நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!...PART..16...கண்ணனை நினை மனமே!..பகுதி 16..ஹிரண்யகர்ப்ப உற்பத்தி!..(தொடர்ச்சி)..

(சென்ற பதிவின் தொடர்ச்சி...).

நானாதி³வ்யவதூ⁴ஜனைரபி⁴வ்ருʼதா வித்³யுல்லதாதுல்யயா
விஸ்²வோன்மாத³னஹ்ருʼத்³யகா³த்ரலதயா வித்³யோதிதாஸா²ந்தரா| 
த்வத்பாதா³ம்பு³ஜஸௌரபை⁴ககுதுகால்லக்ஷ்மீ​: ஸ்வயம்ʼ லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீயதி³வ்யவிப⁴வம்ʼ தத்தே பத³ம்ʼ தே³ஹி மே ||

("ஸ்ரீ அப்பனே!, பல தேவமாதர்களால் சூழப்பட்டும், எல்லா உலகங்களையும் மயக்க வல்ல, மின்னல் கொடி போன்ற திவ்ய திருமேனியால் திசையனைத்தையும் பிரகாசிக்கச் செய்து கொண்டும், உமது திருவடித் தாமரைகளின் வாசனையை முகர்வதொன்றிலேயே விருப்பத்துடனும், எந்த உலகத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியானவள் விளங்குகின்றாளோ, அந்த வைகுண்ட பதவியை எனக்கும் தந்தருள வேண்டுகிறேன்!!!....").

(மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே (திருமங்கையாழ்வார்)).

"குருவாயூரப்பா!.., உமது ஸ்தானமாகிய வைகுண்டத்தில், நீர்,  இரத்தினமயமான ஆசனத்தில், கோடி சூரியப் பிரகாசமுள்ள கிரீடமும், தோள் வளைகள் முதலான ஆபரணங்களும் பிரகாசிக்க வீற்றிருந்தீர்!...உமது திருவுருவை, ஸ்ரீவத்ஸம் என்னும் மருவுடனும், கௌஸ்துப மணியின் ஒளியால் சிவந்து விளங்குவதாகவும் பிரம்மதேவர் தரிசித்தார்!..அந்த திருவுருவம் எனக்கும் தோன்றுவதற்கு அருள்புரிய வேண்டும்...".

"பிரபுவே!.. கார்மேகம் போலும் காயாம்பூ போலும் நிறமுடைய உம் திருமேனியழகு, அனைத்துத் திசைகளையும் பிரகாசிக்கச் செய்வதாக இருக்கிறது..உம் திருமுகம், கம்பீரமான புன்சிரிப்பால் சொல்லவியலாத அழகுடையதாக விளங்குகின்றது...சங்கு, சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றைத் தாங்கும் அழகான புஜமண்டலத்தைக் கொண்ட உம் திருமேனியானது, பிரம்ம தேவருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது.. இத்தகைய உம் திருமேனி தரிசனம், என் வியாதிகளைப் போக்கட்டும்...".

(எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம்,
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.(திருமங்கையாழ்வார்)).

(எனக்கா வாரா ரொருவரே, எம்பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
மாமேனி காட்டும் வரம். (பொய்கையாழ்வார்)).

​"இத்தகைய உம் திருமேனியைத் தரிசித்த பிரம்மதேவர், பரவசமும் பரபரப்பும் அடைந்து, உம் திருவடித் தாமரைகளில் விழுந்து நமஸ்கரித்து, பக்தி மேலிட, "ஸ்வாமி,  என் எண்ணத்தை நீர் அறிவீர்!...த்வைத, அத்வைத பரமான  உம் ஸ்வரூபம் குறித்த உண்மையான ஞானத்தை, எனக்குத் தருமாறு பிரார்த்திக்கிறேன்.." என்று வேண்டி நின்றார்.. அப்படிப்பட்ட உம்மை நானும் வணங்குகிறேன்...".

" தம் சிவந்த திருப்பாதங்களில் நமஸ்கரித்த பிரம்மதேவரின் கரத்தை, உம்முடைய திருக்கரத்தால் பிடித்துக் கொண்டு, "உனக்கு அந்த ஞானம் ஏற்படும்.. மேலும் சிருஷ்டி கர்மத்தால் உமக்கு பந்தம் (தாம் சிருஷ்டிக்கும்  பொருட்கள் மீது , மாயா மோகத்தால், 'தம்முடையது' என்ற எண்ணத்துடன் கூடிய பற்று) உண்டாகாது என்று ஆசீர்வதித்து, அவரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தீர்!.. மேலும், அவரது உள்ளத்தினுள் புகுந்து, நீரே அவரை சிருஷ்டி காரியத்தில் ஈடுபடுமாறு தூண்டினீர்!..இவ்விதம் செய்தருளிய பகவானே, எனக்கு நல்ல ஆரோக்கியத்தை அருள்வீராக!..".​

இவ்வாறு பிரம்ம தேவரின் தோற்றமும், அவர் வைகுண்டத்தை தரிசித்த நிகழ்வும் பட்டத்திரியால் விளக்கப்படுகின்றது.. அடுத்த தசகத்தில், பகவானின் தூண்டுதலால், பிரம்ம தேவர் சிருஷ்டியை நிகழ்த்திய விதம் விளக்கப்படுகின்றது.. அதை அடுத்துப் பார்க்கலாம்..

(தொடர்ந்து தியானிப்போம்)...

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. தொடர்ந்து படிக்கிறேன். இவ்வளவு அழகாக எழுதுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பற்றுதல் இல்லாதிருக்க
    பிரம்மாவே வேண்டிக்கொள்ளும்போது, எவ்வளவு மேன்மையான வேண்டுகோள் என்பது சின்திக்க வைக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா!.. தங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு எவ்வாறு நன்றி சொல்வது!.. தங்கள் ஆசிகள் பெரிதும் உற்சாகமூட்டுகின்றன அம்மா!.. என் சிரம் தாழ்ந்த நன்றி!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..