நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 14 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME...PART 15...கண்ணனை நினை மனமே!..பகுதி 15..ஹிரண்யகர்ப்ப உற்பத்தி!..

பட்டத்திரி, இந்த தசகத்தில் பிரம்மாவின் தோற்றம் குறித்தும், அவர் சிருஷ்டி காரியங்களைத் தொடங்கும் முன்பாக, தவம் செய்யத் தொடங்கியது, பிரம்ம தேவருக்கு, வைகுண்டம் காட்டப்பட்டது, அங்கு அவர் கண்ட காட்சிகள், பிரம்ம தேவரின் பிரார்த்தனை  போன்றவற்றைக் குறித்தும் விளக்குகின்றார் . பிரம்ம தேவருக்கு 'ஹிரண்ய கர்ப்பன்' என்ற பெயரும் உண்டு.. அதன் காரணமாகவே,  இந்த தசகத்திற்கு, "ஹிரண்ய கர்ப்ப உற்பத்தி"  என்ற பெயர். 

​பட்டத்திரி, பகவானே, பிரம்மாவாக ஆவிர்ப்பவித்ததாகக் கூறுகின்றார். அதாவது, பகவானின் அம்சமே பிரம்மா!!..

இனி, பிரம்மாவின்  தோற்றம் குறித்து, பட்டத்திரியின் அமுத மொழிகள்!!!...

"ஸ்ரீஅப்பனே!.. இப்படியாக, பதினான்கு உலகங்களின் வடிவமாகத் தோன்றிய நீரே, மறுபடியும், அதன் உச்சியில், சத்யலோகத்தில் பிரம்ம தேவராகத் தோன்றினீர்!!!..அந்த உருவத்தில், ஸ்வர்க்கம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலிருக்கும் அனைத்து ஜீவ ரூபமாக‌, ஹிரண்ய கர்ப்பன் என்ற பெயருடன், விருத்தியடைந்த ரஜோகுண விகாரத்தால், பலவிதமான சிருஷ்டிகளைச் செய்வதில் ஆர்வமுடையவரானார் பிரம்மா!".

'இவ்விதம் சிருஷ்டி செய்வதில் ஆர்வமுடனிருந்த பிரம்ம தேவர், அதில் மனதில் செலுத்தியும், தெளிவான (மன) நிலையைப் பெற இயலவில்லை...அப்போது நீர், அவர் காதில்,  "தப தப" (தவம் செய், தவம் செய்) என்ற அசரீரி வாக்கைக் கேட்கும்படி செய்தீர்!..'

​"எங்கும் நீரினால் நிரம்பியிருக்கிற போது, தம் காதில் இவ்விதம் சொன்ன புருஷன் யாராக இருக்கக் கூடும்?!" என்று பிரம்ம தேவர் அனைத்து திசைகளிலும் உற்று நோக்கியும் யாரையும் காண இயலவில்லை.. ஆனால் தம்மிடம் கூறப்பட்ட வாக்கின் பொருளை உணர்ந்து, ஆயிரம் தேவ வருடங்கள் தவம் புரிந்தார்!..  அதன் பின், தேவா, அவருக்கு, நீர் உமது ஒப்பில்லாத, ஆச்சரியமான‌ ஸ்ரீவைகுண்டத்தைக் காண்பித்தீர்!..".

"பிரபுவே!..எங்கு மாயை இல்லையோ,  எது எல்லா உலகங்களுக்கும் அப்பால் இருக்கின்றதோ, எந்த இடத்திலிருந்து, சோகம், கோபம், அஞ்ஞானம்,பயம் முதலியன‌ வெகு தூரம் சென்று விட்டனவோ, எங்கு பரிபூரண ஆனந்தம் நிறைந்து விளங்குகின்றதோ, அது பிரம்மாவுக்குக் காண்பிக்கப்பட்டது!..'.

யஸ்மின்னாம ச‌துர்பு⁴ஜா ஹரிமணிஸ்²யாமாவதா³தத்விஷோ
நானாபூ⁴ஷணரத்னதீ³பிததி³ஸோ² ராஜத்³விமானாலயா​:| 
ப⁴க்திப்ராப்தததா²விதோ⁴ன்னதபதா³ தீ³வ்யந்தி தி³வ்யா ஜனா
ஸ்தத்தே தா⁴ம நிரஸ்தஸர்வஸ²மலம்ʼ வைகுண்ட²ரூபம்ʼ ஜயேத் ||   

('குருவாயூரப்பா!, அங்கு வசிப்பவர்கள், நான்கு புஜங்களும், இந்திர நீலமணி போல் பிரகாசமும் உடையவர்கள்.. தாங்கள் அணிந்திருக்கும் ரத்னாபரணங்களால் அனைத்து திசைகளிலும் ஒளி வீசச் செய்பவர்கள். ஒளி மிக்க விமானங்களில் வசிப்பவர்கள்...  இவர்களது இந்த உன்னத ஸ்தானம், உம்மிடம் வைக்கப்பட்ட பக்தியினால் அடையப்பட்டது. இவர்கள், பக்தியினால் அடையப்பட்ட அந்த பதவியில் எங்கு விளங்குகின்றார்களோ, அந்த வைகுண்ட வடிவான உமது ஸ்தானம் வெற்றியுடன் விளங்குவதாக!..").

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, - அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே நினை. (பூதத்தாழ்வார்).

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே (நம்மாழ்வார்).

(தொடர்ந்து தியானிக்கலாம்).
அன்பர்களுக்கு மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.. தங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், அன்பும் நட்பும் பொங்கிப் பெருகி, எங்கும் நிறையப் பிரார்த்திக்கிறேன்!.. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு  நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. இப்போதுதான் உங்களது கண்ணனை நினை மனமே ஒவ்வொரு பகுதியாகப் படித்து வருகிறேன். நிதானமாக படிக்க வேண்டும். அத்தனை விஷயங்கள் எழுதியிருக்கிறீர்கள். எப்படி இவ்வளவு தெரிந்துகொண்டீர்கள் என்று ஒவ்வொரு பகுதி படிக்கும்போதும் வியப்படைகிறேன். பாராட்டுக்கள்.

  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றி அம்மா!..இத்தனை பாராட்டுதல்களும், எனக்கு 'ஸ்ரீமந் நாராயணீயத்தை'க் கற்பித்த குருமாமிகளையே சேரும்!.. அவர்களது ஆசிகளாலும் கண்ணன் அருளாலுமே எழுத இயலுகிறது.. மீண்டும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!..

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..