் ஒலியைக் கேட்க விரும்பி, இன்னும் வேகமாக, நன்றாகத் தவழ்ந்து விளையாடுவான்!..
குழந்தைகளின் அழகைப் பார்த்து மயங்காதவர்களே இல்லை!!..கொஞ்சும் சிரிப்பையும், திருமுகத்தில் விழுந்து அழகு செய்யும் தலை முடியையும், அழகிய பாதங்களையும், நழுவி விழும் கை வளைகளால் அலங்கரிக்கப்பட்ட மணிக்கட்டுகளையும் பார்த்துப் பார்த்துப் பரவசமுற்றார்கள் கோப கோபியர்கள்!.
இப்போது, கண்ணன் மெல்ல எழுந்து நிற்க முற்படுகிறான்!. அதனால் அடிக்கடி கீழே விழுந்து எழுகிறான்!. . மேனியெங்கும் புழுதி!...இந்தத் திருமேனியைக் கண்டு, வானவெளியில் சஞ்சரிக்கும் முனிவர்கள் பணிந்து வணங்குகிறார்கள்!!..விழும் குழந்தைகளை, தாய்மார்கள் ஓடி வந்து எடுத்து முத்தமிடுகிறார்கள்!.... கண்ணனுக்குப் பாலூட்டி வளர்க்கும் பாக்கியம் பெற்ற யசோதையின் பேறு தான் என்ன?..பாலூட்டும் போது, குழந்தையின் திருமுக மண்டலத்தைப் பார்த்துப் பார்த்து, யசோதை பெற்ற மகிழ்ச்சியின் அளவைச் சொல்ல முடியுமா?!.
இப்போது கண்ணன், எழுந்து நடந்து, ஓடவும் தொடங்கி விட்டான்!!.. சொல்லவும் வேண்டுமோ!!!..
அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சொன்று, அங்கு வளரும் கிளிகள், பூனைகள், கன்றுகள் முதலியவற்றைத் தொடர்ந்து ஓடி, அவற்றைப் பிடிக்க முற்படுகிறான் தன் தோழர்களுடன்!... கோப கோபியர்கள், இவற்றையெல்லாம் ரசித்தவாறே, கண்ணனைத் தடுக்கவும் செய்தனர்!.
கண்ணன், பலராமனுடன் எங்கெங்கு சென்றாலும், அங்கெல்லாம், தம் குழந்தைகளையும் வேலைகளையும் மற்றவைகளையும் மறந்து விட்டு, கோபியர்கள் அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துப் பரவசமடைந்தார்கள்!.
( பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி
வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே. (பெரியாழ்வார்)).
ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், அன்பான பெண்களால் தரப்பட்ட வெண்ணை, நெய் முதலியவற்றை உண்டு மகிழ்ந்தும் விளையாடினான் கண்ணன்!..
'முன்பு மகாபலியின் வீட்டு வாசலில் யாசகம் கேட்கும் படி நேர்ந்தது!.. ஆனால், இம்முறை, இந்த ஸ்திரீகளிடம் அப்படிச் செய்ய மாட்டேன்!' என்று சங்கல்பித்துக் கொண்டு, யாசிப்பதை விட்டு விட்டு, வெண்ணை, தயிர் முதலியவற்றை, அவர்களைக் கேட்காமலே எடுத்துக் கொண்டான் கண்ணன்!!..
( மம க²லு ப³லிகே³ஹே யாசனம்ʼ ஜாதமாஸ்தா
மிஹ புனரப³லானாமக்³ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி: கிம்ʼ தே³வ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்ʼ
த³தி⁴க்⁴ருʼதமஹரஸ்த்வம்ʼ சாருணா சோரணேன || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
கண்ணனின் இந்த லீலை, மகோன்னதம் வாய்ந்தது!... ஆழ்ந்த தத்துவ உட்பொருள் கொண்டது.. பகவானுக்கே எல்லாம் சொந்தம்!.. அவனுக்கு உடைமை அல்லாத ஒன்று எங்கும் இல்லை!.. எல்லாவற்றுள்ளும் நிறைந்து நிற்பவனும் அவனே அல்லவா?!!.. சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு, நாம், முயற்சி செய்ய வேண்டும்!.. அதற்கு விவேகம் என்னும் மத்தால் அதைக் கடைந்தால், 'பக்தி' என்னும் மிக ருசியான வெண்ணை வரும்!.. அது வந்த உடனேயே, தாமதிக்காமல் அதை ருசிக்க எழுந்தருளி விடுவான் பரமாத்மா!!..நாம் தரும் வரைக் காத்திருக்காமல், தானே உவந்து வந்து, நம்மை ஆட்கொண்டருளி விடுவான்!.. இதை உணர்த்தவே, கோபியர்கள் தரும் வரை காத்திருக்காமல், தானே வெண்ணையைக் கைப்பற்றினான் பரமாத்மா!.. கோபியர்கள் இதனால் வருத்தமுற்றாற் போல் நடித்தார்களே தவிர, உண்மையில் மகிழ்ச்சியே அடைந்தார்கள்!!. ஏனெனில், குட்டிக் கண்ணன் கொள்ளை கொண்டது, அவர்களது உள்ளத்தையும் அல்லவா!!!..இத்தகைய பால லீலைகளைச் செய்தருளும் குருவாயூரப்பன், நோய்களிலிருந்து தன்னைக் காக்குமாறு வேண்டுகிறார் பட்டத்திரி!!..
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
மிக்க நன்றி!.
பதிலளிநீக்கு